பாடம் 7 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் சிறிய வடிவம்

நூல்கள்: இஸ்லாமியக் கொள்கை

கேள்வி 1 : இணை கற்பிக்கும் பாவத்தில் சிறய வகை என்பது யாது?

பதில் : ஒரு நல்லறத்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்வது தான் இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகையாகக் கருதப்படுகிறது.

தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 18:110)

என்று இணை வைத்தலின் சிறிய வடிவம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்.

ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென்பதற்காகச் செய்யும் இணை வைத்தலின் சிறிய வகையையே நான் உங்கள் வியத்தில் மிக அதிகமாக அஞ்சுகிறேன்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் எச்சரிக்கிறார்கள்.

(அஹ்மத்: 22523)

ஒரு மனிதனின் காரியம் யாராவது ஒருவரின் உதவியால் நிறைவேறும் போது அல்லாஹ்வும் இன்னாரும் இல்லை என்றால் இது நடந்திருக்காது என்றோ அல்லது இது இறைவன் நாடியதும் நீங்கள் நாடியதுமாகும் என்றோ கூறுவதும் இணை வைத்தலின் சிறிய வகையைச் சார்ந்தது தான் ஏனெனில் இது அல்லாஹ் நாடியதும் இன்னார் நாடியதும் என்று கூறாதீர்கள். ஆனால் இது அல்லாஹ் நாடியது தான். பிறகு தான் இன்னார் நாடினார் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு நல்லுரை புகன்றிருக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத்

கேள்வி 2 : அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது ஆகுமா?

பதில் : அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் யாரையும் கொண்டு சத்தியம் செய்தல் ஆகாது. ஏனெனில்

அவ்வாறில்லை! என் இறைவன் மேல் ஆணையாக! நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 64:7)

அவன் மீது தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

எவன் அல்லாஹ்வைத் தவிர ஏனையவற்றைக் கொண்டு சத்தியம் செய்கின்றானோ அவன் இறைவனுக்கு இணை கற்பித்தவனே ஆவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

(அஹ்மத்: 311)

யாருக்காவது சத்தியம் செய்ய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும் இல்லையானால் மவுனமாக இருந்து விடட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

நூல் : புகாரி, 2679, 6108, 6646,