விமர்சனம் 9

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

முஹம்மதுவின் 40 வது வயதில் யூத சடங்காச்சாரத்திற்கு ஏற்ப ஹிர்ரா மலைக் குகையில் தங்கி கிபி 610 ல் உபவாசித்து வந்தார். இது சமயம் குர்ரா என்ற ஒ லியில் திகிலடைந்து பயந்து நடுங்கி கதீஜாவிடம் வந்தார். கதீஜாள் தன் உறவினரான வர்காபினுக்குத் தெரிவித்து அவர் முஹமதுவுக்குக் கேட்ட சத்தம் குறித்து தெளிவுபடுத்தினார். முகமதுவை ஆண்டவனுக்கு ஊழியக்காரன் ஆகும்படி ஆலோசனை கொடுத்தார். அவர் வேத சத்தியத்தையும் போதித்தார் என்பதையும் குர்ரானில்16:103. 6:7. 80:15. 69:39. 4ல் காண்கிறோம் என்று கூறுகிறார் ஜெபமணி. (பக்கம்24)

நமது பதில்

அதாவது முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேத வெளிப்பாடுகளை சத்தியத்தைப் போதித்தது வர்காபின் நவ்பல் என்ற கிருத்தவரே என்பது இவரது வாதம். அதற்குச் சான்றாக சில வசனங்களையும் எண்கள் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேதம் வந்ததது பற்றி வர்கா பின் நவ்ப லிடம் கூறிய ஒரு சில நாட்களிலே வர்காபின் நவ்பல் இறந்து விட்டார் என்பதை (புகாரி ஹதீஸ் எண் 3) முன்னர் குறிப்பிட்டு உள்ளோம். அதன் பிறகு இருபத்தி மூன்று ஆண்டுகள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேத வெளிப்பாடு வந்து கொண்டிருந்தது.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேதம் கிடைக்கத் துவங்கிய ஆரம்ப காலத்திலேயே மரணித்துவிட்ட ஒருவர் எப்படி 23 ஆண்டுகளாக முஹம்மதுவுக்கு வேத சத்தியத்தைக் கொடுத்திருப்பார்? இவர் தனது கூற்றுக்கு குர்ஆன் வசனங்களையே சான்றாகக் காட்டுவது தான் பெரிய வேடிக்கை.

அவர் குறிப்பிட்டுள்ள 16:103 வசனம் கூறுவதென்ன?

ஒரு மனிதனே அவருக்கு கற்றுக் கொடுக்கிறான் என்று அவர்கள் கூறுவதை நாம் அறிவோம். எவன் கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அவனுடைய மொழி அஜமி (அரபியல்லாத மொழி). இவ்வேதமோ மிகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது.

இது தான் ஜெபமணி தன் கூற்றுக்குச் சான்றாக்கும் வசனத்தின் மொழி பெயர்ப்பாகும் அதாவது முஹம்மது (ஸல்) காலத்திலேயே இது போன்ற குற்றச் சாட்டுகள் சொல்லப்பட்டதுண்டு. ஒரு மனிதர் வந்து கற்றுக் கொடுப்பதை அப்படியே முஹம்மது கூறுகிறார் என்பதே அக்குற்றச்சாட்டு.

கற்றுத் தரப்படபவர் என்று கூறப்படுபவருக்கோ அரபி மொழி தெரியாது. கற்றுக் கொண்டதாகக் கூறப்படும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கோ அரபு பொழி தவிர வேறு மொழி பேசத் தெரியாது. இந்தக் குர்ஆனோ மிகத் தெளிவான அரபு மொழியில் அமைந்துள்ளது. அவ்வாறிருக்க அந்த மனிதன் கற்றுத் தருகிறான் என்பது எப்படி சரியாகும்? என்று அர்குர்ஆனே பதில் அளிக்கிறது.

ஜெபமணியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தரும் விதமாக அமைந்துள்ள வசனத்தையே தன் கூற்றுக்கு சான்றாக்குபவனை விட அடி முட்டாள் வேறு யார் இருக்க முடியும்.

அடுத்து அவர் குறிப்பிடும் வசன எண் 6:7 இந்த வசனம் கூறுவதென்ன என்பதைப் பார்ப்போம்.

காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம்மீது அருள் செய்து அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்திருந்த போதும் இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை என்றே நிச்சயமாக நிராகரிப்போர் கூறியிருப்பார்கள்

(அல்குர்ஆன்: 6:7)

அல்குர்ஆனை இறை வேதமல்ல என்று கூறும் நிராகரிப்பவர்கள் காரணங்களுடன் அவ்வாறு கூறுவதில்லை. புத்தகமாக வானி லிருந்து வேதத்தை இறக்கி வைத்து அதனை அவர்கள் தொட்டுப் பார்த்தாலும் மறுப்பார்கள் என்று இறைவன் கூறுவதன் மூலம் அவர்கள் சத்தியமென உணர்ந்து கொண்டு மணமுரண்டாகவே மறுக்கின்றனர் என்கிறது இவ்வசனம்.

ஜெபமணி போன்றவர்களை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் இந்த வசனத்தையும் கூட அவர் தனக்கு ஆதாரம் என்று கூறும் பேதமையை என்னவென்பது?

அடுத்து அவர் குறிப்பிட்ட வசனம் கூறுவதைப் பாருங்கள்!

லவ்ஹுல் மஹ்பூல் என்னும் மிக்க கண்ணியமான பதிவுப் புத்தகத்தில் வரையப்பட்டுள்ள இவ்வேதம் மிக்க மேலான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது

(80:15.16)

அல்குர்ஆன் இறைவன் வசமுள்ள பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து அருளப்ட்ட உண்மை வேதம் என்கிறது. இதையும் கூட ஜெபமணியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர் எடுத்துக் காட்டிய மற்றொரு வசனம் 69:39.40 ஆகும். அவ்வசனங்கள் கூறுவதென்ன?

நீங்கள் பார்க்காதவைகளின் மீதும் சத்தியமாக இது நிச்சயமாக மிக்க சங்கை பொருந்திய (ஜிப்ரீல் என்னும்) தூதர் வழியாகக் கூறப்பட்டதாகும்.; என்கின்றன அவ்வசனங்கள்.

வரகாவோ மற்ற யாருமோ முஹம்மதுவுக்கு எதையும் கற்பித்ததில்லை. மாறாக இறைவனாலேயே அருளப்பட்டது தான் என்பதை இவ்வசனங்கள் யாவும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன. எவற்றுக்குப் பாதகமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளனவோ அவற்றுக்குச் சாதகமானதாக இவ்வசனங்களை விளங்கிக் கொண்ட மதியீனத்தைப் பாருங்கள்.

முகமதுவுக்கு முன் வேதத்தை வர்காபின் போதித்தார். அஜமு மொழியில் தாம் கேட்டவற்றை தமது சகோதரர்களுக்கு முகமது அரபு மொழியில் சொன்னார் என்ற ஜெபமணியின் கூற்றுக்கும் (பக்கம் 37) இவ்வசனங்களுக்கும் சம்பந்தமிருக்கிறதா மறுப்பு இருக்கிறதா என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.