விமர்சனம் 16,17

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

விமர்சனம் 16

பலதார மணம் பற்றியும் ஜெபமணி கிண்டல் செய்திருக்கிறார். அதற்கு நமது அல் ஜன்னத் இதழில் வெளிவரும் மாற்றாரின் பார்வையில் இஸ்லாம் என்ற தொடர் கட்டுரையில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதால் அதற்கான நியாயங்களை இங்கே கூறுவது கூறியது கூறலாகி விடும். அதனால் அதைத் தவிர்ப்போம் .

ஆனால் ஜெபமணி ஒப்புக் கொண்ட பைபிள் பல தார மணம் பற்றிக் கூறுவதை மாத்திரம் ஜெபமணிக்கு எடுத்துக் காட்டுவது இங்கு அவசியமாகிறது.

ஆபரகாமுக்கு சாரா என்றொரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 12:5 லும், கேத்தூரால் என்று இன்னொரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 25:1லும் பல மனைவிகள் ஒரே சமயத்தில் அவருக்கு இருந்ததை ஆதியாகமம் 25:6லும் கூறப்படுகிறது.

ஏசா என்பவருக்கு (இஸ்ஹாக் நபியின் மகன்) யூதித், பஸ்மாத் என்ற பெயர்களில் இரு மனைவியர் இருந்ததை ஆதியாகமம் 29:34ல் கூறுகிறது. மேலும் அதே ஏசா மகளாத் என்பவளையும் திருமணம் செய்து கொண்டதாக ஆதியாகமம் 28:9 கூறுகிறது. அவருக்கு ஆதாள். அக்கோ பாமாள் என்று மேலும் இரு மனைவிகள் இருந்ததை ஆதியாகமம் 36:2 கூறுகிறது.

யாக்கோபு அவர்களுக்கு அதாவது யூத கிறித்துவ பரம்பரையின் தந்தையாகிய இஸ்ரேல் எனும் யாக்கோபுக்கு லேயாள் என்று மனைவி இருந்ததாக ஆதியாகமம் 29:23 லும் இராகேல் என்று மற்றொரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 29:28 லும் பில்காள் என்று இன்னொரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 30:4 லும் சில்பாள் என்று ஒரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 30:9 லும் கூறப்படுகிறது.

மாதிரிக்குச் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். பலதாரத் திருமணத்தைக் கிண்டல் செய்ய ஜெபமணிக்கு அருகதை இல்லை என்பதற்காகவே இந்த எடுத்துக் காட்டுக்கள். பல தாரமணம் சரியானதே என்பதற்கான நியாயங்கள் மாற்றாறின் பார்வையில் இஸ்லாம் கட்டுரைத் தொடரில் விளக்கப்பட்டு வருகிறது.

விமர்சனம் 17

தானியேல் 6:10ன் படி இது சமயம் வரை முகமது எருசலேமை உற்று நோக்கியே தொழுதார்

(பக்கம் 26)

இது சமயம் முகமது எங்கிருந்தும் கடவுளைத் தொழலாம் என்ற கொள்கையி லிருந்து மாறி ஒவ்வொரு தொழுகையிலும் கிப்லா மேற்கி லிருக்கும் கஃபா கோயிலை எண்ணி அதை உற்றுப் பார்க்கும் நிலையிலும் தொழுது கொள்ளும் படி ஒரு நிலமையையும் 40ரக்அத்துகள் நிலைகளில் பிரதான நிலையாகவும் நியமித்தார்

(பக்கம் 28)

40 ரக்அத்துகள் என்று இவர் கூறுவதிலிருந்து இவர் இஸ்லாம் பற்றி அடைந்துள்ள தெளிவை அறிந்து கொள்கிறோம்.

முஸ்லிம்கள் கஃபாவை நோக்கித் தொழுவது அங்கே இறைவன் இருக்கிறான் என்பதற்கு அல்ல. வணக்க முறைகளில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். ஒரு இடத்தில் தொழுபவர்களில் சிலர் கிழக்கிலும் வேறு சிலர் மேற்கிலும் மற்றும் சிலர் வடக்கிலும் முன்னோக்கி நின்றால் ஒழுங்கு கெடும். ஏதேனும் ஒரு பக்கமாக அனைவரும் முன்னோக்க வேண்டும். இறைவனை வணங்குவற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட கஃபா ஆலையம் இருக்கும் திசையை இஸ்லாம் தேர்ந்தெடுத்தது. எந்தப் பக்கத்தை தேர்ந்தெடுத்தாலும் அதில் கேள்விகள் எழுவது இயற்கை.

கஃபாவுக்குள்ளே இறைவன் இல்லை என்பதைப் பகிரங்கமாக அறிவிக்கும் விதமாக ஜெருசலேம் நோக்கியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதும் காட்டியுள்ளனர். கஃபா திசை எந்தப் பக்கம் என்பது தெரியாத போது எந்தப் பக்கமும் முன்னோக்கித் தொழலாம் என்றும் இஸ்லாம் கூறுகிறது. உலக முஸ்லிம்கள் அனைவரின் கொள்கையும் நடவடிக்கைகளும் ஒரே விதமாக அமைந்திருக்க வேண்டும் என்பது போலவே அவர்கள் முன்னோக்கும் பொருளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. கஃபாவில் இறைவன் இருப்பதாகவோ அல்லது காஃபாவை வணங்குவதாகவோ எவரேனும் நம்பினால் அவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றார்.