10) அன்னையாரின் சபதம்
அலீ (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காவது கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. அவர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. பெருமானாரின் மனைவிமார்களான உம்முல் முஃமினீன்களிடமிருந்தும், பல மூத்த நபித்தோழர்களிடமிருந்தும் எதிர்ப்புகளையும் கண்டனக் கனைகளையும் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் காரணம் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை தான்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியும் அவர்களின் படுகொலையும் எப்படி ஜிஹாத் என்ற பெயரில் நடத்தப்பட்டதோ, அதே வழிமுறையில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதற்காகவும் ஜிஹாத் என்ற ஆயுதம் கையிலெடுக்கப் பட்டது.
ஒருவகையில் பார்த்தால் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் ஈடுபட்டவர்களில் பெயர் சொல்லும்படி விளங்கிய முக்கியமான நபித்தோழர்கள் யாரும் கிடையாது. சாதாரண நிலையில் உள்ளவர்கள் தான் ஜிஹாத் என்ற பெயரில் உஸ்மான் (ரலி)க்கு எதிராகப் படை திரட்டி வந்தார்கள். பின்னர் கொலையும் செய்தார்கள்.
ஆனால் எதிர் நடவடிக்கையாக பழி தீர்க்கத் துடித்தவர்கள் அந்த வகையினர் அல்ல! பெருமானாரின் மனைவிமார்கள், தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), முஆவியா (ரலி) போன்ற மிக முக்கியமானவர்கள் முன்னணியில் இருந்தனர். இவர்கள் தான் ஜிஹாத் என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உஸ்மான் (ரலி) கொலைக்குப் பழி தீர்க்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய ஆட்சித் தலைவராக விளங்கிய அலீ (ரலி) அவர்களுக்கு எதிராகக் களம் இறங்கினார்கள்.
அலீ (ரலி) அவர்களுக்கு எதிராக யார் யாரெல்லாம் எவ்வாறு படை திரட்டிக் கொண்டு களமிறங்கினார்கள்? அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்தன? யார் யார் பக்கம் என்னென்ன தவறுகள் இருந்தன? என்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகளுக்குள் செல்வோம்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படும் போது, அவர்களின் மனைவியரில் ஒருவரான நாயிலா (ரலி) அவர்கள் தடுக்க முற்பட்டபோது, கிளர்ச்சியாளர்கள் அவர்களின் உள்ளங்கையோடு சேர்த்து நான்கு விரல்களை வெட்டிவிடுகிறார்கள். வெட்டப்பட்ட நாயிலா (ரலி) அவர்களின் விரல்களையும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்படும்போது அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த சட்டையையும், அலீ (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்ய மறுத்த நுஃமான் பின் பஸீர் (ரலி) எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் சென்று முஆவியா(ரலி) விடம் ஒப்படைத்தார்.
அவற்றை மக்களின் பார்வைக்காக பள்ளிவாசல் மிம்பரில் வைத்து, உஸ்மான் (ரலி) கொலைக்குப் பழி தீர்த்தே தீர வேண்டும் என்ற வெறியை மக்களுக்கு ஊட்டி, முஆவியா (ரலி) பிரசங்கம் நிகழ்த்துகிறார். சஹாபாக்களில் உபாதா பின் ஸாமித், அபுத்தர்தா, அபு உமாமா, அம்ர் பின் அன்பதா (ரலி-அன்ஹும்) உள்ளிட்ட பலரும் இந்த வெறிக்குத் தூபமிடுகிறார்கள்.
மக்களெல்லாம் மிம்பரைச் சுற்றி கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆயிரக் கணக்கான சிரியாவாசிகள் “உஸ்மானைக் கொன்றவர்களைக் கணக்குத் தீர்க்காமல் இல்லற வாழ்வில் ஈடுபடுவதில்லை” என்று சபதமேற்கிறார்கள். இது ஒருபுறமிருக்க…
மற்றொரு புறம் மதீனாவில் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) உள்ளிட்ட சில நபித்தோழர்கள் உஸ்மான் (ரலி) கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உடனே அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சித் தலைவரான அலீ (ரலி) அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
அலீ (ரலி) அவர்கள், “நீங்கள் வைக்கும் கோரிக்கையின் நியாயத்தை நான் நன்றாக உணர்வேன். ஆனால் அதற்குரிய தருணம் இதுவல்ல! குற்றவாளிகள் நம்மை விட அதிக வலிமையுடன் மதீனாவில் உள்ளனர். நிலைமை சற்று நமக்கு சாதகமாக அமைந்தவுடன் நாம் நடவடிக்கையில் இறங்குவோம்” என்று பதிலளிக்கின்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்று அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில், நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் அனைவரும் ஹஜ் செய்வதற்காக மக்காவுக்குச் சென்றிருந்தார்கள். மதீனாவில் ஏற்பட்டிருந்த குழப்பங்களை அறிந்து, அவர்கள் மதீனா திரும்புவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று கருதி, மக்காவிலேயே தங்கி விடுகின்றார்கள்.
உஸ்மான் (ரலி) கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அலீ (ரலி) அவர்களின் பக்கம் இருப்பதாகவும், அலீ (ரலி) அவர்கள் அந்தக் கொலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகிய இருவரும் மக்காவுக்குச் சென்று, அங்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து இப்பிரச்சனை பற்றி ஆலோசனை செய்கின்றார்கள். ஆலோசனையின் முடிவில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்,
“புனிதமான (துல்ஹஜ்) மாதத்தில், புனிதமான நகரத்தில், அல்லாஹ்வின் தூதருக்கு (அதாவது மஸ்ஜிதுந்நபவீக்கு) அருகில் உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டிருக்கிறார். இதற்குக் கணக்குத் தீர்த்தே ஆக வேண்டும்”என்று சபதமேற்கின்றார்கள்.யமன் மாகாண ஆளுநராக உஸ்மான் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட யஃலா பின் உமைய்யா 600 ஒட்டகப் படையுடனும் ஆறு லட்சம் திர்ஹம் போர் நிதியுடனும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சேருகின்றார். உமர் (ரலி) அவர்களின் மகனார் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களின் பக்கம் சேர்ந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் படையுடன் புறப்படத் தயாரானார்கள். அச்சமயத்தில் மக்களிடம் மூன்று விதமான அபிப்ராயங்கள் தோன்றின.
1. மக்காவிலிருந்து புறப்பட்டு நேராக சிரியாவுக்குச் சென்று அங்கு முஆவியா (ரலி) அவர்களுடன் சேர்ந்து கொண்டு மதீனாவுக்குப் படையெடுப்பது.
2. மக்காவிலிருந்து நேராக மதீனாவுக்குச் சென்று, அங்கு அலீ (ரலி) அவர்களை நேரில் சந்தித்து, கொலையாளிகளை ஒப்படைக்கும்படி கோருவது.
3. நேராக பஸராவுக்குச் செல்வது. பஸராவிலும் கூஃபாவிலும் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரின் ஆதரவாளர்கள் கணிசமான அளவில் இருப்பதால் அங்கு சென்று படை பலத்தை அதிகரித்துக் கொண்டு பஸராவிலுள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் எதிரிகளைக் காலி செய்து விட்டு, அங்கிருந்து பெரும் படையுடன் மதீனாவுக்குச் சென்று பழிவாங்குவது.
இந்த மூன்று அபிப்ராயங்களில் மூன்றாவது அபிப்ராயமே பெரும்பாலோரின் கருத்தாக இருந்ததால், அதையே ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவாக அறிவிக்கின்றார்கள்.
ஆனால் இந்த முடிவில் பெருமானாரின் மனைவிமார்களில் ஹஃப்ஸா (ரலி) தவிர வேறு யாருக்கும் உடன்பாடில்லை. உஸ்மான் (ரலி) கொலையாளிகளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் ஆதரித்தார்கள். நேராக மதீனாவுக்குச் சென்று அலீ (ரலி) அவர்களிடம் முறையிட வேண்டும் என்ற இரண்டாவது கருத்து ஏற்கப்படுவதாக இருந்தால் தங்களுக்குச் சம்மதம் என்றும் வேறு எங்கும் செல்வதாக இருந்தால் தாங்கள் தயாரில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள்.
900 குதிரைப் படையுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் பஸராவை நோக்கி பழிவாங்கும் படை புறப்படுகின்றது. அந்தப் படையில் தான் கலகத்திற்குக் காரணமான பனூ உமைய்யா கோத்திரத்தைச் சார்ந்த மர்வான் பின் ஹகம், ஸயீத் இப்னுல் ஆஸ் ஆகிய இருவரும் இருந்தனர்.
ஆயிஷா (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட பெருமானாரின் மற்ற மனைவிமார்கள் அனைவரும் மதீனாவாசிகளுக்கான இஹ்ராம் எல்லையான தாது இர்க் என்ற இடம் வந்ததும், தங்களின் பாதையை மதீனாவை நோக்கி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸராவை நோக்கிச் செல்கின்றது.
அடுத்து நடந்தது என்ன?