13) அர்ஷை சுமக்கும் வானவர்கள்
அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். “எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத் தின் வேதனையை விட்டுக் காப்பாயாக!” என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.
வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச் சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கிடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். “அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறப்படும்.
இறைவன் வானத்தில் உள்ள அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றான். அந்த அர்ஷை சில வானவர்கள் சுமந்து கொண்டும், மேலும் சில வானவர்கள் அதைச் சுற்றிக் கொண்டும் இருக்கின்றார்கள் எனும் தகவல் மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்றது.
அர்ஷை சுமக்கும் வானவரின் தன்மை பற்றி நபிகளார் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்.
“அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அவரின் காது சோனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளியானது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் ரலி
இவை தவிர இது தொடர்பான வேறு தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் விரிவுரையாளர்கள் மேற்கண்ட ஹதீஸை மூலதனமாக ஆக்கிக் கொண்டு அதில் தங்கள் கற்பனைகளையும் அள்ளிக் கலந்து சில விளக்கங்களை (?) அளித்திருக்கின்றார்கள்.
அர்ஷைச் சுமக்கும் வானவர்களின் கால்கள் பூமிக்கு அடியிலும், அவர்களின் தலைகள் அர்ஷைக் கிழித்துக் கொண்டும் இருக்கின்றன.
நூல்: தப்ஸீருல் குர்துபீ, பாகம் 15, பக்கம் 294
பூமியிலிருந்து அர்ஷைத் தாண்டியும் அவர்களது உயரம் உள்ளது என இந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை இதற்கு வக்காலத்து வாங்கும் இமாம்கள் யாராவது கூறுவார்களா?
மரம் விட்டு மரம் தாவும் குரங்கைப் போன்று விரிவுரையாளர்களின் (விளக்கமளிக்கும்) சிந்தனையும் பல நேரங்களில் ஒன்று தொட்டு ஒன்று என தாவிக் கொண்டே இருக்கும் போல!
பின்னே என்ன? அர்ஷைச் சுமக்கும் வானவரைப் பற்றி வர்ணிக்கப் புறப்பட்ட இமாம்களின் கவனம் திடீரென அர்ஷை நோக்கி (அதன் மூலத்தை நோக்கி) தாவி விட்டதே! ஆம்! அர்ஷ் பச்சை முத்துக்களால் ஆனதாம்!
இறைவன் அர்ஷை பச்சை முத்துக்களால் உருவாக்கினான் என கூறப்படுகின்றது.
நூல்: தப்ஸீருல் குர்துபீ பாகம் 15 பக்கம் 294
யார் இதைக் கூறியது? அர்ஷைப் படைத்த அல்லாஹ்வா? அல்லது அவனது தூதரா? விளக்கம் என்ற பெயரில் யார் எதை உளறிக் கொட்டினாலும் கூறப்படுகின்றது என்ற ஒற்றை வார்த்தையுடன் ஆதாரமற்ற அந்தத் தகவல்கள் விரிவுரை நூல்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதன் நோக்கம் பக்கங்களை நிரப்புவதோ என எண்ணத் தோன்றுகின்றது.
நம்மில் ஒருவரை நோக்கி, “நீ எனக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும்” என ஒருவர் சொல்கின்றார். எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறாய் என்ற நமது கேள்விக்கு, இல்லை அவ்வாறு கூறப்படுகின்றது என்று அவர் பதிலளித்தால் இதை நாம் ஏற்போமா? நம் தொடர்புடைய விஷயங்களில் கூறப்படுகின்றது என்று சொன்னால் வலுவாக மறுத்து, அதற்கான தகுந்த ஆதாரத்தை வேண்டுகிறோம். அதுவே மார்க்க விவகாரம் எனும் போது தலையாட்டிக் கொண்டு செல்கிறோம். இது சரியா என்பதை அறிவுடைய மக்கள் சிந்தித்து பார்க்கட்டும்.
அர்ஷைச் சுமக்கும் வானவர்களைப் பற்றி விளக்கமளிக்க முன்வந்த விரிவுரையாளர்கள் சம்பந்தமில்லாது அர்ஷைப் பற்றி எதையோ கூறி, பிறகு அர்ஷுக்குக் கர்வம் வந்ததாகவும், அதன் கர்வத்தைப் போக்கும் விதமாக இறைவன் பலம் வாய்ந்த பாம்பை உருவாக்கி அதன் மூலம் அர்ஷைச் சுருட்டி, நெருக்கியதாகவும் ஒரு கட்டுக்கதையை தஃப்ஸீர் நூல்களில் அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள்.
கஃபுல் அஹ்பார் கூறியதாவது: இறைவன் அர்ஷைப் படைத்த போது என்னை விடச் சிறந்ததை இறைவன் படைக்கவில்லை என அர்ஷ் (கர்வத்துடன்) கூறியது. எனவே ஒரு பாம்பின் மூலம் இறைவன் அதை நெருக்கினான். அது நடுங்கியது. அந்த பாம்பிற்கு எழுபதாயிரம் இறக்கைகள் உண்டு. ஒரு இறக்கையில் எழுபதாயிரம் சிறகுகளும், ஒவ்வொரு சிறகிலும் எழுபதாயிரம் முகங்களும், ஒரு முகத்திற்கு எழுபதாயிரம் வாய்களும், ஒரு வாயில் எழுபதாயிரம் நாவுகளும் உள்ளன. ஒவ்வொரு நாளும் அதன் வாய்களிலிருந்து மழைத்துளிகளின் அளவிற்கு தஸ்பீஹ்கள் வெளிப்படும். மர இலைகளின் எண்ணிக்கை ஏற்ப, கற்கள் மற்றும் மண்களின் துகள்களுக்கேற்ப (தஸ்பீஹ்கள் வெளிப்படும்).
நூல்: தப்ஸீருல் குர்துபீ, பாகம் 15, பக்கம் 294, 295
குர்ஆனின் விளக்கவுரை நூலான குர்துபீயில், மேற்கண்ட வாசகத்தின் தொடர்ச்சியில் பாம்பு அர்ஷைச் சுருட்டியதாகவும் அந்த பாம்பின் பாதியளவு தான் இறைவனின் சிம்மாசனமான அர்ஷ் இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.
இவைகள் தாம் இறை வசனங்களை நமக்கு விளக்கித் தரும் அற்புத விளக்கங்களா?
இறைவன் வீற்றிருக்கும் அர்ஷை பாம்பு சுருட்டி, நெருக்கியது என்றால் அதில் இருந்த இறைவன் என்ன ஆனான்? பாம்பு விழுங்கிற்றா? நவூதுபில்லாஹ்.
விரிவுரை என்ற பெயரில் உலவும் இது போன்ற கதைகள் நம் வீட்டுக் குழந்தைகளைப் பயமுறுத்த வேண்டுமானால் உதவுமே தவிர இறை வசனங்களை விளங்க ஒரு போதும் உதவாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.
“வய்ல்‘ என்றால்…? தலைசுற்றும் விளக்கம்
அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!
அளவு நிறுவையில் மோசடி செய்வோருக்கு மறுமையில் பெரும் வேதனை உண்டு என இறைவன் கூறுகின்றான். வேதனை என்பதைக் குறிக்க “வய்ல்’ என்ற அரபி வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வய்ல் என்ற அரபிப் பதம் கேடு, வேதனை, நாசம் என்ற பொருளைத் தரும்.
இந்த வார்த்தையின் விளக்கம் இதுதான். ஆனால் இவ்வளவு சிம்பிளாக ஒரு விஷயம் முடிந்து போவதை நமது இமாம்கள் விரும்புவார்களா? எனவே தான் ‘வய்ல்’ என்றால் என்னவாக இருக்கும் என்று மிதமிஞ்சிய ஆய்வுக்குள் சென்று, அதன் முடிவில் பின்வரும் விளக்கங்களைச் சமர்ப்பித்துள்ளார்கள். இதோ அந்த விளக்கங்கள்:
வய்ல் என்பது நரகில் உள்ள பள்ளத்தாக்கு. எழுபது வருடம் (பயணிக்கும் அளவு) அதன் தொலைவாகும். அதில் தொன்னூறாயிரம் கிளைகள் உண்டு. ஒரு கிளையில் எழுபதாயிரம் பிரிவுகளும், ஒரு பிரிவில் எழுபதாயிரம் குகைகளும், ஒரு குகையில் எழுபதாயிரம் கோட்டைகளும், ஒரு கோட்டையில் இரும்பால் ஆன பெட்டிகளும், ஒரு பெட்டியில் எழுபதாயிரம் மரங்களும், ஒரு மரத்தில் எழுபதாயிரம் கிளைகளும், ஒரு கிளையில் எழுபதாயிரம் கனிகளும், ஒவ்வொரு கனியிலும் அட்டைப்புழு இருக்கும். அதன் நீளம் எழுபதாயிரம் முழங்களாகும். ஒவ்வொரு மரத்திற்கு கீழ் எழுபதாயிரம் மலைப்பாம்புகளும், தேள்களும் உள்ளது. அந்த பாம்புகளின் நீளம் ஒரு மாத (பயணிக்கும்) தொலைவாகும். மலைகளைப் போன்று உடல் வலிமை, பேரீச்சமரத்தை போன்று பற்கள் அதற்கு இருக்கும்.
நூல்: தஃப்ஸீர் முகாதில் பின் சுலைமான், பாகம் 3, பக்கம் 460
இதைப் படித்தவுடன், “என்ன இது? நான் எங்கே இருக்கிறேன்?’ என்று ஒரு கணம் இந்த உலகை மறந்து வேறொரு கற்பனை உலகத்திற்குச் சென்று, திரும்பியதைப் போன்ற உணர்வைப் பெறுவீர்கள் என்பது நிச்சயம். ஏனெனில் வய்ல் என்ற இறைவனின் வார்த்தைக்கு இமாம்கள் அளித்த விளக்கம் அந்த நிலையில் உள்ளது.
இந்தக் கூறுகெட்ட விளக்கத்தில் ஆயிரத்தெட்டு எழுபதாயிரம் வருகின்றதே?. இதில் மாத்திரம் அல்ல, குறிப்பிட்ட இந்த விரிவுரை நூலில் எழுபதாயிரத்திற்குப் பஞ்சமில்லை எனலாம். அவ்வளவு முறை தொட்டதுக்கு எல்லாம் எழுபதாயிரம் என்று இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. இந்த விளக்கங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த விளக்கங்கள் அல்ல, எழுபதாயிரம் என்ற கணித முறை அடிப்படையில் அமைந்த ஒரு கூறு கெட்ட விளக்கம் என்பதே நமது கருத்து.
(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் கஃபாவை இடிப்பதற்கு வந்த போது கூட்டம் கூட்டமாகப் பறவைகளை அனுப்பி அதன் மூலம் கஃபாவை அழிக்க வந்த யானைப் படையினரை அழித்து, கஃபாவை இறைவன் காப்பாற்றினான் என்ற வரலாற்றுச் செய்தியைப் பற்றி இந்த அத்தியாயத்தில் இறைவன் நினைவூட்டுகின்றான்.
இந்த அத்தியாயத்தில் மக்களுக்கு விளக்கமளிப்பதற்குக் கணக்கற்ற படிப்பினைகள், விஷயங்கள் நிரம்பி வழிகின்றன. இறைவனின் வல்லமை, கஃபாவின் பாதுகாப்புத் தன்மை போன்ற விஷயங்களை எடுத்து, அலசி ஆராய்ந்து, நபிவழி எனும் ஒளியின் துணையுடன் மக்களின் அறியாமை எனும் இருளை அகற்றியிருக்கலாம். ஆனால் அறிஞர்கள் ஆய்வுக்காக, தஃப்ஸீர் அளிப்பதற்காக கையில் எடுத்திருப்பதோ அபாபீல் பறவைகளைப் பற்றி!
(அபாபீல் என்றால் கூட்டம் கூட்டமாக, அதிகமாக என்று பொருள். ஆனால் சொல் வழக்கில் அதையே நாம் அப்பறவைகளின் அடையாளப் பெயராக பயன்படுத்துகின்றோம்.)
சூடான கற்களுடன் பறவைக் கூட்டத்தை அனுப்பி எதிரிகளை அழித்தான் என்று குர்ஆன் சொல்கிறதல்லவா? உடனே அந்தப் பறவைகளின் நிறம் என்ன? எத்தனை கற்களை அவைகள் சுமந்து வந்தன? அந்தக் கற்களைப் பறவைகள் எதில் சுமந்தன போன்ற தேவையற்ற விஷயங்களை விளக்கம் என்ற பெயரில் பக்கம் பக்கமாக விளக்கித் தள்ளியிருக்கின்றனர். இதில் எதிரிப் படையினரின் யானைகளின் எண்ணிக்கையையும் தவறவிடவில்லை என்பது கூடுதல் சிறப்பம்சம்(?). அவை உங்கள் பார்வைக்கு:
அவை (பறவைகள்) கடலின் முன்பகுதியிலிருந்து வந்தன என்று சிலர் கூறுகின்றனர். பிறகு அதன் வர்ணனையில் அவர்கள் (விரிவுரையாளர்கள்) வேறுபடுகின்றனர். சிலர் அவை வெண்மை நிறம் கொண்டவை என்றும், மற்றும் சிலர் கறுப்பு நிறம் என்றும் வேறு சிலர் பச்சை நிறம், மேலும் அதற்கு பறவைகளின் மூக்கும், நாய்களின் உள்ளங்கைகளும் உண்டு எனவும் கூறுகின்றனர்.
நூல்: தஃப்ஸீருத் தப்ரி, பாகம் 24, பக்கம் 630
கால்களில் இரண்டு, அலகில் (வாயில்) ஒன்று என ஒவ்வொரு பறவையிடமும் மூன்று கற்கள் இருந்தன.
நூல்: தஃப்ஸீர் தப்ரி, பாகம் 4, பக்கம் 634.
அவர்களுடன் (யானைப் படை) ஒரு யானை மட்டுமே இருந்தது என முகாதில் கூறுகின்றார். எட்டு யானை என லிஹ்ஹாக் கூறுகின்றார். பன்னிரண்டு எனவும் ஒரு கருத்து உண்டு.
நூல்: தஃப்ஸீருல் பகவீ, பாகம் 8, பக்கம் 540
என்னே அற்புதம்? இந்தச் சம்பவம் நடைபெறும் போது நபிகள் நாயகம் அவர்களே பிறக்கவில்லை. இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு தான் நபியவர்கள் பிறக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதரவர்கள் சொல்லாத, ஆச்சர்யமான (?), அதிசயக்கத்தக்க (?) பல நுணுக்கமான விஷயங்களை இந்த விரிவுரையாளர்கள் தருகின்றார்கள்.
இந்தச் சம்பவம் நடைபெறும் போது இவர்கள் உடனிருந்தார்களா? இல்லையெனில் எப்படி ஒரு பத்திரிக்கையாளரைப் போன்று சம்பவத்துளிகள் அனைத்தையும், எட்டு யானை, பறவையின் வாயில் ஒரு கல், காலில் இரண்டு கற்கள், பறவைகளின் நிறம், அது புறப்பட்டு வந்த திசை என ஒன்று விடாமல் சொல்ல முடிகின்றது?
இவைகள் யாவும் கற்பனை. இமாம்களின் பல விளக்கங்கள் இந்த நிலையில் தான் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள இது ஒன்றே போதுமான சான்றாகும்.