முன்னுரை

நூல்கள்: தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

தப்லீக் ஜமாத் என்ற பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும்.

பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாட்டிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக்கடமைகள் இன்னதென்று அறியாமல் அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும்.

இந்த இயக்கம் புத்துயிர் பெற்ற பிறகு சமாதிகளில் மண்டியிட்டவர்கள் அல்லாஹ்வின் சன்னதியில் சிரம் பணியலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரப்பப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.

இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும், உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. மவ்லவிகள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத்தக்கவர்கள் என்ற நிலை இந்த ஜமாத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள். அதில் ஈடுபாடு கொண்ட மக்களின் நோக்கத்தில் இன்றளவும் குறைகாணமுடியாது.

ஆனாலும் பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்களின் புதல்வர் யூசுப் (ரஹ்) ஆகியோரின் மறைவிற்குப்பிறகு இந்த இயக்கத்தின் மார்க்க அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள்.

மனிதர்களுக்கும், பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதிவழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடலானார்கள்.

இந்தப் பணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர் உ.பி மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவர் காலம் சென்ற இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

குர்ஆனையும், நபிவழியையும் கற்பிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இவர் எழுதிய கற்பனைகளும்,கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு, தப்லீக் ஜமாத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.

தப்லீக் ஜமாத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக ​இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.

தொழுகையின் சிறப்பு, ஸதகாவின் சிறப்பு, ரமலானின் சிறப்பு என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இவரது நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வாரத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன. ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன்பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார்.

ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் இவர் மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்று விடுவதால் அடுத்தடுத்து இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை எனவே தான் தஃலீம் தொகுப்புகளில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது. அதிலுள்ள அபத்தங்கள் அனைத்தையும் எழுதுவதென்றால் பல ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டும். ஆகவே சிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும் நாம் இனம் காட்டுகிறோம்.