02) மன்னிக்க முடியாத குற்றம்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற இறைக்கட்டளையின் அடிப்படையில் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகவாதிகளின் வாதங்களுக்குப் பதில் சொல்லத் தெரிய வேண்டும். இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கையின் முதல் அம்சம்.
அடுத்தபடியாக கடவுள் என்றால் அது ஒரே ஒருவன் மட்டும் தான் இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏன் இரண்டு கடவுள்கள் அல்லது பல கடவுள்கள் இருக்க முடியாது? குல தெய்வம் என்று குடும்பத்துக்கு ஒன்று வைத்துக் கொண்டால் என்ன தவறு? மொழிக்கு ஒரு கடவுள், ஊருக்கு ஒரு கடவுள், தேசத்திற்கு ஒரு கடவுள் என்று வைத்துக் கொண்டால் என்ன குடி முழுகிப் போய் விடும்? என்ற கேள்விகள் நம் முன் வைக்கப் படுகின்றன. கேள்விகள் மட்டுமல்ல! அப்படிப்பட்ட நம்பிக்கைகள் மக்களிடத்தில் இருப்பதை, பல கடவுள் கொள்கை மக்களிடம் பரவியிருப்பதை நாம் காண்கிறோம்.
இந்த நம்பிக்கை சரியானது தானா என்று ஆராய வேண்டும். ஒரு கடவுளுக்கு மேல் இருக்க முடியுமா? பல கடவுள்கள் இருப்பது பகுத்தறிவுக்குப் பொருந்தக் கூடியதா? பல கடவுள்கள் இருந்தால் அதனால் மனித சமுதாயத்திற்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும்? என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். பல கடவுள் கொள்கையைப் போதிப்பவர்களுக்கு, இஸ்லாம் என்ன பதிலைக் கூறுகின்றது என்பதை ஆராய வேண்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதை அறிந்து கொள்வதில் இது இரண்டாவது அம்சம்.
கடவுள் ஒருவன் இருக்கின்றான், அவனைத் தவிர வேறு கடவுள்கள் இருக்க முடியாது ஆகியவற்றை அறிந்த பிறகும் நமது உள்ளத்தில் அவ்வப்போது தடுமாற்றங்கள் ஏற்படலாம். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சில நிகழ்வுகள், அசாதாரண அம்சங்கள், அற்புதங்கள் போன்றவற்றின் மூலம் இத்தகைய ஊசலாட்டம் ஏற்படக் கூடும்.
கனவுகள், கராமத்துகள், மகான்கள், ஜோதிடர்கள் என பலவிதமான விஷயங்கள் நம்முடைய ஈமானைப் பதம் பார்ப்பதற்குக் காத்து நிற்கின்றன. அது சரியாக இருக்குமோ? இது சரியாக இருக்குமோ? அந்த மகான் எப்படி அற்புதம் நிகழ்த்தினார்? இந்த ஜோதிடர் எப்படி எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவு சரியாகக் கூறினார்? என்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்ளும் போது அவற்றுக்கு என்ன பதில் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தற்போது முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரும் சாபக்கேடாக விளங்குகின்ற ஒரு விஷயம் தர்ஹா வழிபாடு! பெரியார்கள், இறை நேசர்கள் என்ற பெயரால் இஸ்லாத்திற்கு மாற்றமாக என்னென்ன காரியங்கள் நடக்கின்றன? இத்தகைய காரியங்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்துள்ளார்களா? வணக்க வழிபாடுகளை பெரியார்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? ஆகிய விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்விற்கு இணை வைக்கும் இந்தச் செயல்களை நியாயப்படுத்தக் கூடியவர்கள் என்ன வாதங்களைச் சொல்லி நியாயப் படுத்துகின்றனர்? குர்ஆன் ஹதீசுக்கு எப்படியெல்லாம் தவறான வியாக்கியானங்கள் கொடுத்து இந்த ஷிர்க்குக்கு வக்காலத்து வாங்குகின்றனர்? அவர்களது வாதங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதையும் நாம் அறியக் கடமைப் பட்டுள்ளோம்.
மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளைப் புகுத்துகின்றார்கள். அவற்றைப் பிரச்சாரம் செய்கின்றனர். அந்தப் பிரச்சாரம் எந்த அளவுக்குத் தவறானது என்பதை அறிவுப் பூர்வமாகவும் குர்ஆன் ஹதீஸ் ஒளியிலும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுவும் ஓரிறைக் கொள்கையின் மிக முக்கியமான அம்சமாகும்.
பாவம் செய்வது மனித இயல்பு! ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்கள் தான் என்பது நபிமொழி. தவறே செய்யாமல் யாரும் இருக்க முடியாது. தவறு செய்யும் இயல்புடனே மனிதனை அல்லாஹ் படைத்திருப்பதால் நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பதற்கும் அவன் தயாராக இருக்கிறான்.
மனிதன் செய்யும் எந்தப் பாவமாக இருந்தாலும் அவன் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால் அதை மன்னிக்கின்றான். பாவமன்னிப்பு கேட்காமலேயே ஒருவர் இறந்து விட்டால் கூட அவன் நாடினால் அதை மன்னிக்கின்றான். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அவன் மன்னிக்கத் தயாரில்லை. அந்த ஒரு பாவத்தை மன்னிக்க மாட்டேன் என்று தனது திருமறையில் தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டான்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன்: 4:48) ➚
எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் அதற்காக பாவமன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லாஹ் நாடினால் அதை மன்னித்து விடுவான். ஆனால் ஏகத்துவத்தில் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், ஓரிறைக் கொள்கையை விட்டு விலகி அல்லாஹ்விற்கு இணை கற்பித்து விட்டால் அதை மன்னிக்க அவன் தயாரில்லை. மன்னிப்பு இல்லை என்பது மட்டுமல்ல! நம்முடைய வாழ்நாளில் நாம் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்திருப்போம். அவ்வளவு நல்ல காரியங்களையும் செய்து விட்டு, இறைவனுக்கு இணை வைக்கும் ஒரு காரியத்தைச் செய்து விட்டால் நாம் செய்த எல்லா நல்ல காரியங்களும் வீணாகிப் போய் விடும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
(அல்குர்ஆன்: 6:88) ➚
“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன்: 39:65-66) ➚
ஏகத்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால் நாம் முன்னர் செய்த நல்லமல்களும் அழிந்து போய் விடும் என்பதை இந்த வசனங்கள் பறை சாற்றுகின்றன. ஒரு மனிதனின் நன்மைகள் அழிந்து, இறைவனின் மன்னிப்பும் கிடைக்காவிட்டால் மறுமையில் அவனது நிலை என்ன? நிரந்தர நரகம்! அவன் சொர்க்கம் செல்லவே முடியாது. அவனுக்கு சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டதாக அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.
(அல்குர்ஆன்: 5:72) ➚
ஏகத்துவத்தை விட்டு விலகிச் செல்வதால் ஏற்படும் விளைவுகளைப் பாருங்கள்!
1. இறை மன்னிப்பு கிடைக்காது.
2. நல்லறங்கள் அழிந்து போய் விடுகின்றன.
3. சொர்க்கம் ஹராமாக்கப்பட்டு, நிரந்தர நரகம் கூலியாகக் கிடைக்கின்றது.
எனவே இவ்வளவு பெரிய பாரதூரமான விஷயத்தைப் பற்றி நூறு சதவிகிதம் சந்தேகமற நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏகத்துவத்தில் எள்ளளவும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஏகத்துவத்தைப் பற்றிய நம்பிக்கை நம்முடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். இது தான் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதை அறிந்து கொள்வதன் மிக முக்கியமான அம்சம்!