உயிரினும் மேலான உத்தம நபி

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

முன்னுரை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்தித்தவனாக ஆரம்பம்செய்கிறேன்..

ஓர் இறை நம்பிக்கையாளர் எனப்படுபவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருக்க வேண்டிய உறவு சாதாரண தொண்டன், தன்னுடைய அரசியல் கட்சித் தலைவர் மீது கொண்டிருக்கும் உறவைப் போன்றதல்ல!

அவனது தாய், தந்தையர், மனைவி மக்கள் மற்றும் உலக மக்களில் யார் மீது கொண்டிருக்கும் உறவு, அன்பு, பாசத்தை விடவும் நபி (ஸல்) அவர்கள் மீது கொள்ள வேண்டிய அன்பு அழுத்தமான ஒன்றாக இருக்க வேண்டும். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான்.

”உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமான வையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:24)

நபிகளார் மீது சஹாபாக்கள் வைத்திருந்த அன்பும், நபிகளாரை சஹாபாக்கள் எந்த அளவிற்கு நேசித்தார்கள் அவர்களின் நேசம் எத்தகையதாக அமைத்திருந்தது, என்று ஹதீஸ்களில் வரும் செய்திகளில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்.

உயிரினும் மேலான உத்தம நபி

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.

(அல்குர்ஆன்: 33:6)

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது என்பது கொள்கை (ஈமானிய) அடிப்படையில் அமைந்து விடுகின்றது. அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:

”எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 14)

ஈமானின் சுவையை உணர்ந்தவர்

”எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவர் ஆவார்.

  1. (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்ற எதையும் விட அதிக நேசத்திற்கு உரியவர்களாக ஆவது.
  2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
  3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திருப்பிச் செல்வதை வெறுப்பது”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 1)

நபித்தோழர்கள் போட்டி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றாற்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ”ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை  நான் முந்த வேண்டுமாயின் இந்த நாளில் முந்தி விட வேண்டியது தான்” என்று நான் எனக்குள் சொல்­லிக் கொண்டேன்.

எனவே என் பொருளாதாரத்தில் பாதியைக் கொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உமது குடும்பத்திற்காக என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ”இது போன்றதை” என்று பதிலளித்தேன்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருளாதாரம் அனைத்தையுமே கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அபூபக்கரே! உம்முடைய குடும்பத்திற்காக என்ன வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ”அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவர்களுக்கு வைத்திருக்கின்றேன்” என்று பதிலளித்தார். ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! எதிலும் அவரை முந்த முடியாது” என்று நான் சொன்னேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்கள்:(திர்மிதீ: 3608),(அபூதாவூத்: 1429)

நபிகளார் மீதிருந்த அன்பு

இது நபித்தோழர்கள் தங்கள் பொருளை அர்ப்பணம் செய்வதற்காக இட்ட போட்டியாகும். போர்க் களத்திற்குப் போவதற்காக, அங்கு தங்கள் உயிர்களை அர்ப்பணம் செய்வதற்காகப் போட்டி போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்குத் தேவை நபி (ஸல்) அவர்களின் அன்பு தான். அதற்காக அவர்கள் எதையும் இழக்கத் தயாரானார்கள்

(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நாளை (இஸ்லாமியப் படையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகின்றேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான்” என்று சொன்னார்கள்.

ஆகவே மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கினார்கள். காலையானதும் மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர்.

நபி (ஸல்) அவர்கள், ”அலீ பின் அபீதா­ப் எங்கே?” என்று கேட்டார்கள். மக்கள், ”அவருக்குக் கண் வழி­, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ”அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன், அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வழி­யே இருந்ததில்லை என்பதைப் போன்று அலீ (ரலி) அவர்கள் குணமடைந்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி)யிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அவர்களுடைய களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழையுங்கள்.

மேலும் இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமையாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரு மனிதருக்கு நேர்வழி காட்டுவது (அரபுகளின் பெரும் செல்வமான) சிவப்பு நிற ஒட்டகங்களை தர்மம் செய்வதை விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

(புகாரி: 3701)

மறுமை நாள் எப்போது வரும் ?

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ”மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கின்றாய்?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ”அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நான் நேசிக்கின்றேன் என்பதைத் தவிர எதுவுமில்லை” என்று பதிலளித்தார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீ நேசித்தவர்களுடன் தான் நீ (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ”நீ நேசித்தவர்களுடன் இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 3688)

மற்றொரு அறிவிப்பில்,

”அல்லாஹ்வின் தூதரே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ, தொழுகையோ, தான தர்மங்களோ செய்து வைத்திருக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றேன்” என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ”நீ யாரை நேசிக்கின்றாயோ அவருடன் இருப்பாய்” என்று கூறினார்கள்.

(புகாரி: 7153)

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் சங்கமித்து இருப்பது மறுமையில் கிடைக்கும் பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியமாகும். இதை எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மை யாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

(அல்குர்ஆன்: 4:69)

உஹத் போரில் ஒரு காட்சி

உஹத் போர்க்களம் இஸ்லாமிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போர்க்களம். அந்தப் போர்க்களத்தின் போது நபி (ஸல்) அவர்களை எல்லா திசையி­ருந்தும் ஆபத்துகள் சுற்றி வளைத்து விடுகின்றன. எதிரிகள் யார்? முஸ்­ம்கள் யார்? என்று அடையாளம் தெரியாத அளவுக்குப் போர்க்களம் சின்னாபின்னமாகியிருந்தது.

போர்த் தளபதியாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறி வைத்து, எதிரிகள் கொல்ல நினைக்கின்ற அந்த வேளையில், அந்த இக்கட்டான கட்டத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”எனக்காகக் களமிறங்கி எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார்” என்ற பிரகடனத்தை வெளியிடுகின்றார்கள்.

அப்போது அந்தத் தலைவர் மீது பற்றும் பாசமும் கொண்ட அன்சாரித் தோழர்கள் பாய்ந்து விழுந்து காப்பாற்றிய அந்த வீர தீர, தியாக வரலாற்றை, உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் ஏழு பேர், குறைஷிகளில் இரண்டு பேர் மட்டும் இருந்தனர். (இதைக் கண்ணுற்ற) எதிரிகள், நபி (ஸல்) அவர்களைத் தீர்த்துக் கட்ட நெருங்கியதும், ”எனக்காக இவர்களுடன் எதிர்த்துப் போரிடுபவர் யார்? அவ்வாறு போரிடுபவர் சுவனத்தில் எனது நண்பர்கள்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகளில் ஒருவர் முன்வந்து போராடினார். கடைசியாக அவர் கொல்லப்பட்டு விட்டார்.

மீண்டும் எதிரிகள், நபி (ஸல்) அவர்களைத் தீர்த்துக் கட்ட நெருங்கியதும், ”எனக்காக இவர்களுடன் எதிர்த்துப் போரிடுபவர் யார்? அவ்வாறு போரிடுபவர் சுவனத்தில் எனது நண்பர்கள்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகளில் ஒருவர் முன்வந்து போராடினார்.

கடைசியாக அவர் கொல்லப்பட்டு விட்டார். இப்படியே தொடர்ந்து (ஏழு தடவை) நடந்தது. கடைசியில் ஏழு அன்சாரித் தோழர்களும் கொல்லப்பட்டு விட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குறைஷிகளான) இரு தோழர்களை நோக்கி, ”நம்முடைய (குறைஷி) தோழர்கள் அன்சாரிகளைப் போல் நடந்து கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க் (ரலி)

(அஹ்மத்: 13544)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுவனத்தில் தமக்கு நண்பர் என்ற துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டதும், அன்சாரித் தோழர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு, தூய நபி (ஸல்) அவர்களை அள்ளி அரவணைத்துக் காக்க முன் வருகின்றனர். தங்களது இன்னுயிரை நபி (ஸல்) அவர்களுக்காகக் பணயம் வைக்கின்றனர்.

அன்சாரிகளின் இந்தத் தியாகத்தைக் கண்டு நெகிழ்ந்து போன நபி (ஸல்) அவர்கள், இந்த நெருக்கடியான கட்டத்தில் என்னுடைய உயிரைக் காக்க அன்சாரிகள் செய்த தியாகத்தைப் போன்று முஹாஜிர்களாகிய நீங்கள் செய்யவில்லை; அந்தத் தியாகத்தில் அன்சாரிகள் உங்களை முந்திச் சென்று விட்டார்கள் என்று அன்சாரிகளை வெகுவாகப் பாராட்டுகின்றார்கள்.

இங்கே அன்சாரிகள் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த அன்பையும், மறுமையில் அன்னாருடைய அன்பைப் பெறுவதற்காகத் தங்கள் இன்னுயிரைச் சமர்ப்பிக்கும் தியாகக் காட்சியையும் உஹத் களத்தி­ருந்து தெரிந்து கொள்கிறோம்.

போர்க்களத்தில் மட்டுமல்லாது சாதாரண காலத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பை மட்டுமே நபித்தோழர்கள் எதிர் பார்த்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் தங்கிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு உளூச் செய்ய தண்ணீர் மற்றும் தேவையானவற்றைக் கொண்டு வந்தேன். அப்போது அவர்கள், ”நீ என்னிடம் (தேவையானதைக்) கேள்” என்று கூறினார்கள்.

”நான் உங்களுடன் சுவனத்தில் இருப்பதையே கேட்கின்றேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ”இதைத் தவிர வேறு ஒன்றுமில்லையா?” என்று கேட்டார்கள். ”அது மட்டும் தான்” என்று கூறினேன். ”அப்படியானால் நீ அதிகமாகத் தொழுவதன் மூலம் உனக்கு அது கிடைப்பதற்கு என்னுடன் ஒத்துழைப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமி (ரலி)

நூல்கள்: முஸ்­லிம்-754, நஸயீ 1126,(அபூதாவூத்: 1125)

அனாதையை ஆதரித்தவரும் அண்ணல் நபியும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்கும் இடையே சற்று இடைவெளி விட்டு சைகை காட்டினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்கள்:(புகாரி: 5304), முஸ்லி­ம் 5296

அன்றைய அரபிகள் பெண் குழந்தைகளைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சமூகக் கொடுமையை ஒழிப்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தத் துருப்புச் சீட்டைத் தான் பயன்படுத்துகின்றார்கள்.

”இரு சிறுமிகளை பருவம் அடையும் வரை யார் பராமரிக்கிறார்களோ அவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு வருவோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கை விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லி­ம்-4765

இது எந்த அளவுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்கள், ”மக்காவில் (வரும் ஆண்டில்) தாம் மூன்று நாட்கள் தங்க அனுமதிக்க வேண்டும்” என்னும் நிபந்தனையின் பேரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

ஒப்பந்தத்தை அவர்கள் எழுதிய போது, ”இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள்” என்று எழுதினார்கள்.

உடனே மக்காவாசிகள், ”நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் அறிந்து இருப்போமாயின் உங்களைத் தடுத்திருக்க மாட்டோம். ஆயினும் நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ”நான் அல்லாஹ்வின் தூதராவேன். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதும் ஆவேன்” என்று பதிலளித்து விட்டு, அலீ (ரலி) அவர்களை நோக்கி, ”அல்லாஹ்வின் தூதர் என்பதை அழித்து விடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ”முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் பெயரை ஒருபோதும் அழிக்க மாட்டேன்” என்று கூறி விட்டார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பத்திரத்தை எடுத்து, ”இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மத் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் ஆகும். (முஸ்­ம்களின்) ஆயுதம் எதுவும் உறையில் இருந்தபடியே தவிர மக்காவில் நுழையக் கூடாது.

மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின் தொடர்ந்து வர விரும்பினாலும் கூட அவரை முஹம்மத் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும் தம் தோழர்களில் எவரேனும் மக்காவில் தங்கி விட விரும்பினால் அவரை முஹம்மத் தடுக்கக் கூடாது” என்று எழுதிடச் செய்தார்கள்.

(அடுத்த ஆண்டு) நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்த போது, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தவணையான) மூன்று நாட்கள் கழிந்த உடன், மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, ”உங்கள் தோழரை எங்களை விட்டு வெளியேறும் படி கூறுங்கள். ஏனெனில் தவணைக் காலம் முடிந்து விட்டது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் புறப்பட்டார்கள்.

அப்போது (உஹதுப் போரில் கொல்லப்பட்ட) ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள், ”என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!” என்று கூறிக் கொண்டே அலீ (ரலி) அவர்களைப் பின் தொடர்ந்து வந்தாள்.

அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை எடுத்து அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், ”இவளை எடுத்துக் கொள். உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைச் சுமந்து கொள்” என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (அவளை நான் தான் வளர்ப்பேன் என்று) போட்டி போட்டுக் கொண்டனர்.

அலீ (ரலி) அவர்கள், ”இவளுக்கு மிகவும் உரிமையுடையவன் நான் தான். ஏனெனில் இவள் என் சிறிய தந்தையின் மகள்” என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி), ”இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும் இவளுடைய சிற்றன்னை என் (மணப் பந்தத்தின் கீழ்) இருக்கின்றாள்” என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், ”இவள் என் சகோதரரின் மகள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்குச் சாதகமாக (அவளை ஜஅஃபர் வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், ”சிற்றன்னை, தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்” என்று கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்களை நோக்கி, ”நீங்கள் என்னைச் சேர்ந்தவர். நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களை நோக்கி, ”நீங்கள் தோற்றத்திலும், குணத்திலும் என்னை ஒத்திருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள். ஸைத் (ரலி)யை நோக்கி, ”நீங்கள் என் சகோதரர். என்(னால் விடுதலை செய்யப்பட்ட) அடிமை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பராஃ பின் ஆஸிஃப் (ரலி)

(புகாரி: 2699)

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூட அலீ (ரலி) அவர்கள் அழிக்க மறுத்து விடுகின்றார்கள். மேலும் பெண் குழந்தைகளையே வெறுத்து வந்த ஒரு சமுதாயம், ஒரு அனாதைச் சிறுமியை வளர்ப்பதற்குப் போட்டி போட்டு சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். ஏன்? உலகத்தில் உள்ள குடும்பப் பாசமா? இல்லை. மறுமையில் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருக்கும் அந்த வாய்ப்புக்காகத் தான். நபியவர்கள் மீது கொண்ட அன்பு தான் அவர்களை இந்த அளவுக்கு மாற்றியது

அல்லாஹ்வின் தூதர் மீது அன்சாரிகள் கொண்ட பிரியம்

இஸ்லாமிய வரைபடத்தில் ஹுனைன் போர் ஒரு வித்தியாசமான போராகும். இந்தப் போரில் ஹுவாஸான், கத்வான் மற்றும் பல பிரிவினர் முஸ்­லிம்களைக் கருவறுக்க வேண்டும்; கூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற வெறியோடும் கங்கணத்தோடும் களமிறங்கினர்.

இந்தப் போரில் தாங்கள் வந்த பாதையை நோக்கித் திரும்பி விடக் கூடாது; தோல்வி முகம் கண்டு விடக் கூடாது என்பதற்காக எதிரிகள் தங்கள் கால்நடைகளையும், தங்கள் சந்ததியினரையும் களத்திற்குக் கொண்டு வந்து விட்டனர்.

இதைப் பற்றி அனஸ் (ரலி) குறிப்பிடுகையில்,

”நாங்கள் மக்காவை வெற்றி கொண்டோம். பிறகு ஹுனைன் களத்திற்கு வந்தோம். நான் அது வரை கண்ட (போர்) அணிகளில் மிகச் சிறந்த அணிகளாய் இணை வைப்பாளர்கள் வந்தனர். குதிரைப் படை அணி வகுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, போர் வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதன் பின்னால் பெண்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். பிறகு ஆட்டு மந்தைகள் அணி, அதன் பின்னால் ஒட்டக அணி அமைக்கப் பட்டிருந்தது” என்று கூறுகின்றார்கள்.

நூல்: முஸ்லி­ம்-1756

வைராக்கியத்துடன் வந்த இந்தப் படையினரைத் தான் முஸ்­ம்கள் ஹுனைனில் எதிர் கொள்கின்றார்கள். அப்போரின் ஆரம்பத்தில் முஸ்­ம்கள் தோல்வி முகத்தைத் தான் கண்டனர். காரணம் நபி (ஸல்) அவர்களுடன் வந்தவர்களில் பத்தாயிரம் பேர் திரும்பி ஓடி விட்டனர். இந்தப் பத்தாயிரம் பேரும் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்திற்கு வந்தவர்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அலாதியான வீரம் இந்தப் போரை வெற்றி முகத்திற்குக் கொண்டு சென்றது.

விளைவு, எதிரிகள் அணியணியாய் நிறுத்தி வைத்திருந்த ஆடு, ஒட்டகம் போன்ற அனைத்து கால்நடைச் செல்வங்களும் இஸ்லாமியக் களஞ்சியங்களாக மாறி விட்டன. இப்போது நபி (ஸல்) அவர்கள், நூற்றுக் கணக்கில் ஒட்டகங்களை அள்ளிக் கொடுக்கின்றார்கள். ஹுனைன் போரின் போது, நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (கொடுத்து அதிகமாக) வழங்கினார்கள்.

(புதிய முஸ்லி­ம்களில் ஒருவரான) அக்ரஃ அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா அவர்களுக்கும் அதே போன்று கொடுத்தார்கள். இன்னும் சிலருக்கும் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், ”இந்தப் பங்கீட்டில் அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை” என்று சொன்னார்.

உடனே நான், ”இதை நிச்சயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ”(இறைத் தூதர்) மூஸாவுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். இதை விட அதிகமாக அவர்கள் மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் சகித்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(புகாரி: 4336)

”அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அள்ளி அள்ளி வழங்கினார்கள். அவர்கள் ஏற்கனவே எனக்கு மக்களில் மிக வெறுப்பிற்கு உரியவர்களாக இருந்தார்கள். எனக்குத் தொடர்ந்து வழங்கியதால் அவர்கள் இப்போது மக்களில் மிகவும் விருப்பத்திற்கு உரியவர்களாக ஆகி விட்டார்கள்” என்று ஸஃப்வான் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அல்முஸய்யிப் (ரலி)

நூல்: முஸ்லி­ம்-4277

அன்சாரிகளின் ஆத்திரம்

நபி (ஸல்) அவர்கள், அக்ரஃ பின் ஹாபிஸ், உயைனா, அபூசுஃப்யான் போன்ற புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்குக் கால்நடைகளை கொட்டிக் கொடுத்ததும் அன்சாரிகள் ஆத்திரம் அடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதே அன்சாரிகள் மன வருத்தம் அடைகின்றார்கள்.

அன்சாரிகளின் பகிரங்க விமர்சனங்கள்

”அல்லாஹ்வின் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.

(புகாரி: 4331)

”அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையில் இது வியப்பாகத் தான் இருக்கின்றது. எங்கள் வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, எங்கள் போர்ச் செல்வங்கள் அவர்களுக்கல்லவா கொடுக்கப்படுகின்றன” என்று பேசிக் கொண்டார்கள்.

(புகாரி: 3778)

”ஏதேனும் (போர் போன்ற) கடுமையான பிரச்சனை என்றால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். ஆனால் (பிரச்சனை தீர்ந்ததும்) மற்றவர்களுக்குப் போர்ச் செல்வங்கள் கொடுக்கப்படுகின்றன” என்று பேசிக் கொண்டார்கள்.

(புகாரி: 4337)

இவ்வாறு அன்சாரிகளிடம் விமர்சனம் அதிகமானது. ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய மக்களை (முஹாஜிர்களை) சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று ஒருவர் சொன்னதும் அங்கு (அன்சாரிகளின் தலைவர்) ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் நுழைகின்றார்கள். ”

அல்லாஹ்வின் தூதரே! போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களைத் தாங்கள் பங்கு வைத்த விவகாரமாக அன்சாரிகள் உங்கள் மீது மன வருத்தப் படுகின்றார்கள். உங்களுடைய (குறைஷி) மக்களிடம் பங்கு வைத்து விட்டீர்கள். இந்த அன்சாரிகளுக்கு ஒரு துளியளவு கூட வழங்காமல் அரபுக் கூட்டங்களிடம் பெரும் பொருட்களை அள்ளி வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார்.

”ஸஃதே! இது தொடர்பாக நீங்கள் என்ன கருத்தில் இருக்கின்றீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”நானும் என்னுடைய மக்களில் உள்ள ஒருவன் தானே!” என்று ஸஃத் பதிலளித்தார். ”உம்முடைய மக்களை இந்தத் தோல் கூடாரத்தில் ஒன்று கூட்டுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

ஸஃத் (ரலி) உடனே புறப்பட்டு, அன்சாரிகளை அந்தத் தோல் கூடாரத்தில் கூட்டினார்கள். (அன்சாரிகளைத் தவிர வேறு எவரையும் அனுமதிக்கவில்லை) முஹாஜிர்களில் சிலர் வந்தனர். அவர்களை விட்டு விட்டனர்.

ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். மற்றும் சிலர் வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டனர். அன்சாரிகள் கூடியதும் ஸஃத் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அன்சாரிகளின் இந்தக் கூட்டம் கூடி விட்டது” என்று தெரிவித்ததும் அன்சாரிகளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்.

(முஸ்னத்(அஹ்மத்: 11305)

”உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? உண்மை தானா?” என்று நபி (ஸல்) அவர்கள் எழுந்து கேட்டார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இள வயதுடைய மக்களில் சிலர் தான், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, நம்மை விட்டு விட்டு அவர்களுக்குக் கொடுக்கின்றார்களே!’ என்று பேசிக் கொண்டார்கள்” என அன்சாரிகளில் இருந்த விவரமானவர்கள் கூறினர்.

(புகாரி: 4331)

”அன்சாரிகளே! நீங்கள் மன வருத்தப்பட்டுப் பேசிய விமர்சனம் என் காதுக்கு வந்தது. நீங்கள் வழிகேடர்களாக இருக்கும் போது நான் வரவில்லையா? அவ்வாறு வந்ததன் காரணமாக அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களைச் செல்வந்தர்களாக ஆக்கினான். நீங்கள் விரோதிகளாக இருந்தீர்கள். அல்லாஹ் (என் மூலமாக) உங்களுக்கு மத்தியில் பாசத்தை ஏற்படுத்தினான்” என்று சொன்னார்கள்.

உடனே அன்சாரிகள், ”அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிக உபகாரம் புரிந்தவர்கள், அருள் புரிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”அன்சாரிகளே! நீங்கள் எனக்குப் பதிலளிக்காமல் இருப்பது ஏன்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அன்சாரிகள், ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உபகாரமும் அருளும் சொந்தம். நாங்கள் உங்களுக்கு என்ன பதிலளிக்க வேண்டும்?” என்று கேட்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீங்கள் விரும்பினால், ‘பொய்ப் படுத்தப் பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள். நாங்கள் உங்களை உண்மையாளர் என்று நம்பினோம். துரோகம் இழைக்கப்பட்டவராக வந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்தோம். துரத்தப் பட்டவராக வந்தீர்கள்.

நாங்கள் உங்களுக்கு அடைக்கலம் தந்தோம். ஏழையாக வந்தீர்கள். உங்களை வசதியுள்ளவராக ஆக்கினோம்’ என்று சொல்லலாமே! அவ்வாறு நீங்கள் சொன்னால் அது உண்மை தான். அதில் நீங்கள் உண்மைப்படுத்தப்பட்டவர்கள் தான். அன்சாரிகளே! உலகத்தின் மிக அற்பப் பொருள் விஷயத்திலா என் மீது நீங்கள் வருத்தப்படுகின்றீர்கள்? ஒரு கூட்டம் முஸ்­மாக வேண்டும் என்பதற்காக அந்தப் பொருளாதாரத்தின் மூலம் பிரியத்தை ஏற்படுத்த விரும்பினேன். உங்களை உங்களுடைய இஸ்லாத்தின் மீது சாட்டி விட்டேன் .

(அஹ்மத்: 11305)

ஹிஜ்ரத் என்ற நிகழ்ச்சி மட்டும் நடந்திருக்காவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்). மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள்.

(புகாரி: 4330)

இறை மறுப்பை விட்டு இப்போது இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் மூலம்) அவர்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்திக் கொள்கிறேன்.

மக்கள் செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத் தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்…

விரைவில் (உங்களை விடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப் படுவதைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (மறுமையில்) சந்திக்கும் வரை பொறுமையாய் இருங்கள். ஏனெனில் அன்று நான் (கவ்ஸர் எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்” என்று சொன்னார்கள்.

(புகாரி: 4331)

”யா அல்லாஹ்! அன்சாரிகளுக்கு நீ அருள் புரிவாயாக! அன்சாரிகளின் பிள்ளைகளுக்கு நீ அருள் புரிவாயாக! அன்சாரிகளின் பேரப் பிள்ளைகளுக்கு நீ அருள் புரிவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது தங்கள் தாடி நனையும் அளவுக்கு அழுதார்கள்.

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே எங்களது பங்காகவும், பாகமாகவும் பொருந்திக் கொண்டோம்” என்று அன்சாரிகள் சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். நாங்களும் கலைந்து விட்டோம்.

(அஹ்மத்: 11305)

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாம் உண்மையிலேயே நேசிப்பவர்களாக இருந்தால் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். அதில் தான் அவர்களது நேசம் அடங்கியிருக்கின்றது. இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகின்றான். ”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப் பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! ”அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:31),32)

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதில் இருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்: 59:7)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 33:36)

முடியுரை

இவ்வாறு சஹாபாக்கள் அளவுகடந்த அன்பும், நேசமும், நபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்தார்கள். ஏன் நபிகளாருக்காக உயிரையும் கூட கொடுக்கும் அளவுக்கு சஹாபாக்களின் பல்வேறு செயல்கள் அமைந்து இருந்ததை ஹதீஸ்களில் பார்க்க முடிந்தது. இந்த உலகத்தில் மற்ற அனைவரையும் விட நபிகளாரை உயிருக்கு மேலாக சஹாபாக்கள் நேசித்தார்கள். நாமும் அதே போன்று நபிகளாரை நேசிப்போம். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!