29) தீயோருக்கு நிகழ்ந்த அற்புதங்கள்

மற்றவை: இணை கற்பித்தல் ஒரு விளக்கம்

நபிமார்களுக்கு அற்புதங்கள் நிகழ்வதைப் போன்று, நபிமார்கள் அல்லாத மற்ற சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு நாம் இதுவரை ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

முந்தைய சமுதாயத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். ஒரு மனிதர் பயணம் செய்து சென்று கொண்டிருக்கும் போது கட்டடங்கள் இடிந்து போன, பாழடைந்த, அங்கு குடியிருந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாத, சிதிலமடைந்த ஒரு ஊரைக் கடந்து செல்கிறார். அதைப் பார்த்து விட்டு அந்த மனிதர், “இப்படிப் சிதைந்து போய் கிடக்கின்ற இந்த ஊரை எவ்வாறு அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிப்பான்?’ என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறார். உடனே அல்லாஹ் தன்னுடைய அற்புதத்தை (வல்லமையை) காட்டுவதற்காக அவரை அந்த இடத்திலேயே மரணிக்கச் செய்கின்றான். அந்தச் சம்பவம் பின்வருமாறு.

ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டு கிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக் கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.

(அல்குர்ஆன் 2.259)

இப்ராஹீம் நபிக்கு, அவர்களின் மன நிம்மதிக்காக இறைவன் சில அற்புதங்களைச் செய்து காட்டியது போன்று இந்த நல்லடியாருக்கும் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். நூறு ஆண்டுகள் கழித்த பிறகு உயிர்த்தெழுந்த அந்த நல்லடியார், தான் எவ்வளவு காலம் உறங்கினேன்? என்பதை அறியாமல் இருந்திருக்கிறார். ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சில மணி நேரமே உறங்கியிருப்போம் என்றும் சொல் கிறார் என்றால். இந்த அற்புதம் அவர் அறியாத விதத்தில் தான் நடந்திருக்கின்றது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன வென்றால், பூமிக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்த, குர்ஆனில் நல்லடியார் என்று சொல்லப்பட்ட ஒரு மனிதரால் நூறு ஆண்டுகளாக உலகத்தில் என்ன நடந்திருக்கின்றது என்பதைக் கூட அறியாதவராக இருந்திருக்கிறார் என்றால், பூமிக்குள் புதைக்கப் பட்டிருக்கின்ற, நல்லடியார் என்று சொல்லப்படாத ஒருவரால் எவ்வாறு உலகில் நடக்கக்கூடியதை அறிய முடியும்? அவரை நல்லலடியார், மகான் என்று நம்மால் எவ்வாறு சொல்ல முடியும்?

ஆனால் நாம், இறந்து போனவர்கள் மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் உலகில் நடக்கின்ற வற்றை பார்ப்பார்கள்; நாம் பேசுவதைக் கேட்பார்கள்; நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்; கப்ருக்குள் இருந்து கொண்டே நாம் செய்யக்கூடியதைப் பார்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட அந்த நல்லடியாருக்கு உணவு கெட்டுப் போகாமல் இருந்தது தெரியவில்லை. கழுதை இறந்து எழும்புக் கூடானதும் தெரியவில்லை.

ஆக, இதுவும் நபிமார்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு ஆதாரமாகும்.

இப்ராஹீம் நபியினுடைய மனைவி சாரா அவர்கள் சம்பவமும் இது போன்றதுதான்.

அந்தச் சம்பவம் வருமாறு..

ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவி யார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவ னுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) “இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான்.

சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்ற போது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா அவர்களிடம்), “அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.

பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப் பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், “எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப் பட்டான்.

பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, “நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான்.

சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, “என்ன நடந்தது?’ என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்… சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜிராவைப் பணிப் பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்‘ என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

(புகாரி: 3358)

மேற்கண்ட சம்பவமும், நபிமார் அல்லாத மற்றவர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.

அவர் தொழு நோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், “எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஒட்டகம் தான் (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்ப மானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், “எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?” என்று கேட்டார். அவர், “மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, “இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்ப மானது எது?” என்று கேட்டார். அவர், “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், “உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த இருவரும் (ஒட்டகம் வழங்கப் பட்டவரும் மாடு வழங்கப் பட்டவரும்) நிறைய குட்டிகள் ஈன்றிடப் பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும், வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார்.

அதற்கு அந்த மனிதர், “(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாளி யாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவன், “(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர் களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், “நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், “நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்; வழிப் போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ் வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவரு மில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக் கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்.” என்று சொன்னார்.

உடனே அவ்வானவர், “உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தி யடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்” என்று சொன்னார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 3464)

மேற்கண்ட சம்வத்தில் அந்த குருடரைத் தவிர மற்ற இருவரும் தீய மனிதர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கும் அல்லாஹ் ஒரு மாடு மற்றும் ஆட்டை வழங்கி அதனை பல்கிப் பெருகச் செய்திருக்கிறான். இது ஓர் அற்புதமாகும். இதன் மூலம் தான் நாடியோருக்கு அருளை தாராளமாக வழங்குவான் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.

மேலும் தீயவர்களுக்கும் அற்புதங்களை வழங்குவான் என்பதற்கும் இது சான்றாக அமைகின்றது.

மேலும். நபி (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்னால் உள்ள நபிமார்கள் அல்லாத சில மனிதர் களுக்கு அல்லாஹ் ஒரு ஆற்றலை வழங்கியிருந்தான். அல்லாஹ் ஒரு செய்தியை அந்த மனிதர்களுக்கு அறிவிப்பதாக இருந்தால் மலக்கு மார்கள் மூலமாக அறிவிக்காமல் நேரடியாக அவர்களுடைய உள்ளத்தில் உதிக்கச் செய்வான். முந்தைய சமுதாயத்தில் சில ஆட்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து இவ்வாறு சில அற்புதங்களை வழங்கியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களுக்கு முன்பிருந்த சமுதா யங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத் தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.

(முஸ்லிம்: 4769)

இந்த மாதிரியான அம்சங்களை வைத்து அவ்லியாக்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மாதிரி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும்.