பரேலவிகளுக்குப் பயன்தராத பல்வேறு கடவுளர்கள்

மற்றவை: பிற கொள்கைகள்

பரேலவிகள் இன்று பல கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்; அல்லாஹ் அல்லாதவர்களை, அவனது அடியார்களை அழைத்துத் தங்கள் தேவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாகுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் ஷா, தக்கலை பீரப்பா, திருவனந்தபுரம் பீமா, ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா என வகை வகையாக ஆண், பெண்களை கடவுளாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்தக் கடவுளர்கள் (இவர்களது பாஷையில் அவ்லியாக்கள் அல்லது மகான்கள்) மறுமையில் வந்து கை கொடுப்பார்கள்; காப்பாற்றிக் கரை சேர்ப்பார்கள் என்று இவர்கள் பலமாக நம்புகின்றனர். இவர்களது இந்த நம்பிக்கை இரண்டு வேளைகளில் தகர்ந்து போய் விடுகின்றது.

மரண வேளையில்…

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். “அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். “அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்” என அவர்கள் கூறுவார்கள். “நாங்கள் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம்” எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 7:37)

இவர்கள் அழைத்துக் கொண்டிருந்த இந்த அவ்லியாக்கள் மரண வேளையில் காணாமல் போய் விடுகின்றனர்.

இதன் பின்னர் மறுமையில் எழுப்பப்பட்டு அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போதும் இந்த அவ்லியாக்கள் இவர்களை விட்டும் காணாமல் போய் விடுவார்கள்.

ஈஸா நபியிடம் இறைவனின் விசாரணை

மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் அனைவரும் நிறுத்தப்படும் போது ஈஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் விசாரணை செய்கின்றான்.

இந்தப் பரேலவிகளாவது இறந்து போன பெரியார்களைத் தான் அழைக்கின்றனர். ஆனால் கிறித்தவர்களோ வானத்தில் உயிருடன் இருக்கின்ற ஈஸா (அலை) அவர்களை அழைக்கின்றார்கள். அதிலும் ஈஸா நபியவர்கள் இறைவனின் அற்புதப் படைப்பாவார்.

மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார்.

(அல்குர்ஆன்: 4:171)

இவ்வாறு அல்லாஹ் தனது உயிர் என்று கூறும் உன்னத நிலையில் உள்ளவர்கள் ஈஸா (அலை) அவர்கள். இந்த ஈஸா நபியைத் தான் கிறித்தவர்கள் வணங்குகின்றனர்; அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.

உண்மையில் பரேலவிகளை விட கிறித்தவர்கள் உயர்ந்தவர்கள். ஏனென்றால் பரேலவிகள் யாரை அவ்லியாக்கள், மகான்கள் என்று கூறுகின்றார்களோ அவர்கள் உண்மையில் அவ்லியாக்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

ஆனால் கிறித்தவர்கள் அழைத்துப் பிரார்த்திக்கும் ஈஸா நபியோ நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்; அவனது உயிர். அல்லாஹ் அவருக்குப் பல்வேறு சிறப்புக்களைக் கொடுத்துள்ளான். எனவே இந்த அடிப்படையில் பரேலவிகளை விட கிறித்தவர்கள் பரவாயில்லை எனலாம்.

அந்தக் கிறித்தவர்கள் மத்தியிலும் இன்னும் உலக மக்கள் அனைவர் மத்தியிலும் ஈஸா நபியை இறைவன் விசாரணை செய்கின்றான்.

“மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!‘ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார்.

“நீ எனக்குக் கட்டளையிட்ட படி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!‘ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்)

(அல்குர்ஆன்: 5:116), 117, 118

தன்னைக் கிறித்தவர்கள் அழைத்ததற்குத் தான் பொறுப்பாளி அல்ல என்று ஈஸா நபியவர்கள் பகிரங்கமாகப் போட்டு உடைக்கின்றார்கள்.

ஈஸா நபி அவ்வாறு தன்னை வணங்க வேண்டும் என்று மக்களிடம் சொல்லவில்லை என்பது இறைவனுக்குத் தெரியும். இருப்பினும் இவ்வாறு மக்கள் மன்றத்தில் வைத்துக் கேட்பதற்குக் காரணம் அம்மக்களுக்கு, தாங்கள் செய்த அந்த வணக்கம் தவறானது என்பதை உணர வைப்பதற்காகத் தான்.

இதிலேயே பரேலவிகளுக்குரிய பாடமும் படிப்பினையும் இருக்கின்றது. ஈஸா நபி உயிருடன் வானத்தில் இருக்கும் போது அவர்களை அழைத்தவர்களுக்கே இந்தக் கதி என்றால் இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் நமக்கு என்ன கதி? என்பதை இவர்கள் உணர மாட்டார்கள் என்பதற்காக இவர்கள் அழைத்துப் பிரார்த்தித்த அவ்லியாக்களையே அல்லாஹ் விசாரணை செய்கின்றான்.

அவ்லியாக்களிடம் விசாரணை

அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் ஒன்று திரட்டும் நாளில் “எனது அடியார்களை நீங்கள் தான் வழி கெடுத்தீர்களா? அவர்களாக வழி கெட்டார்களா?” என்று கேட்பான். “நீ தூயவன். உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர்” என்று அவர்கள் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 25:17),18

இவர்கள் யாரைக் கூவிக் கூவி அழைத்தார்களோ அந்த அவ்லியாக்கள் இந்தப் பரேலவிகளைக் கை கழுவி விடுவார்கள்; காலை வாரி விடுவார்கள்; கழற்றி விட்டு விடுவார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் போட்ட அதே வார்த்தையை, “சுப்ஹானக்க – நீ தூயவன்” என்ற வார்த்தையை அப்படியே இந்த அவ்லியாக்களும் கூறுகின்றார்கள். அப்போது தான் அல்லாஹ்விடமிருந்து பதில் வருகின்றது.

நீங்கள் கூறுவதை அவர்கள் பொய்யெனக் கருதினார்கள். தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.

(அல்குர்ஆன்: 25:19)

நூரி ஷாஹ் தரீக்கா

பரேலவிகளில் ஒரு பிரிவான நூரி ஷாஹ் தரீக்கா என்ற கூட்டத்தினர், முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கத் துவங்கினார்கள்.

அவ்வாறு முஹம்மது என்று திக்ரு செய்ய ஆரம்பித்ததும் மற்ற ஆலிம்கள் அதைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். “யா முஹம்மத் என்று திக்ரு செய்வது கூடாது; அது ஷிர்க் ஆகும்’ என்று ஃபத்வா – மார்க்கத் தீர்ப்பு வழங்கினர். தமிழகத்தில் உள்ள எல்லா மதரஸாக்களும் இதில் ஒத்தக் கருத்தைக் கொண்டிருந்தன.

இதற்கு இர்ஃபானுல் ஹக் எனும் நூல் இன்றும் சாட்சியாகத் திகழ்கின்றது. இந்நூலைத் தொகுத்தவர் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ ஆவார். அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் இங்கு தனிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முஹம்மது என்று திக்ர் செய்வது ஷிர்க் என்று நாம் கூறுவது ஒருபுறமிருக்கட்டும். அந்தத் தரப்பு ஆலிம்களே கூறுகிறார்கள் என்றால் அந்த ஷிர்க்கின் ஆழத்தை நாம் எடுத்துக் கூறத் தேவையில்லை.

அப்படியானால் இவர்கள் நிச்சயமாக மதம் மாறியவர்கள் ஆகி விடுகின்றார்கள். அதாவது “முஹம்மதே’ என்று நபி (ஸல்) அவர்களை உதவிக்கு அழைப்பவர்கள் மதம் மாறியவர்களாகி விடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களுக்குக் கைகொடுப்பார்கள் என்று காத்திருக்கும் போது இவர்களை நபி (ஸல்) அவர்கள் கைகழுவி விடுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, “நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறிவிட்டு, “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்” என்ற (21:104) இறை வசனத்தை ஓதினார்கள்.

பிறகு மறுமை நாளில் உடை அணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.

அப்போது நான், “என் இறைவா, என் தோழர்கள்” என்று சொல்வேன். அதற்கு, “இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும்.

அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், “நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்” என்று பதிலளிப்பேன்.

அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 4740, 6524)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோழர்களையே அவர்களால் காப்பாற்ற முடியாது என்றாகி விடுகின்றது. இந்தப் பரேலவிகளை எப்படிக் காப்பாற்ற முடியும்? எனவே நபி (ஸல்) அவர்கள், ஈஸா நபியவர்கள் கூறிய பதிலை அப்படியே கூறி விடுகின்றார்கள்.

அதாவது மறுமையில் நபி (ஸல்) அவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பியிருக்கும் இந்த இணை வைப்பாளர்கள் கைகழுவி விடப்படுகின்றார்கள்; நரகவாதிகளாகி விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

விவாதம் புரிந்தோருக்கு விலங்குகள்

அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்ற நாம் அறிவுரை கூறும் போது இவர்கள் வீணான விவாதம் புரிகின்றனர். இவர்களிடம் அல்லாஹ் மறுமையில் குத்தலாகவும், கோபமாகவும் கேட்கும் கேள்விகளைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா? அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள். அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் இணை கற்பித்தவை எங்கே?” என்று பின்னர் அவர்களிடம் கேட்கப்படும்.

“எங்களை விட்டும் மறைந்து விட்டன. இல்லை! இதற்கு முன் எதையும் நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கவில்லை” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறே (தன்னை) மறுப்போரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான்.

(அல்குர்ஆன்: 40:69-74)

நபி (ஸல்) அவர்களையும் மற்ற மகான்களையும் அழைத்து உதவி தேடியதால் அல்லாஹ் வழங்குகின்ற தண்டனை இது.

மலக்குகளிடம் விசாரணை

இந்த இணை வைப்பாளர்கள் மகான்களை வணங்கியது போல் இதற்கு முன்னர் ஒரு கூட்டம் மலக்குகளை வணங்கினர். அதனால் மலக்குகளை அல்லாஹ் விசாரணை செய்கிறான். அப்போது அவர்கள் சொல்கின்ற பதிலைப் பாருங்கள்.

(அது) அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் நாள்! பின்னர் “அவர்கள் உங்களைத் தான் வணங்குவோராக இருந்தார்களா?” என்று வானவர்களிடம் கேட்பான். “நீ தூயவன். நீயே எங்கள் பாதுகாவலன். அவர்களுடன் (எங்களுக்கு சம்பந்தம்) இல்லை. மாறாக இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்” என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 34:40), 41

ஈஸா (அலை) அவர்களும், முஹம்மது (ஸல்) அவர்களும் கூறியது போன்றே, “நீ தூயவன். அவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை” என்ற பதிலை மலக்குகள் கூறி விடுகின்றனர். அந்த வழிகெட்ட கூட்டம் உண்மையில் வணங்கியது மலக்குகளை அல்ல! ஷைத்தான்களைத் தான்.

அல்லாஹ்வை விட்டு விட்டு, மக்கள் யார் யாரையெல்லாம் அழைத்துப் பிரார்த்தித்தார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ் தன் முன்னிலையில் நிறுத்தி, அவர்களுக்கும் அவர்களை வணங்கியோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவாக்கி விடுகின்றான்.

அவ்வாறு வணங்கப்பட்டவர்கள் நபிமார்களாகவும், நல்லடியார்களாகவும் இருக்கலாம்; மலக்குகளாகவும் இருக்கலாம்.

அவர்கள் அத்தனை பேரும் அல்லாஹ்விடம் கொடுக்கப் போகும் வாக்குமூலம், “இவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்பது தான்.

அதாவது இந்த இணை வைப்பாளர்களை, அவர்கள் நம்பிக் கொண்டிருந்த கடவுளர்கள் கைவிட்டு கயிற்றை அவிழ்த்து விடுகின்றனர்; காலை வாரி விடுகின்றனர்.

இவர்களின் வலையில் விழுந்து விடாது நாம் நம்மையும் நம் சந்ததிகளையும் பாதுகாத்துக் கொள்வோமாக!