முன்னுரை

நூல்கள்: வேதம் ஓதும் சாத்தான்கள்

சல்மான் ருஷ்டியின் நூலை ஆதரித்தும், நியாயப்படுத்தியும் ராம் ஸ்வரூப் என்பவர் எழுதிய நூலுக்கு 1990 களில் நான் எழுதிய மறுப்பு அப்போதைய அல்ஜன்னத் இதழில் இலவச இணைப்பாக வெளியிடப்பட்டது. இதை சில இணைய தளங்கள் தமது ஆக்கம் போல் வெளியிட்டுள்ளன.

அந்த நூல் இங்கே வெளியிடப்படுகிறது. ராம் ஸ்வரூப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல் என்று ஹிந்தி மொழியில் இவர் எழுதிய நூல் இந்திய அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றது.

இஸ்லாத்தைக் குறைகூறும் வாய்ப்புக்காக காத்துக் கிடந்த இவருக்கு சாலமன் ரஷ்டியின்’ சாத்தானின் வசனங்கள்’ என்ற நூல் சர்க்கரையாக அமைந்தது. இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அந்த நூல் எப்படியோ ‘ராம் ஸ்வர்ப்’ என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை படித்துவிட்டு புலமை சான்ற கேள்விகள் என்ற தலைப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் 20-11-88, பக்கம் 5-ல் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.

தவறான வாதங்களையும், பொய்யான செய்திகளையும் உள்ளடக்கிய இஸ்லாத்தை நோக்கி அவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்பதால் இந்தக் கட்டுரை அவரது கேள்விகளை எடுத்து வைத்து அதற்கு விளக்கம் அளிக்கும் முன்பு ‘ சாத்தானின் வசனங்களையும், சல்மான் ரஷ்டியையும் பற்றி அவர் தரும் அறிமுகத்தைத் தந்துவிட்டு அவரது கேள்விகளுக்குச் செல்வோம்.

ராம்ஸ்வர்ப் சொல்கிறார்:-

சாலமன் ரஷ்டியின் சாத்தானின் வசனங்கள் இஸ்லாத்தையும், அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சிப்பதற்காகவே எழுதப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவர் ‘மக்கா’ நகரை ‘ஜாஹிலியா’ என்ற பெயரால் தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்து மக்காவை இஸ்லாமிய வரலாறுகள் ‘ஜாஹிலியா’ என்றே குறிப்பிடுகின்றன. ருஷ்டி தனது நூலில் முஹம்மதை குறிப்பிடும் போது ‘மஹவுன்ட்’ என்றும் நபிகளின் எதிரியாக திகழ்ந்த அபூ ஸூஃப்யானை ‘அபூஸிம்பல்’ என்றும் சிறிய மாற்றத்துடன் குறிப்பிடுகிறார். ஏனைய பாத்திரங்களைக் குறிப்பிடும் போது ரஷ்டி இந்த வித்தியாசத்தைக் கூட செய்யவில்லை. இஸ்லாமிய வரலாறுகளில் எவ்வாறு அவர்களின் பெயர் குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறே குறிப்பிடுகிறார். நபியின் சித்தப்பா ஹம்ஸா, இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட நீக்ரோ அடிமை பிலால், மற்றும் காலித் ஆகியோர் இதே பெயர்களாலேயே இவரது நூலில் குறிப்பிடப்படுகிறார்கள். மக்காவில் – அதாவது ஜாஹிலியாவில் பன்னிரண்டு பரத்தையர் இருந்ததாகக் குறிப்பிடும் இவர், அந்தப் பரத்தையருக்கு நபியின் மனைவியரின் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறார். இது கீழ்த்தரமான, அநாகரீகமான சித்தரிப்பாக அமைந்துள்ளது. ‘நான் இந்த நூலில் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை வெறும் கற்பனையாக எழுதப்பட்ட கதை தான் எனது நூல் என்று ரஷ்டி இப்போது பின்வாங்கினாலும் உண்மையில் அவர் இஸ்லாத்தையும் அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சனம் செய்வதை தலையாய நோக்கமாகக் கொண்டே தனது நூலை எழுதி இருக்கிறார் என்பது அவரது நூலைப் படிக்கும் போது உணர முடிகின்றது.

இவை யாவும் சல்மான் ரஷ்டியைப் பற்றியும், அவரது நூல் பற்றியும் ‘ராம் ஸ்வர்ப்’ தருகின்ற அறிமுகமாகும். இந்தச் சிறிய அறிமுகத்திலிருந்து ரஷ்டியையும், அவரது நூலையும் நன்றாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாத்தை விமர்சிப்பது தான் அவரது நோக்கம் என்றால் ‘ராம் ஸ்வர்ப்’ போல் தெளிவாக நேரடியாக விமர்சிக்கலாம்.

தனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஏற்படுகின்ற ஐயங்களைத் தெளிவாக எழுப்பி இருக்கலாம். ரஷ்டியிடம் அந்தத் துணிவையும், நாகரிகத்தையும் காண முடியவில்லை. மாறாக மஞ்சள் பத்திரிக்கைகள், சினிமா கிசு கிசு செய்திகளைப் போல் நாலாம் தர நடையைத் தேர்வு செய்திருக்கிறார். ‘ராம்ஸ்வர்ப்’ செய்யும் அறிமுகத்திலிருந்து இதை நாம் நன்றாக விளங்க முடிகின்றது. முஸ்லிம் அறிஞர் உலகும், ராம் ஸ்வர்ப் போன்றவர்களும் இஸ்லாத்தையே அவர் விமர்சனம் செய்துள்ளார் என்று கண்டுபிடித்துச் சொன்ன பிறகும் கூட அவர் துணிவுடன் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை.

நான் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை, கற்பனைக் கதைதான் நான் எழுதிய நூல் என்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் ரஷ்டி. அவ்வளவு துணிவும், நேர்மையும் கொண்டவர் ஒரு சமுதாயம் தங்கள் அன்னையர் என்று மதிக்கும் நபிகளின் மனைவியரின் பெயர்களைப் பரத்தையர்களுக்குச் சூட்டி மகிழும் வக்கிரபுத்தியும், கீழ்த்தரமான எண்ணங்களையும் உடையவர் தான் ரஷ்டி என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ராம்ஸ்வர்ப்.

‘ராம்ஸ்வர்ப்’ போன்றவர்களே ஜீரணிக்க முடியாத அளவுக்கு எழுதும் நாலாந்தர எழுத்தாளராக இவர் காட்சியளிக்கிறார். இவரைப் பற்றி எழுதுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் இத்துடன் விட்டுவிட்டு ராம்ஸ்வர்ப் எழுப்புகின்ற புலமை சான்ற கேள்விகளைப் பார்ப்போம்.