05) யாஸீன் விளக்கவுரை-5

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

8, 9, 10 ஆகிய வசனங்களின் விளக்கம்

8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன.

9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது.

10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

இந்த மூன்று வசனங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான கருத்தை தரக்கூடிய வசனங்களாகும். இவற்றின் விளக்கங்களை பார்ப்பதற்கு முன்பு இவ்வசனங்கள் இறங்கியதற்கு குர்ஆன் விளக்கவுரை நூல்களில் கூறப்பட்டுள்ள காரணத்தை பார்ப்போம்.

கட்டுக்கதைகள்

(இஸ்லாத்தின் எதிரியாக இருந்த) அபூஜஹ்ல் “முஹம்மத் தொழுவதை நான் பார்த்தால் அவருடைய தலையை கல்லால் நசுக்கிவிடுவேன்” என சத்தியம் செய்தான். பிறகு அவர் தொழுவதை கண்டபோது எறிவதற்காக கல்லை உயர்த்தி, அவர் பக்கம் கொண்டு சென்றபோது அவனுடைய கை கழுத்தை நோக்கி திரும்பி, கல் கையோடு இணைந்துகொண்டது.

தன் தோழர்களிடம் திரும்பி சென்று தான் பார்த்ததை கூறியபோது இரண்டாவது மனிதனாகிய வலீத் பின் முகீரா “நான் அவருடைய தலையை நசுக்குவேன்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் தொழும் நிலையில் கல்லை எறிவதற்காக வந்தான். அப்போது அல்லாஹ் அவனுடைய கண்பார்வையை பறித்துவிட்டான். எனவே நபியவர்களை அவனால் பார்க்கமுடியவில்லை. சப்தத்தை மட்டும்தான் கேட்டான்.

பிறகு தன் தோழர்களிடம் வந்து “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை பார்க்கவில்லை. சப்தத்தை மட்டும்தான் கேட்டேன்” என்றான். அப்போது மூன்றாமவன் “அல்லாஹ்வின் மீதாணையாக! அவரது தலையை நான் உடைப்பேன்” என்று கூறிவிட்டு, பிறகு கல்லை எடுத்து (எறிவதற்காக) நடந்து சென்றான். அப்போது பின்னோக்கி திரும்பி வந்து பிடரி கீழேபடுமாறு மயக்கமுற்று விழுந்துவிட்டான். அப்போது “உனக்கு என்ன ஆனது?” என்று அவனிடம் கேட்கப்பட்டது. அவன் “அது மிகப்பெரிய விஷயம். நான் ஒருவரை பார்த்தேன்.

அவரை நெருங்கியபோது ஒரு ஒட்டகம் தான் வாலால் கீறியது. இதைவிட பெரிய ஒட்டகத்தை நான் பார்த்ததேயில்லை அது எனக்கும் அவருக்கும் மத்தியில் தடுத்தது. லாத் உஜ் ஜாவின் மீதாணையாக! நான் அதை நெருங்கினால் என்னை தின்றுவிடும்” என்று கூறினான். அப்போது “அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அது (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளது. எனவே அவர்களின் தலை மேல் நோக்கியுள்ளது.” எனும் 36 வது (யாசீன்) அத்தியாயத்தின் 8 வது வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல் தப்சீருல் குர்துபீ பாகம் 15 பக்கம் 7

இச்சம்பவம் மேற்கண்ட வசனம் இறங்குவதற்கு காரணமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது ஒருகட்டுக்கதையாகும். இதற்கு அடிப்படையான எந்த சான்றும் இல்லை. குர்ஆன் விளக்கவுரை நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர ஹதீஸ் நூல்களில் எவ்வித சான்றுகளும் இதற்கு இல்லை. இப்படி ஒரு தவறான, அடிப்படை ஆதாரமற்ற செய்தி இவ்வசனத்தின் பிண்ணனியில் சொல்லப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை குறிப்பிடுகிறோம்.

இப்போது மேற்படி வசனத்தின் விளக்கத்திற்கு வருவோம்.

வழிகேட்டில் உள்ளவர்களுக்கு உதாரணம்

யாசீன் அத்தியாயத்தின் 7 வது வசனத்தில் “அவர்களில் அதிகமானோருக்கு எதிராக கட்டளை உறுதியாகி விட்டது எனவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.” என்று அல்லாஹ் கூறுகிறான். இவ்வசனம் விதியை பற்றியது என்று முன்னர் அறிந்து கொண்டோம். 7 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள, விதிப்படி நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கான உதாரணத்தை 8.9,10 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு அவன் தலை மேல்நோக்கி இருந்தால் கீழே உள்ளதை எவ்வாறு பார்த்து விளங்க முடியாதோ அது போலதான் வழிகேட்டில் உள்ளவர்களால் சத்தியத்தை விளங்கமுடியாது என்பதை உதாரணம் கூறி அல்லாஹ் விளக்குகிறான். ஏனெனில் அவர்கள் சத்திய கருத்துக்கள் காதில் விழுந்தாலும் அதை செவிமடுத்து கேட்கமாட்டார்கள். கண்ணால் அவற்றை பார்த்தாலும் சிந்திக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனோ இச்சைப்படி செயல்படுகிறார்கள்.

இக்கருத்தை பிற வசனங்களிலும் இறைவன் தெரிவித்துள்ளான்.

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 45:23) ➚.)

அபூலஹப் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறான்.

அவன் நம்பிக்கை கொள்ளமாட்டான். மாறாக நரகம் தான் செல்வான் என்று அல்லாஹ் அவன் உயிரோடு வாழும் போதே திருக்குர்ஆனில் அறிவித்தான்.

(பார்க்க அல்குர்ஆன் அத்தியாயம் 111 வசனம் 1,2,3)

முஹம்மது கூறுகிற இறைவனின் வசனத்தை பொய்யாக்குவோம் என்ற சிந்தனையேற்பட்டாவது தான் நம்பிக்கை கொண்டு விட்டேன் என்று அவன் பொய்யாக கூறியிருக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு கூறவில்லை திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப அவன் இறுதிவரை ஓரிறை நம்பிக்கை இல்லாமலேயே மரணத்தை தழுவினான்.

அல்லாஹ் யாருக்கு உள்ளத்தில் முத்திரையிட்டு விட்டானே அதாவது கழுத்தில் சங்கிலியை போட்டு, மேல் நோக்கி தலையை திருப்பி, திருக்குர் ஆனை விட்டும் – நேர்வழியை விட்டும் திசைதிருப்பி விட்டானோ அவர்களுக்கு யாராலும், நேர்வழி காட்ட முடியாது.

இதைத்தான் மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது.

அபூலஹபின் வாரிசுகள்

அபூலஹபை போன்ற சிந்தனையற்ற மக்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

கப்ரு வணக்கம் கூடாது, கப்ரை கட்டக்கூடாது, அங்கு சென்று பிரார்த்தனை செய்வது யூதர்களுடைய கலாச்சாரம், அதனால்தான் யூதர்கள் சபிக்கப்பட்டார்கள் என்று எண்ணற்ற இறைசான்றுகள் கூறுகிறது.

(பார்க்க அல்குர் ஆன் 6:63,64, 10:18,(முஸ்லிம்: 1610)(புகாரி: 436)

ஆனால் சிலர் இதை சிந்திப்பதில்லை. காரணம் அவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான் என்பதேயாகும்.

தாயத்து கட்டுதல்,

“தாயத்தை தொங்க விடுகிறாரோ அவர் இணைவைத்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உக்பா பின் ஆமிர் அல்ஜீஹனீ

(அஹ்மத்: 16781)

இச்செய்தி தாயத்து அணிபவர்கள் மறுமையில் நரகம் செல்வார்கள் என தெளிவாக கூறுகிறது. ஆனாலும் சில முஸ்லிம்கள் தாயத்தை அணிகிறார்கள். இதுபோன்ற தெளிவான ஹதீஸ்கள் இருந்தபோதும் இத்தகைய தவறான செயல்களை செய்வதற்கு அத்தகைய மக்களின் உள்ளங்களில் சிந்திக்காதவாறு அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் என்பது தான் காரணமாகும்.

சிந்தனையில் அல்லாஹ் பூட்டை போட்டு விட்டால் என்னவாகும் என்பதற்கு இவற்றை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

(ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.

அத்தியாயம் 2 வசனம் 6,7

உதாரணம் கூறி விளக்குதல்

மேலும் இவ்வசனத்தில் மற்றொரு கோணமும் உள்ளது. குர்ஆனில் அதிகமான இடங்களில் அல்லாஹ் தான் கூறுவதை உதாரணம் கூறி விளக்குவான். அதேபோன்றுதான் இவ்வசனத்திலும் விளக்கியுள்ளான்.

8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அது (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளது. எனவே அவர்களின் தலை மேல் நோக்கியுள்ளது.

9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் மூடி விட்டோம் எனவே அவர்கள் பார்க்க முடியாது.

10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

ஆகிய மூன்று வசனங்களிலும் சத்தியத்தை விளங்காதவர்களுக்கு உதாரணம் கூறுகிறான்.

ஒருவனுடைய கழுத்துக்களில் விலங்குகளை போட்டு அவனுடைய தலை மேல்நோக்கியிருந்தால் பாதையில் நடந்து செல்லும்போது தரையில் கிடப்பதை அவனால் பார்க்கமுடியாது. இதே போன்றுதான் சத்தியக் கருத்து தனக்கு அருகில் இருந்தாலும் சிலரால் அதை விளங்கமுடியாது என்பதை இவ்வுதாரணத்தின் மூலம் விளக்குகிறான்.

குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இது போன்று உதாரணம் கூறி விளக்குவதை அதிகமாக காணலாம். ஏனெனில் புரியவைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். எனவேதான் யாசீன் அத்தியாயத்தின் 10 வது வசனத்தில் உதாரணம் கூறி அல்லாஹ் விளக்குகிறான்.

11 வது வசனம்

11. இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக்குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக!

இவ்வசனத்தில் ” அறிவுரையைப் பின்பற்றி தனிமையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத் தான் நீர் எச்சரிப்பீர்” என்று உள்ளது. அனைவரையும் எச்சரிப்பீர் என்று இல்லை. ஆனால் நபி ஸல் அவர்கள் அனைவரையும் எச்சரிப்பவர் என்று பின்வரும் வசனம் குறிப்பிடுகிறது.

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்காகவுமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 34:28) ➚.)

இவ்வசனத்தில் “நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.” என்று கூறுகிறான்.

இதன்படி நபியவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை செய்பவர் என்று ஆகிறது. ஆனால் யாசீன் அத்தியாயத்தின் 11 வது வசனத்தில் இதற்கு முரணான கருத்து உள்ளது போன்று தோன்றலாம். உண்மையில் முரண்பாடல்ல.

34 வது அத்தியாத்தில் அனைத்து மக்களுக்கும் எச்சரிக்கை செய்பவராக நபியவர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே உலகில் உள்ள அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்வார்கள். ஆனால் உலகில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கை பயன்தராது. மாறாக இறைவனை அஞ்சுவோர்க்கே எச்சரிக்கை பயன்தரும். யாசீன் அத்தியாயத்தின் 11 வது வசனம் அதையே குறிப்பிடுகிறது. இக்கருத்தை மேலும் சில வசனங்கள் உறுதிபடுத்துகிறது.

நற்செய்தி கூறக் கூடியதாகவும், எச்சரிக்கை செய்யக் கூடியதாகவும் (இது இருக்கிறது) அவர்களில் பெரும்பாலோர் புறக்கணித்தனர். எனவே அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.

(அத்தியாயம்:41 : 4.)

அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக! (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.

(அத்தியாயம்:87 : 9,10.)

மேற்கண்ட வசனங்களில் இறைவனை அஞ்சுபவர்களுக்கே அறிவுரை பயன்தரும் என அல்லாஹ் கூறுகிறான்.

34வது அத்தியாயம் எச்சரிக்கை செய்யப்பட வேண்டியவர்களை கூறுகிறது. (அதாவது அனைவரையும் எச்சரிக்கை செய்யவேண்டும் என கூறுகிறது.) ஆனால் யாசீன் அத்தியாயம் அந்த எச்சரிக்கை யாருக்கு பயன் தரும் என்பதை பற்றி கூறுகிறது.

அனைவரையும் எச்சரிக்கை செய்தாலும் இறைவனை அஞ்சுவோர்க்கே அது பயன்தரும். இவ்வாறு பிரித்து, தெளிவாக விளங்கிக்கொண்டால் எவ்வித முரண்பாடும் இல்லை.

“திக்ர்” என்பதன் பொருள்.

இந்த அறிவுரையைப் பின்பற்றி தனிமையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத் தான் நீர் எச்சரிப்பீர். எனும் 11 வது வசனத்தில் அறிவுரை என்பதை குறிக்க அரபியில் “திக்ர்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

“திக்ர்” என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட வஹீ எனும் இறைச்செய்தியை குறிக்கிறது.

“அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்” என்று அவர்கள் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 15:6) ➚.)

இறைமறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களை “அறிவுரை அருளப்பட்டவரே!” என்று அழைத்துள்ளனர். நபியவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டதால் அறிவுரை அருளப்பட்டவரே என கூறினர்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன்: 15:9) ➚.)

இதில் அல்லாஹ் குர்ஆனையே (திக்ர்) அறிவுரை என்று கூறுகிறான்.

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச்செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(அல்குர்ஆன்: 16:43),44) ➚.)

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் “திக்ர்” அறிவுரை என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது. அவையனைத்தும் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வஹீயையே குறிக்கின்றது.

எனவே யாசீன் அத்தியாத்தின் 11 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரை என்பது குர்ஆன், குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகியவற்றையே குறிக்கும். இவற்றை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடப்போரே அறிவுரையின் மூலம் பயன்பெறுவர்.

யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள்.

(அல்குர்ஆன்: 39:17),18) ➚.)

குர்ஆனுடைய அறிவுரையை நாம் புறக்கணித்து வாழ்ந்தால் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை எவ்விதத்திலும் பயன்தராது. அவ்வாறு புறக்கணித்து வாழ்பவர்களை கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

குர்ஆனின் போதனைகளை புறக்கணிப்பவர்களை எச்சரித்தல்

நெருக்கடியான வாழ்க்கை உண்டு

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக் கடியான வாழ்க்கை உ ண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

(அல்குர்ஆன்: 20:124) ➚.)

இதில் அல்லாஹ்வின் போதனையை புறக்கணிப்பவர்களுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இது போன்று நடக்கின்ற பல நபர்களுக்கு நெருக்கடியான வாழ்க்கை இல்லையே. அவர்கள் நன்றாக சுகபோகமாகத்தானே வாழ்கிறார்கள் என நமக்கு தோன்றலாம். ஆனால் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுவது மறுமையை பற்றியதாகும். மறுமையில் அவர்களுக்குரிய நெருக்கடியாக வாழ்க்கையை பற்றிதான் கூறுகிறான். இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அவனுடைய (இறைபோதனையை புறக்கணித்தவனுடைய) மண்ணறை அவனை நெருக்கும். இதனால் அவனுடைய விலா எழும்பு (ஒன்றோடொன்று) இடம் மாறும். இதுதான் நெருக்கடியான வாழ்க்கையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.” எனும் 20 வது அத்தியாயத்தின் 124 வது வசனத்தை ஓதினார்கள்.

(இப்னு ஹிப்பான்: 3113)

எனவே நெருக்கடியா வாழ்ககை என்பது மண்ணறை குறித்ததுதான். உலகம் குறித்தது அல்ல என்பதை இந்த ஹதீஸ் விளக்கி விடுகிறது.

ஷைத்தான் சாட்டப்படுதல்

மேலும் அல்லாஹ்வின் போதனையை புறக்கணித்து வாழ்பவர்களுக்கு தண்டனையாக நெருக்கடியான வாழ்க்கையை வழங்கிவிட்டு ஷைத்தானையும் சாட்டிவிடுவதாக அல்லாஹ் கூறுகிறான்.

எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான்.

(அல்குர் ஆன்:43 : 36.)

பொதுவாக ஷைத்தானுடைய இலக்கு என்பது நம் அனைவரையும் நரகில் தள்ளுவதுதான். அத்தகையவனை ஒருவன் மீது சாட்டிவிட்டால் அவனுடைய வணக்கவழிபாடுகள் நன்மைகள் அனைத்தையும் கெடுத்துவிட்டு மறுமையில் அவனை நரகில் தள்ளும் வேலையை கனகச்சிதமாக பார்ப்பான். இதனால் அம்மனிதன் கைசேதப்படுவான். இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பதால் இத்தகைய நாசம் ஏற்படுகிறது.

ஷைத்தான் யாரிடம் உள்ளான்?

மேற்கண்ட வசனத்தை படிக்கும்போது “அல்லாஹ்வின் அறிவுரையை புறக்கணிப்பவர்களுக்கு ஷைத்தான் சாட்டப்படுவான் என்றால் மற்றவர்களிடம் ஷைத்தான் இல்லையா? என்ற சந்தேகம் நமக்கு தோன்றலாம். இதற்குரிய பதிலை நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பி யனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள்.

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்” என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட அவ்விருவரும், “அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)’ என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான். அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான். என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.

(புகாரி: 3281)

மேற்கண்ட சம்பவத்தில் அனைவரிடத்திலும் ஷைத்தான் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள்.

“ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்” என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும்,என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 5422).

இச்செய்தியில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஷைத்தான் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் . ஆனால் 43 வது அத்தியாயத்தின் 36 வது வசனம் அல்லாஹ்வின் அறிவுரையை புறக்கணிப்பவர்களுக்கு ஷைத்தான் சாட்டப்பட்டுள்ளதாக கூறுகிறது. இவ்விரண்டிற்குமிடையில் எவ்வித முரண்பாடுமில்லை.

பொதுவாக நல்லவர்கள் தீயவர்கள் என அனைவரிடமும் ஷைத்தான் உள்ளான்.

ஆனால் அல்லாஹ்வின் அறிவுரையை புறக்கணிப்பவர்களுக்கு ஷைத்தான் சாட்டப்படுவான் என்பதன் நோக்கம் அவர்கள் அதிகமாக ஷைத்தானால் பாதிக்கப்படுவார்கள். அதிகமாக தீய செயல்களை செய்வார்கள்.

ஆனால் நல்லவர்களிடம் ஷைத்தான் இருந்தாலும் அவர்களை அதிகமாக ஆதிக்கம் செய்யமாட்டான். அதனால்தான் மேற்கண்ட செய்தியில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் “உன் ஷைத்தான் உன்னிடம் வந்துவிட்டானா?” என கேட்கிறார்கள்.

மறுமையில் தலை நசுக்கப்படுதல்

குர்ஆனுடைய போதனையை புறக்கணிப்பவர்களுக்கு மறுமையிலும் தண்டனை இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று கூறினார்கள்.

(புகாரி: 1143)

குர்ஆனுடைய போதனையை புறக்கணிப்பவர்களுக்கு மறுமையில் நெருக்கடியான வாழ்ககை மற்றும் இவ்வுலகில் ஷைத்தான் சாட்டப்படுதல் போன்ற தண்டனைகளுடன் சேர்த்து மறுமையில் கல்லால் தலை நசுக்கப்படும் தண்டனையும் உள்ளது.

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 11 வது வசனத்தின் பிற்பகுதியில் “தனிமையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர்.” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இவ்வசனம் சிறிய கேள்வியை எழுப்பும்.

ஒருவரைபற்றி மற்றவருக்கு அச்சமூட்டும்போது அவருடைய கோபமான பண்புகளைத்தான் கூறுவோம். உதாரணமாக ஒரு குழந்தைக்கு தந்தையை பற்றி அச்சமூட்டினால் அவர் அடிப்பார், கண்டிப்பார் என்று அவருடைய கடுங்குணத்தை கூறி எச்சரிப்போம். மாறாக இரக்கமானவர், பண்பானவர் என்று அவருடைய இரக்க குணத்தை கூறமாட்டோம்.

இதன்படி 11 வது வசனத்தில் “கடுமையாக தண்டிப்பவனை அஞ்சுங்கள்” என அல்லாஹ்வின் கடுமையை கூறி அச்சமூட்டாமல் “அளவற்ற அருளாளனை அஞ்சுவோரை” என்று அல்லாஹ்வின் அருளைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த வாசக அமைப்பு பொருத்தமானது தானா? என்று சந்தேகம் எழலாம். இதை இரண்டு விதங்களில் தெளிவுப்படுத்தலாம்.

1 அளவற்ற அருளாளன் என்பதன் மூலம் அல்லாஹ் அருள் மட்டுமே புரிவான். தண்டிக்கமாட்டான் என யாரும் அல்லாஹ்வின் மீது பயமில்லாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அதே பண்பை கூறி அருளோடு சேர்த்து அச்சத்தையும் ஏற்படுத்துகிறான்.

அதாவது அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்பதை நம்புவதோடு அவன் தண்டிப்பவனாக இருக்கிறான் என்பதையும் சேர்த்து எண்ணி அச்சம் கொள்ள வேண்டும்.

2 நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இறைமறுப்பாளர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை ஏற்றுக்கொண்டாலும் அருளாளன் என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் ஹூதைபிய்யா உடன்படிக்கையில் “அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன் என்பதை எழுதும்போது ஏற்க மறுத்தார்கள். மேலும் “அளவற்ற அருளாளன் என்பதை கூறினால் ஸஜ்தா செய்யவும் மறுத்தார்கள். இதை அல்லாஹ் கூறுகிறான்.

“அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும் போது “அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?” என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்கியது.

(அத்தியாயம்:25 : 60.)

எனவே இறைமறுப்பளர்கள் “(அர்ரஹ்மான்) அளவற்ற அருளாளன் என்பதை மறுத்தபோது அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அதே வார்த்தையை கூறி இறைமறுப்பாளர்கள் மறுத்தாலும் நான் அளவற்ற அருளாளர் தான் என்பதை அல்லாஹ் உறுதிபடுத்துகிறான்.

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் முக்கியத்துவம்

மேலும் தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குதான் எச்சரிக்கை பயன்தரும் என்று கூறுகிறான்.

ஒருவன் மக்களுக்கு மத்தியில் கூட்டமாக இருக்கும்போது அல்லாஹ்வை அஞ்சி நல்லவனாக இருப்பான். அதே போன்று தனிமையிலும் அஞ்சுகிறானா என்பதை சோதிப்பதற்காகத்தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான். மக்களுக்கு மத்தியில் அஞ்சி நடப்பது போன்று தனிமையிலும் தன்னை அஞ்சி நடக்கவேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

இக்கருத்தை அல்லாஹ் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளான்.

இஹ்ராமின் போது

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேட்டையாடி உண்ணக்கூடிய பழக்கம் இருந்தது. எனினும் இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில்தான் வேட்டை பிராணிகளை கண் முன்னே அனுப்பி சோதிப்பேன் என கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின ்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்: 5:94) ➚.)

சாதாரண நேரங்களில் கண்ணில் தென்படாத பிராணிகளை இஹ்ராமின்போது வேட்டையாடும் வகையில் கொண்டுவருவான். இதன் மூலமும் தனிமையில் தன்னை அஞ்சுபவர் யார்? என சோதிக்கிறான்.

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் சிறப்புகள்

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு பல சிறப்பம்சங்களும் உண்டு. தனது மன்னிப்பையும் வழங்கி மிகப்பெரிய கூலியாகிய சொர்கத்தையும் அல்லாஹ் வழங்குகிறான்.

மன்னிப்பும் பெரிய கூலியும்.

தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.

(அல்குர்ஆன்: 67:12) ➚.)

சொர்க்கம் அருகில் கொண்டுவரப்படும்.

(இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும்.

திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொரு வருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.

(அத்தியாயம்:50 : 31,32,33.)

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சினால் நாம் அடைய நினைக்கும் சொர்க்கம் நம்மை விட்டும் தூரமாகாமல் சிரமம் அளிக்காத வகையில் நமக்கு அருகில் கொண்டுவரப்படும்.

இவைமட்டுமின்றி நபி (ஸல்) அவர்களும் பல சிறப்புகளை கூறுகிறார்கள்.

மறுமையில் அர்ஷின் நிழலை பெறுபவர்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:

நீதி மிக்க ஆட்சியாளர்.
இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலை யிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.
அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.
தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 660)

இச்செய்தியில் “தன்னை அழகும் சமுதாய அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தவறான பாதைக்கு அழைக்கும்போது “நான் அல்லாஹ்வை அஞ்சுபவன்” என்று கூறி விலகியவருக்கு அர்ஷின் நிழல் உண்டு என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் சாதாரணமான நேரங்களில் “நான் அல்லாஹ்வை அஞ்சுபவன்” என்று கூறுவது எளிதாகும். ஆனால் இத்தகைய நேரங்களில் அல்லாஹ்வின் அச்சமிருந்தால் மட்டும்தான் இவர் போன்று கூறமுடியும். இதுபோன்று நடக்கும் நபர்களுக்கு பரிசாக மகத்தான அர்ஷின் நிழலை அல்லாஹ் வழங்குவான்.

மேலும் மற்றொரு நபரை பற்றி கூறும்போது “தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.” என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் மக்களுக்கு மத்தியில் ஒருவர் கண்ணீர் விட்டு அழுது பிரார்தித்தால் பிறர் அவரை குறை கூறுவதற்கும், பரிகாசம் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. அல்லது அழுபவருக்கு அது முகஸ்துதியை ஏற்படுத்திவிடும். ஆனால் தனிமையில் அழும்போது அது அல்லாஹ்வின் அச்சத்தால் மட்டுமே இருக்கும். இக்கண்ணீர் அல்லாஹ்வுக்காக மட்டுமே வடித்ததாக அதனால்தான் அர்ஷின் நிழலை அல்லாஹ் வழங்குகிறான்.

இது போன்ற செயல்களை எவ்வித செலவுகளும் சிரமமுமில்லாமல் செய்யலாம். எனவே தனிமையில் அல்லாஹ்வை அஞ்சக்கூடிய இத்தகைய பண்புகளை நமக்குள் வளர்த்து கொண்டு மறுமையில் அர்ஷுடைய நிழலை நாமும் பெற முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வை அஞ்சிய குகைவாசிகள்

அல்லாஹ்வை அஞ்சி நடந்த மேலும் சிலரையும் நபி (ஸல்) அவர்கள் கூறிகிறார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர்.

அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது.

இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன்.

அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.

மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார்.

இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ்(புகாரி: 2215).

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் மறுமையில் மட்டுமின்றி இவ்வுலகிலும் அல்லாஹ் நாடினால் நமக்கு உதவி செய்வான் என்பதற்கு இக்குகைவாசிகளின் சம்பவம் சான்றாக உள்ளது.

சிறிய விஷயங்களிலும் அல்லாஹ்வை அஞ்சுதல்

மேலும் நபி (ஸல்) அவர்களும் தனிமையில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, “இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.

”எனது படுக்கையில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன்….” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(புகாரி: 2055)

சிறிதளவு பேரிச்சம்பழமாக இருந்தாலும் நபியவர்கள் அதை உண்ணவில்லை. ஏனெனில் நபிக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் “ஸதகா” எனும் தர்மப்பொருட்கள் தடைசெய்யப்பட்டதாகும். எனினும் தனிமையிலிருக்கும்போது அதை உண்டால் யாரும் பார்க்கமுடியாது.

வெளி உலகுக்கு தெரியாது என்றிருந்தாலும் நபியவர்கள் அல்லாஹ்வை அஞ்சி அதை உண்ணாமல் விட்டுவிட்டார்கள். இதுபோன்ற சிறிய சம்பவங்களிலும் அல்லாஹ்வின் அச்சம் உள்ளடங்கியிருப்பதை காணமுடிகிறது.

தனிமையில் அல்லாஹ்வை வணங்கி கண்ணீர் வடித்தல்

ஒருமுறை நபியவர்கள் என்னிடம் “ஆயிஷாவே! இன்று இரவு அல்லாஹ்வை வணங்குவதற்காக என்னைவிட்டுவிடு” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் நெருக்கத்தையே நான் விரும்புகிறேன். உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதையே விரும்புகிறேன். (நீங்கள் செல்லுங்கள்)” என்றேன்.

பிறகு அவர்கள் எழுந்து உளூ செய்துவிட்டு தொழுகைக்கு தயாரானார்கள். பிறகு (துஆவின்போது) தன் கண்ணங்கள் நனையுமளவிற்கு அழுதுகொண்டே இருந்தார்கள். பிறகு தன் தாடி நனையுமளவிற்கு அழுதுகொண்டே இருந்தார்கள். பிறகு தரை நனையுமளவிற்கு அழுதுகொண்டே இருந்தார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னு ஹிப்பான்: 620)

இச்சம்பவத்தை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் இது என் வாழ்வில் நடந்த உன்னதமான சம்பவம் என்று கூறுகிறார்கள். அந்தளவிற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை வணங்கி கண்ணீர் வடித்துள்ளார்கள்.

அடக்கத்தலங்களை சந்தித்தல்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதிநாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும்(மதீனாவிலுள்ள) “பகீஉல் ஃகர்கத்” பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!)

ஸஹீஹ்(முஸ்லிம்: 1773).

இறைவனுடைய அச்சத்தை அதிகப்படுத்துவதற்காக அடக்கத்தலங்களை நபி (ஸல்) அவர்கள் அதிகமாக சந்தித்துள்ளார்கள். இதை நாமும் கடைபிடிக்கவேண்டும்.

மறைவிடத்தை மறைத்தல்

முஆவியா இப்னு ஹைய்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவிடங்களை எப்போது மறைக்கவேண்டும். எப்போது வெளிப்படுத்த வேண்டும்” (என்று கூறுங்கள்) எனக்கேட்டேன். அதற்கவர்கள் “உன் மனைவியிடமும் அடிமை பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் (வெளிப்படுத்தாமல்) பாதுகாத்துக்கொள்” என்றார்கள். அப்போது நான் “ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் இருந்தால் (மறைக்கவேண்டுமா?) எனக் கேட்டேன்.

அதற்கவர்கள் “எவரும் பார்க்காதவாறு (உம்மால் மறைக்க) இயன்றால் அவ்வாறு செய்துக்கொள்” என்றார்கள். நான் “ஒருவர் தனிமையில் இருக்கிறார் (இப்போது மறைக்கவேண்டுமா?) எனக்கேட்டேன். அதற்கவர்கள் “அவரிடம் வெட்கம் கொள்வதற்கு அல்லாஹ் மிகத்தகுதியானவன் (எனவே மறைத்துக் கொள்ளட்டும்) என்றார்கள்.

(திர்மிதீ: 2693)

வெளிப்படையில் நாம் மறைவிடங்களை பாதுகாப்பது போன்று தனிமையிலும் பாதுகாக்கவேண்டும். ஏனெனில் மனிதர்களுக்காக வெளியில் மறைக்கக்கூடிய நாம் தனிமையில் மனிதர்கள் இல்லாவிட்டாலும் அல்லாஹ் பார்க்கிறான் என அஞ்சி மறைக்கவேண்டும். அனைத்து நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என நினைக்கவேண்டும். தனிமையில் நம்முடைய பேச்சுக்கள் நடவடிக்கைகள் என அனைத்தையும் சரியாக அமைத்துக் கொள்ளவேண்டும்.

பிறருக்காக நம்முடைய ஆடை, நடை, உடை போன்றவற்றை செம்மையாக செய்கின்ற நாம் தனிமையில் அல்லாஹ்வை அஞ் சவில்லையென்றால் பிறருக்கு அளித்த மதிப்பை அல்லாஹ்வுக்கு அளிக்காததாக பொருள்படும். தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதுதான் உண்மையான இறையச்சமாகும். அதுதான் சிறப்பான தகுதியும் தூய்மையானதுமாகும். அதைத்தான் அல்லாஹ் ஒவ்வொரு வசனங்களிலும் நினைவூட்டுகிறான்.

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

(அல்குர்ஆன்: 40:19) ➚.)

நாம் கண்களில் செய்கின்ற ஜாடைகளை மனிதர்கள் அறியாவிட்டாலும் அல்லாஹ் அதை அறிகிறான். மூவர் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் மற்றவரை பார்த்து கண்ணில் ஏதெனும் ஜாடை செய்தால் அது மூன்றாமவருக்கு தெரியாவிட்டாலும் அல்லாஹ் அதை அறிகிறான்.

19. நீங்கள் மறைப்பதையும், வெளிப் படுத்துவதையும் அல்லாஹ் அறிவான்.

அத்தியாயம் 16

நாம் மறைப்பதை மனிதர்கள் அறியாவிட்டாலும் அல்லாஹ் அதை அறிவான்.

இதைவிட தெளிவாக மற்றொரு வசனத்தில் கூறுகிறான்.

உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள்.

இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நஷ்டமடைந்தோரில் ஆகி விட்டீர்கள்.

(அல்குர் ஆன்:41: 22,23.)

நாம் செய்யும் செயல்களை யாரும் பார்க்காவிட்டாலும் நம் காது, கண், தோல் போன்றவை அவற்றை பதிவு செய்து மறுமையில் நமக்கெதிராக சாட்சி சொல்லும். தனிமையில் அல்லாஹ் நம்மை கண்காணிக்கவில்லை என நாம் நினைத்தால் அதனால் மிகப்பெரும் தீமைகளை செய்து நாம் நஷ்டமடைந்துவிடுவோம் என அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்.

குர்ஆனின் அறிவுரையை பின்பற்றி வாழ்ந்து, தனிமையில் அல்லாஹ்வை அஞ்சினால்தான் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நமக்கு பயன்தரும் என யாசீன் அத்தியாயத்தின் 11 வது வசனம் கூறுகிறது. மேலும் குர்ஆனின் போதனைகளை ஒருவன் பின்பற்றினாலே தானாக அல்லாஹ்வை அஞ்சிவிடுவான் என்பதால்தான் குர்ஆனுடைய போதனையை பின்பற்றுவதை தொடர்ந்து அல்லாஹ்வை அஞ்சுவதை பற்றி இவ்வசனம் கூறுகிறது.

12 வது வசனத்தின் விளக்கம்

12. இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் வரையறுத்து உள்ளோம்.

இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம் என இவ்வசனத்தில் கூறுகிறான். நாம் உயிர்ப்பிப்போம் என்று கூறுவதற்கும் நாமே உயிர்ப்பிப்போம் என்று கூறுவதற்கும் சற்று வேறுபாடு உள்ளது. நாம் உயிர்ப்பிப்போம் என்று கூறினால் பிறரும் உயிர்ப்பிப்போம் என்ற கருத்தை அது மறுக்காது. மாறாக நாமே உயிர்ப்பிப்போம் என்று கூறினால் பிறர் எவரும் உயிர்ப்பிப்போம் என்ற கருத்தை அது மறுத்துவிடும்.

உதாரணமாக குர்ஆனின் முதல் அத்தியாயமாகிய ஃபாத்திஹாவில் “(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது. உன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம் என்பதற்குதான் இவ்வாறு கூறப்படும். இதற்கு மாற்றாக உன்னை வணங்குகிறோம் என்று கூறினால் வேறு யாரையும் வணங்கமாட்டோம் என்ற பொருள் அதில் கிடைக்காது. அது போன்றுதான் மேற்படி 12 வது வசனத்திலும் “நாமே உயிர்ப்பிப்போம் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் உயிர்ப்பித்தல் என்ற பண்பு அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியதாகும்.

இப்ராஹீம் நபி மன்னனிடம் பிரச்சாரம் செய்தல்

இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் நாட்டு மன்னனிடம் பிரச்சாரம் செய்யும்போது அல்லாஹ்வின் உயிர்ப்பித்தல் என்கிற பண்பை கூறி பிரச்சாரம் செய்கிறார்கள்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்’ என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்’ என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!’ என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:258) ➚.)

மேற்கண்ட வசனத்தில் உயிர்ப்பித்தல் என்கிற தன்மையை அல்லாஹ்விற்கு மட்டும் உரியது என்று இப்ராஹீம் நபி அவர்கள் உறுதியாக ஏற்று பிரச்சாரம் செய்ததை காணலாம். இவ்வாறு கூறும்போது அம்மன்னன் விதண்டாவாதம் செய்தான். பிறகு அவனை வாயடைக்க செய்யும் விதமாக கிழக்கில் அல்லாஹ் உதிக்கச்செய்யும் சூரியனை மேற்கில் உதிக்கச்செய் என கேட்கிறார்கள். அப்போது அவன் வாயடைத்து போய்விட்டான். எனவே நாமும் இது போன்று உறுதியாக நம்பவேண்டும்.

இறைத்தூதர்களின் பிரச்சார வழிமுறைகள்

உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் மூன்று விதமான பிரச்சார வழிமுறைகளை கடைபிடித்துள்ளார்கள்.

இறைவன் ஒருவன்தான் அவனுக்கு யாரையும் இணைவைக்காதீர்கள்.
எங்களை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என நம்புங்கள்
ஆகிய மூன்று விஷயங்களை உள்ளடக்கிதான் பிரச்சாரம் செய்தார்கள்.

எனினும் அவர்களுடைய சமூகத்தாரில் சிலர் இதை ஏற்றாலும் இறைநிராகரிப்பாளர்களாகிய பலர் மறுத்தனர். அல்லாஹ் ஒருவன் என்பதை ஏற்கமறுத்து பல தெய்வங்கள் இருப்பதாக வாதிட்டனர். தாங்கள் இறைத்தூதர்கள் என்று கூறிய போது “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தான் என்று கூறி ஏற்க மறுத்தனர்.

மறுமை வாழ்க்கையை பற்றி கூறும்போது உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை என கூறி ஏற்க மறுத்தனர். இதை பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

“நாங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று கேட்கின்றனர்.

(அல்குர்ஆன்: 23:82) ➚.)

“நாங்கள் மரணித்து, மண்ணாக ஆனாலுமா? இது (அறிவுக்கு) தூரமான மீளுதல் ஆகும்” என்று கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 50:3) ➚.)

இதே போன்று இவர்கள் கேட்டதை குர்ஆனில் 37: 14 மற்றும் 56: 47 போன்ற பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இத்தகைய கேள்விகளுக்கு அல்லாஹ் தத்துவார்த்த ரீதியாக பதில்களை கூறுகிறான். அவற்றை பார்ப்பதற்கு முன்பாக மீண்டும் உயிர்ப்பித்தல் பற்றி நபிமார்கள் மற்றும் நல்லடியார்கள் கேட்ட கேள்விகளையும் பார்ப்போம்.

இப்ராஹீம் நபி அவர்களின் கேள்வி

மீண்டும் உயிர்ப்பித்தல் பற்றி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட கேள்வியை அல்லாஹ் கூறுகிறான்.

“என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!’ என்று இப்ராஹீம் வேண்டிய போது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.’ என்றார். “நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக’ என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 2:260) ➚.)

இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வை உறுதியாக நம்பியிருந்தார்கள். எனினும் உயிர்பித்தல் பற்றி சற்று தெளிவுக்காகதான் இவ்வாறு கேட்டார்கள். அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வும் செய்லமுறையாக அவர்களுக்கு புரியவைத்துள்ளான்.

நல்லடியார் கேட்ட கேள்வி!

இதே போன்று ஒரு நல்லடியாரும் கேள்வி கேட்டுள்ளார்.

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?’ என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?’ என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்’ என்று அவர் கூறினார்.

“அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!’ என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்’ எனக் கூறினார்.

(அல்குர்ஆன்: 2:259) ➚.)

வறண்ட பூமியை அல்லாஹ் எவ்வாறு உயிரூட்டுவான் என்று இந்த நல்லடியார் அவ்வூரை கடந்து செல்லும் போது கேட்கிறார். இவருக்கு புரியவைப்பதற்காக அவரையே மரணிக்கச்செய்து பிறகு உயிர்கொடுத்து எழுப்பி “நீர் எத்தனை வருடம் கழித்திருப்பீர்” என கேட்கிறான். அதற்கவர் “ஒரு நாள், அல்லது ஒரு நாளின் சிறுபகுதி” என பதிலளிக்கிறார். பிறகு அவருடைய இறந்துவிட்ட கழுதையையும் உயிர்கொடுத்து எழுப்பி அவருக்கு புரியவைக்கிறான். எனவே மீண்டும் உயிர்பித்தல் அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானதுதான் என்பதை இவற்றின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

நல்லடியார்களின் கேள்வியும் இறைமறுப்பாளர்களின் கேள்வியும்

மீண்டும் உயிர்ப்பித்தலை பற்றி நபிமார்கள், நல்லடியார்கள் போன்றோர் கேட்டதற்கும் இறைமறுப்பாளர்கள் கேட்டதற்கும் வேறுபாடு உள்ளது. நல்லடியார்கள் உயிர்பித்தலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும் உள்ளம் நிம்மதியடைவதற்காகவும் கேட்கின்றனர். மறுப்பதற்காக கேட்கவில்லை.

ஆனால் இறைமறுப்பாளர்கள் மறுப்பதற்காக கேட்கின்றனர். நாங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படமாட்டோம். இவ்வுலக வாழ்ககையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை என்று கருதி கேட்டனர். நல்லடியார்கள் அவ்வாறு கேட்கவில்லை. இதுதான் இரு சாரார் கேட்டதற்கும் உள்ள வேறுபாடாகும்.

தத்துவார்த்த ரீதியான பதில்கள்

மேலும் இறைமறுப்பாளர்களுடைய கேள்விகளுக்கு தத்துவார்த்த ரீதியாகவும் அல்லாஹ் பதிலளிக்கிறான்.

இரண்டாவது முறை உயிர்பிப்பது சுலபமானது.

“இறந்துவிட்ட மனிதனை இரண்டாவது முறையாக எப்படி உயிர்பிக்கமுடியும்” என்பதுதான் இறைமறுப்பாளர்களுடைய கேள்விகளில் பிரதானமானதாகும். இதற்கு பின்வருமாறு அல்லாஹ் பதிலளிக்கிறான்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

“முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 36:78),79) ➚.)

எந்த ஒரு பொருளையும் முதலில் படைப்பதுதான் சிரமமானதாகும். இரண்டாவது முறையாக படைப்பது சுலபமானதாகும். மனிதன் ஒரு பொருளை சிரமப்பட்டு படைக்கிறான். அதற்காக பல ஆய்வுகளை செய்து அதை உருவாக்குகிறான். ஆனால் இரண்டாவது முறையாக அதை உருவாக்குவதற்கு எவ்வித சிரமுமில்லாமல் முன்னால் செய்த விதிகளின்படி இலகுவாக உருவாக்குகிறான்.

உதாரணமாக விமானத்தை முதலில் கண்டுபிடிக்கும்போது பல ஆய்வுகள் செய்து பல நாட்கள் எடுத்துக்கொண்டிருப்பான். அதற்கு பிறகு சில நாட்களிலேயே அதை கண்டுபிடித்துவிடுகிறான். அற்பப்படைப்பினமாக இருக்கின்ற மனிதனுக்கே இது இயலுமானால் அவனை படைத்த சர்வ வல்லமை படைத்த ஏக இறைவனாகிய தனக்கு மிக சுலபமானதாகும் என தத்துவார்த்த ரீதியாக விளக்குகிறான்.

மூலக்கூறில்லாமல் படைத்தான்!.

மனிதன் தாயின் கருவறையில் உருவாவதற்கு முன்பு எந்த நிலையில் இருந்தான் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.

நம்மில் 50 வயதுடையவரிடத்தில் 40 வருடத்திற்கு வருடத்திற்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்?” என்று கேட்டால் “10 வயதில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன் என கூறுவார். அதே நபரிடம் 60 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தீர்” என்று கேட்டால் எந்த பொருளாகவும் இருக்கவில்லை” என்று கூறுவார். எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் மனிதனை அல்லாஹ் படைத்தான். இத்தகைய ஆற்றலுடைய அல்லாஹ்வுக்கு படைத்த மனிதனை மீண்டும் படைப்பது எளிதானதுதான். இதையும் அல்லாஹ் விளக்குகிறான்.

குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூ ட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா?

(அல்குர்ஆன்: 76:1) ➚.)

மூலக்கூறில்லாமலேயே மனிதனை படைத்த தனக்கு மீண்டும் உயிர்ப்பித்தல் மிகமிக எளிதானதுதான் என்பதை விளக்குவதற்காக இத்தகைய வசனங்களை அல்லாஹ் கூறுகிறான். இறைமறுப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இது போன்று பல விதங்களில் அல்லாஹ் பதிலளிக்கிறான்.

வறண்ட பூமியை உயிர்பித்தல்

தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்ற பூமியில் எந்த புற்பூண்டுகளும் இல்லாதிருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால் திடீரென மழை பெய்துவிட்டால் அதிலிருந்து புற்கள் முளைக்கிறது. மரங்கள் முளைக்கிறது. மீன்களும் உருவாகிறது. இதை பார்க்கும்போது நமக்கு சற்று ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆச்சரியமான நிகழ்வு அல்லாஹ்வின் வல்லமையால் உருவானதாகும். இதை உதாரணமாக கூறி இது போன்றே இறந்துவிட்ட மனிதனையும் படைப்பேன் என அல்லாஹ் விவரிக்கிறான்.

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்து விடுகிறது. இறந்த ஊருக்கு அதைப் பொழிவிக்கிறோம். அதன் மூலம் இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறோம். மீண்டும் எழுப்புவதும் இவ்வாறே.

(அல்குர்ஆன்: 35:9) ➚.)

மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு இவ்வுதாரணமும் ஒரு சான்று என்பதை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விவரிக்கிறான்.

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்.

பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

“அல்லாஹ்வே உண்மையானவன்’ என்பதும், “அவன் இறந்தோரை உயிர்ப்பிப்பான்’ என்பதும், “அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’ என்பதுமே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன்: 22:5),6) ➚.)

இந்த வசனத்தினுடைய துவக்கத்திலேயே சந்தேகத்தை தெளிவுபடுத்துகிறோம் என்று துவங்கி பிறகு மண் மற்றும் விந்துத் துளியிலிருந்து மனிதனை படைத்தல், வறண்ட பூமியை மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகிய இரண்டு உதாரணங்களை கூறி தத்துவார்த்த ரீதியாக விளக்குகிறான்.

மனிதனை விட பிரம்மாண்டமானவற்றை படைத்தல்,

மனிதனை விட பிரம்மாண்டமான வானங்கள், பூமி, மலைகள் போன்றவற்றை படைத்திருக்கிற எனக்கு அற்பப் படைப்பான மனிதனை மீண்டும் படைப்பது எளிதானதுதான் என்றும் கூறுகிறான். பிரம்மாண்டமானவற்றை படைடைத்தவனுக்கு சிறிய பொருளை படைப்பது எளிதுதான் என்று அல்லாஹ் விளக்குகிறான்.

வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? ஆம் அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 46:33) ➚.)

படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்.

(அல்குர்ஆன்: 79:27) ➚.)

இதைவிட தெளிவாக நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

மனிதனின் உள்வால் எலும்பு

மனிதன் இறந்துவிட்ட பிறகு அவனுடைய உடல் முழுவதும் மண்ணால் அரிக்கப்பட்ட பிறகு முதுகுத்தண்டின் கீழ்பகுதியில் உள்ள உள்வாழ் எலும்பு மட்டும் அரிக்கப்படாமல் இருக்கும். அந்த எலும்பை வைத்து மீண்டும் மனிதனை அல்லாஹ் எழுப்புவான் என நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில் படைக்கப்படுவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 5661)

எந்த பொருளும் இல்லாமல் அல்லாஹ்வால் மீண்டும் உயிர்ப்பிக்கமுடியும் என்றிருந்தாலும் மனிதன் நம்பத்தகுந்த சான்றாக இந்த உள்வால் எலும்பை அல்லாஹ் வைத்துள்ளான். இவ்வாறு அல்லாஹ் கூறும் பல்வேறு சான்றுகளை சிந்தித்து பார்த்தால் இறந்தோரை உயிர்ப்பிப்பது அல்லாஹ்வுக்கு சுலபமே என்பதை புரியலாம். இவைதான் இறந்தோரை நாமே உயிர்பிக்கிறோம் என்ற 12 வது வசனத்தின் விளக்கமாகும்.

சந்தேகங்களும் விளக்கங்களும்.

உயிர்ப்பித்தல் என்ற பண்பு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்குமில்லை என துவக்கத்தில் நாம் கூறியிருந்தோம். உயிர்ப்பித்தல் அல்லாஹ்வுக்கு மட்டும் உள்ள பண்பாக இருந்தால் ஈஸா (அலை) அவர்கள் உயிர்ப்பித்ததாகவும், மறுமை நாளின் அடையாளமாக வரும் தஜ்ஜாலும் இறந்தோரை உயிர்ப்பிப்பார்கள் என்றுள்ளதே. இது இவ்வசனத்திற்கு முரணாக அமையுமா? என்ற கேள்விக்கான விடையையும் பார்த்து விடுவோம்.

ஈஸா நபி இறந்தோரை உயிர்ப்பித்தல்.

ஈஸா (அலை) அவர்கள் நபித்துவத்தின் அற்புதமாக இறந்தோரை உயிர்ப்பித்தார்கள் என பின்வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்)

(அல்குர்ஆன்: 03:49) ➚.)

“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக!

என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 5:110) ➚.)

இவ்வசனங்களில் ஈஸா (அலை) அவர்கள் இறந்தோரை உயிர்பித்ததாக அல்லாஹ் கூறுகிறான். இது யாசீன் அத்தியாத்தின் 12 வது வசனத்திற்கு முரணாக உள்ளதே என்று தோன்றலாம். ஆனால் எவ்வித முரணும் இல்லை.

ஏனெனில் ஈஸா (அலை) அவர்கள் இதை சுயமாக செய்யவில்லை. மாறாக அல்லாஹ்தான் வழங்கினான். பொதுவாக நபிமார்கள் மக்களிடம் இஸ்லாத்தை கூறும்போது மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அடிப்படையில்தான் ஈஸா (அலை) அவர்களுக்கு இறந்தோரை உயிர்ப்பிப்பதை அற்புதமாக வழங்கியிருந்தான்.

மேலும் ஈஸா (அலை) அவர்கள் இவற்றை தான் விரும்பிய நேரங்களிலெல்லாம் செய்யமுடியாது. அல்லாஹ் நாடும்போது மட்டும்தான் செய்யமுடியும். இது போன்றே அனைத்து நபிமார்களும் அல்லாஹ் நாடும்போது மட்டும்தான் அற்புதங்களை செய்வார்கள். அல்லாஹ்வின் விருப்பப்படிதான் செய்கிறார்கள் எனும்போது அற்புதங்களுக்கு அல்லாஹ்வே சொந்தக்காரனாகி விடுகிறான். இறைத்தூதர்கள் சொந்தமாக எதையும் செய்யவில்லை, செய்யவும் முடியாது என்றாகி விடுகிறது.

பின்வரும் வசனத்தை பாருங்கள்

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 13:38) ➚.)

எனவே ஈஸா (அலை) உட்பட எந்த நபிமார்களும் தாங்களாக அற்புதங்களை செய்யவில்லை. அல்லாஹ்தான் அவற்றை வழங்குகிறான்.

நபி (ஸல்) அவர்கள் அற்புதங்கள்

மேலும் நபி (ஸல்) அவர்களிடமும் இறைமறுப்பாளர்கள் பல அற்புதங்களை செய்யுமாறு கேட்டார்கள்.

“இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்” என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர் ஆன் : 17: 90,91,92,93.)

மேற்கண்டவாறு இறைமறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவர்கள் அற்புதத்தை செய்யவில்லை. மாறாக “நான் மனிதன்” என கூறுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபிமார்கள் நினைக்கும்போதெல்லாம் அற்புதங்களை செய்ய இயலாது. அல்லாஹ் விரும்பினால் தான் செய்யமுடியும். ஏனெனில் நபிமார்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பத இவ்வசனம் சான்றாகும்.

மூஸா (அலை) அவர்களும் அற்புதங்களும்

மேலும் மூஸா (அலை) அவர்களுக்கு கைத்தடியை அற்புதம் செய்யும் கருவியாக அல்லாஹ் வழங்கியிருந்தான். அதன் மூலம் கடலை பிளந்தார்கள். பாறையை அடித்து தண்ணீர் வரவைத்தாரக்ள். எனினும் மூஸா (அலை) அவர்கள் கைத்தடி பற்றிய அல்லாஹ்வுடைய கேள்விக்கு எவ்வாறு பதில் கூறுகிறார்கள் என பாருங்கள்.

“மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?” என்று இறைவன் கேட்டான்.

“இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன” என்று அவர் கூறினார்.

(அல்குர் ஆன்: 20 : 17,18.)

அல்லாஹ் கைத்தடி பற்றி கேட்கும் போது இதை ஊன்று கோலாக பயன்படுத்துவேன் என்றும் இலைபறிப்பேன் என்றும் கூறுகிறார்கள். மாறாக விரும்பிய நேரங்களில் அற்புதங்கள் செய்வேன் என கூறவில்லை. ஏனெனில் கைத்தடியின் ஆற்றலால் அவர் அற்புதங்களை செய்யவில்லை. அல்லாஹ்வின் விருப்பத்தால்தான் செய்தார்கள். அதனால்தான் இவ்வாறு பதில் கூறினார்கள். மேலும் தான் விரும்பிய நேரங்களிலெல்லாம் கைத்தடியால் அற்புதங்களை செய்து விடவில்லை. அல்லாஹ் கட்டளையிடும்போதுதான் செய்தார்கள்.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!’ என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். “அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!’ (என்று கூறினோம்)

(அல்குர்ஆன்: 2:60) ➚.)

மக்கள் தண்ணீரை கேட்டபோது பாறையில் அடிக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அப்போது மூஸா (அலை) அவர்கள் அடித்தார்கள். பிறகு தண்ணீர் வந்துது. இது போன்றுதான் அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்வின் கட்டளைப்படி செய்வார்கள்.

எனவே ஈஸா (அலை) உட்பட அனைத்து நபிமார்களும் செய்த அற்புதங்கள் அவர்களுடைய சொந்த ஆற்றலால் நிகழ்ந்தது அல்ல. அல்லாஹ்வின் அனுமதியோடு நிகழ்ந்தவைதான். இதன் படி ஈஸா அலை அவர்கள் செய்த இறந்தோரை உயிர்ப்பித்தல் என்பதும் அல்லாஹ் நிகழ்த்தியதே.