21) நபிகளாரின் வாழ்வினிலே…
நமது குடும்பத்திலுள்ள சாதாரணப் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதுபோன்று தான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் நடந்துள்ளார்கள். கோபப்பட்டுள்ளார்கள்; சந்தேகப்பட்டுள்ளார்கள்; சண்டையிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற பாடத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள்.
உடனே நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை” என்று சொன்னேன். அப்போது “(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரியதை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)
(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த போது என் மனைவி, “நீங்கள் இப்படிச் செய்யலாமே” என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், “உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், “கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள்” என்று சொன்னார்.
உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக் கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, “என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு” என்றார். அதற்கு நான், “அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே!” என்று (அறிவுரை) சொன்னேன்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரானன உம்மு சலமாவிடம் (அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.
இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, “கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு சலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடிபிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்து விட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன்.
மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் நபி (ஸல்) அவர்களது அவையில் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.
(அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) “ஃகஸ்ஸான்” வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். “திறங்கள், திறங்கள்” என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான், “ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?” என்று கேட்டேன். அதற்கவர், “அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள்” என்றார்.
உடனே நான், “ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், “இந்த உமர் பின் கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!” என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறீர்கள்?” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.
நாம் ஏதேனும் குடும்ப விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும் போது, வீட்டுப் பெண்கள் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால், உடனே சண்டையிடும் ஆண்களைத் தான் நடைமுறையில் பார்க்கிறோம். ஆனால் நபியவர்கள் அதை அனுமதிக்கிறார்கள். ஆண்கள் பேசும் போது பெண்களுக்கு என்ன வேலை? என்றெல்லாம் ஆண்கள் கேட்பதைப் பார்க்கிறோம். ஆண்கள் பேசும் போது பெண்கள் பேசினால் என்ன தவறு இருக்கிறது? பேசுகிற விசயம் தவறா? சரியா? என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர மற்றபடி உரிமையைப் பறித்துவிடக் கூடாது. இதை நபிகளாரின் வாழ்வில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸாமு அலைக்கும்” (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு “வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்தான் “வஅலைக்கும்” (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்-விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்” என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
தன்னுடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் மற்ற மனைவியரிடம் சென்று விட்டார்களோ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சந்தேகப்பட்டு, ரோஷம் கொள்வதை இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.
எனவே சொர்க்கத்திற்கு நற்செய்தி சொல்லப்பட்ட, அல்லாஹ்வினால் ரலியல்லாஹ் என்று பொருந்திக் கொள்ளப்பட்ட, நமக்கெல்லாம் தாயின் அந்தஸ்தில் இருக்கும் நபியவர்களின் மனைவிமார்கள் கூட சாதாரணப் பெண்கள் எப்படி நடப்பார்களோ அதுபோன்றுதான் நடந்திருக்கிறார்கள்,
அப்படியானால், நம்முடைய வீட்டில் வாழ்கிற பெண்களின் நிலை இன்னும் சாதாரணமாகத்தான் இருக்கும் என்பதில் எந்த வியப்பும் இல்லை. எனவே நிர்வாகம் செய்கிற கணவன்மார்கள் அதை சந்தோஷமாக எடுத்துக் கொண்டு செல்லவேண்டுமே தவிர, அதை வைத்து சண்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.
நிர்வாகம் என்பது அடக்குமுறை செய்வதில் கிடையாது என்பதை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அரவணைக்க வேண்டும். ஒரு குழந்தை செய்யும் தவறுகளை தாய் பொறுத்துக் கொண்டு செல்லமாக எடுத்துக் கொள்வதைப் போன்று கணவன்மார்கள் மனைவியிடம் நடந்துகொள்ள வேண்டும்.
இன்னும் கணவன் மனைவி எப்படியெல்லாம் புரிந்து நடக்க வேண்டும் என்பதை அடுத்தடுத்த பார்ப்போம்.