34) படைப்பினங்களில் மோசமானவர்கள்

மற்றவை: இணை கற்பித்தல் ஒரு விளக்கம்

கப்ருகளைக் கட்டி அதை வணங்கக்கூடாது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக, நபியவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

அபூவாகித் அல்லைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க் கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.) நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும். இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாளைத் தொங்க விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.) எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!)’’ எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.

‘‘அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். ‘மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!’ என்று கேட்டனர்’’ (7:138)

என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர், ‘‘உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி 2180

மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது (முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர் களையும், கிறித்தவர்களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “வேறு யாரை?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

நூல்கள்:(புகாரி: 7320),(முஸ்லிம்: 2669)

நாம் உயிருடன் இருக்கும் போதே மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்றால் நாம் இறந்த பிறகு நம்முடைய கபுரையும் வணக்கத் தலமாக ஆக்கிவிடுவார்களோ என்று பயந்துதான் நபியவர்கள் தம்முடைய இறுதி மரண வேளையிலும் இதைப் பற்றி எச்சரித்தார்கள்.

இறை சாபத்தைப் பெற்றுத் தரும் தர்கா வழிபாடு

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கி விட்டார்கள்’ எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நூல்: புகாரி(புகாரி: 1390)

மேலும் இதை விடக் கடுமையாகவும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களுடன் அல்லாஹ் போர் புரிகிறான்’’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(புகாரி: 437)

தர்ஹாக்கள் கட்ட கூடாது; விழா எடுக்கக் கூடாது என்பதற்கு நாம் இத்தனை ஆதாரங்களையும் காட்டிய பிறகு இவையெல்லாம் நபிமார்களுக்கு உரிய சட்டங்கள்; வலிமார்கள், நல்லடியார்கள். இறைநேசர்களுக்குப் பொருந்தாது; எனவே அவர்களுக்கு தர்ஹாக்கள் கட்டலாம்; விழா எடுக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஆனால் இதற்கும் நபியவர்கள் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் நபிமார்கள் மற்றும் நல்லடியார்களுடைய கபுர்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள். நீங்களும் கபுர்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்.

(முஸ்லிம்: 827)

மேற்கண்ட செய்தியில், நபிமார்கள் மட்டுமல்ல; நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கபுர்களைக் கட்டி அதை வணங்குமிடமாக – விழா கொண்டாடும் இடமாக ஆக்கக்கூடாது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கின்றது.

நபிமார்கள் அனைவருமே நல்லடியார்கள், இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை; சந்தேகமும் இருக்கக் கூடாது. அத்தகைய இறைநேசர்களுக்கே கப்ரு கட்டக்கூடாது என்றால் இன்றைக்கு வலிமார்கள் அவ்லியாக்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு, அவர்களுக்குக் கபுர்களைக் கட்டுவதென்பது வரம்பு மீறிய செயலாகத்தான் இருக்க முடியும்.

நாம் அவ்லியாக்கள் என்று நினைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றவர்களெல்லாம் இறைநேசர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த உலகத்தில் அவ்லியாக்கள் என்று நினைத்தவர்கள் ஒருவேளை நாளை மறுமையில் பாவிகளாக, ஷைத்தான்களாகக் கூட இருக்கலாம்.

நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களையே அல்லாஹ் சபிக்கின்றான் என்றால் முகவரியற்ற இந்த அவ்லியாக்கள் எம்மாத்திரம்? எனவே, சபிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடுகின்ற இடத்திற்கு ஒரு இறைவிசுவாசி செல்லமாட்டான்.

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்றுகூடும் தளமே தர்ஹா

மேலும் நபியவர்கள் தமது வாழ்நாளில் இறுதியாகச் செய்த எச்சரிக்கையும் இது குறித்து தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்கள் யாரெனில், தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்.

(அஹ்மத்: 1599)

இறைவனின் படைப்புகளிலேயே மனிதப் படைப்பு தான் சிறந்த ஒரு படைப்பு. அந்த மனிதப் படைப்புகளில் ஃபிர்அவ்ன் என்பவன் ஒரு கொடியவன்; மோசமானவன். ஏனென்றால் அவன் தன்னையே கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ஆனால் அவனை விட மோசமானவர்கள் தான், ஷிர்க்கை ஒழித்து தவ்ஹீதை நிலைநாட்ட வந்த நபிமார்களையே கடவுள்களாக ஆக்கிக் கொண்டவர்கள். இவர்களைப் பற்றித்தான் நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:

உம்மு ஹபீபா (ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர், தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத்தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்’ என்று கூறினார்கள்.

(புகாரி: 427)

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 434, 1341, 3873 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தன்மை அப்படியே நம்முடைய சமுதாய மக்களிடத்தில் இருக்கிறதா இல்லையா? இத்தகைய தன்மை பெற்றவர்கள் தான் படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என நபிகளார் எச்சரிக்கின்றார்கள். நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்களே படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என்றால் முகவரியற்ற அவ்லியாக்களுக்குப் பின்னால் செல்பவர்கள் எத்தகையவர்கள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வணக்கத்தலமாக்கப்படாத அடக்கத்தலம்

மேலும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இதைப் பற்றி எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல் தன்னுடைய கபுரையும் வணக்கத்தலமாக ஆக்கிவிடக் கூடாது என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள்.

‘இறைவா! எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

(அஹ்மத்: 7054)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தான் அவர்களது கப்ர் பாதுகாக்கப்படுகின்றது. இல்லையென்றிருந்தால் நமது தர்ஹா பக்தர்கள் அவர்களது கப்ரடியிலும் உட்கார்ந்து 12 நாட்கள் மௌலீது வைபவம் நடத்தி ஊதுபத்தி, பழம், தேங்காய் சகிதம் அபிசேகம் செய்திருப்பார்கள். அல்லாஹ் அதை விட்டும் காப்பாற்றிவிட்டான்.

தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது

மேலும் நபியவர்கள் கப்ருகளைக் கட்டுவது மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.

கப்ரு பூசப்படுவதையும் அதன்மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் ரலி)

(முஸ்லிம்: 1610)

தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி)

(அஹ்மத்: 22834)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

(முஸ்லிம்: 1609).

இன்னும் இதுபோன்று தர்ஹா வழிபாடு இணைவைப்பு சம்பந்தமான வரட்டு வாதங்களையும் அதற்குரிய நமது பதில்களையும் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.