06) மூஸா நபியின் காலத்தில்…

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

மூஸா நபியவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்கான சான்றுகளை ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனிடம் முன் வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை உண்மை என்று ஃபிர்அவ்ன் நம்ப மறுத்தான். இது சூனியம் (தந்திர வித்தை) என்றான். இவரை விடச் சிறந்த தந்திரக்காரர்கள் தனது நாட்டில் இருப்பதாகக் கூறி மூஸா நபியைப் போட்டிக்கு அழைத்தான். மூஸா நபியவர்கள் அந்தப் போட்டிக்கு உடன்பட்டார்கள். இது பற்றி திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் எடுத்துக் காட்டுகிறது. போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் மகத்தான சூனியத்தைச் செய்து காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

நீங்களே போடுங்கள்! என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

(அல்குர்ஆன்: 7:116)

அவர்கள் செய்தது சாதாரண சூனியம் அல்ல. மகத்தான சூனியம் என்று மேற்கண்ட வசனம் கூறுவதுடன் அந்த மகத்தான சூனியம் என்ன என்பதையும் தெளிவுபடக் கூறுகிறது. மக்களின் கண்களை மயக்கினார்கள் என்ற சொற்றொடரின் மூலம் அவர்கள் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மாறாக மக்களின் கண்களை ஏமாற்றினார்கள். மகத்தான சூனியத்தின் மூலம் செய்ய முடிந்தது இவ்வளவு தான் என்பதை அறிந்து கொள்ளலாம். மற்றொரு வசனம் இதை இன்னும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

(அல்குர்ஆன்: 20:66)

அவர்கள் செய்தது மகத்தான சூனியமே ஆனாலும் கயிறுகளையும், கைத் தடிகளையும் சீறும் பாம்புகளாக மாற்ற இயலவில்லை. மாறாக சீறும் பாம்பு போன்ற பொய்த் தோற்றத்தைத் தான் அவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று இவ்வசனம் கூறுகிறது. மற்றொரு வசனத்தில் சூனியம் என்பது மோசடியும் சூழ்ச்சியும் தவிர வேறில்லை என்று கூறப்படுகிறது.

உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் (என்றும் கூறினோம்.)

(அல்குர்ஆன்: 20:69)

இவர்கள் செய்து காட்டியது சூனியக்காரன் செய்யும் சூழ்ச்சி தான் என்ற சொற்றொடரிலிருந்து சூனியம் என்பது தந்திர வித்தை தவிர வேறு இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.