06) யாஸீன் விளக்கவுரை-6

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

தஜ்ஜால் உயிர்கொடுப்பவனா?

அடுத்து மறுமைநாளின் அடையாளமாக விளங்குகின்ற தஜ்ஜால் என்பவனை பற்றி பார்ப்போம்.

தஜ்ஜால் மக்களை குழப்புவதற்காக படைக்கப்பட்ட படைப்பினமாகும். அவன் இறந்தவருக்கு உயிர் கொடுப்பதாக ஹதீஸ்கள் வருகிறதே இதை எப்படி புரிந்து கொள்வது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அதற்கான விளக்கத்தை காண்போம்.

நல்லடியாரை கொலை செய்து மீண்டும் உயிர் கொடுப்பான்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!’ என்பார்.

அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), ‘நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?’ என்று கேட்பான். மக்கள் ‘கொள்ள மாட்டோம்!’ என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான்.

அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!’ என்று கூறுவார். தஜ்ஜால் ‘நான் இவரைக் கொல்வேன்!’ என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!’

ஸஹீஹ்(புகாரி: 1882).

இச்செய்தியில் இறந்துவிட்ட நல்லடியாரை தஜ்ஜால் உயிர்ப்பித்ததாக வருவதன் மூலம் அல்லாஹ்வின் பண்பை இவன் எடுத்துக்கொண்டதாக தோன்றலாம். ஆனால் அது தவறாகும். ஏனெனில் தஜ்ஜால் குறித்து இஸ்லாத்தில் சற்று வித்தியாசமான நிலைபாடு உள்ளது. அவன் ஒரு குழப்பமானவன். மக்களை குழப்புவான் என நபி (ஸல்) அவர்களும் எச்சரித்துள்ளார்கள். அனைத்து நபிமார்களும் எச்சரித்துள்ளார்கள்.

மேலும் தஜ்ஜால் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் மக்களை சோதிப்பதற்காக நடைபெறுபவையே. அவனுடைய சுய ஆற்றலால் நடப்பதல்ல. அவன் செய்கின்ற செயல்களனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு பட்டியலிட்டு விட்டார்கள். அந்த செயல்களனைத்தும் அல்லாஹ் நாடியதாகும். தஜ்ஜால் சுயமாக செய்வதல்ல. அல்லாஹ் நாடியதை செய்யும்போது தஜ்ஜால் அதற்கு ஒருபோதும் சொந்க்காரனாக மாட்டான்.

இதை மேற்கண்ட சம்பவத்திலேயே அறியலாம். நல்லடியாரை கொல்வதற்கு முன்பு “நான் இவரை கொன்றுவிட்டு உயிர்ப்பித்தால் என்னை நம்புவீர்களா?” என்று கேட்டு மக்களை குழப்புகிறான். அதில் சில மக்கள் “ஆம்” என்று கூறி குழம்பியும் விடுகிறார்கள். ஆனால் இவனால் கொல்லப்பட்ட நல்லடியார் மீண்டும் உயிர்கொடுக்கப்படும்போது “நீ என்பதை பொய்யன் தெளிவாக அறிந்து கொண்டேன்” என கூறுகிறார்.

ஏனெனில் ஒரு முறைதான் அவனால் கொல்லமுடியும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதை அந்த நல்லடியார் கூறுகிறார். உடனே தஜ்ஜால் அவரை கொல்ல முயன்றபோது அவனால் இயலவில்லை. இதுவே அவனுடைய பலவீனமாகும். அவன் சுய ஆற்றலால் உயிர் கொடுத்திருந்தால் மீண்டும் கொன்றிருக்கவேண்டும் அதுவும் அவனுக்கு இயலவில்லை. இது போலவே அனைத்து செயல்களிலும் தஜ்ஜாலுக்கு பலவீனங்களை அல்லாஹ் வைத்துள்ளான்.

ஈஸா அலை மற்றும் தஜ்ஜால் தொடர்பான இவ்விளக்கத்தை சரியாக புரிந்து கொண்டால் உயிர்ப்பிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது என்று புரிவதில் குழப்பமிருக்காது.

அனைத்தும் பதிவாகின்றன

அடுத்ததாக 12 வது வசனத்தின் இரண்டாவது பகுதியில் “அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் வரையறுத்துள்ளோம்.” என்று கூறுகிறான். நாம் செய்கின்ற அனைத்து செயல்களையும் அல்லாஹ் பதிவு செய்கிறான். இதை மற்ற ஆதாரங்களும் விளக்குகிறது.

நன்மை, தீமையை கண்காணிப்போர்

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.

நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

(அல்குர் ஆன்:82:10,11,12.)

நம்முடைய அமல்களை கண்காணித்து எழுதுவதற்காக மலக்குமார்கள் எனும் மரியாதைக்குரிய எழுத்தாளர்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அவர்கள் நாம் செய்தவற்றை பதிவு செய்கிறார்கள்.

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

(அல்குர்ஆன்: 50:17),18) ➚.)

நாம் பேசும் பேச்சுக்களைக்கூட மலக்குமார்கள் பதிவு செய்கிறார்கள் என அல்லாஹ் கூறுகிறான். இத்தகைய கண்காணிப்பு வளையத்திற்குள்தான் நாம் இருக்கிறோம். இதில் நமக்கு சாதகமும் பாதகமும் உள்ளது. நாம் அற்பமாக நினைக்கும் தீமைகளையும் அல்லாஹ் பதிவு செய்கிறான்.

அது நமக்கு தீமையாக அமைகிறது. அற்பமான நினைக்கும் நன்மைகளையும் பதிவுசெய்கிறான். அது நமக்கு நன்மையாக அமைகிறது. இவ்வசனங்களும் 12 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள பதிவு செய்தல் என்பதை விளக்குகிறது. மற்றொரு சம்பவமும் இதை விளக்குகிறது.

காலடிகளுக்கு நன்மை.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?”என்று கேட்டார்கள்.

அதற்கு பனூசலிமா குலத்தார் “ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்” என்று (இரு முறை) கூறினார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 1182).

பள்ளிக்கு வரும்போது நாம் எடுத்துவைக்கும் எட்டுக்களை யாரும் எண்ணமாட்டோம். அதையும் துல்லியமாக கணக்கிட்டு நன்மைகள் பதிவு செய்யப்படுகிறது. ஒருவர் நடந்து வந்தால் அதற்கேற்ற நன்மை பதிவுசெய்யப்படும். வாகனத்தில் வந்தால் அதற்கேற்ப நன்மை பதிவு செய்யப்படும். ஒவ்வொருவருடைய சிரமங்களுக்கேற்ப நன்மை பதிவு செய்யப்படும்.

அனைத்து சிரமங்களுக்கும் நன்மை பதியப்படும்

அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்று மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த நபித்தோழர்கள் மதீனாவில் பல சிரமங்களையும் சித்ரவதைகளைகளையும் சந்தித்தார்கள். அவையனைத்திற்கும் பகரமாக நன்மைகள் பதியப்படும் என அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து போருக்குச் செல்லாது தங்குவதும், அவரது உயிரை விடத் தமது உயிர்களை விரும்புவதும் மதீனாவாசிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் தகாது. ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகம், சிரமம், பசி ஏற்பட்டாலும், (ஏக இறைவனை) மறுப்போருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் மிதித்தாலும், எதிரியிடமிருந்து ஒரு தாக்குதலைப் பெற்றாலும் அதற்காக அவர்களுக்கு ஒரு நல்லறம் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை. நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

121. அவர்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ எதை (நல்வழியில்) செலவிட்டாலும், ஒரு பள்ளத்தாக்கைக் கடந்தாலும் அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குப் பரிசளிப்பதற்காக அவற்றை அல்லாஹ் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.

(அல்குர் ஆன்: 9:120,121.)

ஜீம்ஆ தொழுகைக்கு விரைவாக வருபவர்கள் நன்மை பதியப்படும்

ஜீம்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்காக வந்தால் கூட அதற்கும் நன்மை பதிவு செய்யப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயிலில் நின்றுகொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு) வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும்.

அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றாவார்கள். இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து) விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக்கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 929)

மரம் நடுவதற்கும் நன்மை

ஏதேனும் மரத்தை நட்டுவைத்து அதிலிருந்து மனிதர்களோ பறவையோ மற்ற உயிரினங்களோ உண்டால் அதற்கும் நன்மை பதிவு செய்யப்படும்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரீச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம், “இந்தப் பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை; ஒரு முஸ்லிம்தாம் (நட்டுவைத்தார்)” என்று விடையளித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து, அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது (உயிரினம்) ஏதேனும் ஒன்றோ உண்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்” என்றார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 3160).

மனிதனுக்கு உணவளித்ததற்காக கூலி வழங்குவதையும் கடந்து உயிரினங்கள் உண்டாலும் கூலி பதியப்படுகிறது. நாம் ஏதெனும் மரத்தை நட்டுவைத்து பிறகு மரணித்துவிட்டால் கூட கோடான கோடி நன்மைகள் பதிவு செய்யப்பட்டு கொண்டேயிருக்கும். இதனால்தான் “அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம்” என்று அல்லாஹ் கூறுகிறான்.

மரணத்திற்கு பிறகும் நன்மைகள் தொடர

மேலும் சில செயல்களை செய்தால் மரணத்திற்கு பிறகும் நன்மைகள் நம்மை தொடர்ந்து கொண்டேயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;

நிலையான அறக்கொடை
பயன்பெறப்படும் கல்வி.
அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 3358)

இச்செய்தியில் கூறப்படும் அனைத்து செயல்களுமே மரணத்திற்கு பிறகும் நன்மையை பெற்றுத்தரும்.

கிணறு வெட்டுதல், மரம் நடுதல் போன்ற நீடித்திருக்கின்ற நிலையான தர்மங்களை செய்தால் அதன் மூலம் பலன்பெறும் அனைவருடைய நன்மையும் நமக்கு வந்தடையும். மேலும் பயனுள்ள கல்விக்கு ஒருவர் உதவி செய்தாலோ அல்லது கற்றுக்கொடுத்தாலோ அதன் மூலம் பயனடைபவர்களின் நன்மைகள் இவருக்கும் கிடைக்கும். ஏனெனில் கல்வி என்பது குறுகிய காலத்தில் அழிவது கிடையாது.

தலைமுறை தலைமுறையாக கோடான கோடி மக்களுக்கு சென்று சேரும். கல்விக்கு மரணமே இல்லை. எனவே இதற்கும் நன்மைகள் பதிவு செய்யப்படும். மேலும் நல்ல குழந்தை செய்யும் பிரார்த்தனையும் மரணித்தவருக்கு பயன்தரும் எனக் கூறப்படுகிறது. நம்முடைய குழந்தைகளை மார்க்க பற்றுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய பிரார்த்தனையை நாம் அடையமுடியும். எனவே இதுபோன்ற செயல்களில் நாம் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும்.

முந்திக்கொள்பவருக்கே அதிக நன்மை

மேலும் மற்ற நபர்களை விட விரைந்து சென்று நன்மை செய்தால் அவரை தொடர்ந்து மற்றவர்கள் செய்யும் நன்மைகளில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு. அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் குறையாது.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்”குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்” குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.

அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு “ஸாஉ” கோதுமை, ஒரு “ஸாஉ” பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்று வலியுறுத்தினார்கள். உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ” கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ” பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது;ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.

அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 1848).

ஒருவர் நன்மை செய்து பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். பிறகு அவரை பார்த்து பலர் நன்மை செய்தால் நன்மை செய்தவர்களுக்கு எவ்வித குறைவுமில்லாமல் கூலியை வழங்கிவிட்டு, வழிகாட்டியாக இருந்ததால் முதலில் செய்தவருக்கு அனைவருடைய நன்மைகளிலும் ஒரு பங்கை அல்லாஹ் வழங்குகிறான். இவ்வாறு கிடைக்கும் சங்கிலித் தொடரான நன்மையை நாம் கணக்கிடவே முடியாது.

அந்தளவிற்கு பல நபர்கள் இந்த தொடரில் வருவார்கள். இதை குறிப்பிடும் விதமாகதான் யாசீன் அத்தியாயத்தின் 12 வது வசனத்தில் “அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம்.” என்று கூறுகிறான். இதில் அவர்களை “செய்தவற்றை” என்ற வாசகத்தை மட்டும் கூறாமல் அடிச்சுவடுகளையும் என்று சேர்த்து கூறுகிறான்.

அடிச்சுவடுகள் என்பது ஒருவனுடைய செயலின் மூலம் ஏற்படும் விளைவுகளாகும். நன்மையிலும் தீமையிலும் இந்த விளைவுகள் ஏற்படும். உதாரணமாக உலகில் யார் கொலை செய்தாலும் அதனுடைய தீமையில் ஒரு பங்கு ஆதம் (அலை) அவர்களுடைய ஒரு மகனுக்கு செல்கிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)

ஸஹீஹ்(புகாரி: 3335).

கொலை என்ற கொடுஞ்செயலை உலகில் அறிமுகப்படுத்தியவர் ஆதம் (அலை) அவர்களுடைய மகன்தான். எனவே அனைத்து கொலைகளிலிருந்தும் ஒரு தீமை அவருக்கு சேரும். இதுதான் அடிச்சுவடு என்பதாகும். ஆதமுடைய மகனுக்கு மட்டுமின்றி நமக்கும் இதே நிலைதான். நன்மைக்கோ தீமைக்கோ நாம் முன்மாதிரியாக இருந்தால் நமக்கும் அதில் பங்கு உண்டு.

ஒரு தந்தை தன் மகனை மார்க்க பற்றுள்ளவனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் வளர்க்காமல் புகை, மது போன்ற தீமைகளை கற்றுக்கொடுத்திருந்தால் அதன் பங்கு தந்தைக்கு சேரும். இவ்விஷயத்தில் நாமும் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் இன்றைய காலத்தில் பேஸ்புக், வாட்சப் போன்றவை ஒருவருடைய அடிச்சுவடு போன்று வழிகாட்டுதலாக திகழ்கிறது.

சிலர் நல்லவற்றை பதிவிட்டு நல்லோருக்கு முன்மாதிரியாக இருப்பார். மறுசிலரோ தீய கருத்தை பதிந்துவிட்டு சென்றுவிடுவார். ஆனால் அதை பார்த்தவர்களில் பலர் ஒருவருக்கொருவர் சண்டையிடுமளவிற்கு நிலைமை மோசமாகிவிடும். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நன்மையை பதிவுசெய்தால் நமக்கும் நன்மை கிடைக்கும். தீமையை பதிவு செய்தால் நமக்கும் தீமை கிடைக்கும். எனவே இதில் பெர ும் கவனத்தோடு இருக்கவேண்டும்.

பதிவு செய்தவை மறுமையில் காட்டப்படும்

நம்முடைய செயல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை மறுமையில் அல்லாஹ் நமக்கு காட்டுவான். அல்லாஹ்வுக்கு இது ஒன்றும் சிரமமானது அல்ல. உலகில் மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் அனைத்து செயல்களையும் தான் நினைத்தால் வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். மனிதனுக்கே இது இயலுமானால் அல்லாஹ்வுக்கு மிக இலகுவானதாகும்.

அல்லாஹ்வின் பதிவு எத்தகையது என்பதை பின்வரும் செய்தி விளக்குகின்றது.

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார்.

நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, ‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), ‘அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான்.

பிறகு அவனை நோக்கி, ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு, அவன் ‘ஆம், என் இறைவா!’ என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், ‘நாம் இத்தோடு ஒழிந்தோம்’ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்’ என்று கூறுவான்.

அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், ‘இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்’ என்று கூறுவார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 2441).

இச்செய்தியில் கூறுவது போன்று விசாரித்துவிட்டு இறுதியில் அல்லாஹ் நம்மை சொர்க்கத்திற்கு அனுப்பிவிடுவான் என நாம் நினைத்துவிடக்கூடாது. மாறாக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த எச்சரிக்கையை பயந்து நம்முடைய நன்மைகளை அதிகரிக்கவேண்டும்.

நம் உறுப்புகள் நமக்கெதிராக சாட்சி சொல்லும்

மறுமைநாளில் நம்முடைய உறுப்புகளே நமக்கெதிராக சாட்சி சொல்லும் வினோத நிகழ்வுகளும் நடைபெறும் இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் சிரித்துவிட்டு, “நான் சிரித்ததற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் அடியான் தன் இறைவனுடன் (மறுமை நாளில்) உரையாடுவது குறித்(து நினைத்)தே (சிரித்தேன்)” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அடியான் (தன் இறைவனிடம்), “என் இறைவா! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு இறைவன், “ஆம்” என்பான். அடியான், “அவ்வாறாயின், எனக்கெதிராக (சாட்சியம் கூற) என்னிலிருந்து தவிர வேறெந்த சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறுவான். அதற்கு இறைவன், “இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர்(களான வானவர்)களுமே போதும்” என்பான்.

பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப் படும். அவனுடைய உறுப்புகளிடம், “பேசுங்கள்” என்று சொல்லப்படும். உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும். பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும். அப்போது அந்த அடியான், “உங்களுக்கு நாசமுண்டாகட்டும்! தொலைந்துபோங்கள். உங்களுக்காகத் தானே நான் (இவ்வளவு நேரம் இறைவனிடம்) வழக்காடினேன்” என்று (தன் உறுப்புகளிடம்) சொல்வான்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 5679).

நாம் செய்யும் அனைத்து செயல்களும் இது போன்று பதிவுசெய்யப்படும் என அல்லாஹ்வும் பல வசனங்களில் கூறிகிறான்.

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! “இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!” எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

(அல்குர் ஆன்:18:49.)

இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம் என்று கூறப்படும்.

(அல்குர்ஆன்: 45:29) ➚.)

ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் ந ாளில் “தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும்” என ஆசைப்படுவர். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுள்ளவன்.

(அல்குர்ஆன்: 3:30) ➚.)

மேலும் மறுமையில் நம்முடைய வெற்றி, தோல்வியை தீர்மானிக்க பதிவேட்டை படிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக அது கொடுக்கப்படும் விதத்தைவைத்தே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கலாம் என அல்லாஹ் கூறுகிறான்.

வலக்கரம் வெற்றி, இடக்கரம் தோல்வி

வலக்கரத்தில் பதிவேறு வழங்கப்படுவோர் வெற்றி பெற்றவர்களாவர். அவர்கள் இதனால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பர். இடக்கரத்தில் பதிவேடு கொடுக்கப்படுவோர் தோல்வியடைந்தோராவர். அவர்கள் இதனால் பெருமளவில கைசேதப்படுவர். பின்வரும் வசனங்களில் காணலாம்.

எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்” எனக் கூறுவார்.

அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார்.

அதன் கனிகள் தாழ்ந்திருக்கும்.

சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் “எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.

(அல்குர்ஆன்: 69:19) ➚முதல் 29 வரை.)

மறுமையில் நம்முடைய பதிவேடு வலக்கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் மென்றால் அதிகமான நல்லறங்களை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நன்மைத்தராசின் எடை அதிகரிக்கும் என அல்லாஹ் கூறுகிறான்.

யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.

யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.

ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?

(அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.

(அல்குர்ஆன்: 101:6) ➚முதல் 11 வரை.)

அனைத்து செயல்களும் பதிவு செய்யப்படுவதால் அதிகமான நன்மைகள் செய்து அல்லாஹ் வழங்கும் சொர்க்கத்தை நாம் அடையவேண்டும்.

13 முதல் 30 வரை

இந்த 12 வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்வின் பிரச்சாரத்தை விவரிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நேர்வழியில் இருக்கிறார்கள் என்று கூறி அல்லாஹ் அவர்களை தூதராக அனுப்பி மக்காவில் உள்ள மக்களுக்கு பிரச்சாரம் செய்யுமாறு கட்டளையிட்டு அதை அவர்களில் பலர் ஏற்கமாட்டார்கள் என்றும் கூறுகிறான். அல்லாஹ் கூறியது போன்று அவர்களில் அதிகமானோர் ஏற்கமறுத்தபோது நபியவர்களின் காலத்திற்கு முன்பிருந்த மக்கள் இதுபோன்று பிரச்சாரத்தை மறுத்தபோது அவர்களுக்கு நடந்த சம்பவத்தை உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான். அது யாசீன் அத்தியாயத்தின் 13 முதல் 30 வரை உள்ள வசனங்களில் இடம் பெற்றுள்ளது.

ஓர் ஊராருக்கு இரண்டு இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் அவர்களை அம்மக்கள் ஏற்கவில்லை. பிறகு மூன்றாவது இறைத்தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். அம்மக்கள் அவரையும் மறுத்தார்கள். பிறகு அவ்வூரின் கடைக்கோடியிலிருந்து ஒரு சாதாரண மனிதர் வந்து “இந்த தூதர்கள் கூறுவது உண்மைதான். இவரை நான் நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள்” என்று கூறினார்:

அவரையும் அம்மக்கள் மறுத்து கொன்றும் விட்டனர். பிறகு அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை வழங்குகிறான். அம்மக்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகிறான் இதுதான் இச்சம்பவத்தின் கருத்தாகும். இது சுருக்கமான சம்பவமாக இருந்தாலும் ஒவ்வொரு வசனமாக இதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நம் காலத்து மக்களுக்கும் இதில் அதிகமான படிப்பினைகள் உள்ளது. எனவே இதை ஒவ்வொரு வசனமாக பார்ப்போம்.

14) 13 வது வசனம்
13 வது வசனம்

ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

அந்த ஊரார் யார்?

13 வது வசனத்தில் “ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது என்று கூறுகிறான். இதில் அந்த ஊரின் பெயர் என்ன என்ற விபரம் இல்லை. இப்பெயரை அல்லாஹ்வோ அவனது தூதரோதான் சொல்ல முடியும். அவ்விருவரும் சொல்லவில்லை. ஆனால் குர்ஆனுடைய விளக்கவுரை நூல்களில் அது அன்தாக்கிய்யா என்ற ஊராகும் எனக்கூறப்பபட்டுள்ளது.

இது ஷாம் தேசத்திற்கு அருகில் உள்ளது. இன்றைக்கும் இப்பெயருடனே இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கருத்து தப்ஸீர் தப்ரீ பாகம் 20 பக்கம் 500 இல் காணப்படுகிறது. மேலும் இதர விரிவுரை நூட்களிலும் இக்கருத்து காணப்படுகிறது.

அல்லாஹ் ரசூல் கூறாத இது போன்ற பெயர்களை நாம் நம்பக்கூடாது. ஆனால் அதிகமான தப்ஸீர் நூட்களில் இது போன்று தாங்களாக பெயர்களை குறிப்பிடும் வழக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதை பல இடங்களில் காணலாம்.

கற்பனையான பெயர்கள்.

குர்ஆனுடைய 18 வது அத்தியாயத்தில் குகையில் தஞ்சம் புகுந்த சில இளைஞர்களை பற்றி கூறப்படுகிறது. எனினும் அந்த குகைக்கு எந்த பெயரும் குர்ஆனிலும் ஹதீசிலும் கூறப்படவில்லை. ஆனால் குர்ஆன் விரிவுரை நூட்களில் குகையின் பெயர் “பான்தலூஸ்” என்றும் அவ்வூரின் பெயர் “லவ்ஸ்” என்றும் நகரத்தின் பெயர் “அஃப்சூஸ்” என்றும் இளைஞர்களுடன் சென்ற நாயின் பெயர் “கித்மீர்” என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர் “அப்துல்லாஹ்” என்றும் மீகாயீல் அவர்களுடைய பெயர் “உபைதுல்லாஹ்” என்றும் கூறப்பட்டுள்ளது.

(பார்க்க நூல்: தஃப்ஸீர் மகாதில் பின் சுலைமான் பாகம் 2, பக்கம் 304)

இவ்வாறு கற்பனையாக பெயர்களை கூறுவது நமக்கு தேவையற்றதாகும். அல்லாஹ் கூறாத பெயர்களை நாமாக கூறுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. அல்லாஹ் சொல்லாத ஒன்றை நாம் அறிந்து கொள்ளவில்லை என்றால் இதற்காக அல்லாஹ் நம்மை தண்டிக்கப்போவதுமில்லை. எனவே மேற்கண்ட வசனத்தில் உள்ள “ஊர்” என்பதை மட்டும் நம்பினாலே போதுமானது. அது எந்த ஊர் என்று அல்லாஹ் சொல்லாத அடிப்படையில் வரையறுக்கும் செயலை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

14வது வசனம்

14. அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

தூதர்களின் பணிகள்

மேற்கண்ட வசனத்தில் பல தகவல்கள் உள்ளது. அல்லாஹ்விடமிருந்து வேதத்தை வாங்கிக் கொடுப்பது மட்டும்தான் தூதர்களின் பணி வேறெதுவும் இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். இவ்வசனம் அதை மறுக்கிறது. வேதத்தை கொடுப்பது மட்டும்தான் தூதர்களுடைய பணி என்றிருந்தால் இரண்டு தூதர்கள் வேதத்தை கொடுத்த உடன் அல்லாஹ் நிறுத்தியிருப்பான்.

மாறாக மக்கள் இருவரை பொய்யென கருதியபோது அடுத்து மற்றொரு தூதரை அனுப்புகிறான். வேதத்தை வழங்குவது மட்டுமின்றி அதை தெளிவுபடுத்தவேண்டும் என்பதே இதற்கு காரணமாகும்.

மூஸா நபியும் ஹாரூன் நபியும்.

மூஸா (அலை) அவர்களை பனூ இஸ்ராயீல் மக்களுக்கு தூதராக அல்லாஹ் அனுப்பியபோது தன்னுடைய உதவிக்காக தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களையும் தூதராக அனுப்புமாறு அல்லாஹ்விடத்தில் மூஸா (அலை) கேட்கிறார்கள். இதை பின்வரும் வசனங்களில் காணலாம்.

“என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!” என்றார்.

எனது பணியை எனக்கு எளிதாக்கு!

எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு!

(அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!

அவர் மூலம் என்னைப் பலப்படுத்து!

எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!

நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக.

உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக.

நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய் (என்றார்.)

“மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 20:25) ➚முதல் 36 வரை.)

மூஸா (அலை) அவர்களுக்கு இயல்பாகவே பேச்சு தெளிவானதாக இருக்காது. இதனால் மக்களுக்கு வேதத்தை விளக்கிக்கூற முடியாததால் தன் சகோதரர் ஹாரூனை தூதராக அனுப்புமாறு கேட்கிறார்கள்.

“என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

(அத்தியாயம் : 28 : 34.)

வேதத்தை வழங்குவது மட்டுமின்றி அதை விளக்குவதும் தூதர்களின் கடமை என்பதால்தான் மூஸா (அலை) அவர்கள் ஹாரூன் (அலை) அவர்களையும் உதவிக்காக அழைக்கிறார்கள்.

இது போன்றுதான் யாசீன் அத்தியாத்தின் 14 வது வசனத்தில் உள்ள சம்பவமும் உள்ளது.

இரு தூதர்களை அனுப்பி மக்கள் அவர்களை நிராகரித்தபோது மேலும் ஒரு தூதரை மக்களுக்கு வேதத்தை விளக்க வேண்டும் என்பதற்காகவே அனுப்புகிறான். எனவே தூதர்களின் பணியில் வேதத்தை தெளிவுபடுத்துவதும் அடங்கும். இங்கே இந்த தூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

பெயர் கூறப்படாத தூதர்கள்.

சில வசனங்களில் தூதர்களுடைய பெயர்களை அல்லாஹ் கூறுகிறான். இது நமது சான்றாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக இதை அவருக்கு வழங்கினோம். நாம் நாடியவருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும் அவரது வழித் தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர் வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விட சிறப்பித்தோம்.

(அல்குர் ஆன் : 6 : 83 முதல் 86 வரை.)

மற்ற சில வசனங்களில் இன்னும் சில தூதர்களுடைய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. எனவே இவர்கள் மட்டும்தான் உலகிற்கு அனுப்பபட்ட தூதர்கள் என சிலர் நினைக்கின்றனர். இது தவறாகும்.

சிலர் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் தூதர்கள் என்றும் நினைக்கின்றனர். ஏனெனில் அஹ்மத் என்ற நூலில் இடம் பெறக்கூடிய 21257 வது ஹதீஸில் இந்த எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை அறிவிப்பவர்களில் ஒருவரான அலீ பின் யஜீத் என்பவரை பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் புகாரி அவர்கள் “(முன்கருல் ஹதீஸ்) என்றும் அபூ ஜீர்ஆ அர்ராஜீ அவர்கள் “இவர் பலமானவர் அல்ல என்றும் நஸாயீ அவர்கள் “ஹதீஸ்துறையில் இவர் விடப்படவேண்டியவர்” என்றும் குறைகூறியுள்ளனர். மற்றொரு அறிவிப்பாளராகிய முஆத் பின் ரிஃபாஆ என்பவரை பற்றியும் இமாம்கள் விமர்சித்துள்ளனர். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாக உள்ளது.

இது போன்று தூதர்களுடைய எண்ணிக்கையை வரையறுப்பதற்கு நமக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே நாம் இதை பற்றி வரையறுக்கக்கூடாது. மேலும் குர்ஆனில் உள்ள சில வசனங்களில் தூதர்களுடைய பெயர்களை கூறாமலேயே அவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.

(அத்தியாயம் : 4 : 164.)

இதே போன்றுதான் யாசீன் அத்தியாயத்தின் 14வது வசனத்தில் கூறப்பட்டுள்ள மூன்று தூதர்களுடைய பெயர்களும் கூறப்படவில்லை. எனவே குர்ஆனில் பெயர் கூறப்படாத தூதர்களும் உலகிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு பின் இறைத்தூதர்களா?

யாசீன் அத்தியாயத்தின் 14 வது வசனத்தில் மூன்று தூதர்கள் என ஒன்றுக்கும் மேற்பட்ட தூதர்கள் ஒரே சமுதாயத்திற்கு அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான். சிலர் இதை ஆதாரமாக கொண்டு இந்த சமுதாயத்திற்கு தூதருக்கு பின் தூர் என அல்லாஹ் அனுப்பியது போல நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவரை தூதராக அனுப்பினான் என்று கூறுகின்றனர். இது தவறாகும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்களுக்கு பின் தூதர்கள் வர முடியாது என்றும் இஸ்லாம் கூறுகிறது. நபியவர்களுக்கு பின் நபித்துவ வாசல் அடைக்கப்பட்டுவிட்டது என மார்க்கம் கூறுகிறது. இந்த வசனத்தை வைத்துக் கொண்டு முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு பின் இறைத்தூதர் வரலாம் என வாதிடும் இவர்கள் இவற்றை கவனிக்க தவறிவிட்டார்கள்.

அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்தி) அமர்ந்திருந்தேன்.

(ஒரு முறை) அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகிறீர்கள்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்க விருக்கிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 3455).

நபி (ஸல்) அவர்கள் எனக்கு பிறகு எந்த தூதரும் வரமாட்டார்கள் என உறுதியாக கூறிவிட்டார்கள். இதை விட தெளிவாக நபி (ஸல்) அவர்கள் மற்றொரு செய்தியில் கூறியுள்ளார்கள்.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை” என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 4777)

ஹாரூனுடைய அந்தஸ்த்தில் அலீ (ரலி) அவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியதால் நபி (ஸல்) அவர்களுக்கு பின் நபித்துவம் உண்டு என்று யாரும் சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனக்கு பிறகு எந்த நபியும் இல்லை என்பதையும் சேர்த்து கூறுகிறார்கள்.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன.

நான் “முஹம்மத்” (புகழப்பட்டவர்) ஆவேன்.
நான் “அஹ்மத்” (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன்.
நான் “மாஹீ” (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான்.
நான் “ஹாஷிர்” (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள்.
நான் “ஆகிப்” (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை” என்று கூறினார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் “ரஊஃப்” (பேரன்புடையவர்) என்றும் “ரஹீம்” (இரக்கமுடையவர்) என்றும் பெயர் சூட்டியுள்ளான்.

(முஸ்லிம்: 4697)

மேற்கண்ட செய்தியிலும் நான் இறுதியானவன். எனக்கு பிறகு எந்த தூதரும் வரமாட்டார்கள் என அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளதால் நபியவர்களுக்கு பிறகு எந்த தூதரும் வரமாட்டார்கள் என்பது உறுதியாகின்றது.

அல்லாஹ்வும் இக்கருத்தை வேறு விதத்தில் கூறுகிறான்.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

(அத்தியாயம்: 33 : 40.)

நபி (ஸல்) அவர்கள் நபிமார்களின் முத்திரையாக இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். ஒரு பொருளுக்கு முத்திரை வைத்துவிட்டால் வெளியிலிருந்து எதையும் உள்ளே வைக்கவும் முடியாது. உள்ளேயிருந்து எதையும் வெளியில் எடுக்கவும் முடியாது.

உதாரணமாக தபால் தலைகளில் அரசாங்கம் முத்திரை வைத்துவிட்டால் அதற்கு பிறகு தபாலிலிருந்து எதையும் சேர்க்கவோ நீக்கவோ முடியாது என்றாகிவிடும். அதே போன்றுதான் நபி (ஸல்) அவர்களும் முத்திரையாக உள்ளார்கள். எனவே அவர்களுக்கு பிறகு நபிமார்கள் யாரும் வரமுடியாது. இதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

“என் சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் தன்னை நபி என்று வாதிடுவார்கள். (எனினும்) நான்தான் நபிமார்களின் முத்திரையாவேன். எனக்கு பிறகு எந்த நபியும் இல்லை.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் சவ்பான் (ரலி) அவர்கள்

நூல் : திர்மிதி-2145

33 வது அத்தியாயத்தின் 40 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள முத்திரை என்பதற்கு என்ன பொருள் என்பதை நபி (ஸல்) அவர்கள் இந்த செய்தியில் தெளிவுபடுத்திவிட்டார்கள். இதன் மூலமும் நபியவர்களுக்கு பின் எந்த தூதரும் வரமுடியாது என்பதை அறியலாம்.

அழகிய உதாரணம்.

நபி (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்பதற்கு அழகிய உதாரணம் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச்சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத்தூதர்களில் இறுதியானவன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 3535)

மற்ற செய்திகளும் இறுதி நபிதுத்துவத்தை விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்;

நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
(எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்சமும் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்
என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 907)

இந்த ஆதாரங்கள் அனைத்தையும் கண்டுகொள்ளாமல் யாசீன் அத்தியாயத்தின் 14வது வசனத்தில் இரண்டு தூதர்களுக்கு அடுத்து ஒரு தூதர் வந்தார் என்பதை மட்டும் கண்டு நபியவர்களுக்கு பின் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்ற தூதர் வந்துள்ளார் அல்லது இன்னொருவர் வருவார் என்று கூறுவது மிகப்பெரும் அறியாமையாகும்.

15 வது வசனம்

ஒரு ஊருக்கு மூன்று தூதர்களை அல்லாஹ் அனுப்பினான் என்பதைப் பற்றி முன்னர் பார்த்தோம். அந்த ஊர் மக்கள் தூதர்களை மறுத்தபோது கூறிய காரணங்களை 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

15. “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்” என்று கூறினர்.

மனிதர்கள் என்று கூறி மறுத்தனர்

தூதர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக இருப்பதால் அல்லாஹ்வின் செய்தி இவர்களுக்கு அருளப்படாது என்று அம்மக்கள் நினைத்தனர். இவர்கள் மட்டுமின்றி மற்ற தூதர்களுடைய சமுதாய மக்களும் இது போன்றே நினைத்தனர். இதை பின்வரும் வசனங்களில் காணலாம்.

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன்: 64:6) ➚.)

“இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்” என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

“உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்கள் நட்டமடைந்தவர்கள்”

(அல்குர்ஆன்: 23:33),34) ➚.)

நபி (ஸல்) அவர்களையும் மறுத்தனர்

முந்தைய கால மக்கள் மட்டுமின்றி நபி (ஸல்) காலத்து மக்களும் இவ்வாறே நபிகளாரை மறுத்துள்ளனர்.

“இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

(அல்குர் ஆன்:25:7.)

எந்த வித்தியாசமுமின்றி நம்மைப் போன்றே சாப்பிடுதல், குடித்தல் போன்ற அனைத்தையும் செய்து கொண்டு தன்னைத் தூதர் என்று கூறும்போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைதான் பிரதானமாக அனைத்து மக்களும் கூறியுள்ளார்கள். ஏதேனும் ஒரு வேறுபாட்டை அவர்கள் எதிர்பார்த்துதான் மறுத்தார்கள்.

வானவர்கள் தூதராக வரவேண்டும் என எதிர்பார்த்தார்கள்

இது மட்டுமின்றி மனிதனை விட தூய்மையான படைப்பினமாக உள்ள வானவர்கள் தங்களுக்கு இறைத்தூதராக வரவேண்டும் என்றும் விரும்பினர்.

94. “மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

(அத்தியாயம்:17: 94.)

தங்களைவிட உயர்ந்த படைப்பினம் தங்களுக்கு தூதராக வரவேண்டும் என்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்யும் விதமாக பல வழிகளை அல்லாஹ் ஏற்படுத்தினான்.

அற்புதங்களை வழங்கினான்

மார்க்கத்தில் தூதரை சந்தேகமின்றி நம்பவேண்டும் என்றிருந்தாலும் தங்களைப் போன்ற சாதாரண மனிதனை தூதராக ஏற்கமாட்டோம் என அம்மக்கள் கூறியது சற்று நியாயமானதாகவே இருந்தது. ஏனெனில் யாராவது ஒருவர் திடீரென தன்னை தூதர் என்று வாதிட்டால் அவரிடம் உள்ள தனித்தன்மை என்ன? என்பதை பொதுமக்கள் பார்ப்பார்கள்.

அவர்களால் செய்ய இயலாத பல விஷயங்களை தூதர் என வாதிடுபவர் செய்தால்தான் மக்கள் அவரை நம்புவார்கள். அதற்கும் பதிலளிக்கும் விதமாக தூதர்களுக்கு அற்புதங்களை வழங்கி அவர்களுடைய எதிர்பார்ப்புகளை அல்லாஹ் பூர்த்தி செய்தான். சாதாரண மனிதனால் செய்ய இயலாத பல அற்புதங்களை தன் நாட்டப்படி தூதர்களுக்கு வழங்கி அதன் மூலம் மக்களுக்க நம்பிக்கை ஊட்டினான்.

ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதம்

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்)

(அல்குர்ஆன்: 3:49) ➚.)

ஈஸா (அலை) அவர்களை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக இறந்தோரை உயிர்பிக்கும் அற்புதம் வழங்கப்பட்டிருந்தது.

மூஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதம்

“உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன்: 26:63) ➚.)

சில நேரங்களில் நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காக மூஸா (அலை) அவர்களுக்கு இது போன்ற அற்புதங்களும் வழங்கப்பட்டிருந்தது.

வானவர்கள் அனுப்பபட்ட நோக்கங்கள்

அம்மக்கள் வானவர்களை தூதர்களாக கேட்டபோது அல்லாஹ் அதை மறுத்து வானவர்கள் தண்டிப்பதற்காகதான் இறக்கப்படுவார்கள் என கூறுகிறான்.

இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பி யிருந்தால் காரியம் முடிக்கப்பட்டுவிடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 6:8) ➚.)

வானவர்களுக்குதான் வானவர்

மேலும் வானவர்களை தூதராக எதிர்ப்பார்த்தபோது “வானவர்களுக்குதான் வானவர்களை தூதராக அனுப்புவேன். மனிதர்களுக்கு அல்ல.” என்றும் கூறுகிறான்.

“பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்” என்பதைக் கூறுவீராக!

(அத்தியாயம் :17 : 95.)

வானவரையும் மனிதராகதான் மாற்றியனுப்புவான்

மேலும் மனிதர்களுக்கு வானவரை தூதராக அனுப்பினாலும் அவரை மனிதனாக மாற்றிதான் அனுப்புவதாக இறைவன் தெரிவிக்கின்றான்.

9. வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

(அத்தியாயம் : 6:9.)

ஏனெனில் தூதர் அனுப்பப்படும் நோக்கம் வேதத்தை கொடுத்துவிட்டு செல்வது மட்டுமல்ல. மாறாக மனிதனுக்கு எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதுதான். திருமணம், கொடுக்கல், வாங்கல் போன்ற மனித பழக்கவழக்கங்களை கற்றுத்தந்து முன்மாதிரியாக நடப்பதற்குதான் மனிதனை அல்லாஹ் அனுப்புகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அத்தியாயம்: 33 : 21.)

எனவே வானவரை அனுப்பினால் மனிதன் போன்று முன்மாதிரியாக அவர் வாழமுடியாது. மேலும் வானவர் முன்மாதிரியாக நடந்தார் என்று வைத்துக் கொண்டாலும் ” அவர் வானவராக இருந்ததால் அவ்வாறு கட்டுக்கோப்பாக நடந்துவிட்டார். மனிதர்களாகிய எங்களுக்கு அவ்வாறு நடக்கமுடியாது” என்று அம்மக்கள் மறுத்திருப்பர். இதையும் கவனித்துதான் மனிதரை தன் தூதராக அனுப்புகிறான் என்று விளங்கலாம்.

தூதர்கள் கூறிய பதில்கள்

தங்களுக்கு வானவர் தூதராக வந்திருக்க கூடாதா என்று மக்கள் கேட்ட போது தூதர்களும் சில பதில்களை கூறியுள்ளார்கள்.

“நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 14:11) ➚.)

நபி (ஸல்) அவர்களும் இது போன்ற பதிலை கூறியுள்ளார்கள்.

110. “நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 18:110) ➚.)

எனவே தாங்கள் மனிதர்கள்தான் என்பதையும் எனினும் அல்லாஹ்விடமிருந்து வஹீ அறிவிக்கப் படுவதில் மட்டும் நாங்கள் வேறுபடுவோம் என்பதையும் தூதர்கள் தங்கள் பதில்களாக கூறியுள்ளார்கள்.