கப்ரில் தொழுத பெரியார்

நூல்கள்: தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

ஸாபித் பன்னானி (ரஹ்) அவர்கள் இறந்தபின் அன்னாரை அடக்கம் செய்யும்போது நானும் உடனிருந்தேன். அடக்கம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு செங்கல் கீழே விழுந்து உள்ளே துவாரம் ஏற்பட்டது. அதன் வழியாக நான் பார்த்த போது அவர் கப்ருக்குள் நின்று தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அருகிலிருந்தவரிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் பேசாமலிரு என்று என்னிடம் கூறிவிட்டார்.

தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம் 129 ல் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

கப்ரில் நடப்பதை எவரும் அறியமுடியாது என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இந்தக் கதையும் நேரடியாக மோதுகிறது.

ஸாபித் பன்னானி அவர்கள் உண்மையில் நல்லடியாராக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். நல்லடியாராக இருந்தால் கப்ரில் எத்தகைய நிலையில் இருப்பார் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

நல்லடியார்கள் மண்ணறையில் வைக்கப்பட்டதும் முன்கர் நகீர் எனும் இரு வானவர்கள் அவரிடம் கேள்வி கேட்பர். அவர் கேள்விக்கு சரியான விடையளிப்பார். அந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) விளக்கும் போது,

கேள்வி கேட்கப்பட்ட பின் 70 X 70 என்ற அளவில் அவரது அடக்கத் தலம் விரிவாக்கப்படும். பின்னர் அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பின்னர் அவரிடம் உறங்குவீராக எனக் கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இச்செய்தியைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அவர் கூறுவார். அப்போது இரு மலக்குகளும் புது மணமகனைப் போல் உறங்குவீராக! எனக் கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (திர்மிதி)

நல்லடியார்கள் கியாமத் நாள் வரை மண்ணறையில் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இந்த நபிமொழிக்கு மாற்றமாக ஸாபித் என்ற பெரியார் தொழுது கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி கப்ரிலிருந்து செங்கல் ஒன்று விழுந்துவிட்டது. அதன் மூலம் ஓட்டை ஏற்பட்டது என்று கூறப்படுவதும் நம்பும்படி இல்லை. கப்ரில் செங்கல்லுக்கு வேலை இல்லை. அதுவும் ஸாபித் பன்னானி அடக்கம் செய்யப்படும் போதே இது நிகழ்ந்துள்ளது. செங்கல்லால் கட்டடம் கட்டத் தடை இருந்தும் தொழும் காட்சியைக் கண்டு அறிவித்த இந்த மகான் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

எனவே இந்தக் கதையும் உண்மை கலக்காத பச்சைப் பொய் என்பதில் சந்தேகமில்லை.