கேள்வி:5,6
கேள்வி:5
போர், சமாதானம், கனீமத்தைப் பங்கிடுதல் வெற்றி கொள்ளப்பட்டவர்களை நடத்தும் முறைகள், எப்படி உடுத்துவது, உண்பது, மலஜலம் கழிப்பது, புணர்வது எல்லாமே இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது; இதனால் சல்மான் ரஷ்டி குர்ஆனைச் சட்டப் புத்தகம் எனப் பரிகசிக்கிறார் என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:5
ஆம்! குர்ஆன் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் சொல்லித் தருவது முட்டாள்களின் பரிகசிப்புக்கு உரியது என்றால் எமக்குக் கவலை இல்லை. முஸ்லிம் சமுதாயம் அதைப் பெருமைக்குரிய ஒன்றாகவே கருதுகிறது.
கடவுள் பன்றி உருவம் எடுப்பது, மீனும், மனிதனும் இணைந்து மனிதப் பிள்ளையைப் பெற்றெடுப்பது, யானை முகமும் மனித உடலும் கொண்ட விசித்திரப் படைப்பு, ஐந்தாறு கைகள், ஆறேழு முகங்கள் கொண்ட அதிசய உருவங்கள். இவைகளையே வேதத்தில் பார்த்துப் பழகி வந்தவர்களுக்கு முஹம்மதுக்கு வழங்கப்பட்ட வேதத்தில் இவையெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுக்கு பரிகசிப்பாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இவை தான் வேதத்தின் இலக்கணம் என்ற நம்பிக்கையுடையோர் நன்றாகப் பரிகசிக்கட்டும்!
கேள்வி:6
கவிஞர்களைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் முஹம்மது மிக மோசமாக நினைத்திருந்தார். அவர் குர்ஆனை வழங்கியதற்காக மக்கள் அவரைக் கவிஞர் என்று கவுரவித்ததை அவர் நிராகரித்தார். தன்னை நபி என்றே மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். ஒரு கவியுடைய கவிதையைக் கேட்ட போது அந்த ஷைத்தானைப் பிடியுங்கள்! ஒருவனுடைய வயிற்றில் சீழ் நிரம்பியிருப்பதை விட அவனுடைய உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பது மோசமானது என்று முஹம்மது சொன்னதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. மக்கத்துப் பரத்தையரையும், கவிஞர்களையும் மரண தண்டனைக்கு உள்ளாக்கும் போது எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று முஹம்மது கூறியதாக ரஷ்டியின் புத்தகத்தில் காணப்படுகின்றது. மறு புறமோ முஹம்மது தன்னுடைய தத்துவத்தைப் போற்றுவதற்காகவும், தனது வெற்றியை உயர்த்துவதற்காகவும், எதிரிகளை பழிப்பதற்காகவும் கஃபு இப்னு மாலிக், ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸூஹைர் போன்ற கவிஞர்களை அமர்த்திக் கொண்டார். அவர்களுக்கு தாராளமாக செல்வத்தையும், அடிமைப் பெண்களையும் பரிசில்களாக வழங்கினார்.
பதில்:6
நபியின் காலத்தின் அரபுலகிலும், உலகின் பல பகுதிகளிலும் கவிஞர்களுக்கு இருந்த மதிப்பு அளவிடற்கரியதாக இருந்தது. எழுதவும், படிக்கவும் தெரிந்திராத அன்றைய மக்கள், கவிஞர்களை உன்னதமானவர்களாக, தெய்வீக அம்சம் கொண்டவர்களாக, மனிதப் புனிதர்களாக, உத்தமர்களாக எண்ணி மதித்து வந்தனர். இந்தக் கவுரவத்தை எழுதவும் படிக்கவும் அறியாத அந்த நபிக்கு வழங்க முன்வந்த போது அதை நிராகரித்து விட்டார் என்றால் அது தான் அந்த நபியின் தனித்தன்மை.
அவர் உண்மையாளர்; பதவி, புகழுக்காக இவ்வாறு அவர் வாதிடவில்லை என்பதற்கு அது மகத்தான சான்றாகவும் அமைந்துள்ளதை நியாய உணர்வுடன் சிந்திப்பவர்கள் அறிய முடியும். அந்தக் கவுரவத்தை நிராகரித்துவிட்டு, எதைச் சொன்னால் மக்கள் எதிர்ப்பார்களோ, துன்பம் தருவார்களோ, கொலை செய்யவும் கூட முயற்சிப்பார்களோ நாடு கடத்தத் துணிவார்களோ அந்த ‘நபி’ என்ற தகுதியை – அன்றைய மக்கள் நம்ப மறுத்து இழிமொழி பேசிய நபி என்ற தகுதியை – வாதிட்டு அந்தத் துன்பங்களை எதிர்கெண்டாரே அது அவரது நபித்துவத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது. ‘கவிஞன்’ என்ற தகுதியை அவர் மறுத்தது அவரது பலமாகவே உள்ளது. அதை பலவீனமாகக் காட்ட எண்ணுகிறார் ராம்ஸ்வர்ப்
‘எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமுமில்லை’ என்று முஹம்மது கூறியதாக ரஷ்டி குறிப்பிடுவது பச்சைப் பொய், அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. கவிஞர்களைப் பற்றி நபி (ஸல்) ராம்ஸ்வர்ப் குறிப்பிட்டப்படி மிகமிக மோசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததில்லை. கவிதை என்ற பெயரால் காம உணர்வைத் தூண்டி விடுவதையும், பெண்களின் அங்கங்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதையும், மதுபானங்களையும் போதைப் பொருட்களையும் வர்ணித்துப் பாடுவதையும், தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவனை அவனது குலத்தை – கோத்திரத்தை – உருவத்தை – விமர்சிக்கும் கவிஞர்களையும் தான் நபிகள் கண்டித்துள்ளார்கள். அத்தகைய கவிஞர்களையே ஷைத்தான் என வர்ணித்தார்கள்.
அத்தகைய கவிதைகளையே சீழை விடவும் மோசமானது என்றனர்.
‘லபீத்’ என்ற இஸ்லாத்திற்கு முற்பட்ட கவிஞரின் கவிதையை நபி (ஸல்) பாரட்டியதை புகாரியில் காண்கிறோம்.
நல்ல கவிதை ஒன்றை ஒரு நபித்தோழர் நபியின் முன்னே பாடிக்காட்டிய போது திரும்பவும் பாடுவீராக! என்று பலமுறை அதை அவர்கள் ரசித்துக் கேட்டதை நூல்களில் நாம் காண்கிறோம். (முஸ்லும்)
நபியவர்கள் ரசித்துக்கேட்ட அந்தக் கவிதை முஸ்லிம் கவிஞருடைய கவிதை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்தமாக கவியையும், கவிஞர்களையும் நபிகள் மறுத்தார்கள் என்பது உண்மைக்கு முரணாகும். நபியவர்களே நல்ல கவிஞர்களை வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்கு ராம்ஸ்வர்ப் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களையும் நபிகள் வரவேற்றது சான்றாக உள்ளது. இதில் இவர் குறை காண்பதற்கு எதுவுமில்லை. நபிக்கு இறங்கிய அந்த வேதமும் இரு வகைக் கவிஞர்களையும் குறிப்பிடுகிறது. நல்ல கவிஞர்களை வரவேற்கிறது.
(பார்க்க(அல்குர்ஆன்: 26:227) ➚