வட்டியில்லாத பங்கு சந்தை ஷேர் மார்க்கெட் கூடுமா? கூடுதல் வாதங்களும் பதில்களும்.

கேள்வி-பதில்: பொருளாதாரம்
என்ன வாங்குகிறோம் என தெரியாது என்ற வாதம்!

பங்கு வாங்கும் நிறுவனம் என்ன வியாபாரம் செய்கிறது அதன் வரவு செலவு என்ன என்பதனை அறிந்து கொள்ளும் வசதி இன்றைக்கு இருக்கிறது. எனவே இந்த அடிப்படையில் பங்குசந்தை ஹராம் என்று கூற முடியாது

வட்டிக்கு பணம் வாங்கி இருப்பார்கள் என்கிற வாதம்!

வட்டிக்கு வாங்கி முதலீடு செய்திருந்தால், அதில் போட்டிருந்தால் கூடாது என்பது சரிதான். எனினும் ஒரு நிறுவனம் கடன் வாங்கவில்லை என்றால் அந்த அடிப்படையில் இது ஹராம் ஆகாது.

என்ன வாங்கினாய்? எந்த பொருளையும் வாங்கவில்லை. எந்த சேவையையும் வாங்கவில்லை. இதில் உங்களுக்கு என்ன பங்கு? என்கிற வாதம்!

கையில் பொருளை வாங்காவிட்டாலும் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குகிறார். பகுதி உரிமையாளர், பங்குதாரர் என்ற நிலையை வாங்குகிறார். நான் ஒரு நிறுவனத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு நடத்துகிறேன். அதில் 30 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவர் பங்குதாரர் ஆக்கினால் கையில் எதை வாங்குவாரோ, அதே நிலை தான் பங்கு சந்தையிலும் உள்ளது. கையில் எதையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிறுவனத்தின் உரிமையாளருக்கு, பங்கு-உரிமையாளருக்கு, அந்த நிறுவனத்தை விற்றால், ஒரு தொகை கிடைக்கும். அந்த உரிமையை பிறருக்கு கைமாற்றினால் ஒரு தொகை கிடைக்கும். நிறுவனம் நட்டம் அடைந்து, சொத்தை பிரித்தாலும், ஒரு சிறிய தொகை கிடைக்கும். எனவே, இந்த அடிப்படையிலும் பங்குசந்தை ஹராம் என்று கூற முடியாது

அந்த நிறுவனத்தில் அதிகாரம் செய்ய என்ன பங்கு?

ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், அதிகாரம் செய்ய பங்கு இல்லாமல் இருக்கலாம். இது தவறாகாது. 4 பேர் பங்குதாரராக உள்ள நிறுவனத்தில், ஒருவர் கொள்முதல் செய்வார் ஒருவர் விற்பனை செய்வார் ஒருவர் விளம்பரம் செய்வார் ஒருவர் சர்வீஸ் செய்வார். ஒருவர் மற்றவரோடு உரிமையில் தலையிடக்கூடாது என்று ஒப்பந்தம் போடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது, ஹராமான செயலில் ஈடுபடாதவரை.

மேற்கண்ட அடிப்படையில் பங்கு சந்தையை ஹராம் என்று கூற முடியாது என்றாலும், கீழ்காணும் அம்சங்கள் அதற்கு மாற்றமாக உள்ளது.

மோசடியை தடுக்க முடியாத வகையில் ஒப்பந்தம்

நான் பங்கு சேர்ந்த நிறுவனம் எப்படி நடக்கிறது என்று மேற்பார்வை செய்ய எனக்கு அதிகாரம் இல்லாத வகையில் ஒப்பந்தம் போடப்பட்டால், நிறுவனத்தில் மோசடிகள் நடந்தால் அதை என்னால் தடுக்க முடியாது. எனவே மோசடியை தடுக்க முடியாத வகையில் போடப்படும் ஒப்பந்தங்களை மார்க்க அடிப்படையில் ஏற்க முடியாது. இந்த அடிப்படையில் பங்கு சந்தையில் பங்கேற்பது ஹலாலாக ஆகாது.

லாபம் மட்டும் பெறுவது வட்டியே!

ஒருவர் ஒரு நிறுவனத்தின் மதிப்பில் ஒரு சிறிய பங்கை வாங்குகிறார். அந்த பங்கின் சதவீதத்தின் அடிப்படையில், ஆதாயம் பெறுவார் என்பது பங்கு சந்தையின் அடிப்படை.

அந்த நிறுவனம் லாபம் அடைந்தால், அதை பங்கு வைத்து, Dividends என்று சொல்லப்படும் ஈவுத்தொகை சுமாராக வருடாவருடம் கொடுக்கப்படும். அது தான் லாபம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால், அந்த நிறுவனம் நஷ்டம் அடைந்தால், பங்குதாரர் நஷ்டம் அடைய மாட்டார். இஸ்லாமிய அடிப்படையில் இது அனுமதிக்கப்பட்டது அல்ல. இலாபம் மட்டும் பெற்றால், அது தான் வட்டி. வருடாவருடம் வட்டி சதவீதம் மாறுகிறது, அவ்வளவு தான்.

மேலும், ஒரு நிறுவனம் ஈவுத்தொகை தராமல் இருக்க ஒப்பந்தம் போட முடியும். முடிவெடுக்க முடியும். Google, Facebook, Amazon, Tesla, Netflix போன்ற பல நிறுவனங்கள் லாபத்தை ஒருபொதும் தருவதில்லை. பங்கை விற்பதை மட்டுமே வியாபாரமாக செய்ய தூண்டுகின்றன. பங்கு விற்பது மட்டுமே வியாபாரம் ஆகாது. இது சங்கித்தொடர் வியாபாரம் என்ற பெயரில் நடக்கும், மோசடியை போன்று உள்ளது.

எனவே மேற்கண்ட சில அம்சங்களின் அடிப்படையில் பங்கு சந்தை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல.