மவ்லித் ஓத ஆதாரம் உள்ளதா?

பயான் குறிப்புகள்: கொள்கை
இப்னு ஹஜர் அல்ஹைதமியின் புனைசுருட்டுகள்!

ரபியுல் அவ்வல்மாதம் வந்துவிட்டாலே நபிப் புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரே துலாத்தட்டில் நிகர்செய்யும் இழிவணக்கங்கள் முஸ்லிம்கள் சிலரால் வழிபடப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இந்த மவ்லித் பாடல்களுக்கு மார்க்க சாயம் பூச முடியவில்லை என்றதும் இப்னு ஹஜர் அல்ஹைதமி என்பவர் எழுதிய “அந்நிஃமதுல் குப்ரா அலல் ஆலம்” எனும் நூலிலிருந்து நபித்தோழர்கள் பெயரிலும், ஏனைய இமாம்களின் பெயரிலும் அவதூறாக இட்டுக்கட்டப்பட்டக் கட்டுக்கதைகளை சில மேதைகள் (?) கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதன் உண்மை நிலையை நாம் அறிந்துக் கொள்ள கடைமைப்பட்டுள்ளோம்.
மவ்லித் ஆதரித்து எழுதிய இப்னு ஹஜர் அல்ஹைத்தமி, இவரின் இயற்பெயர்அஹ்மத் பின் முஹம்மது பின் அலி என்பதாகும். ஹிஜ்ர909ம் ஆண்டுபிறந்து,974ம் ஆண்டு மறைந்தார். இவர் ஷாஃபி மத்ஹபை பின்பற்றக்கூடியவர்.
(பார்க்க: அஷ்ரஃபுல் வாஸாஇல்இலா ஃபஹ்மி ஷமாஇல்)
ஹிஜ்ரி773ம் ஆண்டு பிறந்த மாமேதை இமாம் ஹாஃபிள் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி அவர்களுக்கும் மவ்லிதை ஆதரித்து எழுதிய இப்னு ஹஜர் அல்ஹைத்தமி அவர்களுக்கும் கல்வியிலும் கொள்கையிலும் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்ததக்கது. இருவரும் வெவ்வாரானாவர்கள் என்பதை கவனத்தில் கொள்க.
இப்னு ஹஜர் அல்ஹைத்தமிதனது அந்நிஃமதுல் குப்ரா அலல் ஆலம் எனும் நூலில் நபியின் மீது மவ்லித் பாடுவதை ஆதரித்து, நபித்தோழர்களையும் ஏனைய இமாம்களையும் துணைக்கு அழைத்து எழுதியுள்ள புரட்டான புனைசுருட்டுகளை இங்கு தருகிறோம்.

சுவனத்தில் தோழமை

قالَ أَبو بكر الصديقُ رَضِيَ اللهُ عَنْهُ مَنْ أنفَقَ دِرْهَمًا عَلَى قِرَاءَةِ مَوْلِدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ رَفِيقِي فِي الْجَنَّةِ

அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள் : நபியின் மீது மவ்லித் பாட யார் ஒரு வெள்ளிக் காசை செலவளித்தால் அவர் சுவனத்தில் என்னோடு தோழமைக்கொண்டிருப்பார்.

உன்னத இஸ்லாத்தை உயிர்ப்பித்தவர்

قال عمر رضي الله ان من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد احيا الاسلام

உமர்(ரலி) அவர்கள்கூறினார்கள்: யார் நபியின் பிறப்பை கண்ணியப்படுத்துகிறாரோ அவர் இஸ்லாத்தை உயிர்ப்பித்துவிட்டார்.

பத்ரு மற்றும் ஹுனைன் களத்தில் கழந்துக்கொண்டதற்கு சமானம்

قَالَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ مَنْ أَنْفَقَدِرْهَمَا عَلَى قِرَاءَةِ مَوْلد النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَأَنَّمَا شَهِدَ غَزْوَةَ بَدْرٍ وَحُنَيْنِ

உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள் : நபியின் மீது மவ்லித் பாட யார் ஒரு வெள்ளிக் காசை செலவளிக்கிறாரோ அவர் பத்ரு மற்றும் ஹுனைன் யுத்தக் களத்தில் கலந்துக்கொண்டவரை போன்றவராவார்.

கேள்விக் கணக்கின்றி சுவனம்

وَقَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ مَنْ عَظمَ مَوْلِدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ سَبَبًا لِقِرَاءَتِهِ لَا يَخْرُجُ مِنَ الدُّنْيَا إِلَّا بِالإِيمَانِ وَيَدْخُلُ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ

அலி(ரலி)அவர்கள் கூறினார்கள் : யார் நபியின் பிறப்பை கண்ணியப்படுத்தி, மவ்லித் ஓத காரணமாகவும் இருக்கிறாரோ அவர் இறைநம்பிக்கையுடனே உலகை விட்டுப் பிரிவார். இன்னும் அவர் கேள்விக்கணக்கின்றி சுவனம் புகுவார்.

மலையளவு தங்கத்தையும் மவ்லித் பாடசெலவளித்தல்

وَقَالَ حَسَنُ الْبَصْرِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَدِدْتُ لَوْ كَانَ لِي مِثْلُ جَبَلٍ أُحُدٍ ذَهَبًا فَأَنْفَقْتُهُ عَلَى قِرَاءَةِ مَوْلِدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

தாபி ஹஸனுல் பஸரி அவர்கள் கூறுகிறார்கள் : என்னிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்தாலும் அதை நபியவர்கள் மீது மவ்லித் பாடவே நான் செலவளிப்பேன்.

அந்தரங்கபாவத்தைஅப்புறப்படுத்தும் மவ்லித்

قالَ جُنَيْدُ الْبَعْدَادِي قَدَّسَ اللَّهُ سرَّهُ مَنْ حَضَرَ مَوْلدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَظمَ قَدْرَهُ فَقَدْ فَازَ بِالإِيمَانَ

ஜுனைத் அல்பக்தாதி அவர்கள் கூறினார்கள் : யார் மவ்லித் ஓதப்படும் சபையில் ஆஜராகி அதன் தகுதிக்கேற்ப அதை மகத்துவப்படுத்துகுராரோ அவரின் அந்தரங்கக் குற்றத்தை அல்லாஹ் பரிசுத்தப்படுத்துவிடுகிறான். இன்னும் அவர் ஈமானுடன் வெற்றிப்பெற்றுவிடுவார்.

நபிமார்களோடு இருக்கும் பாக்கியம்

قالَ مَعْرُوفَ الْكَرْخيُّ: مَنْ هَيأ طَعَامًا لِأَجْلِ قِرَاءَةِ مَوْلِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَمَعَ إِخْوَانًا وَأَوْقَدَ سرَاجًا وَلَبِسَ جدِيدًا وَتَبَخَّرَ وَتَعَطَّرَ تَعْظِيمًا لِمَوْلد النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَشَرَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ مَعَ الْفِرْقَةِ الْأُولَى مِنَ النَّبِيِّينَ وَكَانَ في أعلى عليينَ

மஃரூஃப் அல்கர்கி அவர்கள் கூறுகினார்கள்: யார் மவ்லித் பாடலுக்காக உணவை தயார் செய்து, அதை கண்ணியப்படுத்தும் விதமாக சகோதரர்களை ஒன்றிணைத்து, ஒளி விளக்குகளை பொருத்தி, புத்தாடைகள் அணிந்து, நறுமணப் புகையிட்டு, நறுமணத்தையும் போட்டுக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் கியாமத் நாளில் முதன்மைக்குழுவான நபிமார்களோடு எழுப்புவான். இல்லிய்யூன் எனும் நல்லவர்களின் பதிவேட்டில் அல்லாஹ் அவரை ஆக்குகிறான்.

பெருக்கெடுத்து ஓடும் பரக்கத்

قال فخرُ الدِّينِ الرَّازِيُّ : مَا مِنْ شخص قَرَأَ مَوْلِدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مِلْحِ أَوْ بُرٍ أَوْ شَيْءٍ آخَرَ مِنَ الْمَأْكُولاتِ إِلَّا ظَهَرَتْ فِيهِ الْبَرَكَةُ وَفِي كُلِّ شَيْءٍ * وَصَلَ إِلَيْهِ مِنْ ذَلِكَ الْمَأْكُولِ فَإِنَّهُ يَضْطَرِبُ وَلَا يَسْتَقِرُّ حَتَّى يَغْفِرَ اللهُ لا كله * وَإِنْ قُرِئَ مَوْلِدُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَاءٍ فَمَنْ شَرِبَ مِنْ ذَلِكَ الْمَاءِ دَخَلَ قَلْبَهُ أَلْفُ نُورٍ وَرَحْمَةٍ * وَخَرَجَ مِنْهُ أَلْفُ غِلَّ وَعِلَّةٍ وَلَا يَمُوتُ ذَلِكَ الْقَلْبُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ * وَمَنْ قَرَأَ مَوْلِدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى دَرَاهِمَ مَسْكُوكَة فضَّة كَانَتْ أَوْ ذَهَبًا وَخَلَطَ تِلْكَ الدَّرَاهِمَ بِغَيْرِهَا وَقَعَتْ فِيهَا الْبَرَكَةُ وَلَا يَفْتَقِرُ صَاحِبُهَا وَلَا تَفْرُغُ يَدُهُ بِبَرَكَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஃபக்ருத் தீன் அர்ராஸி அவர்கள் கூறினார்கள் : மவ்லித் பாடக்கூடிய எந்த மனிதருக்கும் உப்பு, கோதுமை போன்ற அவர் சாப்பிடக்கூடிய எல்லா பொருட்களிலும் ஏனைய பொருட்களிலும் அபிவிருத்தி உண்டாகும். அவர் நிலை குலைந்து விடும் போதெல்லாம் அந்த உணவுகளை சாப்பிட்டவரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தே தவிர அவர் நிம்மதியுறமாட்டார். மவ்லித் ஓதப்பட்ட தண்ணீரை யார் பருகுகிறாரோ ஆயிரம் ஒளிகளும் ரஹ்மத்துகளும் அவரது உள்ளத்தில் சென்றுவிடும். ஆயிரம் குறைகளும் குரோதங்களும் அதிலிருந்து வெளியேறிவிடும். உள்ளங்கள் சாகும் நாளில் அவ்வுள்ளம் சாகாது. வெள்ளி அல்லது தங்க நாணயத்தின் மீது யார் மவ்லித் பாடுகிறாரோ அந்த காசுகளில் அபிவிருத்தி உண்டாவதோடு நபியின் அபிவிருத்தியால் அம்மனிதரின் கை (பரக்கத்தால்) முற்றுப்பெறாமல் இருக்கும்.

நல்லோர்களுடன் இருக்கும் நற்பாக்கியம்

قَالَ الإِمَامُ الشَّافِعِيُّ رَحمَهُ اللهُ * مَنْ جَمَعَ لِمَوْلِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِخْوَانًا وَهَيَّاً طَعَامًا وَأَخْلَى مَكَانًا وَعَمِلَ إِحْسَانًا وَصَارَ سَبَبًا لِقِرَاءَتِهِ بَعَثَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مَعَ الصَّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَيَكُونُ فِي جَنَّاتِ النَّعِيم

இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : யார் மவ்லித் நபிப் புகழ்ப் பாடுவதற்கு சகோதரர்களை ஒன்று சேர்த்து, உணவுகளை தயார்ப்படுத்தி, இடத்தை அழகுற அலங்கரித்து, நல்லமல் புரிந்து, மவ்லித் பாட காரணமாக இருக்கிறாரோ அவரை அல்லாஹ் கியாமத் நாளில் உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள் ஆகியோரோடு எழுப்புகிறான். இன்பம் நிறைந்த சுவனங்களில் அவர்களில் ஆகியிருப்பார்.
சுட்டெரிக்கும் நரகில் சாம்பலாக்கும் சுப்ஹான மவ்லித் பாடலை நிறுவிட மேற்படி நாம் குறிப்பிட்டுள்ள இந்த கட்டுக்கதைகளை சில போலி மதகுருக்கள் மக்களின் உள்ளத்தில் விதைக்கின்றனர். இதன் உண்மைத் தன்மையை காண்போம்.

முதல்வாதம்
மார்க்கம் என்ற பேரில் நாம் ஒன்றை செய்வதாக இருந்தால் அல்லாஹ் அவனது தூதரின் ஒப்புதல் இல்லாமல் அதை செய்யமுடியாது. அவர்கள் இருவர் அல்லாது வேறு யார் மார்க்கம் என்று ஒன்றை நூதனமாக நுழைத்தாலும் அது குப்பைக்கு போகவேண்டியதுதான். அவரவர் தான் நினைத்ததையெல்லாம் இஷ்ட்டத்திற்கு இணைத்து விட்டால் பின்பு எதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் உள்ளனர்?
ஏனெனில், மேற்படி நாம் குறிப்பிட்டுள்ள எந்த வார்த்தைகளும் குர்ஆன் ஹதீசிலிருந்து உள்ளதில்லை. நபித்தோழர்கள் கூறியதாகவும் இமாம்கள் கூறியதாகவுமே இடபெற்றிருக்கிறது.
உங்கள்இறைவனிடமிருந்துஎதுஉங்களுக்குஅருளப்பட்டதோஅதையேபின்பற்றுங்க!அவனையன்றிபொறுப்பாளர்களைப்பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
அல்குர்ஆன் – 7 : 3
வஹிச்செய்தியாக எது நம்மை வந்தடைந்துள்ளதோ அதையே பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். வேறு யாருடைய வார்த்தைகளையும் வேதவாக்காக எடுத்து செயல்ப்படக்கூடாது.
“அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் புறக்கணித்தால் இறைமறுப்பாளர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்”என்றும்கூறுவீராக!
அல்குர்ஆன் – 3 : 32
நாம் யாருக்குக் கட்டுப்படவேண்டும் என்பதை இறைவன் முன்மொழியும் பொழுது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படவேண்டும் என்கிறான். அவ்விருவரை விடுத்து மூன்றாம் மனிதரை அல்லாஹ் குறிப்பிடவில்லை.
ஆக, மவ்லித் தொடர்பாக ஹைதமி எழுதியுள்ள செய்திகள் எதுவும் மார்க்கமாக ஆகாது.

இரண்டாம் வாதம்

மவ்லிதுக்காக செலவு செய்தால் சுவனத்தில் என்னோடு தோழமைக் கொள்ளலாம் என்று அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறினார்களாம். அதை மகத்துவப்படுத்தியவர் கேள்விக்கணக்கின்றி சுவனம் செல்வார் என்று அலி(ரலி) அவர்கள் கூறினார்களாம்.
இந்த செய்திகள் நபித்தோழர்கள் சொன்னாரகள் என்பதற்கு எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. அந்த நூலிலும் குறிப்பிடவும் இல்லை. இது ஆதாரமற்ற செய்தியாகும்.

மூன்றாம் வாதம்

இந்த ஸுப்ஹானமவ்லித் பாடல்கள் இயற்றப்பட்டது சுமார் 300 வருடங்களுக்கு முன்பு தான். அந்தபாடலாசிரியரின் பெயர் முகவரி கூட இடம்பெறவில்லை. அது ஆயிரத்தினாநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த நபித்தோழர்களுக்கும், ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த இமாம்களுக்கும் இந்த மவ்லித் பாடல்கள் எப்படிதெரியும்? இதனை ஓதுவதால் இன்ன இன்ன சிறப்புகள் உண்டு என்று அவர்கள் எப்படி கூறியிருக்க முடியும்? எழுதியது யார் என்று கூட அறியப்படாத அனாதைப் புத்தகத்தை முந்தி சென்ற சான்றோர்கள் ஊன்றுகோல் பிடித்துள்ளனர் என்று கூறுவது பச்சைப் பொய் இல்லையா?

நான்காம் வாதம்

இப்னு ஹஜர் அல்ஹைதமி அவர்களின் பிறப்பு ஹிஜ்ரி 909ம் ஆண்டு என்று நாம் முன்னர் கூறினோம். இவர் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நபித்தோழர்கள் மற்றும் இமாம்களின் கூற்றை எந்த வித அறிவிப்பாளர் தொடருமின்றி இவர் எப்படி கூறமுடியும்?
கி.பி573ல் பிறந்த அபூபக்ர் சித்தீக்(ரலி), கி.பி 584ல் பிறந்த உமர் பின் அல்கத்தாப்(ரலி), கி.பி 576ல் பிறந்த உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), கி.பி 599ல் பிறந்த அலி பின் அபீதாலிப்(ரலி), ஹிஜ்ரி110ல் பிறந்த தாபி ஹசனுள் பஸரி, ஹிஜ்ரி150ல் பிறந்த இமாம் ஷாஃபி, ஹிஜ்ரி215ல் பிறந்த ஜுனைத் அல்பக்தாதி, ஹிஜ்ரி544ல் பிறந்த ஃபக்ருத் தீன் அர்ராசி போன்றோர்கள், ஹிஜ்ரி 909ல் பிறந்து 974ல் மரணித்த இப்னு ஹஜர் அல்ஹைதமியிடம் எப்படி சொல்ல முடியும்?
ஒரே காலத்தில் வாழ்ந்த அறிவிப்பாளர்களே நேரில் சந்தித்து கேட்டிருக்க வேண்டும் என்பது ஹதீஸ் துறை விதி. அறிவிப்பாளர் தொடரில் எந்த வித முறிவோ இருட்டடிப்போ இல்லாமல் இருந்தால் தான் அது “ஸஹீஹ்- ஆதாரப்பூர்மானது” எனும் தரத்திற்கு வரும். தொடர் விடுபடாமல் இருந்தாலும் அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கவேண்டும். இப்படி, ஒரு ஹதீஸை தரம் பிரிக்க பல கெடுபிடிகள் உள்ளன.
ஆனால், ஹைதமியின் நூலில் இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று சகட்டுமேனிக்கு அவதூறு கூறப்பட்டுள்ளது. நபித்தோழர்களும் இமாம்களும் சொல்லாததை சொன்னதாக சித்தரிப்பது பட்டவர்த்தனமான பழிசுமத்தலாகும்; அப்பட்டமான அவதூறாகும்.
ஆதாரமற்ற செய்திகளை கொண்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு இமாம் ஷாஃபீ அவர்கள் சொன்ன அறிவுரை இறுதியாக நாம் சொல்லிக் கொள்கிறோம்.

المدخل إلى السنن الكبرى للبيهقي (1/ 199، بترقيم الشاملة آليا)
198 – أخبرنا أبو عبد الله الحافظ ، وأبو سعيد بن أبي عمرو قالا : سمعنا أبا العباس محمد بن يعقوب يقول : سمعت الربيع بن سليمان ، يقول : سمعت الشافعي يقول : مثل الذي يطلب العلم بلا حجة ، كمثل حاطب ليل يحمل حزمة حطب وفيه أفعى تلدغه وهو لا يدري

ஆதாரம் இல்லாமல் கல்வியை தேடுபவன், இரவில் விறகு சேகரிப்பவன் போன்றவன். அவன் விறகுகள சுமந்து வருவான். அதில் கொடிய பாம்பு இருக்கும். அது அவனை அறியாத போது தீண்டிவிடும் என்று இமாம் ஷாஃபீ அவர்கள் கூறினார்கள்.
நூல் அல்மத்கல், பாகம்: 1, பக்கம்: 199