14) சண்டைக்கு வந்தவர்களின் சரணாகதி

நூல்கள்: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

காலித் பின் வலீத் சந்தித்த மற்றொரு நிகழ்ச்சி

காலித் பின் வலீத் (ரலி) ஒரு கிளையாரை எதிர்த்து வெற்றியடைந்து கொண்டிருந்த வேளையில் கர்வம் கொண்ட ஒரு பெண் – அல்ல ஒரு பேய் களமிறங்கி நின்றாள். இவளிடத்தில் காலித் வென்றாரா? தோற்றாரா? என்று பார்ப்போம்.

புஸாகா போரில் ஃபிலால் என்ற இடத்தில் கத்பான் கிளையைச் சேர்ந்த தலீஹாவின் ஆட்கள் ஒரு பெண்ணின் தலைமையில் அணி திரண்டனர். அவளது பெயர் உம்மு ஜமல் ஆகும். உதாரணம் சொல்லப்படக் கூடிய அளவுக்கு இவளது தாய் கொடிகட்டிப் பறந்தாள். அவளுக்கு மக்கள் செல்வம், குல கவுரவம், மக்கள் பார்த்து மயங்கும் அளவுக்கு மாட மாளிகையெல்லாம் ஒருங்கே அமையப் பெற்றிருந்தன. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல சேலை என்ற பழமொழிக்கொப்ப மகள் உம்மு ஜமலும் தாயைப் போல அனைத்து தகுதிகளையும் பெற்ற தலைவியாகத் திகழ்ந்தாள்.

அன்னையே! ஆற்றல் மிகு தலைவியே! நீ தான் காலிதை ஒரு கை பார்க்க வேண்டும் என்று சொன்னதும் அவள் காரியம் ஆற்ற களமிறங்கினாள். காலிதை எதிர்ப்பதற்கு மக்களைத் தூண்டி விட்டாள். காலித் படையைக் கண்டு தொடை நடுங்கும் பயந்தாங்கொள்ளிகள் என்று அவர்களது உணர்வைச் சீண்டினாள். இதற்கிடையே கத்ஃபான் கிளையினரான இவர்களுடன் சுலைம், தய்யி, ஹுவாஸா, அஸத் ஆகிய கிளையினரும் காலிதுக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டனர். இதனால் காலித் பின் வலீத் தோற்றுப் போய் விடுவாரோ என்று மலைக்கும் அளவுக்கு மலை போன்ற மாபெரும் படையாக அது உருவெடுத்திருந்தது.

இதைக் கேள்விப்பட்ட காலித் பின் வலீத் சும்மாயிருப்பாரா? அசத்தியத்தில் இருக்கும் அவர்களது தோள்களுக்கு இப்படித் திணவெடுக்கும் போது சத்தியத்தின் போர் வாளுக்கு எப்படி இருக்கும்? அவ்வளவு தான். காலித் உடனே கிளம்பி வந்தார். போரும் துவங்கியது. இரு அணியினருக்குமிடையில் நடந்த போர் உக்கிரத்தை அடைந்தது. ஆணவக்காரியான அகங்காரத் தலைவியோ தன்னுடைய தாயாரின் ஒட்டகத்தில் இருந்து கொண்டு, “என்னுடைய ஒட்டகத்தைத் தீண்டுவோர் எவரும் உண்டா? அவ்வாறு என் ஒட்டகத்தைத் தீண்டி விட்டால் அவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு” என்று கொக்கரித்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள்.

காலித் பின் வலீத் ஒரு நோடியில் அவளை மரணத்தின் பிடியில் தள்ளி விட்டு, அள்ளி எடுத்த வெற்றிச் செய்தியை அபூபக்ர் (ரலி)க்கு அனுப்புகின்றார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி)யின் துணை கொண்டு நடத்திய போர் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. இதன் விளைவாக பனூஅஸத், கத்ஃபான் ஆகிய இரு கிளையினரும் ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி)யிடம் சமாதானத்திற்கு வந்தனர். (பொய் நபியான தலீஹா இந்த பனூஅஸத் கிளையைச் சேர்ந்தவர் தான்)

இது தொடர்பாக புகாரியில் இடம் பெறும் அறிவிப்பைப் பார்ப்போம்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், புஸாகா எனும் குலத்தாரின் தூதுக்குழுவிடம், “உங்களை மன்னிப்பதற்கான காரணம் ஒன்றை இறைத்தூதரின் பிரதிநிதி(யான என)க்கும் முஹாஜிர்களுக்கும் அல்லாஹ் காட்டும் வரை நீங்கள் ஒட்டகங்களின் வால்களைப் பின் தொடர்ந்து (நாடோடிகளாக) சென்று கொண்டிருங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி),

(புகாரி: 7221)

பனூஅஸத் மற்றும் கத்ஃபான் ஆகிய இரு கிளையினரின் பெயர் தான் புஸாகா என்பதாகும்.

இப்போது சமாதானத்திற்கு வந்திருக்கும் பனூஅஸத் மற்றும் கத்பான் கிளையினர் செய்திருந்த அட்டகாசத்தையும், அநியாயத்தையும் கருத்தில் கொண்ட ஆட்சித் தலைவர், “ஊரை விட்டு ஓடச் செய்யும் போர் அல்லது இழிவை ஜீரணித்துக் கொள்ளும் சமாதானம்” என்று குறிப்பிட்டார்கள். அதற்கு அவர்கள், “ஊரை விட்டு ஓடச் செய்யும் போர் என்பது தெரிந்த ஒன்று. இழிவை ஜீரணித்துக் கொள்கின்ற சமாதானம் என்றால் என்ன?” என்று வினவினர்.

“போர்க்குதிரைகள், போர் ஆயுதங்கள் உங்களிடமிருந்து பறிக்கப்படும். உங்களை மன்னிப்பதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதியான எனக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் காட்டுகின்ற வரை நீங்கள் ஒட்டகங்களின் வால்களைப் பிடித்துச் செல்கின்ற நாடோடிகளாகவே விடப் படுகின்றீர்கள்.

போரில் எங்களிடமிருந்து நீங்கள் கைப்பற்றியதை எங்களிடமே திரும்பத் தந்து விட வேண்டும். உங்களிடமிருந்து நாங்கள் கைப்பற்றியதைத் திரும்பத் தர மாட்டோம். அவை எங்களுக்குப் போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களாகும்.

எங்களில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்தில் இருக்கின்றனர். உங்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்தில் இருக்கின்றார்கள் என்று நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்கள். எங்கள் அணியில் கொல்லப்பட்டவர்களுக்கு நீங்கள் நட்டஈடு தர வேண்டும். உங்கள் அணியில் கொல்லப்பட்டவர்களுக்கு நாங்கள் நட்டஈடு தர மாட்டோம்” என்று ஆட்சித்தலைவர் சொன்னார்கள்.

இவர்களிடம் தெரிவித்த கருத்தை அபூபகர் (ரலி) அவர்கள் மக்கள் மன்றத்தில் வைத்த போது உமர் (ரலி) அவர்கள் குறுக்கிட்டு, “முதலில் நீங்கள் விதித்த நிபந்தனைகள் சரி தான். இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்ட நிபந்தனை, அதாவது எங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீங்கள் நட்டஈடு தரவேண்டும் என்ற நிபந்தனையில் நான் உடன்படவில்லை. நம் அணியில் கொல்லப்பட்டவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி போரிட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்குரிய கூலி அல்லாஹ்விடம் தான்” என்று கருத்து தெரிவித்தார்கள். நபித்தோழர்களும் உமர் (ரலி) கூறிய கருத்தை ஆமோதித்தனர்.
(ஆதாரம்: ஃபத்ஹுல்பாரி, பிதாயாவந்நிஹாயா)

இது அபூபக்ர் (ரலி) அவர்களின் கொள்கை உறுதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். விளைவு என்னவாக இருந்தாலும் கொள்கையில் வளைவு கிடையாது என்ற அபூபக்ர் (ரலி)யின் கொள்கைப் பிடிப்புக்குக் கிடைத்த மகத்தான பரிசாகும். அதனால் மதம் மாறி சண்டையிட்டவர்கள் மனம் மாறி சமாதானத்திற்கு வந்தனர். ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று கலகம் விளைவித்தவர்கள் ஜகாத் வரிகளை அணியணியாகக் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.

அபூபக்ர் (ரலி)யின் கடினமான அணுகுமுறையைக் கண்டு சங்கடப்பட்ட உமர் (ரலி) அவர்கள் இறுதியில் அபூபக்ர் (ரலி)யின் முடிவை வெகுவாகப் பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

“நான் மதீனா நகரத்திற்குச் சென்றேன். அங்கு மக்கள் குழுமியிருந்தனர். அங்கு இருவரைக் கண்டேன். அப்போது அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரின் தலையை முத்தமிட்டுக் கொண்டிருந்தார். முத்தமிடுபவர், முத்தமிடப்படுபவரை நோக்கி, “நான் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் இல்லையெனில் நாங்கள் நாசமாகியிருப்போம்’ என்று சொன்னார்” என்று அபூரஜா கூறியதும், “முத்தமிட்டவர் யார்? முத்தமிடப்பட்டவர் யார்?” என்று கேட்ட போது, “முத்தமிட்டவர் உமர் (ரலி), முத்தமிடப்பட்டவர் அபூபக்ர் (ரலி)” என்று பதிலளித்தார். நூல்: தன்தாவீயின் அபூபக்ர் (ரலி) வரலாறு

புஜாஆ சம்பவம்

புஜாஆ என்பனின் பெயர் இயாஸ் பின் அப்துல்லாஹ் என்பதாகும். இவன் அபூபக்ர் (ரலி)யிடம் வந்து, தான் இஸ்லாத்தில் இணைந்ததாகத் தெரிவித்தான். மேலும் தன்னுடன் ஒரு படையை அனுப்பி வைத்தால் மதம் மாறியவர்களுக்கு எதிராக தான் போர் புரிவதாகவும் தெரிவித்தான். அதன்படி அபூபக்ர் (ரலி) படையை அவனுடன் அனுப்பி வைத்தார்கள்.

மதம் மாறியவர்களுக்கு எதிராக படை நடத்திச் செல்கிறேன் என்று சென்றவன், தனக்கு எதிரில் பட்ட முஸ்லிம்கள் மற்றும் மதம் மாறியவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்தான்.

தகவல் அறிந்ததும் அபூபக்ர் (ரலி) மீண்டும் ஒரு படையை அனுப்பி அவனுக்குப் பின்னால் தொடரச் செய்து அவனைக் கைது செய்து வரும் படி உத்தரவிட்டார்கள். அதன் படி அவன் கைது செய்யப்பட்டு அவனது கைகள் பிடரியில் கட்டப்பட்டு மதீனாவுக்குக் கொண்டு வரப்பட்டான். அங்கு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இது வரை வரலாற்றில் பொய் நபியென்று வாதிட்ட ஆண்களைச் சந்தித்தோம். பெண் நபி இது வரை தோன்றியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒரு பெண்ணும் தன்னை நபியென கூறிக் கொண்டு புறப்பட்டு விட்டாள். அவளையும் நபியென்று நம்பி ஒரு கூட்டம் அவளுக்குப் பின்னாலும் சென்றது. அந்த விநோதத்தை, வித்தியாசமான செய்தியைப் பார்ப்போம்.