12) பொய் நபியை எதிர்த்துப் போர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

புகாரியில் பொய் நபி தொடர்பான ஹதீஸின் அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் கூறுவது போல், முஆத் பின் ஜபல், அபூ மூஸா அல்அஷ்அரி ஆகிய இருவரும் யமனுக்குப் பொறுப்பாளர்களாக அனுப்பப்பட்ட அந்தக் கால கட்டத்திலேயே அன்ஸீ என்ற போலி நபி கொல்லப்பட்டு விடுகின்றான்.

முதல் போலி நபி கொல்லப்பட்ட இந்தச் செய்தி அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ரபிய்யுல் அவ்வலின் கடைசியில் வந்து சேர்ந்தது. அது அபூபக்ர் (ரலி) அவர்கள் உஸாமாவின் படையை அனுப்பிக் கொண்டிருந்த நேரமாகும். இவ்வாறு முதல் போலி நபியின் கதை முடிந்து போனது.

இனி நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டது போன்று அவர்களது காலத்திலேயே தோன்றிய இன்னொரு போலி நபியின் கதை என்ன என்பதையும், அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் தோன்றிய தலீஹாவின் கதை என்ன என்பதையும் இந்த வரலாற்றுத் தொடரின் பொருத்தமான இடங்களில் காண்போம்.

இப்போது தலீஹா என்ற போலி நபியைப் பற்றி முதலில் பார்ப்போம்.

அபூபக்ர் (ரலி)யின் வாழ்த்துடன் வழியனுப்பப் படுகின்ற அல்லாஹ்வின் போர்வாள் காலித் பின் வலீத் (ரலி), தில்கிஸ்ஸாவிலிருந்து புறப்படும் போது. “உமது பயணத்தின் இடையே முக்கிய தளபதிகளுடன் உம்மை கைபர் வழியாக சந்திக்கின்றேன்” என்று சொல்லி வைத்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் கூறியதன் நோக்கம், புரட்சி செய்து கொண்டிருந்த புரட்சியாளர்களைப் பயமுறுத்தச் செய்வதற்காகத் தான். இப்படி ஒரு அறிவுரையை அபூபக்ர் (ரலி) வழங்கும் போது, காலித் பின் வலீத் ஆற்ற வேண்டிய கடமைகள் என்னென்ன? என்பதையும் விவரிக்கலானார்கள்.

காலித் பின் வலீதுக்குப் பிறப்பித்த முதல் கட்டளையே போலி நபி தலீஹாவை எதிர் கொள்ள வேண்டும் என்று தான். அடுத்து பனூதமீம் கிளையினரை எதிர் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்கள். இதற்கிடையே தலீஹா தன்னுடைய கிளையினரான பனூஅஸத் மற்றும் கத்பான் கிளையினரிடம் சென்றிருந்தான். இவர்களுடன் அப்ஸ் மற்றும் துப்யான் கிளையினர் சேர்ந்து கொண்டனர். இது மட்டுமின்றி பனூஜதீலா, கவ்ஸ், தய்யி கிளையினரிடம் படையாட்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.

அக்கிளையினரும் தலீஹாவின் வேண்டுகோளை ஏற்று தலீஹாவை சீக்கிரம் அடையத்தக்க வகையில் தலீஹா சென்ற வழியில் தத்தமது படைகளை அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே அபூபக்ர் (ரலி) அவர்கள், காலித் பின் வலீதின் படைக்கு முன்னால் அதிய்யி பின் ஹாதம் தலைமையில் ஒரு படையை தய்யி கிளையாரை நோக்கி தக்க சமயத்தில் அனுப்பி வைத்திருந்தார்கள்.

அதிய்யி பின் ஹாதம் (ரலி), தய்யி கிளையைச் சேர்ந்தவராவார்கள். அதனால் அபூபக்ர் (ரலி) மிகவும் சுதாரிப்புடன், “நீ உன்னுடைய தய்யி கூட்டத்தாரை முதலில் உடனே போய் சந்தித்து, அவர்கள் தலீஹாவுக்கு ஆதரவாக ஒட்டு மொத்தமாகக் கிளம்பி விடாது தடுத்து நிறுத்து” என்று கூறி அதிய்யை அனுப்பினார்கள்.

கைமேல் கண்ட பலன்

அபூபக்ர் (ரலி)யின் சமயோசிதம் சரியான பலனை ஈட்டியது. அதிய்யி தன்னுடைய கூட்டத்தாரை அடைந்து ஆட்சித் தலைவரிடம் உறுதிப் பிரமாணம் செய்யுமாறும் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்ப வருமாறும் அம்மக்களை அழைக்கின்றார்கள். அதற்கு அம்மக்கள், “ஒரு போதும் நடக்காது. இந்த ஆளிடம் நாங்கள் வாக்குப் பிரமாணம் எடுத்துக் கொள்ள மாட்டோம்” என்று சொல்கின்றார்கள்.

அதற்கு அதிய்யி, “அல்லாஹ்வின் மீதாணையாக, உங்களிடம் ஒரு படை வரும். அது உங்களை எதிர்த்துப் போரிடும். அப்போது அந்த ஆளை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்வீர்கள்” என்று அம்மக்களிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அடிக்க, அடிக்க அம்மியும் நகரும் என்பது போல் அசைந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். அதிய்யின் அக்கினி வார்த்தையில் மெழுகாக உருக ஆரம்பித்தார்கள்.

இந்தக் கட்டத்தில் அன்சாரிகளின் படை முன்னால் அணி வகுத்து வர காலித் பின் வலீதின் படை தய்யி கிளையாரை நோக்கி வந்து விட்டது. ஸாபித் பின் கைஸ் அந்த அன்சாரி அணியில் உள்ள ஒருவராவார்.

ஸாபித் பின் அக்ரம், உக்காஷா பின் மிஹ்சன் ஆகிய இருவரையும் உளவாளிகளாக காலித் பின் வலீத் அனுப்பி வைத்திருந்தார். இவர்கள் இருவரையும் தலீஹாவும் அவனுடைய சகோதரர் ஸலாமாவும் தங்கள் அணியினருடன் சந்தித்த போது மோதல் துவங்கியது.

இம்மோதலின் போது உளவாளியாக மாட்டிக் கொண்ட உக்காஷா இங்கு கொல்லப்படுகின்றார். இதற்குக் காரணம், மதம் மாறியவர்களுக்கு எதிராக நடந்த போரின் போது, உக்காஷா, தலீஹாவின் மகன் ஹிபாலைக் கொன்றிருந்தார். இதற்குப் பழி வாங்கும் விதமாக இப்போது உக்காஷா தலீஹாவால் கொல்லப்படுகின்றார். இதன் பின்னர் தலீஹாவும் அவனது சகோதரர் ஸலமாவும் சேர்ந்து ஸாபித் பின் அக்ரமையும் கொன்று விடுகின்றனர்.

அவர்களுக்குப் பின்னால் படை நடத்தி வந்த காலித் பின் வலீத் மற்றும் முஸ்லிம்கள், இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டு வேதனை அடைந்தனர். இப்போது காலித் பின் வலீத் அவர்கள் தலீஹாவை ஒரு கை பார்த்து விடவேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

அந்த வேகத்தில் தய்யி கிளையினரின் கதையை முடிக்க காலித் கிளம்பிய போது, “பொறுங்கள். காலிதே பொறுங்கள். எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் தாருங்கள். நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன். நான் அவர்களிடம் வருவதற்கு முன்னாலேயே ஒரு தொகையினர் அவசரப்பட்டு தலீஹாவின் படையில் இணைந்து விட்டனர். அவர்களிலிருந்து ஒரு சாரார் தலீஹா அணியில் இருக்கும் தருவாயில் இம்மக்கள் உங்கள் அணியுடன் வந்து சேர்ந்து விடலாம். ஆனால் அவர்கள் உங்களுடன் வந்து சேர்ந்த விபரம் தலீஹாவுக்குத் தெரிய வந்தால் அவன் தன்னுடன் உள்ள தய்யி கூட்டத்தாரைக் கொன்று விடுவான். இதைக் கருத்தில் கொண்டு தான் இம்மக்கள் உங்களைப் பின்பற்றாதிருக்கின்றனர்” என்று அதிய்யி கூறினார்.

நீங்கள் அவசரம் காட்டி, இம்மக்கள் கொல்லப்பட்டு விட்டால் அவர்கள் நரகத்தில் போய் சேர்வார்கள். இவ்வாறு அவர்களிடம் நிதானம் காட்டி அவர்கள் நேர்வழியடைந்து சுவனம் செல்வது தான் உங்களுக்கு விருப்பமான காரியம் என்று விளக்கமளித்தார்.

அதிய்யின் வேண்டுகோளுக்கிணங்க, காலித் பின் வலீத் அவகாசம் அளித்தார். அதிய்யி அவர்கள் சொன்னது போன்று இந்த அதிசயம் நிகழ்ந்தது. ஒரு கூட்டமே சத்தியத்தின் பக்கம் திரும்பியது. சத்தியத்தின் பக்கம் திரும்பிய அம்மக்களுடன் 500 பேர் கொண்ட ஒரு படையுடன் அதிய்யி, காலித் பின் வலீதின் படையில் இணைந்தார்.

இதன் பின் காலித் பின் வலீத், பனூ ஜதீலா கிளையை நோக்கிப் புறப்பட்டார்கள். இங்கும் காலித் பின் வலீதிடம் அதிய்யி குறுக்கிட்டு, எனக்குக் கொஞ்சம் அவகாசம் தாருங்கள். நான் தய்யி கிளையாரை வழிக்குக் கொண்டு வந்த மாதிரி, இவர்களையும் வழிக்குக் கொண்டு வருகின்றேன். அல்லாஹ் தய்யி கிளையாருக்கு நேர்வழி காட்டியது போன்று இவர்களுக்கும் நேர்வழி காட்டக் கூடும் என்று கூறினார்.

அதிய்யி சொன்னது போன்று, பனூஜதீலா கிளையினரிடமிருந்து ஆயிரம் பேர் காலித் பின் வலீதின் படையில் இணைந்தனர். இது அபூபக்ர் (ரலி)யின் உறுதிக்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் உதவியாகும்.

புதுத் தெம்புடன் போலி நபியை எதிர் கொள்ளல்

சமயோசிதத்துடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்த சமாதானப் பேரொளி அதிய்யி பின் ஹாதம் சாமர்த்தியமாகவே தன்னுடைய கிளையினரை அசத்தியத்திலிருந்து மீட்டெடுத்து விட்டார்கள். இந்த வகையில் அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற பண்பாளராகத் திகழ்கின்றார்கள். அவர்கள் மூலம் இந்தப் பேரணியினர் காலித் பின் வலீதின் படையுடன் இணைந்தனர். இது காலித் பின் வலீதின் கரத்தை வலுப்படுத்தியது.

எனவே அவர்கள் புத்துணர்ச்சியுடன், புதுத் தெம்புடன் போலி நபியை எதிர் கொள்வதற்குக் களம் புகுகின்றார்கள். புஸாகா என்ற இடத்தில் போர் படைகள் ஒன்று திரண்டன. புடை சூழ அரபிக் கிளையினர் அனைவரும் இருந்த இந்த இரு பெரும் அணியினரில் தோல்வியைத் தழுவப் போவது யார் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.

வெல்லப் போவது யார்? வீழப் போவது யார்? இஸ்லாமிய அணியினரா? அல்லது திசை மாறிச் சென்ற போலி நபியை நம்பிக்கை கொண்ட அணியினரா?