யாஸீன் விளக்கவுரை-11

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
50 வது வசனம்

50. அப்போது அவர்களுக்கு மரண சாசனம் கூற இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள்.

மறுமை நாள் எப்போது நிகழும் என கேலியாக கேட்ட இறைமறுப்பாளர்களுக்கு மரண சாசனம் கூட செய்ய இயலாதளவிற்கு மறுமைநாள் விரைவாக நிகழ்ந்துவிடும் என்று இவ்வசனம் பதிலளிக்கின்றது.

மரண சாசனம் என்பது ஒருவர் தன் மரணத்தருவாயில் கூறும் விஷயங்களாகும். ஒருவர் தன் மரண வேளையில் தனது சொத்துக்கள் மற்றும் இதர விஷயங்கள் தொடர்பாக கூறுவதை மரண சாசனம் என்கிறோம். மரண சாசனம் தொடர்பாக சற்று விரிவாக காண்போம்.

மரண சாசனத்தை பற்றி இஸ்லாம்

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பெற்றோருக்கும் உறவினருக்கும் மரண சாசனம் செய்வது கட்டாய கடமையாக இருந்தது.

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

(அல்குர்ஆன்: 2:180) ➚.)

இவ்வசனம் வாரிசு உரிமை தொடர்பான பின்வரும் வசனத்திற்கு முன்பே இறங்கியதாகும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அருளப்பட்ட மேற்கண்ட வசனத்தில் உள்ள சட்டம் பிற்காலத்தில் மாற்றப்பட்டு விட்டது.

“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது.

அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு.

உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனத்துக்கும், கடனுக்கும் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர் ஆன் : 4:11, 12.)

வாரிசுரிமை பற்றிய வசனத்தில் பெற்றோருக்கும் உறவினர்களான பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சொத்தில் கிடைக்க வேண்டிய பங்குகள் விகிதாச்சார அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.

இது போன்று விகிதாச்சார அடிப்படையில் கூறப்பட்டவர்களுக்கு தானாகவே சொத்து சேர்ந்துவிடும். எனவே இவர்களுக்கு மரண சாசனம் செய்ய இயலாது. விகிதாச்சார அடிப்படையில் சொத்து சேராத நபர்களுக்கு மட்டும்தான் மரண சாசனம் செய்யவேண்டும். அவர்களுக்கு நம் சொத்தில் ஏதேனும் கொடுக்க விரும்பினால் அதை மரண சாசனமாக செய்துவிட வேண்டும். மரணசாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பிறகே விகிதாச்சார அடிப்படையில் கூறப்பட்டவர்களுக்கு சொத்தை பங்கிட வேண்டும் என்பதையும் 4 வது அத்தியாயம் 12 வது வசனத்திலிருந்து அறியலாம்.

மரண சாசனத்தின் அதிகபட்ச அளவு என்ன?

மரண சாசனம் செய்வதற்கு மார்க்கம் அனுமதி அளித்திருந்தாலும் அதன் அதிகபட்ச அளவாக மூன்றில் பகுதியை நிர்ணயித்துள்ளது. இதைவிட அதிகமாகி விடக்கூடாது.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘விடை பெறும்’ ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை (நலம்) விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். (நபி-ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வந்தன்’ எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கிற வேதனை என்னை வந்தடைந்துவிட்டது. எனவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கு (போதும்) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும்.

நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவாயினும் சரியே’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 3936).

உதாரணமாக மூன்று இலட்சம் ரூபாயளவிற்கு சொத்து வைத்தள்ள ஒருவர் இதில் மூன்றில் ஒரு பகுதியாகிய ஒரு இலட்சம் ரூபாய் வரைதான் மரண சாசனம் செய்யமுடியும். அதற்கு அதிகமாக செய்ய முடியாது.

51, 52 வது வசனம்

51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

52. எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

(அல்குர்ஆன்: 36:51),52) ➚.)

ஸூர் ஊதப்படுவதும் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவதும்

51 வது வசனத்தில் ஸூர் ஊதப்படும் போது மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவது பற்றி கூறப்படுகிறது.

இது அல்லாத மற்ற சில வசனங்களிலும் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவது பற்றி இடம் பெற்றுள்ளது.

எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக. (அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள்.

(அல்குர் ஆன் : 54:6, 7.)

பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து வேகமாக வெளியேறுவார்கள்.

(அல்குர் ஆன் : 70:43.)

மண்ணறைகளிலிருந்து எழும்போது பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் எழுவார்கள் என்றும் பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் எழுவார்கள் என்றும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

மண்ணறை வேதனை உண்டா?

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 52 வது வசனத்தில் “எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்பார்கள்.” என்றும் கூறப்படுகிறது. பொதுவாக மண்ணறையிலிருந்து எழும் அனைவரும் இவ்வாறே கேட்பார்கள்.

இறைநம்பிக்கையாளர்கள் இவ்வாறு கேட்பது ஆச்சரியமல்ல. ஏனெனில் அவர்கள் நிம்மதியாக மண்ணறையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை யாரேனும் எழுப்பினால் இவ்வாறுதான் கேட்பார்கள்.

ஆனால் இறைமறுப்பாளர்கள் இவ்வாறு கேட்பது ஆச்சரியமானதாகும். ஏனெனில் அவர்கள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவர். வேதனையிலிருந்து எழும் போது எங்களை உறக்கத்திலிருந்து ஏன் எழுப்பினீர்கள்” என்று கேட்கிறார்கள்.

இதை ஆதாரமாக கொண்டு சிலர் மண்ணறை வேதனை கிடையாது என்றும் வாதிடுகின்றனர். எனவே இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இவ்விஷயத்தில் இறைமறுப்பாளர்கள் சொல்வதை நாம் கவனிக்கக்கூடாது. ஏனெனில் ஒரு உலகத்திலிருந்து வேறொரு உலகத்திற்கு அவர்கள் செல்லும் போது முந்தைய உலகத்தில் நடந்த நிகழ்வை மறந்துவிடுவர். இதை பின்வரும் வசனம் உணர்த்துகிறது..

மறுக்கமுடியாத உடன்படிக்கை.

“ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

(திருக்குர்ஆன்: 7:172), 173) ➚.)

நாம் அனைவரும் இவ்வுலகில் பிறப்பதற்கு முன் இந்த உடன்படிக்கை நடந்தது என்று மேற்படி வசனம் கூறுகின்றது. எனினும் நம் யாருக்கும் இந்த உடன்படிக்கை நடந்தது நினைவிலிருக்காது. அந்த உலகத்திலிருந்து இவ்வுலகத்திற்கு வந்த பிறகு அங்கு நடந்த அனைத்தையும் மறந்துவிட்டுளோம் என்பதே இதற்கு காரணம். நமக்கு நினைவில்லாததால் இப்படியொரு உடன்படிக்கை நடைபெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதே போன்றுதான் மண்ணறை உலகிலிருந்து எழுப்பப்படும் போது அங்கு அவர் அனுபவித்த துன்பம் அவருக்கு நினைவில் இருப்பதில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

ஷைத்தானை வணங்கக் கூடாது என்ற உடன்படிக்கை

மேலும் ஷைத்தானை வணங்கக் கூடாது என்றும் நம்மிடம் உடன்படிக்கை எடுக்கப்பட்டது.

60,61.“ஆதமுடைய மக்களே!ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரி. என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதி மொழி எடுக்கவில்லையா?”

(அத்தியாயம் : 36 : 60,61.)

இது போன்று நம்மிடம் உடன்படிக்கை எடுக்கப்பட்டது உண்மைதான். எனினும் யாருக்கும் இது நினைவிருக்காது. ஏனெனில் வேறு உலகிற்கு நாம் வந்துவிட்டோம். இதே போன்றுதான் இறைமறுப்பாளர்களும் நினைவின்றி மண்ணறையில் உறக்கத்திலிருந்து தங்களை எழுப்புவதாக கூறுகின்றனர்.

மனிதர்கள் மறந்துவிட்ட பல விஷயங்கள்

உலகத்தில் வாழ்ந்தவர்களை மறுமையில் அல்லாஹ் எழுப்பும் போது அவர்களிடம் எவ்வளவு காலம் உலகில் தங்கியிருந்தீர்கள் என்று கேட்பான்.

அதை அவர்கள் காணும் போது ஒரு மாலையோ, அல்லது ஒரு காலையோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.

(அல்குர் ஆன் : 79 : 46.)

பல வருடங்கள் உலகில் வாழ்ந்தவர்கள் ஒரு நாளின் காலைப் பொழுது அல்லது மாலை பொழுது மட்டுமே தாங்கள் வாழ்ந்ததாக கூறுகிறார்கள். இது உண்மையல்ல. ஏனெனில வேறொரு உலகிற்கு சென்றதால் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களை மறந்துவிட்டார்கள். குற்றவாளிகள் இதை விட குறைவாக கூறுவார்கள்.

அந்த நேரம் வரும் போது சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

(அல்குர் ஆன் : 30:55.)

சிறிது நேரம்தான் தாங்கள் வாழ்ந்தோம் என்று குற்றவாளிகள் கூறுவது உண்மையல்ல. ஏனெனில் உலகில் நடந்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

மேற்கண்ட விஷயங்களை மறந்ததை போலவே மண்ணறை எனும் உலகத்திலிருந்து மறுமை எனும் மற்றொரு உலகத்திற்கு அவர்கள் செல்லும் போது மண்ணறையில் தாங்கள் எப்படி இருந்தோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அதனால்தான் தாங்கள் வேதனை செய்யப்பட்டோம் என்பதை அறியாமல் ‘எங்கள் உறக்கத் தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்கின்றனர்.

அதிர்ச்சியால் மறந்துவிடும் மனிதன்

மேலும் மனிதர்கள் ஏதாவது அதிர்ச்சியான நிகழ்வை சந்தித்தால் முன்னர் நடந்ததை மறந்துவிடுகின்றனர். கடந்த காலங்களில் தான் எங்கே இருந்தோம் என்பதையும் அறியாமல் “நான் இப்போது எங்கே இருக்கிறேன்” என்றும் கேட்கின்றனர். மறுமைநாளும் இது போன்ற பேரதிர்ச்சியான சம்பவமாகும். அந்த அதிர்ச்சியில் தாய் தான் பாலூட்டிய குழந்தையை கூட மறந்துவிடுவாள்.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

(அல்குர் ஆன் : 22:1, 2.)

இத்தகைய பேரதிர்ச்சியால் மண்ணறைவாசிகள் தங்களுக்கு நடந்ததை மறந்து விடுகின்றனர்.

மண்ணறை வேதனை பற்றிய குர்ஆன் வசனங்கள்.

யாசீன் அத்தியாயத்தின் 50, 51 வது வசனத்தை படித்துவிட்டு மேற்கண்ட விளக்கத்தை அறியாமல் சிலர் மண்ணறை வேதனை இல்லை என்று வாதிடுகின்றனர். அது தவறாகும். மேலும் மண்ணறை வேதனை குறித்து பேசக்கூடிய வசனங்கள் நபிமொழிகளில் மட்டுமின்றி குர்ஆனிலும் உள்ளது.

காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

(அல்குர்ஆன்: 40:46) ➚.)

மேற்கண்ட வசனத்தில் காலையிலும் மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுவார்கள் என்று கூறப்படுவது மண்ணறை வேதனையையே குறிக்கிறது. ஏனெனில் இதற்கு பிறகு அந்த நேரம் (மறுமைநாள்) வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்கள் வேதனை செய்யப்படுவர் என்று கூறப்படுகிறது. எனவே முதலில் உள்ள வேதனை மண்ணறை வேதனைதான் என்பதை அறியலாம்.

மேலும் சில வசனங்களும் மண்ணறை வேதனை பற்றி கூறுகிறது.

(ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.

ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

(திருக்குர்ஆன்: 8:50), 51) ➚, 52.)

இவ்வசனங்களில் ஃபிர்அவ்னின் ஆட்களை தண்டித்ததை போன்றே இறை நிராகரிப்பாளர்களையும் தண்டிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணறை வேதனை இறை நிராகரிப்பாளர்களுக்கும் உண்டு என்பதை அறியலாம். எனவே குர்ஆனில் மண்ணறை வேதனை குறித்த வசனங்கள் இல்லை என்று கூறுவது தவறாகும்.

மண்ணறை வேதனை பற்றிய ஹதீஸ்கள்

இறைநிராகரிப்பாளர்கள் மட்டுமின்றி முஸ்லிம்களில் சிலருக்கும் மண்ணறை வேதனை உண்டு என்பதை நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை.

ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்;
இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்” எனக் கூறிவிட்டு,
ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 1361)

பொதுவாக மண்ணறை வேதனை இறைநிராகரிப்பாளர்களுக்கு மட்டும்தான் இருக்கும். எனினும் மறைவாக சிறுநீர் கழிக்காவிட்டாலும் அல்லது கோள் சொல்லி திரிந்தாலும் முஸ்லிமாக இருப்பினும் அவருக்கு மண்ணறை வேதனை உண்டு என்பதை இதன் மூலம் அறியலாம். இது அல்லாத மற்ற சில ஹதீஸ்களும் மண்ணறை வேதனையை உறுதிபடுத்துகின்றது.

53, 54 வது வசனம்

53. ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லை. உடனே அவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

54. இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

(அல்குர் ஆன் : 36 : 53,54.)

இதில் 53 வது வசனத்தில் மறுமையில் ஒன்று திரட்டப்படுவது பற்றி கூறப்படுகிறது. இதை யாசீன் அத்தியாயத்தின் 32 வது வசனத்தின் விளக்கத்திலேயே நாம் கூறியிருந்தோம். அந்த விளக்கமே இதற்கு போதுமானதாகும்.

சிறந்த நீதியாளன் அல்லாஹ்

அடுத்ததாக 54 வது வசனத்தில் மனிதர்கள் செய்த அமல்களுக்கு கூலி வழங்கப்படும் என்பதையும் யாருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது என்பதையும் அல்லாஹ் கூறுகிறான். இவ்வசனத்தில் இன்றைய தினம் அல்லாஹ் எவருக்கும் அநீதி இழைக்கமாட்டான் என்று கூறப்படுகிறது. பொதுவாக அல்லாஹ் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டான்.

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.

(அல்குர் ஆன் : 4 : 40.)

எனினும் இன்றைய தினம் என்று யாசீன் அத்தியாயத்தின் 54 வது வசனத்தில் மறுமையை குறிப்பிட்டு கூறுவதற்கு சில காரணங்கள் உள்ளது.

மறுமைநாளில் முழு அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதாகும்

அவர்கள் வெளிப்பட்டு வரும் நாளில் அவர்களைப் பற்றிய எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. இன்றைய தினம் ஆட்சி யாருக்கு? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே.

(அல்குர்ஆன்: 40:16) ➚.)

மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை தெளிவு படுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியை தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான்; வானங்களை தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு, “நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்?” என்று கேட்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 4812)

பொதுவாக முழு அதிகாரமும் ஒரு நபரிடம் இருந்தால் அங்கே அநியாயங்கள் அதிகமாக நடக்கும். யாரும் அவரை தடுக்க இயலாது, உதாரணமாக ஒரு மனிதரிடம் முழு அதிகாரமும் இருந்தால் அவர் அதை தவறாக பயன்படுத்துவார். மற்றவர்களுக்கு அநீதி இழைப்பார். இதற்கு உலகிலேயே பல சான்றுகளை நாம் பார்க்கிறோம். ஆனால் மறுமை நாளில் முழு அதிகாரமும் தனக்கு இருந்தும் அல்லாஹ் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டான். சிறிதளவு நன்மை செய்திருந்தாலும் அதையும் வழங்கிவிடுவான்.

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன்: 9:7),8) ➚.)

தன்னிடம் அதிகாரக் குவியல் இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தாமல் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதன் கூலியையும் நான் வழங்கிவிடுவேன் என்று தன்னுடைய நீதியை அல்லாஹ் நிலைநாட்டுகிறான்.

55 வது வசனம்

55. அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்.

(திருக்குர்ஆன்: 36:55) ➚.)

கற்பனைக்கு எட்டாத சொர்க்கத்து இன்பங்கள்

இந்த வசனம் சொர்க்கவாசிகளுடைய இன்பத்தின் உச்சகட்டத்தை கூறுகிறது.

இவ்வசனத்தில் “(தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்” என்பதை குறிப்பதற்கு அரபியில் “ஃபீ ஷூகுலின் ஃபாகிஹூன்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஷூகுல் என்றால் வேறு எந்த வேலைகளிலும் கவனம் செலுத்தாமல் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பதாகும்.

இந்த அடிப்படையில் சொர்க்கவாசிகள் இன்பத்தில் மட்டுமே திழைத்து கொண்டிருப்பார்கள். வேறு எதிலும் அவர்களுடைய கவனம் செல்லாது. இதற்கு நிகராக வேறு எந்த இன்பமும் கிடையாது. உலகத்தில் மனிதர்கள் என்னதான் இன்பங்களை அனுபவித்தாலும் அதில் பல தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் சொர்க்கவாசிகளுக்கு இது போன்று எவ்வித தங்குதடையும் இல்லாத முழுமையான இன்பம் மட்டுமே கிடைக்கும். அதை குறிப்பதற்குதான் “ஷூகுல்” என்ற வாசகம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சொர்க்கத்து இன்பங்கள் நம் கற்பனைக்கு கூட எட்டாத அளவிற்கு இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர்களும் விளக்குகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்’ என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன்: 32:17) ➚ இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ்(புகாரி: 3244).

சொர்க்கத்து இன்பங்களில் சிறிதளவை நாம் அடைந்தால் கூட இவ்வுலகில் பட்ட துன்பங்களனைத்தும் மறந்ததவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, நரகத்தில் ஒருமுறை அழுத்தி எடுக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருட்கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!” என்று பதிலளிப்பார்.

அவ்வாறே, இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு, சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை, என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை” என்று கூறுவார்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 5407).

இவ்வுலகில் எந்த செல்வந்தரும் வாழ்ந்திராத பகட்டான வாழ்வு சொர்க்கத்தில் உண்டு.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகிற அணியினரின் தோற்றம் பெளர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும்.

(அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜை (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும்.

(சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ்(புகாரி: 3245).

பொதுவாக ஆறுகள் என்றாலே அது இயற்கையாகவே மனிதர்களுக்கு இன்பம் தரக்கூடியதாகும். எனவேதான் சுற்றுலா செல்பவர்கள் ஆற்று பகுதிகளை நோக்கி அதிகமாக செல்கிறார்கள். இத்தகைய ஆறுகளை விட சிறந்த தூய்மையான ஆறுகளை சொர்க்கத்தில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?

(அல்குர் ஆன் : 47:15.)

உலகத்தில் அனைத்திலும் கலப்படம் நிறைந்திருக்கும் நிலையில் எந்தவொன்றிலும் துளிக்கலப்படம் இல்லாத தூய்மையானவை சொர்க்கத்தில் உண்டு என மேற்கண்ட வசனம் கூறுகிறது. இவை தவிர விலைமதிப்பற்ற சொகுசு அறைகளும் சொர்க்கத்தில் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.

இதை (அபூ மூசா) அப்துல்லாஹ் பின் கைஸ் அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 3243)

மேலும் விரும்பிய உணவுகளையும் அங்கே சாப்பிடலாம். இவ்வுலகம் போன்று சாப்பிட்டவை கழிவுகளாக வெளியேறாது. மாறாக கஸ்தூரி மனம் கொண்ட வியர்வையாக வெளியேறிவிடும். அவர்களுடைய ஏப்பமும் கஸ்தூரி மனம் கொண்டதாக இருக்கும். அதன் பிறகு மறு உணவிற்கு அவர்கள் தயராகிவிடுவார்கள்.

56 வது வசனம்

56. அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 36:56) ➚.)

சொர்க்கத்தில் துணைகளும் இருப்பார்கள். இவர்கள் “ஹூருல் ஈன்” என்றழைக்கப்படுவர். அவர்களுடைய அழகை பின்வரும் வசனம் விளக்குகிறது.

ஹூருல் ஈன்களும் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 56:22),23) ➚.)

அவர்களுடைய அழகின் மகத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும்.

சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விட மேலானதாகும்.

(புகாரி: 6568)

இவ்வுலகில் உள்ள ஆண்களோ அல்லது பெண்களோ புறச்சாதனங்கள் மூலம் தங்களை அழகுபடுத்தி கொண்டால் மட்டும்தான் பார்ப்பதற்கு அழகாக தோன்றுவார்கள். இல்லையேல் சாதாரணமாகதான் தோன்றுவார்கள்.

உலக அழகி என பட்டம் சூட்டப்படுபவர்களும் புற அலங்காரத்தின் மூலம்தான் அழகாக தோன்றுகிறார்கள். அது இயற்கை அழகல்ல. ஆனால் “ஹூருல் ஈன்கள்” எட்டிப்பார்த்தாலே இவ்வுலகம் முழுவதும் ஒளிரும் அளவிற்கு அழகானவர்கள்.

மேலும் சொர்க்கத்தில் கடை வீதிகளும் உண்டு. அதற்கு சென்று திரும்பும்போது மென்மேலும் அழகுற்றவர்களாக திரும்புவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 5448).

மனித கற்பனைக்கெட்டாத இந்த இன்பங்களை கடந்து இன்னும் சில இன்பங்களும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அது முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்லும்.) நீங்கள் விரும்பினால், “(சொர்க்கவாசிகள்) நீண்ட நிழலில் இருப்பார்கள்” என்னும் (56:30) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 3252)

இது போன்ற மரத்தை உலகில் எங்குமே காணமுடியாது. அத்தகைய பிரம்மாண்டமான மரத்தை சொர்க்கத்து இன்பமாக அல்லாஹ் வைத்துள்ளான்.

மேற்கண்ட ஹதீஸில் அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் என்றுதான் இடம் பெற்றுள்ளது. புகாரியின் 6553வது ஹதீஸில் உயர் ரக குதிரையில் நூறாண்டுகள் பயணம் செய்தாலும் அதன் நிழலை அடைய முடியாது என்று உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 6553)

57 வது வசனம்

57. அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.

(அல்குர்ஆன்: 36:57) ➚.)

உலகில் நாம் பார்த்து ஆசைப்படும் அனைத்து பழங்களையும் அனைவராலும் வாங்க இயலாது. வாங்குவதற்கு பணம் இருந்தாலும் நாம் விரும்பிய பழங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சொர்க்கத்தில் இந்நிலை இருக்காது. விரும்பிய பழங்கள் கிடைக்கும். பழங்கள் மட்டுமின்றி அவர் விரும்பியது எதுவாக இருந்தாலும் அனைத்தும் சொர்க்கத்தில் அவருக்கு கிடைக்கும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், “நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம். (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்” என்று கூறுவார்.

(இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், “எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது’ என்று கூறுவான்.

(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்” என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

(புகாரி: 2348)

விரும்பி வாயால் கேட்பது மட்டுமின்றி மனதால் நினைத்தது கூட சொர்க்கத்திலே கிடைத்து விடும்.

அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவனால் நிறைவேற்றப் படும் வாக்குறுதியாக ஆகி விட்டது.

(அல்குர்ஆன்: 25:16) ➚.)

தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில் உள்ளங்கள் விரும்புபவையும், கண்கள் இன்புறக் கூடியவைகளும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.

(அல்குர்ஆன்: 43:71) ➚.)

நாம் பிரமிக்கும் வகையில் உள்ள இந்த இன்பங்கள் சொர்க்கத்தின் சிறிதளவுதான். இதை விட கூடுதலாக நாம் கற்பனை செய்ய முடியாதளவிற்கு அல்லாஹ் பல இன்பங்களை அதில் தயாரித்துள்ளான்.

சொர்க்கத்தில் பெண்களுக்கும் துணைகள் உண்டா?

சொர்க்கத்தில் துணைகள் உண்டு என்று 56 வது வசனத்தில் கூறப்பட்டது.

சொர்க்கத்தில் உள்ள ஆண்களுக்கு “ஹூருல் ஈன்” எனும் பெண் துணைகள் இருப்பது போன்று பெண்களுக்கு ஆண் துணைகளும் உண்டா என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

இக்கேள்விக்கு பதில் கூறும் சிலர் ஆண்களுக்கு தான் துணைகள் உண்டு என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் பெண்களுக்கு சொர்க்கத்தில் துணைகள் இல்லை என்று கூறுகின்றனர். அது தவறாகும். அது எப்படி தவறு என்பதை பார்ப்போம்.

குர்ஆனின் அணுகுமுறை

பொதுவாக குர்ஆனில் கூறப்படும் கட்டளைகள் மற்றும் இன்னபிற விஷயங்கள் ஆண்களை நோக்கி கூறும் வகையில் ஆண்பாலாகவே அமையும்.

உதாரணமாக தமிழில் ஒரு ஆணை நோக்கி பேசும்போது “நீ” என்று கூறுவோம். பெண்ணை நோக்கி பேசும்போதும் “நீ” என்றே கூறுவோம். இரண்டு வார்த்தை பிரயோகமும் ஒன்றாகதான் உள்ளது. இதில் ஆண்களையும் பெண்களையும் குறிப்பதற்கு தனித்தனி சொற்கள் இல்லை. எனினும் அரபியில் தனித்தனி சொற்கள் உண்டு.

அரபியில் ஆணை நோக்கி நீ என்று பேசும்போது “அன்த்த” என்று கூறப்படும். பெண்ணை நீ என்று நோக்கி பேசும்போது அன்த்தி” என்று கூறப்படும். மேலும் பன்மையாக அவர்கள் என்று ஆண்பாலாக கூறும்போது “ஹூம்” என்றும் பெண்பாலாக கூறும்போது “ஹூன்ன” என்றும் சிறிய வேறுபாட்டோடு கூறப்படும்.

ஆனால் தமிழில் இது போன்ற வேறுபாடு இல்லை. இரு பாலருக்கும் அவர்கள்” என்றுதான் கூறப்படும்.

தொழுகை, நோன்பு போன்ற கட்டளைகளை குர்ஆன் கூறும்போது ஆண்பாலாக மட்டும்தான் கூறுகிறது.

பெண்களை குறிக்கும் வகையில் தனியாக கூறப்படவில்லை. இதை அடிப்படையாக கொண்டு தொழுகை, நோன்பு போன்ற கடமைகள் ஆண்களுக்கு மட்டும்தான் என்று கருதுவதில்லை. ஏனெனில் குர்ஆனுடைய பெரும்பான்மையான விஷயங்கள் மொழிவழக்கில் ஆண்பாலாகவே கூறப்பட்டாலும் இரு பாலரையும் குறிப்பதாகவே உள்ளது.

அவ்வாறே சொர்க்கத்து துணைகள் தொடர்பாக வருகின்ற வசனங்களையும் இருபாலருக்கும் பொதுவாகத்தான் கருதவேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் நபிமொழியும் அமைந்துள்ளது.

ஒரு முறை உம்முஸலமா (ரலி) அவர்கள் “குர்ஆனில் ஆண்களை பற்றி கூறப்படுவது போல் பெண்களை பற்றி கூறப்படவில்லையே ஏன்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அதற்கு பதிலளிக்கும் விதமாக பின்வரும் (33 : 35 வது) வசனம் இறங்கியது.

35. முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

அல்குர் ஆன் 33:35

(ஹதீஸின் கருத்து…)

(அஹ்மத்: 25363)

மற்றொரு செய்தியும் இதை உறுதிபடுத்துகின்றது.

“அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்தது தொடர்பாக அல்லாஹ் (ஆண்களை மட்டுமே கூறுகிறான்) பெண்களை பற்றி கூறுவதை கேட்கமுடியவில்லையே (ஏன்)?” என்று உம்முஸலமா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது “உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்” என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான்.

உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) ஹிஜ்ரத் செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளானோர், போரிட்டோர், மற்றும் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (இது) அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது.” எனும் (3: 195) வது வசனம் இறங்கியது.

(திர்மிதீ: 2949)

மேலும் உலகில் கிடைக்கும் துணைகளை விட சிறந்த துணை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்தில் கிடைக்கும் என்பதையே ஜனாஸாவிற்கு நாம் செய்யும் பிரார்த்தனை உணர்த்துகின்றது.

அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதத்திற்காகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய பிரார்த்தனையை நான் மனனமிட்டுள்ளேன்.

அவர்கள், “அல்லா ஹும் மஃக்பிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஉஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ அத்கில்ஹுல் ஜன்னத்த, வ அஇத்ஹு மின் அதாபில் கப்ரி / மின் அதாபிந் நார்” என்று பிரார்த்தித்தார்கள்.

(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி),அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக;

மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக;இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக;இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!) அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பிரேதம் நானாக இருந்திருக்கக் கூடாதா என நான் ஆசைப்பட்டேன்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 1756).

எனவே சொர்க்கத்தில் ஆண்களுக்கு துணைகள் உண்டு என்பதை போலவே பெண்களுக்கு துணைகள் உண்டு என்பதே சரியானதாகும். இவைதான் யாசீன் அத்தியாயத்தின் 57 வது வசனத்தின் விளக்கமாகும்.