விமர்சனம் 14

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

மெக்கா வர்த்தகர்கள் மதீனாவைக் கடந்து செல்லும் போதெல்லாம் மெதினா வாசிகள் வஞ்சம் தீர்க்கும்படி அவர்களைக் கொள்ளையடித்தனர். இப்படிக் கொள்ளையடிப்பதைத் தங்கள் மதத்தின் படி மார்க்க யுத்தம் என்கிறார்கள் என்று கூறுகிறார் ஜெபமணியார்

(பக்கம் 25)

மக்கா மதீனா ஆகிய ஊர்கள் இன்று ஒரு நாட்டின் இரண்டு நகரங்களாக உள்ளன. ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மதினா சென்ற பிறகு மக்காவில் தனி ஆட்சியும் மதினாவில் தனி ஆட்சியும் நடந்து வந்தன. மதினாவின் ஆட்சித் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்காவின் ஆட்சித் தலைவராக அபூஜஹ்ல் அவனது மரணத்திற்குப் பின் அபூசுப்யான் ஆகியோர் இருந்தனர். இதைக் கவனத்தில் கொண்டு இப்பிரச்சனையை அலசுவோம்.

இந்தியாவும் சோவியத் யூனியனும் இரண்டு தனித் தனித் நாடுகள். நட்புறவு நாடுகள். நட்புறவு நாடுகள் என்றாலும் இந்தியாவிலிருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டு சோவியத் யூனியனின் அனுமதி பெறாமல் ஜெபமணி போக முடியுமா? அப்படிப் போனால் சோவியத் அரசு அப்பொருட்களை பறிமுதல் செய்வதில்லையா?

நட்பு நாடுகளுக்கிடையே கூட இந்த நிலை என்றால் இந்தியாவும் பாக்கிஸ்தானும் போல் பகை நிலவும் நாடுகளுக்கிடையே எதையேனும் அனுமதி பெறாமல் கொண்டு செல்ல முடியுமா? அதுவும் போர் மோகம் சூழந்துள்ள நேரங்களில் இதை எந்த அரசேனும் அனுமதிக்குமா? ஒருக்காலும் அனுமதிக்காது.

இலங்கையிலிருந்து கடத்தி வரும் தங்கத்தை இந்திய அரசு பறிமுதல் செய்கிறது. அதைக் கொள்ளையடித்தல் என்பாரா?

அட இது கூட வேண்டாம். தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு அனுமதி இன்றி நெல்லைக் கூட எடுத்துப் போக முடியாதே. அப்படி எடுத்துச் சென்றால் அரசு பறிமுதல் செய்கிறதே. இது கொள்ளையடிப்பது ஆகுமா?

இது போன்று தான் நபிகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிக்குள் எதிரி நாட்டினர் அதுவும் கடுமையான எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்பதை அனுமதிக்க முடியுமா? ஆட்சித் தலைவர் என்ற முறையில் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களையும் அந்தப் பகுதிகளையும் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டல்லவா? இதனடிப்படையிலேயே அது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இது தவறா?

கிறித்தவர்களின் ஆட்சி நடக்கும் நாடுகளுக்கு கிறித்தவரான ஜெபமணி கூட இந்தியாவில் உள்ள பொருட்களை வியாபார நோக்கில் அந்த அரசின் அனுமதி பெறாமல் கொண்டு செல்ல முடியாதே. அது ஏன்?

கொண்டு சென்றால் பறிமுதல் செய்து கைதும் செய்கிறார்களே? இது நியாயம் என்று கூறினால் இதை விடவும் ஆயிரம் மடங்கு நியாயம் நபிகளின் செயலுக்கு கூறலாமே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜெபமாலையை உருட்டிக் கொண்டு நாடோடியாக ஊர் சுற்றிக் கொண்டு இருந்தவர் அல்ல. மாறாக ஆட்சித் தலைவராக போர்ப்படைத் தளபதியாக இருந்தவர்.

மக்காவும், மதீனாவும் அன்றைய நிலையில் இரு வேறு ஆட்சிகள் நடந்த இரு நாடுகள். இரு ஊர் வாசிகளும் ஒருவருக்கொருவர் பகை கொண்டிருந்த நேரம். இந்த நேரத்தில் அத்து மீறி மதீனா நாட்டில் (நகரத்தில் அல்ல) திமிராகப் பிரவேசிக்கும் போது மதீனா நாட்டின் இறையாண்மைக்குச் சவால் விடும் போது , அந்த நாடு கை கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறாரா ஜெபமணி? நுனிப்புல் மேயும் ஜீவன்களால் இதைப் புரிந்து கொள்ள முடியுமா?