19) பெண்ணின் குணம்

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

நபியவர்கள் பெண்கள் குறித்து மிக முக்கிய அடிப்படைகளைச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 5184)

இந்தச் செய்தியில் பெண்களுக்கு நபியவர்கள் வளைந்த விலா எலும்பை உதாரணமாகச் சொல்கிறார்கள். பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்திருந்தால் நிமிர்த்தி விடலாம். வளைந்தேயிருக்கிற எலும்பை நிமிர்த்தப் போனால் அது நிச்சயம் உடையத்தான் செய்யும்.

பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று புரிந்து கொண்டு மனைவியை நிர்வாகம் செய்தால், விட்டுக் கொடுத்துப் போனால் அவளிடம் இன்பத்தை அடையலாம் என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் அவளிடம் கோணல் இருக்கத் தான் செய்யும் என்று நபியவர்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார்கள்.

அதே நேரத்தில் மார்க்கத்திற்குப் புறம்பானவைகள் இருந்தால், பாரதூரமான விஷயங்களாக இருந்தால் கண்டிக்க வேண்டுமே தவிர மற்றபடி குணங்களில் ஆண்களைப் போன்று பெண்களிடம் எதிர்பார்க்கவே கூடாது. கோள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புறம் பேசிக் கொண்டே இருப்பார்கள். தொனத் தொனவென சின்னஞ்சிறிய விஷயங்களை பேசிக் கொண்டே இருப்பார்கள். அற்பத்திலும் அற்பமான விஷயத்தில் கூட பிரச்சனையைக் கிளப்புவார்கள். சந்தேகப்படுவார்கள்.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், கணவன் தனது தங்கைக்கு சட்டை எடுத்துக் கொடுத்தால் கூட தனது எதிர்ப்பை கணவரிடம் கடுமையாகக் காட்டுவாள். மனைவிக்குக் கணவன் எந்தக் குறையும் வைக்காவிட்டாலும் நீங்கள் எப்படி உங்களது தங்கச்சிக்கு சட்டை எடுத்துக் கொடுக்கலாம் என்று சண்டைக்கு வருவார்கள். அந்த நேரத்தில் ஆண்கள் ஒரு காதில் வாங்கிக் கொண்டு இன்னொரு காது வழியாக விட்டுவிட வேண்டும். இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு நாமும் சண்டை போட்டால் நிம்மதியை இழக்க வேண்டியதுதான். இப்படித்தான் எல்லா பெண்களும் இருப்பார்கள். நம் மனைவி நம்மிடம் கேட்டது போன்றே நமது தங்கையும் அவளது கணவனிடம் இப்படித்தான் சண்டை போடுவாள் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்தந்த நேரத்திற்குத் தகுந்தாற் போல் சமாளித்துக் கொள்ள வேண்டியதுதானே தவிர மற்றபடி அவைகளை மனதில் போட்டு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

எனவே இவற்றையெல்லாம் ஒரு விவகாரமாக ஆக்கி, சண்டை போட்டுக் கொண்டு, கணவன் மனைவி பிரிய வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்த எந்தத் தேவையும் இல்லை. இதற்குத்தான் நபியவர்கள் பெண்களிடம் வளைவு இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். பெண்கள் ஆண்களைப் போன்று இருக்க மாட்டார்கள் என்றும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

நபிகள் நாயகம் சொல்லித் தந்த அடிப்படையில் மனைவிமார்களை நிர்வகிக்கத் தெரியாதவர்கள் தான் சின்னஞ் சிறியதையெல்லாம் பிரச்சனைகளாக்கி, கடைசியில் விவாகரத்து வரை கொண்டு வந்துவிடுகிறார்கள். நமது ஜமாஅத்திற்கு வருகிற குடும்ப விவகாரங்களில் பெரும்பாலும் இதுபோன்ற உப்பு சப்பில்லாத பிரச்சனைகள் தான் காரணமாக இருக்கிறது.

இல்லாத பிரச்சனைகளுக்காக குடும்பங்களைப் பிரிக்கும் அளவுக்கு சண்டை போடுவதைப் பார்க்கிறோம். இப்படி சாதாரணமான காரணங்களுக்காக கணவன் மனைவி பிரிவதில் எந்த நியாயமும் கிடையாது. நம்மிடம் வருகிற கணவன் மனைவி குடும்ப பிரச்சனைகளை அலசினால், என்னைப் பற்றி இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் என்று மனைவியும், எனது நண்பர் வந்திருந்த போது டீ போட்டு தராமல் வேண்டுமென்றே உதாசீனப்படுத்தினாள் என்று கணவனும், ஒன்றுக்கும் உதவாத காரணங்களைத் தேடிக் கொண்டு கடைசியில் விவாகரத்து வரை போய்விடுகிறது.

எனவே ஆண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது சில குறைகளுடன் தான் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று பெண்கள் ஏதாவது ஒரு தவறைச் செய்துவிட்டால் எடுத்த எடுப்பிலேயே கையை நீட்டி அடிக்கும் ஆண் வர்க்கத்தைப் பார்க்கிறோம். தன்னை ஒரு ஆண் என்று காட்டுவதற்காகவே பலர் மனைவிமார்களை அடிக்கிறார்கள். இது தவறானது. ஆனாலும் மார்க்கத்தில் அடிப்பதற்குக் கூட ஒரு சில இடங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. பகிரங்கமான அசிங்கத்தை ஆபாசத்தை கணவனிடத்தில் மட்டும் நடத்துகிற தாம்பத்யத்தை தவறான வழியில் ஈடுபடுத்தும் போது கணவன் மனைவியை அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. எனவே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கைநீட்டி மனைவியை அடிப்பது மிகவும் தவறான நடைமுறை. மார்க்கம் ஒருக்காலும் இதை அனுமதிக்கவே இல்லை.

ஒருவன் தனக்குச் சமமான ஒருவருடன் போட்டிபோட்டால் சண்டையிட்டால் அதில் நியாயம் இருக்கிறது எனலாம். தன்னை விட உடல் அளவிலும் மனதளவிலும் பலவீனமானவளுடன் சண்டையிடுவது, அடிப்பது நியாயமில்லை. இன்னும் சொல்வதெனில், கணவனிடம் அடைக்கலம் பெற்றவளாகத்தான் மனைவி என்பவள் இருக்கிறாள். எனவே அடைக்கலத்தை பாதுகாப்பவனே உண்மைக் கணவன் என இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. எனவே நபியவர்கள் இதையும் கண்டிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)

(புகாரி: 5204)

பகலில் கோபத்தில் மனைவியை அடித்துவிட்டு, நாணத்தை விட்டுவிட்டு இரவில் அவளுடன் இல்லறத்தில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து “வெட்கமில்லையா?” என்று நபியவர்கள் கேட்கிறார்கள். மனைவியை அடிப்பவர்களுக்கு அறிவில் உரைப்பதற்காக, சூடு சுரணைக்காக இப்படி கேள்வி கேட்கிறார்கள்.

மனைவியை அடித்துவிட்டு அவளோடு தான் குடும்பம் நடத்த வேண்டும். அவள் சமைத்த உணவைத்தான் சாப்பிட வேண்டும். அவளுடன் தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இப்படி அவளிடம் தான் ஒன்றாக வாழ்கிறோம் எனில் ஏன் மனைவியை அடிக்க வேண்டும்? எதற்காக அடிக்க வேண்டும்? இப்படியெல்லாம் அடிப்பவன் ரோஷமிக்க கணவனில்லை என்று நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

ஆக, ஆண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது பெண்களின் தன்மைகளில் கூடுதல் குறைவுகள் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் எல்லாப் பெண்களும் இருப்பார்கள் என்று பிரச்சனை செய்யாமல் குடும்பத்தை நடத்திட வேண்டும். இதற்கு நல்ல சிறந்த உதாரணமாக நபிகள் நாயகத்தின் மனைவிமார்களைப் பற்றிய செய்திகளைச் சொல்லலாம்.

உலகிலுள்ள முஸ்லிமான, முஃமினான பெண்களில் நம்மை விடவும் நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் மேலானவர்கள், நல்லவர்கள் என்று நாமெல்லாம் நம்புகிறோம். அது சரிதான். நமது மனைவிமார்களை விட நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் இறையச்சம் மிக்கவர்கள்; ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்கள்; கணவனை மதித்து நடப்பவர்கள்; கட்டுப்படக் கூடியவர்கள் என்றெல்லாம் நம்புகிறோம். அதுவும் மிகச்சரியான நம்பிக்கை தான். இப்படியெல்லாம் நம்பப்படுகிற நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள், கணவனிடம் நடந்து கொள்கிற விதத்தில் மனைவி என்ற அடிப்படையில் நமது வீட்டுப் பெண்களைப் போன்று தான் இருந்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் போன்ற அந்தஸ்தெல்லாம் நம்மிடம் கிடையாது. மனைவியிடத்தில் கணவன் என்ற அந்தஸ்து மட்டும் தான் நம்மிடம் உண்டு. அதற்கு மேல் நமக்கும் நமது மனைவிமார்களுக்கும் இடையில் வேறு எந்த அந்தஸ்தும் கிடையாது. ஆனால் நபியவர்களோ நம்மைப் போன்று மனைவிமார்களுக்கு கணவன் என்ற அந்தஸ்துடனும், நம் எல்லோரையும் விடவும் சிறப்பான அல்லாஹ்வின் தூதர் என்று அந்தஸ்துடனும் வாழ்ந்தவர்கள்.

அப்படியெனில் நபியவர்களிடம் வாய் கூட திறந்து பேசாமல் அவர்களது மனைவிமார்கள் வாழ்ந்திருக்க வேண்டும். மிகவும் கவனத்துடன் நடந்திருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனிடத்தில் ஒரு மனைவி எவ்வளவு கட்டுப்பாடுடன் நடக்க வேண்டுமோ அதைவிடப் பன்மடங்கு கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால் இது விஷயத்தில் நாம் ஆய்வு செய்து பார்த்தால், நமது மனைவிமார்களைப் போன்று தான் நபியவர்களின் மனைவிமார்களும் நபியவர்களிடத்தில் சராசரியாக நடந்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் வணக்க வழிபாடுகள், இறையச்சம் போன்றவற்றிலெல்லாம் நம்மை விடக் கூடுதலாக இருந்திருக்கிறார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வருகிற போது தமது கணவர், நபி என்பது கூட சில நேரங்களில் மறந்துவிடுகிறது.

அப்படி சம்பவங்கள் நடக்கும் போது நபியவர்கள் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், கண்டும் காணாமல் இருப்பதைப் போன்று நபியவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்து கொண்டதைப் போன்று நம்மிடம் நமது மனைவிமார்கள் நடந்திருந்தால் ஓங்கி அடித்துவிடலாம் என்பது போன்று கோபம் வரும். அந்தளவுக்கு நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருந்தும், நபியவர்கள் “நான் கணவனாகவும் நபியாகவும் உங்களுக்கு இருக்கிறேன்; என்னிடமே இப்படிச் செய்கிறீர்களா?” என்று மனைவிமார்களைப் பார்த்து கேட்டதில்லை. எதிர்த்ததாகத் தெரியவில்லை. சாதரணமாக எடுத்துக் கொண்டு தான் வாழ்ந்த காட்சிகளை ஆதாரங்களின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப்பேசி முடிவு செய்து கொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முத-ல் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் “கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே” என்று கூறிட வேண்டும். (வழக்கம் போல் ஸைனபின் வீட்டி-ருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், “இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்துவிட்டேன்” என்று கூறிவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!” என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1 ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)

(புகாரி: 4912)

நபியாகவும் கணவராகவும் இருந்த நபியவர்களிடம் இப்படி இறைவன் கண்டிக்கிற அளவுக்கு இந்த இரண்டு மனைவிமார்களும் நடந்து கொண்டுள்ளார்கள். இறைவன் தன்னைக் கண்டித்ததற்காக, இந்த இரண்டு மனைவிமார்களையும் இழுத்துப் போட்டு நபியவர்கள் அடித்தார்களா? இல்லை. இல்லவே இல்லை.

மார்க்கத்திலேயே நான் ஒரு தவறான முடிவை எடுப்பதற்கு என்னை வழிவகுத்து விட்டீர்களே! என்று கோபப்பட்டு மனைவிமார்களைக் கடிந்து கொண்டார்களா? இல்லை. எந்தக் கோபத்தையும் அவர்களிடம் காட்டிக் கொள்ளவே இல்லை. இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள். ஆக இப்படியெல்லாம் நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.