10) அய்யூப் நபிக்கு சிரங்கு நோய்?

நூல்கள்: இப்படியும் சில தஃப்ஸீர்கள்

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

(அல்குர்ஆன்: 38:41)

அய்யூப் (அலை) ஏதோ ஒரு துன்பத்தால் பாதிக்கப்பட்டு, தமக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்ததும், அத்துன்பம் விலக இறைவன் கூறிய நிவாரணமும் இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. இந்த வசனத்திற்கு விளக்கமளிக்க முனைந்த விரிவுரையாளர்கள் தங்கள் கற்பனைகளை, யூகங்களை விளக்கங்களாக எழுதியுள்ளார்கள்.

அதன் முதல் படியாக, அய்யூப் நபிக்கு ஏற்பட்ட துன்பம் அவரது உடலில் ஏற்பட்ட ஒரு வகை நோய் என்று கூறுகின்றார்கள்.

இறைவன் அவருக்கு அவரது உடல், பொருள், பிள்ளைகள் ஆகியவற்றில் சோதனை வழங்கினான். அவரது உடலில் உள்ளத்தைத் தவிர ஊசியளவு கூட நோயின்றி இல்லை.

நூல்: இப்னு கஸீர், பாகம் 4, பக்கம் 49

அய்யூப் நபியின் உடலில் நோயின்றி ஒரு பகுதியுமில்லை எனுமளவு உடல் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று விளக்கமளித்துள்ளார்கள். மேலும் அவரது உடலில் சீழ் வடிந்தது என்றெல்லாம் விரிவுரை நூல்களில் கூறியுள்ளனர்.

இறைவனிடமிருந்து உள்ள சோதனையாக அய்யூப் நபியின் உடலில் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தினான். அவரது உடல் உப்பி அதிகளவில் சீல் வடிந்தது. அது நீண்ட காலம் நீடித்தது.

நூல்: தஃப்ஸீருஸ் ஸஃதீ, பாகம் 1, பக்கம் 528

ஒவ்வொரு இறைத்தூதரும் சாதாரண மனிதர்களை விடவும் அதிகமான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது நபிமார்களின் வரலாறை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் இறைவன் அய்யூப் நபிக்குச் சில சோதனைகளை வழங்கி சோதித்துள்ளான். அய்யூப் நபியும் அதை சகித்துக் கொண்டு, தாம் நல்லடியார் என்பதை இறைவன் முன்னிலையில் நிரூபித்துள்ளார்.

நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.

(அல்குர்ஆன்: 38:44)

இதிலிருந்து முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றிக் கூறுவதை விட்டுவிட்டு, அவருக்கு இறைவன் வழங்கிய துன்பம் சிரங்கு நோய் என்று எவ்வித ஆதாரமுமின்றி விளக்களித்துள்ளனர். விரிவுரை நூல்களில் கதை அளந்துள்ளனர்.

மேலும் இந்நோய் 18 வருடம் நீடித்ததாகவும் விரிவுரை நூல்களில் காணப்படுகின்றது.

அல்லாஹ்வின் தூதராகிய அய்யூப் (அலை) அவர்களுக்கு அவர்களின் சோதனை 18 வருடம் நீடித்தது. அருகிலிருப்பவர், தூரத்திலிருப்பவர் என எல்லோரும் அவரைப் புறக்கணித்தனர். இருவரைத் தவிர! அவ்விருவரும் அவருக்கு மிகவும் நெருக்கமான சகோதரர்களாகவும், காலை, மாலை அவரிடம் செல்வோராகவும் இருந்தனர். அப்போது அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரிடம், “அல்லாஹ்வின் மீது ஆணையாக உலகில் யாரும் செய்யாத குற்றத்தை, பாவத்தை அய்யூப் செய்து விட்டார்’ எனக் கூறினார்.

நூல்: இப்னு கஸீர், பாகம் 7, பக்கம் 74

பதினெட்டு வருடம் இந்த துன்பத்தால் பீடிக்கப்பட்டார் என்று இறைவனோ, இறைத்தூதரோ கூறியுள்ளார்களா? அதில் ஒருவர் அய்யூப் நபி செய்த பாவத்திற்குத் தண்டனையாக இந்த நோயை வழங்கியதாகக் கூறுகின்றார். அதையும் எவ்வித மறுப்புமின்றி தஃப்ஸீர் நூல்களில் இமாம்கள் பதிவு செய்துள்ளனர். விளக்கம் கூற வேண்டும் என்பதற்காகக் கண்டதையும் உளறிக் கொட்டியுள்ளனர் என்பதையே இது காட்டுகின்றது.

புல்லில் உள்ள மர்மம்

அய்யூப் நபியவர்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டு இறைவனிடம் முறையிட்ட போது இறைவன் நிவாரணத்திற்காக சில காரியங்களைச் செய்யுமாறு கூறுகின்றான். அதன் ஒரு பகுதி மேலே உள்ள வசனத்தில் கூறப்பட்டுள்ளது. நல்லவேளையாக இமாம்கள், விரிவுரையாளர்கள் அந்த பகுதியைக் கண்டு கொள்ளவில்லை. இல்லையெனில் அதற்கு விளக்கம் என்ற பெயரில் எதையாவது எழுதியிருப்பார்கள்.

ஆனாலும் இரண்டாம் பகுதியில் வசமாக மாட்டிக் கொண்டோம். ஆம்! இறைவன் நிவாரணத்திற்காக ஒரு பிடி புல்லை எடுத்து அடிக்குமாறு அய்யூப் நபிக்குக் கூறினான். அவ்வளவு தான்! அதற்குள் இமாம்கள் அதற்கு ஒரு கதை கட்ட ஆரம்பித்து, அதை விரிவுரை நூல்களில் ரிலீசும் செய்து விட்டனர்.

உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்! (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.

(அல்குர்ஆன்: 38:43)

இது தான் அந்த வசனம். இந்த வசனத்திற்குப் பின்வருமாறு விரிவுரையாளர்கள் விளக்கமளிக்கின்றனர்.

விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள்: அய்யூப் நபி சில விவகாரங்களில் தமது மனைவியின் மீது கோபமுற்று அல்லாஹ் தனக்கு நிவாரணம் அளித்தால் அவரை நூறு கசையடி அடிப்பதாகச் சத்தியம் செய்தார். அவரது மனைவி ஸாலிஹானவராக, அவருக்கு உதவி புரிபவராக இருக்கும் போது அல்லாஹ் நிவாரணம் அளித்தான். அல்லாஹ் அப்பெண்ணுக்கு அருள் புரிந்தான். அய்யூபும் இரக்கம் காட்டினார். நூறு புல்லைக் கொண்ட புல்கட்டைக் கொண்டு அவரின் மனைவியை ஒரு அடி அடிக்குமாறு இறைவன் தீர்ப்பளித்தான். (நூல்: தஃப்ஸீரு ஸஃதீ, பாகம் 1, பக்கம் 714)

அய்யூப் நபி, தம் மனைவியின் மீது கோபம் கொண்டு 100 கசையடி அடிப்பதாக சத்தியம் செய்தார்களாம். என்ன ஒரு முட்டாள் தனம்?

இறைவனின் புறத்திலிருந்து துன்பம் வந்ததற்கு அவரது மனைவி என்ன செய்வார்கள்? துன்பம் இறைவனின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது. அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. இந்த அடிப்படை கூட ஒரு நபிக்கு, இறைத்தூதருக்குத் தெரியவில்லை. என்றும், அய்யூப் நபியை கொடுமைக்கார கணவனாகவும் இந்த விளக்கம் சித்தரிக்கின்றது.

அடுத்து, இறைவன் நிவாரணம் அளித்த பின் அவரது மனைவி விஷயத்தில் இரக்கம் கொண்டு 100 கசையடிகளுக்குப் பதிலாக 100 புல்லினால் ஒரு அடி அடித்தால் அது நூறு கசையடிகளுக்குச் சமமாகும் என்று இறைவன் தீர்ப்பளித்தானாம். இப்படி ஒரு சம்பவம் எந்த ஹதீஸ் நூல்களிலும் கூறப்படவில்லை. கண்டிப்பாக இதை இறைவன் கூறியிருக்கவும் முடியாது. என்ன ஒரு தந்திரம்? இது போன்ற தந்திரங்களெல்லாம் மத்ஹப் நூல்களில் தான் காண முடியும்.

ஓடும் தண்ணீர் சுத்தம் என்ற நபிமொழியை மூலதனமாகக் கொண்டு சிறுநீரைச் சுத்தமானதாக ஆக்குவதற்கு அவர்கள் செய்த தந்திரம் எளிதில் மறக்கக் கூடியதா?

மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் வகையில் ஒரு குழாய், இப்போது அதில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அந்தத் தண்ணீர் ஓடும் தண்ணீர் தானே! நபிகளாரின் ஹதீசுக்கேற்ப இப்போது இந்த சிறுநீர் சுத்தமாகி விடுகின்றது என்று கூறியவர்களாயிற்றே!

இதைப் போன்று தான் மேற்கண்ட தந்திரம் அமைந்துள்ளது. எனவே கண்டிப்பாக இதை இறைவன் கூறியிருக்க மாட்டான். இறைவன் கூறியதாக எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை என்பதே இதை நாம் வலுவாக மறுக்கக் காரணம்.

மேலும் அந்த வசனத்தை நன்கு வாசியுங்கள். “புல்லை எடுத்து அடிப்பீராக’ என்று தான் இறைவன் கூறியிருக்கின்றான். யாரை அடிக்க வேண்டும்? எத்தனை புல்கள் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் இறைவன் கூறியிருக்கின்றானா? இப்படி குர்ஆன், ஹதீஸில் இல்லாதவற்றையே விளக்கம் என்ற பெயரில் கூறியுள்ளனர். கண்டிப்பாக இதுவும் இவர்களின் கற்பனையே! விளக்கம் அல்ல என்பதை இங்கு அழுத்திக் கூறுகிறோம்.