பாடம் 5 பெரிய இணை வைத்தலின் வகைகள்

நூல்கள்: இஸ்லாமியக் கொள்கை

அ. உதவிக்கு அழைத்தல்

கேள்வி 1 : இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கலாமா?

பதில் : இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கக் கூடாது.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:20),21

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான்.

(அல்குர்ஆன்: 8:9)

தன்னைத் தவிர மற்றவர்களிடம் நம்மைக் காப்பாற்றும்படிக் கோரக் கூடாது என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

நித்திய ஜீவனே நிரந்தரமானவனே உனது பேரருளால் என்னைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன் என்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடமே வேண்டுபவர்களாக இருந்திருக்கிறார்கள்.

நூல் : திர்மிதி 3446

கேள்வி 2 : அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் உதவி கேட்கலாமா?

பதில் : கூடாது, ஏனெனில்

(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

என்றே பிரார்த்திக்கும்படி இறைவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.

(அல்குர்ஆன்: 1:4)

நீ ஏதாவதொன்றைக் கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி கேட்டாலும் அல்லாஹ்விடமே உதவி கேள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

நூல் : திர்மிதி 2440

கேள்வி 3 : உயிர் வாழ்பவர்களிடம் நாம் ஏதேனும் உதவி கேட்கலாமா?

பதில் : அவர்களால் முடிந்தவற்றில் தாராளமாக உதவி கேட்கலாம். ஏனெனில்

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன்: 5:2)

ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவியாயிருக்கும் வரை அல்லாஹ் அந்த அடியானுக்கு உதவியாயிருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

(முஸ்லிம்: 4867)

ஆ.நேர்ச்சை செய்தல்

கேள்வி 4: அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்யலாமா?

பதில் : அல்லாஹ் ஒருவனுக்கே தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்வது அறவே கூடாது. ஏனெனில்

இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன்.

(அல்குர்ஆன்: 3:35)

என்று இம்ரான் என்பவரது மனைவி நேர்ச்சை செய்து கொண்டதாக இறைவன் கூறுகிறான்.

எவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கும் காரியங்களில் நேர்ச்சை செய்கின்றாரோ அவர் (அவ்வாறே அவனுக்கு வழிப்பட்டு நடக்கவும். மேலும் எவர் அவனுக்கு மாறு செய்யும் காரியங்களில் நேர்ச்சை செய்கிறாரோ அவர் (அவ்வாறு) அவனுக்கு மாறு செய்திட வேண்டாம்.

(புகாரி: 6696, 6700)

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்ச்சை இறைவனுக்கே செய்யப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இ. பலியிடுதல்

கேள்வி 5 : அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காகப் பிராணிகளைப் பலியிடுதல் கூடுமா?

பதில் : அறவே கூடாது. ஏனெனில்

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன்: 108:2)

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காக (பிராணிகளை) அறுத்துப் பலியிடுபவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து விலக்கி விடட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை வலியுறுத்துகிறார்கள்.

(முஸ்லிம்: 3657)

ஈ. வலம் வருதல்

கேள்வி 1 : வணக்கம் என்று கருதி நாம் சமாதிகளை வலம் வரலாமா?

பதில் : கஅபா ஆலயத்தைத் தவிர வேறு எதனையும் நாம் வலம் வரக் கூடாது. ஏனெனில்

பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

(அல்குர்ஆன்: 22:29)

எவரொருவர் கஅபா ஆலயத்தை ஏழு முறை வலம் வந்து இரண்டு ரக்அத்களும் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்ற (நன்மையை அடைப)வராவார்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நூல் : இப்னுமாஜா 2947

உ.சூனியம் செய்தல்

கேள்வி 7 : சூனியம் செய்வதைப் பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

பதில் : சூனியம் செய்தல் இறை மறுப்பான செயலாகும். ஏனெனில்

சூனியக் கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற த்தான்களே மறுத்தனர். என்று இறைவன் கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 2:102)

நாசப்படுத்தக்கூடிய ஏழு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள். (அவை) இறைவனுக்கு இணை கற்பித்தல், சூனியம் செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனை இறை நிராகரிப்பான செயல்களில் ஒன்றாகவே எச்சரித்துள்ளார்கள்.

(புகாரி: 2767, 6857)

ஊ. ஜோதிடம், குறிபார்த்தல்

கேள்வி 8 : தமக்கு மறைவானவற்றைப் பற்றித் தெரியும் என்று கூறும் ஜோதிடர்களையும்,குறிகாரர்களையும் நாம் நம்பலாமா?

பதில் : அவ்விருவரையும் அறவே நம்பக் கூடாது.

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். என்று இறைவன் கூறியுள்ளான்.

(அல்குர்ஆன்: 27:65)

ஒருவன் குறி கூறுபவனிடமோ, ஜோதிடனிடமோ சென்று அவன் கூறுபவற்றை நம்பினால் அவன் நிச்சயமாக முஹம்மதாகிய எனக்கு அருளப்பட்ட இம்மார்க்கத்தை நிராகரித்தவனே ஆவான்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

(அஹ்மத்: 9171)

எ.மறைவானவை பற்றிய அறிவு

கேள்வி 9 : மறைவானவற்றை வேறு யாராவது அறிய முடியுமா?

பதில் : அல்லாஹ்வே தன் திருத்தூதர்களில் யாருக்காவது அறிவித்தாலே தவிர தமது ஆற்றலால் யாராலும் மறைவானவற்றை அறியவே முடியாது.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான வியங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்

என்று அல்லாஹ்வும் கூறுகின்றான்.

(அல்குர்ஆன்: 72:26),27

அல்லாஹ்வையன்றி யாராலும் மறைவானவற்றை அறிய முடியாது.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆணித்தரமாக அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : தப்ரபானி 6245

ஏ. அணியக்கூடாதவை எவை?

கேள்வி 10 : முடிகயிறு, வளையம், மாலை போன்றவற்றை நோய் நிவாரணத்திற்காக நாம் அணிந்து கொள்ளலாமா?

பதில் : நாம் அவற்றை அறவே அணிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில்

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(அல்குர்ஆன்: 6:17)

அறிந்து கொள் இவை உனக்கு மேலும் நலிவையே ஏற்படுத்தும். இவற்றைத் தூக்கி எறிந்து விடு. ஏனெனில் (இவைகளுக்கும் நிவாரணமளிக்கும் ஆற்றல் உண்டு என்ற இதே நம்பிக்கையில்) நீ இறந்து விடுவாயானால் ஒருக்காலும் மறுமையில் வெற்றி பெறவே முடியாது.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை அணியக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள்.

நூல் : ஹாக்கிம் 7502

கேள்வி 11 :ஜெபமணி மாலைகள், சோழி, சிப்பி ஆகியவற்றை கண்ணேறு போன்றவற்றிற்காக அணிதல் கூடுமா?

பதில் : கண்ணேறு போன்றவற்றிற்காக இவற்றையெல்லாம் அணிதல் கூடாது. ஏனெனில்

அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(அல்குர்ஆன்: 6:17)

எவனொருவன் தாயத்துகளை மாட்டிக் கொண்டிருக்கிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டவனே ஆவான்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி திட்டவட்ட்டமாக எச்சரித்திருக்கிறார்கள்.

நூல் ;(அஹ்மத்: 16781)

ஐ. செயல்பாடும் தீர்ப்பும்

கேள்வி 12 : இஸ்லாத்திற்கு முரணான விதிமுறைகளின் படி செயல்படுவது பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

பதில் ; இஸ்லாத்திற்கு எதிரான விதிமுறைகளின் படிச் செயல்படுவது ஆகுமானது என்று நினைத்தாலோ அது சரி தான் என்று நம்பினாலோ அது இறை மறுப்பாகவே (குப்ர்) கருதப்படும். ஏனெனில்

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(அல்குர்ஆன்: 5:44)

ஓ. சாத்தானின் ஊசலாட்டம்

கேள்வி 13 : அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்தான். அவனை யார் படைத்தது?என:று சாத்தான் நமக்குள் மனக் குழப்பத்தை ஏற்படுத்தினால் அதை எவ்வாறு தவிர்ப்பது?

பதில் : இது போன்ற கேள்விகளால் சாத்தான் உங்களில் ஒருவரைக் குழப்ப நினைத்தால் அவா உடனே நான் சாத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூற வேண்டும்

ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்

என்று அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகிறான்.

அல்குர்ஆன் .41:36

மேலும் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து நாம் எவ்வாறு தப்புவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். நமக்குள் இது போன்ற குழப்பங்களை அவன் ஏற்படுத்த முயலும் போது நான் அல்லாஹ்வையும்ணூ அவனது தூதர்களையும் நம்புகிறேன். அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன். அவன் (யாரையும்) பெறவுமில்லை. அவன் (யாராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை என்று கூறிவிட்டு பின்னர் நமது இடது புறத்தில் மூன்று தடவை துப்பும்படியும் பின்னர் சாத்தானின் குழப்பத்தை விட்டு நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும்படியும் அதன் பின்னர் அந்த இடத்தில் இருந்து அகன்று விடும்படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தி விட்டு இவ்வாறு செய்தால் சாத்தான் நம்மை விட்டுப் போய் விடுவான் என்று உறுதியளித்திருக்கிறார்கள்.

(அபூதாவூத்: 4099)