கேள்வி:8

நூல்கள்: ___வேதம் ஓதும் சாத்தான்கள்

கேள்வி:8

அல்லாஹ், அல்குர்ஆன், அந்நபி ஆகியவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டன என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:8

இஸ்லாம் ஒரு போதும் விமர்சனத்தை மறுத்ததில்லை. யாரும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் செய்து உண்மையை உணர்ந்து அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொண்டபின் ஒருவன் விமர்சிக்கக் கூடாது.

விமர்சித்தால் அவன் இன்னமும் அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இஸ்லாம் கருதுகிறது.

இதில் எந்தத் தவறும் இருப்பதாக எவரும் கருத மாட்டார்கள். ஒரு தேசத்தில் பிரஜையாக இருப்பவன் அந்த தேசத்தின் நீதிமன்றத்தை – அது வழங்கும் தீர்ப்பை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த தேசம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை விமர்சனம் செய்வது தடுக்கப்படுகின்றது. அவ்வாறு விமர்சனம் செய்தால் தேசத்துரோகி என்று அவனுக்குப் பட்டம் சூட்டப்பட்டு தண்டிக்கவும் படுகிறது. ஒரு தேசத்துக்கு என்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைகள் இருப்பதை ராம்ஸ்வர்ப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இது போலவே ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவனைக் கருதவேண்டுமானால் அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை அவன் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்பதற்கு முன்னால் அவன் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; கேள்விகள் கேட்கலாம் என்பது எப்படித் தவறாகும்?

ராம்ஸ்வர்ப் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். அல்லாஹ்வை, அவன் தூதரை, அவன் அளித்த வேதத்தை விமர்சனம் செய்யலாம். இஸ்லாம் அதற்கு பதில் தரும்.

அல்லாஹ்வை – வேதத்தை – நபியை -ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்ட சாலமன் ரஷ்டி விமர்சித்தால் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் இன்னமும் இஸ்லாத்தின் கொள்கைகளை அவர் நம்பவில்லை என்று கூறி அவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் என்று இஸ்லாம் முடிவு செய்கிறது.

எந்தக் கொள்கையை ஏற்றுவிட்டதாக ஒருவன் கூறுகிறானோ, அவன் அந்தக் கொள்கையை நம்பாதவனாக இருந்தால் அவனது கூற்று எப்படி உண்மையாக இருக்க முடியும்?

இதைத் தான் இஸ்லாம் கூறுகிறது. ராம்ஸ்வர்ப் இதில் குறை காண்பதற்கு எதுவுமில்லை. அவரது புலமை சான்ற கேள்விகள் எதுவுமே புலமை சான்றதாக இல்லை. பொய்யும், முரண்பாடும், பொருந்தா வாதங்களும் நிறைந்த தன் கேள்விகளுக்கு ‘புலமை சான்ற கேள்விகள்’ என்று அவர் பெருமிதப்பட்டுக் கொள்வதில் அர்த்தம் எதுவுமில்லை.