விமர்சனம் 13

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

இனி அடுத்த விமர்சனத்திற்கு வருவோம். இசுலாமிய வரலாறு என்ற தலைப்பில் அவர் கூறுவதைக் கேளுங்கள்.

இது காலத்தில் கத்தோலிக்கர், சேசு, மரியாள், சூசை சிலைகளைக் கொண்டு தங்கள் மதத்தை விருத்தி செய்துள்ளதையும் அறிந்து சிலையின்றி மதம் நிலையாது என்பதை முஹம்மது கண்டார். ஆகவே மெக்காவில் வணக்கத்திலிருந்த கஃபா கல்லைத் தங்கள் ஆதி தகப்பன் ஆபிரகாம், இஸ்மவேலைப் பலியிட்ட கல் இந்தக் கஃபா கல் என்று விளம்பி அந்தக் கல்லை தம் மதத்துக்கு அஸ்திபாரம் ஆக்கத் திட்டமிட்டார். இந்தக் கருப்புக் கல்லை வாழ்வில் ஒரு முறை வலம் வந்து தொட்டு முத்தி செய்தோரெல்லாம் சுவனபதியை அடைவர் என்று புதிதாகப் போதிக்கவும் செய்தார். தம் சகாக்களில் உண்மையான சீடர்களை மெக்கா திருவிழாவில் கருப்புக் கஃபா கல்லைத் தொழ வரும்படி அனுப்பி வைத்தார். இந்தக் கருப்புக் கல்லை வணங்குவதற்குச் செய்யும் பிரயாணத்திற்கு ஹஜ் என்று பெயர் . இது ஆரியரின் காசி யாத்திரைக்கு ஒப்பான ஒன்று. இந்தக் கருப்புக் கல்லை வணக்கத்திற்குள் கொண்டு வந்த முகமது மற்ற 359 சிலைகளையும் உடைத்து இல்லாமலாக்கி விட்டார். கஃபா சிலை நிலை நிறுத்தப்பட்டு விட்டது

(பக்கம் 26. 27)

ஜெபமணியாரின் உளறல்களிலே இது தான் உச்சகட்டமான உளறல் எனலாம்! ஜெபமணியின் அறியாமையை அகற்றி விட்டு அவரது வாதத்துக்கு விளக்கமளிப்போம்

கஃபா என்பது ஒரு கல் அல்ல. செவ்வகமாக அமைந்த ஒரு கட்டிடமே கஃபா என்பது. அந்தக் கட்டிடத்தின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல் ஹஜருல் அஸ்வத் என்று சொல்லப்படும் கறுப்புக் கல்லாகும். இந்தக் கருப்புக் கல்லை முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் இருந்து கொண்டு வந்தார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் கல் கஃபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருந்து.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முப்பத்தி ஐந்தாம் வயதில் அவர்களுக்கு இறைவனின் வேத வெளிப்பாடு வருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்திருந்த கஃபா கட்டிடம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டுவதற்கான வேளையில் மக்காவாசிகள் ஈடுபட்டிருந்தனர்.

அந்தக் கட்டடத்தில் முன்னர் கறுப்புக் கல் பதிக்கப்பட்டிருந்த இடமளவுக்கு கஃபா கட்டிடம் உயர்ந்த போது அந்தக் கருப்புக் கல்லை எந்தக் கோத்திரத்தினர் பழைய இடத்தில் எடுத்து வைப்பது என்று அவர்களுக்கிடையே சச்சரவு ஏற்பட்டது. முடிவில் முதன் முதலாக இந்த இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர் கூறும் முடிவை ஏற்பது எனத் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் காத்திருந்த போது முதன் முதலாக முஹம்மது (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். பிரச்சனையை அவர்களிடம் ஒப்படைத்த போது சதுரமான துணி ஒன்றைக் கொண்டு வரச் செய்து அதில் அந்தக் கல்லை வைத்து அனைவரும் அந்தத் துணியை உயர்த்த முஹம்மது (ஸல்) அவர்கள் அந்தக் கல்லை தம் கையால் எடுத்து பழைய இடத்திலேயே வைத்து கட்டிடம் எழுப்பப்பட்டது.

கஃபா கருப்புக் கல் பற்றிய சுருக்கமான விளக்கமாகும் இது. இந்தச் சாதாரண விபரங்களைக் கூட அறிய வகையில்லாத ஜெபமணி கஃபா கல் சிலை என்றெல்லாம் பிதற்றி இருக்கிறார்.

கஃபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்ட அந்தக் கல்லை நபியவர்கள் தொட்டு முகர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை. அது கடவுள் என்பதற்காகவா? அல்லது கஷ்டங்களைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையிலா? அந்தக் கல்லுக்கு தெய்வீக அம்சம் இருக்கிறது என்ற எண்ணத்திலா? இல்லை. இல்லவே இல்லை.

அந்தக் கல்லைத் தொட்டு முகர்ந்த நேரத்தில் நபியின் மிக நெருங்கிய தோழர் உமர் (ரலி ) அவர்கள் நீ ஒரு கல் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்; உனக்கு எந்த நன்மையும் செய்ய இயலாது. உன்னால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு முகர்ந்த காரணத்தினால் நானும் அவ்வாறு செய்கிறேன்; உன்னிடம் தெய்வீக அம்சம் இருப்பதால் அல்ல என்று குறிப்பிட்டார்கள்

(புகாரி. முஸ்லிம் மற்றும் ஏராளமான ஹதீஸ் நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.)

இதிலிருந்து அக்கல் பூஜிக்கப்படவில்லை; தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. அப்படியானால் என்ன காரணத்துக்காக அப்படிச் செய்ய வேண்டும்?

காஃபாவை மீண்டும் கட்டிய போது அதைக் கட்டிய அனைவரும் பல தெய்வக் கொள்கைக்காரர்கள் தான். ஓரிறைக் கொள்கையில் அன்று எவருமே இருக்கவில்லை. அந்தக் கட்டடத்தின் அஸ்திவாரம் முதல் மேல் மட்டம் வரை பல தெய்வ நம்பிக்கையாளர்களலேயே கட்டப்பட்டது. ஆனால் அந்தக் கருப்புக் கல் மாத்திரம் பல தெய்வ நம்பிக்கையில்லாதிருந்த நபியவர்களால் எடுத்து வைக்கப்பட்டது. இறை ஆலயத்தின் அந்த ஒரு கல்லைத் தன் கையால் எடுத்து வைக்க முடிந்ததே என்பதற்காக அதைத் தொட்டு முகர்ந்திருக்கலாம். தங்கள் நபியவர்களால் எடுத்து வைக்கப்பட்டது என்பதற்காக முஸ்லிம்களும் அவ்வாறு செய்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சந்திர மண்டலத்திலிருந்து ஆம்ஸ்ட்ராங் தலைமையில் சென்ற குழு அங்கிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தார்கள். அது சாதாரண மண் தான் எனினும் அயல் கிரகத்து மண் என்பதற்காக பல நாடுகளுக்கும் அவை அனுப்பப்பட்டன. சென்னைக்கும் வந்தது. மண் என்று தெரிந்திருந்தும். அதைப் போய்ப் பார்த்தவர்களும் தொட்டு உணர்ந்தவர்களும் ஏராளம்.

இப்படிச் செய்ததால் அந்த மண்ணை வணங்கி விட்டதாக யாரேனும் கூறினால் அவனை விடப் பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது.

அயல் கிரகத்திலிருந்து வந்தது என்பதற்காக அந்த மண்ணைப் பலரும் சென்று தொட்டுத் தடவிப் பார்க்க விரும்பினார்கள். சுவனத்திலிருந்து ஆதம் (அலை) கொண்டுவந்த அந்தக் கல் சுவனத்தின் பொருட்களில் இவ்வுலகில் இருப்பது அந்தக் கல் மாத்திரமே என்ற நம்பிக்கையில் அயல் உலகின் பொருள் என்று நம்பப்படுவதால் அது தொட்டுப் பார்க்கப்படுகிறதே தவிர வேறு எந்தத் தெய்வீக அம்சமும் அந்தக் கல்லுக்கு இல்லை. அப்படி தெய்வீக அம்சம் இருப்பதாக எவனாவது நம்பினால் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

சாதாரணக் கல் என்று முஸ்லிம்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டு அதற்கு எந்தச் சக்தியும் இல்லை என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனமும் செய்து விட்டு அது நன்மையளிக்கவோ, தீமையளிக்கவோ எந்தச் சக்தியும் பெறாது என்பதையும் உலகறியச் சொல்லி விட்டு முஸ்லிம்கள் அதைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.

இவ்வளவு தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டு உள்ளத்திலும் அந்தக் கல் பற்றிய எந்த தெய்வீக அம்சம் எதையும் கொள்ளாமல் தொட்டுப் பார்ப்பதை வணக்கம் என்று ஜெபமணி கூறினால் அவரை விட அறிவிலி இருக்க முடியுமா? முடியாது.

காணக் கிடக்காத அபூர்வமான பொருளைக் கண்டு அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தால் அதை வணங்குவதாக யாரேனும் கூறுவார்களா? அந்தக் கறுப்புக் கல்லைத் தொடும் போது அதை விட மேலதிகமான தெய்வீக நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்காது.