16) சொத்துரிமை மறுப்பு

நூல்கள்: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

ஆட்சித் தலைவர் மீது பாத்திமா கோபம்

பொது வாக்கெடுப்பின் போது அபூபக்ர் (ரலி)யிடம் எல்லோருடனும் சேர்ந்து வாக்குப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அலீ (ரலி) அவர்கள் ஆறு மாத காலம் சுத்தமாக ஒதுங்கி விடுகின்றார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் மதம் மாறியவர்களுக்கு எதிராக நடத்திய போரில் தில்கிஸ்ஸாவுக்குச் செல்ல ஆயத்தமான போது, அலீ (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்றதையும், அபூபக்ர் (ரலி) அவர்களை அலீ (ரலி) வாழ்த்தி வழியனுப்பி வைத்ததையும் ஏற்கனவே கண்டோம். மதம் மாறியவர்களுக்கு எதிராக நடந்த போரில் வாளெடுத்து, தோள் கொடுத்த அலீ (ரலி) ஒதுங்கியதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?

இந்த அளவுக்கு அபூபக்ர் (ரலி)க்குப் பக்கத் துணையாக நின்ற அலீ (ரலி) அவர்கள் அமைதியாக ஒதுங்கியது ஏன்? என்பதை இப்போது பார்ப்போம்.

பாத்திமா (ரலி), அப்பாஸ் (ரலி)யுடன் இணைந்து அபூபக்ர் (ரலி)யைச் சந்திக்கின்றார்கள். இதுபற்றி திர்மிதீயில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பை முதலில் பார்ப்போம்.

அபூபக்ர் (ரலி)யிடம் பாத்திமா (ரலி) வந்து, “உங்களுக்குப் பின்னால் உங்களுக்கு யார் வாரிசாவார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “என்னுடைய மனைவி, மக்கள்” என்று பதிலளித்தார்கள். “அப்படியானால் நான் ஏன் என் தந்தையின் வாரிசாகவில்லை?” என்று பாத்திமா (ரலி) கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி), “எங்களுக்குப் பின்னால் யாரும் வாரிசாக மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். எனினும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் யாருடைய தேவையை நிறைவேற்றினார்களோ அதுபோல் நானும் அவர்களுடைய தேவையை நிறைவேற்றுவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் யாருக்கு செலவு செய்தார்களோ அவர்களுக்கு நானும் செலவு செய்வேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

(திர்மிதீ: 1533)

“(நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு யாரும் வாரிசாக வர முடியாது, நாங்கள் விட்டுச் செல்பவை எல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி)யிடம் தெரிவித்தார்கள். ஆனால் இதனால் ஃபாத்திமா (ரலி) கோபமுற்று, அபூபக்ர் (ரலி)யுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும், மதீனாவில் அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி)யிடம் ஃபாத்திமா (ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி)யின் கோரிக்கையை ஏற்க மறுத்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதையும் நான் செய்யாமல் விட்டு விட மாட்டேன். ஏனெனில் அவர்களுடைய செயல்களில் எதையாவது நான் விட்டு விட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

(புகாரி: 3093)

மேற்கண்ட இந்த சொத்து விவகாரத்தில், நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்குப் பாத்திரமான ஃபாத்திமாவின் உணர்வுக்கு மதிப்பளிப்பதா? அல்லது நபி (ஸல்) அவர்களின் வார்த்தைக்கு மதிப்பளிப்பதா? என்ற நெருக்கடிக்கு அபூபக்ர் (ரலி) தள்ளப்படுகின்றார்கள்.

இதுவரை கண்ட விஷயங்களில் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்குப் பலியாகாதது போலவே இந்த விஷயத்திலும் அவர்கள் உணர்ச்சிக்குப் பலியாகவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவிற்கே கட்டுப்படுகின்றார்கள். இதனால் ஃபாத்திமா (ரலி)யின் மன வருத்தத்திற்கு ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்ய அவர்கள் விரும்பவில்லை.

ஃபாத்திமா (ரலி) இறந்த போது, அவர்களின் கணவர் அலீ (ரலி), இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்குத் தொழுவித்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்த வரையில் அலீ (ரலி) அவர்கள் மீது மக்களிடையே தனிக் கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) இறந்து விட்ட பின் மக்களின் முகங்களில் மாற்றத்தைக் கண்டார்கள். எனவே ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி)யிடம் சமரசம் பேசவும், விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவும் விரும்பினார்கள். அந்த மாதங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கவில்லை. ஆகவே, “தாங்கள் மட்டும் எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வர வேண்டாம்” என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறி அலீ (ரலி) ஆளனுப்பினார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி)யும் வருவதை அலீ (ரலி) விரும்பாததே இதற்குக் காரணமாகும். அப்போது உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி)யிடம், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் அவர்களிடம் செல்லத் தான் போகின்றேன்” என்று கூறி விட்டு, அவர்களிடம் சென்றார்கள்.

அப்போது அலீ (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி விட்டு, இறைவனைத் துதித்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி)யிடம், “தங்களின் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப் படவில்லை. ஆயினும் இந்த விஷயத்தில் (எங்களிடம் ஆலோசிக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள்ள உறவு முறையின் காரணத்தால் (தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என்று நாங்கள் கருதி வந்தோம்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசத் துவங்கிய போது, “என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இந்தச் செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல் விட்டு விடவுமில்லை” என்று கூறினார்கள்.

அப்போது அலீ (ரலி) அவர்கள், “தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் இன்று மாலையாகும்” என்று கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹர் தொழுகையை முடித்ததும் மிம்பர் மீது ஏறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும் அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.

பிறகு அலீ (ரலி) அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி விட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின், அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், “நாங்கள் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்ததோ அல்ல. மாறாக இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று நாங்கள் கருதியதேயாகும். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டார்கள். அதனால் எங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டது.” என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து அலீ (ரலி) அவர்களைப் பார்த்து, “நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்” என்று கூறினார்கள். தமது போக்கை அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்து விட்ட போது முஸ்லிம்கள், அலீ (ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

(புகாரி: 4240, 4241)

இந்த அறிவிப்பில் ஏற்கனவே அலீ (ரலி) அவர்கள் பைஅத் செய்யாமல் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பைஹகீயில் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் இறந்தவுடன் சகீபா பனூசாயிதாவில் அலீ (ரலி), ஜுபைர் (ரலி) ஆகிய இருவரும் அபூபக்ர் (ரலி)யிடம் பைஅத் செய்தனர் என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை இமாம் முஸ்லிம் அவர்கள் நல்ல அறிவிப்பு என்று பாராட்டுகின்றார்கள்.

எனவே மேலே குறிப்பிட்டுள்ள புகாரி அறிவிப்பில் அலீ (ரலி) அவர்கள் பைஅத் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது இரண்டாவது தடவையாக இருக்கலாம். முதலில் அலீ (ரலி) அவர்கள் பைஅத் செய்தாலும் பிறகு சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக ஒதுங்கியிருந்து விட்டுப் பின்னர் ஃபாத்திமா (ரலி) மரணித்த பிறகு மீண்டும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பைஅத் செய்தார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம்.

மதீனாவில் ஏற்பட்ட குடும்ப ரீதியிலான பிரச்சனையில் அலீ (ரலி) அவர்களின் மனதை வென்றெடுத்து ஒரு சுமுகமான ஆட்சியைக் கொண்டு செல்கின்றார்கள். இவ்வாறு உள்ளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள், நபியென்று கிளம்பிய யமாமாவைச் சேர்ந்த முஸைலமா என்ற போலி நபியை எதிர்கொள்கின்றார்கள். முஸைலமாவை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்பதைக் காண இப்போது போர்முனைக்கு வருவோம்.