09) எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.
மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் தம்மைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள்.
எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை. எனவே அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.