10) சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர். வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர் என்று அவர்கள் கூறினர்.(அல்குர்ஆன்: 26:153) ➚நீர் சூனியம் செய்யப்பட்டவர் என்று அவர்கள் கூறினர்.
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன் என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்று கிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்று கிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
நபிகள் நாயகம் சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன. இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம். அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.
இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான். ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான்.
சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான். இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா? என்று சிலர் பேசுவார்கள்.
இது ஏற்க முடியாததாகும். பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை. மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.
(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.
உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டு கிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்தவர்களை வழிகெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது இதன் மூலம் உறுதியாகிறது.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களின் நிலை என்ன? அவை ஆதாரப்பூர்வமானவை அல்லவா? புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? இத்தகைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா? என்று சிலருக்கு கேள்வி எழலாம்.
திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதாலும், இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கும் போது ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர்.
திருக்குர்ஆனை மறுக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட அதற்குக் காரணமாக அமைந்த ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ்களைப் பற்றிப் பேசுவதற்கு முன் குர்ஆனும் நபிவழியும் மார்க்க ஆதாரங்கள் என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பேசுவோம்.