13) போலித் தூதரின் பொய் வஹீ

நூல்கள்: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

போலி நபி தலீஹாவும், அவனை நம்பியவர்களும், அவனுடைய படையில் இணைந்தவர்களும் களத்தை நோக்கி வந்தார்கள். பனூஃபிராஸா கிளையைச் சார்ந்த உயைய்னா பின் ஹிஸ்ன் என்பவர் தலீஹாவின் வலது கரமாவார். அவர் போலி நபியுடன் இணைந்து போராட ஏழு பேர்கள் அடங்கிய படையுடன் வந்திருந்தார். மக்கள் அணி வகுத்து நின்று போர் செய்தனர்.
போலி நபி தலீஹாவோ ஒரு போர்வையை சுற்றிக் கொண்டு தனக்கு இறைச்செய்தி (வஹீ) வருவதாக பாவனை செய்து கொண்டிருந்தான். போர் செய்து கொண்டிருக்கும் போர் படைத் தளபதியும் போலி நபியின் வலது கையுமான உயைய்னா, போரில் சற்று களைப்படையும் போது போர்த்திக் கொண்டிருக்கும் தலீஹாவிடம் வந்து “உம்மிடம் ஜிப்ரயீல் வந்தாரா?’ என்று கேட்பார். தலீஹா, “இல்லை’ என்று சொன்னதும் திரும்பச் சென்று போரிடுவார். மீண்டும் அது போல் தலீஹாவிடம் வந்து கேட்பார். தலீஹா அதே பதிலைத் தெரிவிப்பார். மறுபடியும் சென்று போரிடுவார். மூன்றாவது தடவை உயைய்னா வந்து, “என்ன? ஜிப்ரயீல் வந்தாரா?’ என்று கேட்ட போது தலீஹா “வந்தார்’ என்று பதிலளித்தார்.

“ஜிப்ரயீல் இறக்கிய அருள் வசனங்களில் என்ன சொன்னார்?’ என்று உயைய்னா கேட்டார்.

“அவருடைய (முஹம்மது நபி) திருகையைப் போல் உமக்கும் ஒரு திருகை (நபித்துவம்) உள்ளது. நீ மறக்க முடியாத ஒரு நிகழ்வும் நிகழவிருக்கின்றது’ இது ஜிப்ரயீல் அருளிய வசனங்களாகும் என்று தலீஹா கூறினார்.
யதுகை மோனையுடன் திருகை என்றெல்லாம் கவிதை நடையில் சில வார்த்தைகளை தலீஹா திருவாய் மலர்ந்ததும் இவர் சொல்வது பொய் என்பதைப் புரிந்து கொண்ட உயைய்னா தலீஹாவை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்.

புறமுதுகு காட்டிய போலித்தூதர்

நீர் மறக்க முடியாத ஒரு சம்பவம் உமக்கு ஏற்படப் போவதை அல்லாஹ் உமக்கு உணர்த்துகின்றான் போல் தெரிகின்றதே என்று தலீஹாவின் உளறலைக் கிண்டல் செய்த உயைய்னா “இனியும் இந்தப் பொய்யனுக்குப் பின்னால் நின்றால் நாம் உருப்பட மாட்டோம்’ என்று உறுதி பூண்டார். தன்னுடைய படையினரை நோக்கி, “ஃபிராசா கிளையினரே! போதும்! இவருடன் சேர்ந்து போரிட்டது போதும்! திரும்புங்கள்!’ என்று சொன்னதும் அலை அலையாக மக்கள் தலீஹாவை நட்டாற்றில் விட்டு ஓடத் துவங்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட்டு ஹுனைன் போர்க்களத்தில் மக்கள் ஓடிய போது, “நான் ஒரு நபி! இதில் பொய்யில்லை. நான் அப்துல் முத்தலிபின் பேரன்!” என்று அல்லாஹ்வின் அருளை நம்பி தன்னந்தனியாக போர்ப்பரணி பாடினார்களே அது போன்று இந்தப் பொய் நபியால் போர்ப் பரணி பாட முடியவில்லை.

இது போன்ற ஓர் இக்கட்டு வந்தால் தான் தப்பி ஓடுவதற்காக தயார் நிலையில் வைத்திருந்த குதிரையில் தனது மனைவியை முன்னால் வைத்துக் கொண்டு அதைத் தட்டி விட்டார். அவ்வளவு தான்! குதிரை காற்றாய்ப் பறக்க ஆரம்பித்தது. ஒரு வழியாக அவர் தனது மனைவியுடன் சிரியா போய்ச் சேர்ந்தார். போலி நபியுடன் சேர்ந்து போரிட்ட ஒரு கூட்டம் தப்பி ஓடியது. இன்னொரு கூட்டத்தினர் அந்தப் போரிலேயே கொல்லப்பட்டனர்.
சரிக் கட்ட முடியாத தோல்வி முகத்தைச் சந்தித்து, சந்தி சிரிக்கும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்திருப்பது இனியும் சரிப்பட்டு வராது என்று ஆமிர், சலீம், ஹுவாஸான் ஆகிய கிளையினர் ஒரு முடிவுக்கு வந்தனர்.

அல்லாஹ்வையும் அவனது உண்மையான தூதரையும் நம்புவோம். ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று சவடால் அடிக்காமல், சத்திய இஸ்லாத்திற்கு எதிராக ஜம்பம் பேசாமல் அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாகக் கட்டுப்படுவோம். நம்முடைய உயிர்களையும் உடைமைகளையும் அவனுக்குக் காணிக்கையாக்க முன்வருவோம். போலித் தூதரிடமிருந்து வெளியேறிய மக்களுடன் நாமும் வெளியேறி விடுவோம் என்று உண்மையான அல்லாஹ்வின் தூதரை நம்பிக்கை கொண்ட படையினருடன் வந்து இணைந்து கொண்டனர். இது அவர்கள் எடுத்த தெளிவான முடிவாகும்.

இவ்வாறு தலீஹாவும் அவனது படையும் உண்மையான அல்லாஹ்வின் தூதரின் ஆட்சிப் பிரதிநிதி அபூபக்ர் (ரலி) அவர்களின் படைக்கு முன்னால் மண்ணைக் கவ்வுகின்ற

மாபெரும் தோல்வியைத் தழுவியது.
அபூபக்ர் (ரலி) அவர்களின் வரலாற்றில் இப்படி ஒரு வில்லனாகக் கிளம்பிய இந்தத் தலீஹா அல் அஸதீ நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மதம் மாறி விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்ததும் பத்ருப் பகுதியைச் சார்ந்த உயைய்னா பின் ஹிஸ்ன் தலீஹாவுக்கு உதவ முன்வந்து அவரும் மதம் மாறினார். “பனீஹாஷிம் கிளையிலிருந்து வந்த நபியை விட பனீஅஸத் கிளையிலிருந்து வந்த நபி தான் எனக்கு மிகவும் பிரியமானவர். முஹம்மது மரணித்து விட்டார். இதோ தூதர் தலீஹா இருக்கின்றார். இவரைத் தூதராக ஏற்று பின்பற்றுங்கள்’ என்று உயைய்னா பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரத்தைக் கேட்டுத் தான் இவரது ஃபிராசா கிளையினர் தலீஹாவைப் பின்பற்றினர்.

இவ்விருவரின் முதுகெலும்புகளையும் காலித் பின் வலீத் முறித்து விட்ட பின்பு தன் மனைவியுடன் தப்பிச் சென்ற தலீஹா சிரியாவில் கல்ப் கிளையாரிடம் போய்த் தங்கினார். தலீஹாவின் போர்த்தளபதியான உயைய்னா பின் ஹிஸ்னை காலித் பின் வலீத் கைது செய்தார். மதீனாவின் தெருக்கள் வழியாக இழுத்து வரப்பட்ட உயைய்னாவின் மேனியில் மதீனாவின் சிறுவர்கள் கைகளை வைத்துக் குத்தியவாறு, “அல்லாஹ்வின் விரோதியே! இஸ்லாத்தை விட்டு வெளியே போய் விட்டாயா? மதம் மாறி விட்டாயா?” என்று கேட்டனர். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஈமான் கொள்ளவே இல்லை” என்று பதிலளித்தார்.

இறுதியாக ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்கு மரண தண்டனை வழங்காமல் மன்னிப்பு வழங்கினார்கள். தலீஹாவின் தளபதிகளில் ஒருவரான குர்ரத் பின் ஹுபைரா என்பவரும் உயைய்னாவுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கும் அபூபக்ர் (ரலி) மன்னிப்பு வழங்கினார்கள். அபூபக்ர் (ரலி)யின் மன்னிக்கும் மனப்பான்மையையும் மாண்பையும் கண்ட உயைய்னா இஸ்லாத்தில் இணைந்து சிறந்த முஸ்லிமாக விளங்கினார்.

புனித இஸ்லாத்தில் போலித் தூதர்

உயைய்னா பின் ஹிஸ்னைப் போல் தலீஹாவும் புனித இஸ்லாத்திற்குத் திரும்பினார். அபூபக்ர் (ரலி) அவர்களைப் போய் நேரடியாகச் சந்திப்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார். அதே சமயம், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றினார்.
அபூபக்ர் (ரலி) தனது தளபதியான காலித் பின் வலீத் (ரலி)க்குக் கடிதம் எழுதும் போது, “நீ தலீஹாவிடம் போர் தொடர்பான ஆலோசனை கேட்கத் தவற வேண்டாம். ஆனால் அதே சமயம் அதிகாரப் பொறுப்பை அவரிடம் வழங்கி விட வேண்டாம்” என்ற அரியதோர் ஆலோசனையையும் வழங்கியிருந்தார்கள். இது அபூபக்ர் (ரலி)யின் ஆட்சித் திறமையையும் மதிநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றது.

மலரும் நினைவுகள்

படை நடத்திச் செல்லும் காலித் பின் வலீத் (ரலி), தலீஹாவின் படையிலிருந்து பின்னர் இஸ்லாத்திற்குத் திரும்பிய முஸ்லிம் சகோதரர்களிடம், “தலீஹாவின் வஹீயைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்று கேட்கின்றார். அவர்களும் மலரும் நினைவுகளாக தலீஹாவின் வாயிலிருந்து வஹீயென்று வந்தவைகளை எடுத்துரைக்கின்றனர். யதுகை மோனையுடன் இருந்த அவை தலீஹாவின் கற்பனையில் உதித்தவை தான் என்பதற்கு அவ்வார்த்தைகளே சான்று கூறி நின்றன. அவற்றில் சில அல்லாஹ்வின் வேதத்திலிருந்து களவாடப்பட்டிருந்தன.

இவ்வாறு போலித் தூதரின் பொய் வஹீ வார்த்தைகள் காலித் பின் வலீதின் போர்ப் பணிகளுக்கு ஊடே பொழுது போக்கு அம்சங்களாயின. இவ்வாறாக போர்ப் படைத்தளபதி காலித் பின் வலீத் (ரலி) தனது போர் பணி நிமித்தமாக ஒரு மாத காலம் “புஸாகா’வில் தங்கியிருக்கின்றார்கள். அவ்வாறு தங்கியிருக்கும் கால கட்டத்தில் குறி வைத்து, கணக்கெடுத்து, யார் யாரெல்லாம் மதம் மாறி முஸ்லிம்களைக் கொன்றார்களோ அவர்களைக் கண்டு பிடித்து மரண தண்டனை வழங்கினார். மதம் மாறியவர்கள் இனிமேல் மறுபடியும் மதம் மாறுதல் என்ற முடிவை நோக்கிச் செல்லாத அளவுக்கு மாபெரும் நடவடிக்கை எடுத்தார்கள்.