04) நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதா
சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள் : “சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம்” என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களைத் தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ்கள் வருமாறு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். “எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டிவிட்டான் என்பது உனக்குத் தெரியுமா” என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர்.
அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். “இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன?” என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். “இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று மற்றவர் விடையளித்தார். “இவருக்குச் சூனியம் செய்தவர் யார்” என்று முதலாமவர் கேட்டார். “லபீத் பின் அல் அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான்” என்று இரண்டாமவர் கூறினார். “எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் “சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று விடையளித்தார். “எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று முதலாமவர் கேட்டார். “தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது” என்று இரண்டாமவர் கூறினார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்கு உள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னிடம் கூறினார்கள். “அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.
பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)(புகாரி: 3268)தமது மனைவியருடன் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. (புகாரி: 5765)
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) ஆறு மாதங்கள் நீடித்ததாக முஸ்னத்(அஹ்மத்: 23211)வது ஹதீஸ் கூறுகிறது. “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன்னிலை மறந்து விடும் அளவுக்கு சூனியத்தால் ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது” என்று இவர்கள் வாதிடுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ, அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்துக்குத் தான் வந்தாக வேண்டும். பாதுகாக்கப்பட்ட இறை வேதம் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது” என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப் படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.
திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும். தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ லி இறை வேதம்லிசந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் “இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்” என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும். எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் “இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ?” என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும். இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். “திருக்குர்ஆனில் பொய்யோ, கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தையாகும்” என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். “இது இறைவேதமாக இருக்காது” என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறைவன் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான். இதை விரிவாக நாம் அறிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிச்சயம் நம்ப மாட்டோம். திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனின் கற்பனையா என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ, அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறுவது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் மேற்கண்ட வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியாது. “வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயங்களில் தான் மனநிலை பதிப்பு ஏற்பட்டது” என்று சிலர் இதற்கு விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறைவேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறைவாக்கா அல்லவா என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர். ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர். செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அன்றைய மக்களால் திருக்குர்ஆன் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். “முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது?” என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அதை அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை. எனவே அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள். ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது “இவர் சூனியம் செய்கிறார்” என்று சில வேளை விமர்சனம் செய்தனர். வேறு சில வேளைகளில் “இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும்” என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. “நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்” என்று அவர்கள் கூறினர்.(அல்குர்ஆன்: 26:153) ➚
“நீர் சூனியம் செய்யப்பட்டவர்” என்று அவர்கள் கூறினர்.(அல்குர்ஆன்: 26:185) ➚தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! “மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்” என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.(அல்குர்ஆன்: 17:101) ➚
மற்ற நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்” என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.(அல்குர்ஆன்: 17:47) ➚
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.(அல்குர்ஆன்: 25:8) ➚“நபிகள் நாயகம் (ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்” என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன. “இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம்; அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்கமாட்டான். இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தான். ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான். “இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா?” என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும். பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை. மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.
(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.(அல்குர்ஆன்: 25:9) ➚உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.(அல்குர்ஆன்: 17:48) ➚
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்” என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான். திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின்படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களின் நிலை என்ன?
அவை ஆதாரப்பூர்வமானவை அல்லவா? புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? இத்தகைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா? என்று சிலருக்கு கேள்வி எழலாம். திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதாலும், இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கும் போது ஒட்டு மொத்தமாக ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். திருக்குர்ஆனை மறுக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட அதற்குக் காரணமாக அமைந்த ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ்களைப் பற்றிப் பேசுவதற்கு முன் “குர்ஆனும் நபிவழியும் மார்க்க ஆதாரங்கள்’ என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பேசுவோம். ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே! திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஒரு அடிப்படையான விசயத்தை நாம் மறந்து விடக் கூடாது. நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல.
குர்ஆனைப் பொருத்தவரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர். குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர். ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிக பட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர்தான் சாட்சி கூறுகிறார். ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது. எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது. ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் முறையாகும். “ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது” என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்துவிடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பதுதான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும். இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.