23) பொருள் திரட்டும் பொறுப்பு ஆண்களுக்கே!

நூல்கள்: இஸ்லாம் கூறும் குடும்பவியல்

இதுவரை ஆண்களைப் பற்றியும் அவர்கள் மனைவிமார்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பார்த்துள்ளோம். அதாவது ஆண்கள் தான் குடும்ப நிர்வாகத்தை அதிகாரம் செலுத்து பவனாக இருப்பான். ஆண்கள் சொல்வதைப் பெண்கள் கேட்டு நடக்க வேண்டும். அதே நேரத்தில் ஆண்கள் பெண்களை அடிமைத்தனமோ அடக்குமுறையோ செய்துவிடக் கூடாது. பெண்களிடம் ஆலோசனை களைக் கேட்டுக் கொள்ளவேண்டும். கடைசிக் கட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்பம் வந்தால் அப்போது இறுதிகட்ட முடிவை எடுத்துச் செயல்படுத்துகின்ற அதிகாரத்தைக் கணவனுக்கே இஸ்லாம் கொடுக்கிறது என்பதுதான் குடும்பவியலில் முதலாவது விஷயம்.

இஸ்லாமியக் குடும்பவியலில் இரண்டாவது முக்கியமான விசயம், குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வகையான பொருளா தாரத்தைத் தேடுவதும் திரட்டுவதும் செலவு செய்வதும் ஆண்கள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது. வேறு எந்தக் கோட்பாட்டிலும் குடும்ப அமைப்பிலும் இது சட்டமாக இல்லை. இஸ்லாத்தில் மட்டும்தான் இப்படி சட்டம் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது மனைவிக்கும் பிள்ளை குட்டிகளுக்கும் தாய் தந்தையருக்கும் பொருளாதார ரீதியிலான அனைத் துக்கும் ஆண்களே பொறுப்பாவார்கள். இது குடும்பத்தில் இரண்டாவது நிபந்தனை. எந்தளவுக்கு எனில் இது பற்றிக் குர்ஆனில் பல இடங்களில் இறைவன் சுட்டிக்காட்டுகிறான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை.

(அல்குர்ஆன்: 2:233)

இவ்வசனத்தில் விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவிக்குக் கணவன் செலவு செய்யவேண்டும், உணவும் ஆடையும் வழங்க வேண்டும் என்று இறைவன் சொல்வதிலிருந்து, விவாக ரத்துச் செய்யாமல் மனைவியுடன் கணவன் வாழ்ந்தால் இன்னும் கூடுதலாக மனைவிக்கு கணவன் மார்கள் பொருளாதார அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது தெளிவாகின்றது.

பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள்; நீங்கள் அல்லாஹ்வின் அமானிதத்தைக் கொண்டு அவர்களை அடைந்துள்ளீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டு அவர்களின் மறை விடங்களை அனுமதியாக்கிக் கொண்டீர்கள்; அவர்கள் உங்களுக்குச் செய்யும் கடமை, நீங்கள் வெறுப்பவர்களை உங்களது வீடுகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் இதை மீறினால் வலிக்காத வகையில் அவர்களை அடித்துக் கொள்ளுங்கள். (அதே நேரத்தில்) நீங்கள் அவர்களுக்குச் செய்யும் கடமை, அவர்களுக்கு நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப் பதும் ஆடை அணிவிப்பதுமாகும் என நபியவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்

நூல்: (முஸ்லிம்: 2137)

நல்ல முறையில் வழங்குவது என்றால், கணவன்மார்கள் தங்களது சக்திக்கு உட்பட்டவாறு வழங்க வேண்டும் என்று பொருள். நல்ல முறையில் நீதமான முறையில் செலவு செய்வது என்றால், கணவன்மார்களும் பாதிக்காத வகையில் பெண்களும் பாதிக்காத வகையிலும் குடும்ப உணவுக்காகவும் சாப்பாட்டிற்காகவும் செலவு செய்வது கணவன் மீது கடமை என்று மார்க்கம் அறிவுறுத்துகிறது.

மனைவிக்குக் கணவன் சரிவர உணவளிக்கவில்லை என்றால் அந்த ஒரு காரணத்திற்காகவே மனைவி கணவனை விட்டு விலகிவிட மார்க்கம் பெண்ணுக்கு அனுமதியளிக்கிறது. சரிவர உணவளிக்காத உடையளிக்காத கணவனை பெண்கள் வேண்டாம் என்று விவாகரத்து கேட்டு வந்தால் அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணின் விவகாரத்தை ஜமாஅத்துக்களில் ஏற்றுக் கொள்வது தான் நியாயமாகும்.

தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். (வாங்கும்) தாழ்ந்த கையை விட (கொடுக்கும்) உயர்ந்த கையே மேலானது. மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! நபியவர்களிடத்தில், “யாருக்கு நான் செலவிடுவது?” என்று கேட்டதற்கு “உனது மனைவிக்குத்தான்” என்று கூறினார்கள். மேலும், “எனக்கு உணவளி அல்லது என்னை விவாகரத்து செய்துவிடு என்று (சொல்லாமல்) சொல்லிக் கொண்டிருக் கிறாள். அதே போன்று உனது வேலையாளும் எனக்கு உணவளி, என்னை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்..” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 453

எனவே ஒரு மனைவி கணவனிடத்தில் எந்த ஒப்பந்தத்தில் வாழ்கிறாள் எனில், “எனக்கு நல்ல முறையில் உணவளிக்கவும் நல்ல முறையில் ஆடை தரவும் உன்னால் முடிந்தால் என்னை மனைவியாக வைத்துக் கொள்; உனக்கு முடியாவிட்டால் என்னை விட்டு விடு. அதாவது விவாகரத்துச் செய்துவிடு’ என்று ஒவ்வொரு மனைவியும் கணவனிடத்தில் சொல்லாமல் சொல்கிறாள் என நபியவர்கள் கூறினார்கள். திருமண ஒப்பந்தத்தின் அர்த்தம் என்ன? என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

திருமணத்தின் பொருளே அது தான். மனைவிக்கு நான்தான் அவளின் எந்தத் தேவையையும் நிறைவேற்று வேன், நான்தான் செலவு செய்வேன் என்று கணவன் ஒப்பந்தம் செய்கிறான். மனைவி எதற்கும் செலவு செய்ய வேண்டிய அவசியமும் கட்டாயமும் கிடையாது என்று இஸ்லாமியக் குடும்பவியல் கூறுகிறது. மனைவி பெரிய செல்வமிக்க சீமாட்டியாக இருந்தாலும் அவள் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, குடும்பச் செலவுகளுக்கு கணவனிடம் தான் கேட்க வேண்டும்; கணவன் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் குடும்பவியலில் முக்கிய அடிப்படையைக் கொண்டுள்ளது. மனைவி மனமுவந்து தானாக விட்டுக் கொடுத்தால் அதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது; அவ்வளவுதான்!

அதேபோன்று நபியவர்கள் தமது இறுதிப் பேருரையில் ஆண் பெண் உரிமைகள் பற்றி மிகவும் வலியுறுத்திச் சொன்னார்கள்.

உங்களுக்கு உங்கள் மனைவி யரிடத்தில் உரிமை இருப்பது போன்று உங்கள் மனைவியருக்கும் உங்களிடத்தில் உரிமை உள்ளது. உங்கள் மனைவியரிடம் உங்களது உரிமை, நீங்கள் வெறுப்பவர்களை உங்களது விரிப்பில் உட்கார வைத்துவிடக் கூடாது. உங்களுக்கு விருப்பமில்லாதவரை உங்களது வீட்டுக்குள் வர அனுமதிக்கக் கூடாது. உங்களிடத்தில் பெண்களுக் குரிய உரிமை, அவர்களுக்கு ஆடையிலும் உணவிலும் அழகிய முறையில் நடத்தவேண்டும்.

அறிவிப்பவர்: அம்ர் இப்னுல் அஹ்வஸ்

நூல்: (திர்மிதீ: 3012, 1083)

கணவன் விரும்பாத ஆட்களை, உறவினர்களை வீட்டுக்குள் மனைவி அனுமதிக்கக் கூடாது. இந்தக் கட்டளையைக் கணவன் மனைவிக்கு இடலாம். அப்படிக் கணவன் கூறினால் முரண்டு பிடிக்காமல் மனைவி அதை ஏற்றுச் செயல்பட வேண்டும். அதேபோன்று வீட்டுச் செலவுக்கும், உணவு, ஆடை விசயத்தில் ஆடம்பரம் இல்லாமலும், அதே நேரத்தில் கஞ்சத் தனமாக இல்லாமலும் கணவன் தனது சக்திக்குத் தகுந்த மாதிரி அவர்களுக்கு நியாயமான முறையில் உணவும் ஆடையும் வழங்க வேண்டும்.

அதேபோன்று நபியவர்களிடத்தில் ஒருவர் வந்து, மனைவிமார்களுக்கு கணவன்மார்கள் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு நபியவர்கள் சொன்ன பதிலே இதற்கு ஆதாரமாக இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், நீர் உண்ணும் போது உமது மனைவிக்கும் உண்ணக் கொடு, நீர் ஆடையணியும் போது அவளுக்கும் ஆடை அணியக் கொடு, (மனைவியை) முகத்தில் அடித்து விடாதே, அவளை ஒரேயடியாக வெறுத்து விடாதே, வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளைக் கண்டிக்காதே, வெறுக்காதே என்று பதிலளித்தார்கள்.

கணவன் சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்தால், அப்போது மனைவியும் பட்டினி கிடப்பது பிரச்சனை இல்லை. இருந்தால்தானே கொடுக்க முடியும். ஆனால் கணவன் சாப்பிட்டுவிட்டு மனைவியைப் பட்டினி போட்டுவிடக் கூடாது. வறுமையில் இருக்கிற குடும்பத்தில் கணவன் இப்படிச் சொல்லும் போது மனைவி அதை அனுசரித்துத்தான் ஆக வேண்டும்.

பெருநாள் போன்ற நல்ல நாட்கள் வரும் போது மனைவி ஆடை எடுத்துக் கேட்கும் போது, எனக்கும் ஆடை எடுப்பதற்கு வழியில்லாமல் தான் இருக்கிறேன். எனவே நீயும் இந்தப் பெருநாளைக்கு ஆடை கேட்காதே என்று கணவன் சொன்னால் அதை அனுசரித்துத்தான் மனைவி போகவேண்டும். அதே நேரத்தில் கணவன் நேரத்திற்குச் சரியாகச் சாப்பிட்டுவிட்டு, மனைவியைப் பட்டினி போடுவதை மார்க்கம் தடுக்கிறது. கணவன் விதவிமாகப் புத்தாடை எடுத்துவிட்டு மனைவிக்குச் சரியாக ஆடை கொடுக்கவில்லையெனில் அவன் கணவன் என்ற பொறுப்பை சரியாகப் பேணாதவன் என்று மார்க்கம் கண்டிக்கிறது.

எனவே பெண்களுக்கு உணவு உடை மட்டுமன்றி அவர்களது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது கணவனின் பொறுப்பு என இஸ்லாமிய மார்க்கம் பெரிய பொறுப்பை கணவன் மீது சுமத்துகிறது.

மேற்கண்ட ஆதாரங்களனைத்தும் பெண்களுக்கு ஆண்கள்தான் உணவையும் உடையையும் அவர்களது தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று உணர்த்துகிறது.

இன்னும் சொல்வதாக இருப்பின், தனக்குக் கீழிருப்பவருக்கு உணவளிக் காத பாவமே ஒரு மனிதன் பாவியாகப் போவதற்கு தக்க காரணமாகும். ஒரு ஆண் பாவியாவதற்குக் கொலையோ கொள்ளையோ விபச்சாரமோ செய்து பாவியாக வேண்டும் என்கிற அவசியமில்லை. தனக்குக் கீழுள்ள மனைவிக்கு உணவு கொடுக்காமல் இருந்தாலேயே அவன் பெரும் பாவியாகி விடுவதாக நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் “அடிமைகளுக்கு உணவு கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை‘ என்றார். “உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு” என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: (முஸ்லிம்: 1819)

ஏற்கனவே முந்தைய கட்டுரை களில் பெண்களை விட ஆண்களுக்கு ஒருசில உயர்வுகள் உள்ளது என்று அல்லாஹ் சொன்ன வசனத்திலும் இந்தக் காரணத்தைச் சொல்கிறான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்…. (அல்குர்ஆன்: 4:34)

ஆண்கள் பொருளாதாரத்தைச் செலவழிக்கிற காரணத்தினாலும், உடல் ரீதியாக மேலோங்கியவர்களாக இருப்பதினாலும் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்கின்றனர்.

ஆக இஸ்லாமியக் குடும்ப அமைப்பில், மனைவியைக் கவனிக்கிற எல்லாப் பொறுப்புகளும் ஆண்களைச் சார்ந்தது. இது இஸ்லாமியக் குடும்பவியலில் இரண்டாவது முக்கிய நிபந்தனை யாகும். இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இஸ்லாமிய குடும்ப அமைப்பு எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால் உலகத்தில் இந்தச் சட்டம் பலரால் மீறப்பட்டு வருகிறது. பெண்களை ஆண்கள் தான் கவனிக்க வேண்டும் என்பதை விளங்காமல், பெண்களைச் சம்பாதிப்பதற்கு அனுப்புகின்ற காட்சிகளை அன்றாடம் காண்கிறோம்.

பெண்களும் நமக்கு கணவன் மார்கள்தான் பொறுப்பாளிகள், அவர்கள் நம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதை விளங்கிக் கொள்ளாமல் நம் வயிற்றுக்கு நாம்தான் சம்பாதிக்க வேண்டும் என்று தவறாக விளங்கிக் கொண்டு வேலைக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.

பல இடங்களில் வேலைக்கும், தொழில் பார்ப்பதற்கும் பெண்களை அனுப்பி சம்பாதிக்கும் நிலை தான் உள்ளது. இப்படி ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்தப் பழக்கம் உண்மையில் நல்லதா? என்பதை ஆராய்ந்தால், திருமணத்திற்கு முன்பாக பெண்களைக் காக்கின்ற தந்தை என்கிற ஆண் இல்லாவிட்டால், திருமணத்திற்குப் பின்னால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு பெண்களைக் காக்கிற கணவன் இல்லையென்றால் அப்போது நிர்பந்தம் என்ற நிலையில் வேறு வழியில்லாமல் பெண்கள் வேலைக்குச் செல்வதில் எந்தத் தவறுமில்லை.

ஒரு பெண்ணுக்கு யாரும் பொறுப்பாளி இல்லை. அவள் உழைத்தால் தான் சாப்பிட முடியும், ஆடை அணிகலன்களை வாங்கிக் கொள்ள முடியும் என்றால் அப்போது அந்தப் பெண் உழைப்பது அவளுக்கு நிர்பந்தமாகிவிடும்.

வேறு வழியில் லாமல் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதற்குத் தான் மார்க்கம் அனுமதிக்கிறதே தவிர, மற்றபடி கணவன்மார்கள் பொறுப்பாளியாக இருந்தும் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற சிந்தாந்தம் வெறும் வறட்டுச் சித்தாந்தமாகவே பார்க்கிறோம்.

பெண்களுக்கு எவ்வளவு பெரிய தேவைகள் இருந்தாலும் கணவனிடம் தான் கேட்டுப் பெறவேண்டும். அதை விட்டுவிட்டுப் பெண்கள் வேலைக்குச் செல்வது தனிமனித சுதந்திரம், இது சுதந்திற்கான அடையாளம், இது முற்போக்கு சிந்தனை, இதுதான் உலகிற்கு சிறந்தது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு பெண்கள் வேலைக்குச் செல்வது இன்றைய கலாச்சாரமாகிவிட்டது.

பெண்கள் வேலைக்குச் செல்வது உண்மையில் அவர்களுக்கு நன்மை என்றால் நிச்சயம் இஸ்லாம் ஒருபோதும் எந்த நன்மையையும் தடுக்காது. அல்லாஹ் யார் யாருக்கு எது தேவையோ அவைகளுடன்தான் படைத்திருக்கிறான். இதனடிப்படையில் பெண்கள் வேலைக்குச் செல்வது ஒருக்காலும் நன்மையைப் பெற்றுத் தரவே தராது.