கஹ்ஃப் விளக்கவுரை – 1

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
01) கஹ்ஃப் பொருள்

கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள். இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு அல் கஹ்ஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும்.

அருளப்பட்ட இடம் காலம்

இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப் பட்டது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளதாக குர்துபி உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் இதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதையும் இவர்கள் எடுத்துக் காட்டவில்லை.
இந்த அத்தியாயத்தில் உள்ள வசனங்களில் கூறப்படும் செய்திகளைப் பார்க்கும் போது. சில செய்திகள் மக்காவில் அருளப்பட்டு இருக்கலாம். வேறு சில செய்திகள் மதினாவில் அருளப்பட்டு இருக்கலாம் என்று அனுமானம் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. இன்னும் சில வசனங்களின் அமைப்பைப் பார்க்கும் போது அதன் அமைப்பிலிருந்து அது மக்காவில் அருளப்பட்டது என்றோ மதினாவில் அருளப்பட்டது என்றோ முடிவுக்கு வரமுடியாது.
எனவே, ஒட்டு மொத்தமாக இந்த அத்தியாயம் மக்காவில் அருளப் பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.

இது மக்காவில் அருளப்பட்டது அல்லது மதினாவில் அருளப்பட்டது என்று நபித் தோழர்கள் கூறியதாக குறிப்பு கிடைக்கும் போது மட்டுமே இது பற்றி நாம் முடிவுக்கு வரவேண்டும். அவ்வாறு குறிப்புகள் கிடைக்காத போது மக்கீ, மதனி என்று ஏதாவது ஒன்றைக் கூறியாக வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது. திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் பலர் மக்கீ, மதனி என்று எதையாவது கூறியாக வேண்டுமே என்பதற்காகத்தான் கூறியுள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் சமமானவையே என்றாலும் சில அத்தியாயங்களுக்கு தனிச் சிறப்புகள் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இத்தகைய ஹதீஸ்களில் பெரும்பாலானவை இட்டுக் கட்டப் பட்டவையாகவே உள்ளன.

அல் பகரா, குல்ஹுவல்லாஹ், குல்அஊது பிரப்பின்னாஸ், குல்அஊது பிரப்பில் ஃபலக், அல்ஹம்து, ஆயத்துல் குர்ஸி, அல் கஹ்ஃப் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு குறித்த ஹதீஸ்களில் மட்டுமே ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகிறது. கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதால் அந்த சிறப்புகளை அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்திற்குள் நாம் நுழைவோம்.

சிறப்புகள்

கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)
நூல் : முஸ்லிம்

இந்தப் பத்து வசனங்களுக்கும் தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு என்பதை பத்து வசனங்களுக்கான விளக்கம் நிறைவடையும் போது நாம் குறிப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ். இந்தப் பத்து வசனங்களை மனனம் செய்வது தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் கேடயம் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.
உங்களில் யார் தஜ்ஜாலை அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சிறு பகுதி)
அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)
நூல் : முஸ்லிம்

அபூதாவூத் நூலின் அறிவிப்பில், “அவனை உங்களில் யார் அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் நிச்சயமாக அது தஜ்ஜாலின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய சோதனையாக இருக்கும் தஜ்ஜாலின் வருகையின் போது ஈமானைக் காக்கும் கேடயமாக இவ்வசனங்கள் அமைந்திருப்பது இந்த அத்தியாயத்திற்கான சிறப்புக்களில் ஒன்றாகும்.
ஒரு மனிதர் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்த கால்நடை ஓட ஆரம்பித்தது. கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய மனிதர் கவனித்த போது அவர் மீது மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அவர் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த நிலை குர்ஆனை ஓதும் போது இறங்கிய (சகீனத் எனும்) அமைதியாகும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : பராஃ (ரலி), நூலகள் : புகாரி, முஸ்லிம்

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால்அடுத்த ஜும்ஆ வரை அவருக்கு பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி), நூல் : ஹாகிம்
அல் கஹ்ஃப் அத்தியாயம் இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த அத்தியாயம் ஆகும். இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை இனி காணலாம்

முதல் வசனம்

“தனது அடியார் (முஹம்மது) மீது இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்”
என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று அல்லாஹ் கூறுவதால் அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் என்று கருதிக் கொள்ளக் கூடாது. மாறாக அவனது அடியார்களாகிய நாம் அவனைப் புகழ வேண்டும் என்று கற்றுத் தருவதற்காகவே இவ்வாறு குறிப்பிடுகிறான்.

ஃபாதிஹா அத்தியாயம், அல் அன்ஆம் அத்தியாயம், ஸபா அத்தியாயம், ஃபாதிர் அத்தியாயம் ஆகிய நான்கு அத்தியாயங்களும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று துவங்குகின்றன.
ஃபாத்திஹா அத்தியாயத்தில் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனக் கூறி விட்டு உன்னையே வணங்குகின்றோம் என்று தொடர்ந்து கூறுகின்றான். உன்னையே வணங்குகின்றோம் என்று அல்லாஹ் கூறினாலும் நாம் அவ்வாறு கூற வேண்டும் என்று கற்றுத் தருவதுதான் இதன் கருத்தாகும். எனவே, இந்த வசனத்தையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வை அவனுடைய அடியார்களாகிய நாம் புகழ வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் ஏன் அவனை நாம் புகழ வேண்டும் என்ற காரணத்தையும் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான்.

அவனது அடியார் மீது இவ்வேதத்தை அருளியது தான் அந்தக் காரணம். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று துவங்கும் ஏனைய நான்கு அத்தியாயங்களில் அல்லாஹ்வை நாம் ஏன் புகழ வேண்டும் என்பதற்கு இங்கே கூறிய காரணத்தை குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹ் அளவற்ற அருளாளனாக இருப்பதாலும் அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தற்காகவும் உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் அவனுக்கு உரிமையானதாக இருப்பதாலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன், இங்கே திருக்குர்ஆன் எனும் இவ்வேதத்தை அருளியதால் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறச் சொல்கிறான்.

ஏன் புகழ வேண்டும்?

வேதத்தை அருளியதற்காக நாம் ஏன் அவனைப் புகழ வேண்டும்? அது என்ன அவ்வளவு மகத்தானதா என்றால் நிச்சயமாக மகத்தானது தான்.
அல்லாஹ் இந்த சமுதாயத்துக்கு அருளிய அருட் கொடைகளில் எல்லாம் அதற்கு ஈடானது ஏதுமில்லை. தனது அடியார்கள் மீது வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன் அதைத் தொடர்ந்து,
எந்தக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை”
“அதில் எந்தக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை”
என்ற அற்புதமான சொற்றொடரையும் பயன் படுத்தியுள்ளான்.

வேதம் என்பதை சாதாரண புத்தகம் போன்று எண்ணி விடாதீர்கள். இந்த வேதம் அத்தகையது அன்று. இவ்வேதத்தில் எந்தக் கோணலும் கிடையாது. ஒரு கோணலும் இல்லாத இவ்வேதத்தை அருளியதால் அவனுக்கே எல்லாப் புகழும் என்று அந்தக் காரணத்திற்கு வலிமை சேர்க்கப் பட்டுள்ளது.
பொய், முரண்பாடு எல்லாக் காலத்திற்கும் தாக்குப் பிடிக்க முடியாத தன்மை, சொல்வதை தெளிவாகச் சொல்லாமல் குழப்புதல் போன்றவை கோணல் எனப்படும். இதில் எதுவுமே இல்லாமல் ஒரு வழிகாட்டும் நெறியை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

மறதி, பலவீனம், எதிர்காலம் பற்றிய ஞானமின்மை போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதனின் வார்த்தையில் கோணல் இருக்கலாம். இருக்கும். எந்தப் பலவீனமும் இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையில் கோணல் இருக்கலாகாது. கோணல் இல்லை என்று இங்கே அல்லாஹ் அறை கூவல் விடுக்கிறான்.
இதன் காரணமாகத்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்றதொரு வேதத்தை எவராலும் கொண்டு வர முடியாது என்று அல்லாஹ் சவால் விடுகிறான்.

இன்னும் (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியார்க்கு நாம் அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகமுடையோராக இருப்பீர்களானால் (அந்தச் சந்தேகத்தில்) உண்மை உடையவர்களாகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (எல்லாம் ஒன்றாக) அழைத்துக் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். (அல்குர்ஆன்:)

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதிலுள்ளதைப் போன்று ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்:)

அல்லது “இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “(அப்படியானால்) நீங்களும் இதைப்
போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களைக் கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்கு துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்:)

இந்தக் குர்ஆனைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன்:)

ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (குர்ஆன், தவ்ராத்) இவ்விரண்டையும் விட நேர் வழிகாட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடம் இருந்து நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றுகிறேன் என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன்:)

ஆகவே, அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். (அல்குர்ஆன்:)

இவை அல்லாஹ் குர்ஆனைப் பற்றி விடுக்கும் அறைகூவல்கள். கோணல் நிறைந்த புத்தகம் குறித்து இது போன்ற அறைகூவல் விட முடியாது.

இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவர்களிடம் இருந்து இது வந்திருந்தால் இதில் அநேக முரண்பாடுகளை அவர்கள் காண்பார்கள். (அல்குர்ஆன்:)

இதன் முன்புறமோ பின்புறமோ தவறுகள் இதை அணுகாது. புகழுக்குரிய நுண்ணறிவாளன் புறத்திலிருந்து இது அருளப் பட்டதாகும். (அல்குர்ஆன்:)

இந்த வேதத்தை சிந்திக்க மாட்டார்களா? என்று அறைகூவல் விடுக்கும் வேதம் இந்த உலகில் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இல்லை. சிந்தித்துப் பார்த்தால் இதில், ஒரு முரண்பாட்டைக் கூட காணமுடியாது என்று கூறக்கூடிய வேதமும் இது ஒன்று தான்.

இதில் கோணல் எதுவும் இல்லாத காரணத்தினால் தான் 1400 ஆண்டுகளைக் கடந்த பின்பும் அது நடைமுறைப்படுத்தப் படுகிறது. எந்த மாறுதலுக்கும் தேவைப்பட வில்லை. இஸ்லாத்திற்கு காலத்தால் பிந்திய எல்லா தத்துவங்களும் கொள்கைக் கோட்பாடுகளும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் காலத்தை வென்று நிற்கும் ஒரே புத்தகமாக இது திகழ்கிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் கூட இஸ்லாத்தின் சட்டங்கள் தான் உலகில் அமைதியை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளக் கூடிய அளவுக்கு ஒரு கோணலும் அற்றதாக உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் தீர்க்க முடியாத தீண்டாமைக் கொடுமை முதல் ஏனைய கிரிமினல் குற்றங்கள் வரை வேரோடு அறுத்தெறியப்பட வேண்டுமானால் குர்ஆனை விட்டால் வேறு வழியே கிடையாது என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டு விட்டது.

மயிர்பிளக்கும் வாதங்கள் புரியும் அறிவுலக மேதைகள் எல்லாம் எந்த ஆற்றலும் இல்லாத ஒரு கல்லின் முன்னால் தலைகுனிந்து வணங்கும் நேரத்தில் கையெழுத்து போடத் தெரியாத ஒரு முஸ்லிம் மட்டும் அதைக் கல் என்று சரியாகப் புரிந்து கொள்கின்றான் என்றால் அதற்குக் காரணம் இவ்வேதம்தான்.
எனவே தான் இவ்வளவு அற்புதமான வேதத்தை அருளியதற்காக அதன் மூலம் மிருகங்களாக இருந்தவர்களை மனிதர்களாக வாழச் செய்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று அல்லாஹ் துதி பாடச் சொல்கிறான்.
இதில் எந்தக் கோணலையும் ஏற்படுத்தவில்லை என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, “இதை நேரானதாகவும் அருளியிருக்கின்றான்” என்று கூறுகின்றான். கோணலை ஏற்படுத்தவில்லை. மாறாக நேரானதாக அதை அருளியிருப்பதாகக் கூறி, புகழ் அனைத்திற்கும் அவன் மட்டுமே உரித்தானவன் என்பதை வலியுறுத்துகின்றான்.

“நேரானதாகவும் எவ்விதக் கோணலும் அற்றதாகவும் இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்” என்று கூறினால் சொல்லவருகின்ற கருத்து முழுமை அடைந்து விடும். ஆயினும், இங்கே “தன் அடியார் மீது” என்ற சொற்றொடரையும் சேர்த்து கூறுகின்றான்.
வேதம் அருளப்பட்டது மட்டும் அருட்கொடை ஆகாது. அருளப்படுவதற்குத் தகுதியானவர் மீது அருளப்பட்டதும் சேர்த்துத் தான் இது அருட்கொடையாகிறது.

வேதத்தில் சில வசனங்களைப் பார்க்கும் போது தெளிவற்றதாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் யார் மீது இவ்வேதத்தை அல்லாஹ் அருளினானோ அவர் அளித்த விளக்கம் காரணமாக பிரகாசமான தெளிவு தென்படும்.
எனவே தான் “தனது அடியாருக்கு இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்” என்கிறான்.
வேதத்துக்கு நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் இல்லை என்றால் “தனது அடியார் மீது” என்ற வாசகம் பொருளற்றதாகி விடும்.

இவ்வேதம் அருளப்பட்டது ஓர் அருள். அதில் ஒரு கோணலும் இல்லாமல் நேராக அமைந்திருப்பது மற்றோர் அருள். மேலும் யாருக்கு அருள வேண்டுமோ அத்தகையவருக்கு அருளியிருப்பது இன்னோர் அருள் எனக்கூறிய இறைவன் அடுத்து வரும் வசனங்களில் இவ்வேதம் என்ன நோக்கத்திற்காக அருளப் பட்டது என்பதை விளக்குகிறான்.