08) புரட்சியாளர்களின் போர் முழக்கங்கள்

மற்றவை: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு
அபூபக்ர் (ரலி) அவர்கள் வழியனுப்பி வைக்கும் அந்தக் கட்டத்தில் அப்படையினருக்கு பத்துக் கட்டளைகளைப் பிறப்பிக்கின்றார்கள்.
மக்களே! நில்லுங்கள். உங்களுக்குப் பத்து விஷயங்களை பேணும் படி அறிவுரை வழங்குகின்றேன்.
1. நீங்கள் துரோகமிழைத்து விடாதீர்கள்.
2. வெற்றிப் பொருட்களைப் பங்கிடும் முன் அபகரித்து விடாதீர்கள்.
3. வாக்குறுதிக்கு மாறு செய்யாதீர்கள்.
4. உயிருடன் இருக்கும் போதோ, இறந்த பின்போ வதை செய்யாதீர்கள்.
5. சிறு குழந்தையை, வயது முதிர்ந்தவரை, பெண்களை நீங்கள் கொலை செய்யாதீர்கள்.
6. பேரீச்சை மரத்தையோ, கனி தரும் வேறு எந்த மரத்தையுமோ வெட்டித் தரித்து விடாதீர்கள்.
7. ஆடு, மாடு, ஒட்டகத்தை உணவுக்காகவே தவிர அறுக்காதீர்கள்.
8. ஆசிரமங்களில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டு வாழ்பவர்களை அவர்களுடைய வழியில் நீங்கள் விட்டு விடுங்கள்.
9. நீங்கள் செல்கின்ற மக்கள், உங்களுக்குப் பல்வேறு உணவுகளைப் பாத்திரங்களில் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவற்றை நீங்கள் சாப்பிடும் போது அல்லாஹ்வின் திருப்பெயரைச் சொல்லி சாப்பிடுங்கள்.
10. நீங்கள் ஒரு கூட்டத்தாரைச் சந்திப்பீர்கள். அவர்கள் தங்கள் தலைகளின் நடுப்பகுதிகளை மழித்து விட்டு அவற்றைச் சுற்றி தலைப்பாகைகளைப் போன்று விட்டிருப்பர். அத்தகையவர்களை நீங்கள் கொல்லாது விட்டு விட வேண்டாம்.
(நூல் : அபூபக்ர் வரலாறு தன்தாவீ, முஹம்மது குள்ரிபக்)
தொலைநோக்குப் பார்வை
அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்தப் படையை வழியனுப்பி வைக்கும் முன் எத்தனை இடர்கள் குறுக்கிட்டன. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல் வடிவம் கொடுத்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அரசியல் வாழ்க்கையை உற்று நோக்கும் போது உஸாமா தலைமையில் நியமித்த இந்தப் படை அவர்கள் நியமித்த இறுதிப் படையாகும். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு முழு முக்கியத்துவத்தை வழங்கினார்கள்.
இந்தப் படையனுப்புதலால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறும் விமர்சனத்தைப் பார்ப்போம்.
“வணக்கத்திற்குத் தகுதியான அந்த ஒரே ஒருவனான அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரலி) ஆட்சித் தலைவராக இல்லாதிருப்பின் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் சூழ்நிலை இருந்திருக்காது” என்று அபூஹுரைரா (ரலி) மூன்று தடவை கூறினார்கள். அப்போது அவர்களிடம். “அபூஹுரைராவே! நிதானம்” என்று சொல்லப் பட்டது. அதற்கு அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமாவின் தலைமையில் சிரியாவுக்குப் படையை அனுப்பி வைத்தார்கள். உஸாமா ‘தீகஸப்’ என்ற இடத்தில் தங்கியிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். மதீனாவைச் சுற்றியுள்ள அரபியர் மதம் மாறினர். நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) இடம் ஒன்று கூடினர். “உஸாமா படையை திரும்பப் பெறுங்கள். இந்தப் படையினர் ரோம் நோக்கி செல்கின்றனர். ஆனால் மதீனாவைச் சுற்றியுள்ள அரபியரோ மதம் மாறிக் கொண்டு இருக்கின்றனர்” என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி), “எந்த ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லையோ அந்த நாயன் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் கால்களை நாய்கள் கடித்துக் குதறினாலும் சரியே. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுப்பிய படையை நான் திரும்பப் பெற மாட்டேன். அவர்கள் கட்டிய கொடியை நான் அவிழ்க்க மாட்டேன்” என்று பதிலளித்தனர்.
இதன் விளைவாக மதம் மாற வேண்டும் என்று நினைத்த சமூகங்களை அந்தப் படையினர் தாண்டிச் செல்லும் போதெல்லாம் “சரியான பலம் இல்லாதிருப்பின் இப்படி ஒரு படை முஸ்லிம்களிடமிருந்து கிளம்பியிருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் ரோமானிய படையைச் சந்திக்கும் வரை நாம் இவர்களை விட்டு வைப்போம்” என்று பேசிக் கொண்டனர். உஸாமாவின் படையினர் ரோமானியரைக் களத்தில் சந்தித்து, தோற்கடித்து, கொன்று (வெற்றியுடன்) சுகமாகத் திரும்பினர். இதனால் அவர்கள் இஸ்லாத்திலேயே இருந்து விட்டனர். இவ்வாறு அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
(நூல் : பைஹகீ. இப்னு அஸாகீர்)
அபூபக்ர் (ரலி) அவர்கள் எடுத்த இரும்பைப் போன்ற உறுதியான நடவடிக்கை, ஆட்டம் கண்டு மதமாற்றம் அடைய இருந்தவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டது என்பதை அபூஹுரைரா (ரலி)யின் இந்த அறிவிப்பில் காண்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முடிவை எடுத்திருக்கும் போது அதில் நிச்சயமாக நன்மை தான் இருக்கும் என்ற அபூபக்ர் (ரலி)யின் அசைக்க முடியாத நம்பிக்கை தான்.
தலை விரித்தாடும் மதமாற்றம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததும் மதமாற்றம் இரு பரிமாணங்களில் தலை தூக்கியது.
1. ஜகாத்தைக் கொடுக்க மாட்டோம் என்று கூறி மார்க்கத்தின் 5 கடமைகளில் ஒன்றைப் புறக்கணித்து மதம் மாறினர்.
2. இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறி, பொய் முகம் காட்டிக் கிளம்பிய போலி நபிகளுக்கு ஈமான் கொண்டு, அதன் மூலம் இஸ்லாத்தை விட்டு வெளியேறினர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் உஸாமா படையனுப்புதலில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு கட்டி விட்டு ஊருக்குத் திரும்பும் போது இந்த இருவித பிரச்சனைகள் அவர்களை வரவேற்கின்றன.
இங்கு தான் அல்லாஹ்வின் வல்லமையை எண்ணி நாம் வியக்க வேண்டியுள்ளது. எந்தச் சமயத்தில் யார் யாரை எந்தப் பதவிக்குக் கொண்டு வர வேண்டுமோ அப்படிக் கொண்டு வந்து, தான் நாடியதை நிறைவேற்றுகின்றான் என்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பொதுவாகவே உமர் (ரலி) அவர்கள் தான் இது போன்ற விவகாரங்களுக்குப் பொருத்தம்! அவர்கள் தான் இத்தகைய விவகாரங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவார்கள் என்று நாம் விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த இடத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்தப் பணியை ஆற்றுகின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் எதிர்க்கின்றார்கள். பின்னர் அபூபக்ர் (ரலி)யின் உறுதிப்பாட்டைக் கண்டு வியந்து ஒத்துழைக்கின்றார்கள்.
இவற்றைப் பார்க்கும் போது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி)க்கு முதலிடம் அளித்ததன் முக்கியத்துவம் நமக்கு விளங்குகின்றது. உள்ளம் இந்த உண்மையை உணர்ந்து பூரிப்படைகின்றது. இந்தக் கண்ணோட்டத்தின் படி நாம் இப்போது. ‘ஜகாத்’ கொடுக்க மாட்டோம் என்று புரட்சி செய்தவர்களை எதிர்த்து அபூபக்ர் (ரலி) அவர்கள் போட்ட வீர நடையை, வெற்றி நடையைப் பார்ப்போம்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்ததும் மக்கா, மதீனா, பஹ்ரைன் ஆகிய மூன்று பள்ளிகள் உள்ள ஊர்களைத் தவிர மற்ற ஊர்கள் மதம் மாறி விட்டன. தொழுகை என்றால் அதை நாம் நிறைவேற்றுவோம். ஜகாத் எனில் எங்களுடைய பொருளாதாரங்களிலிருந்து எதுவும் பறிக்கப் பட அனுமதியோம்” என்று மதம் மாறியவர்கள் கூறினார்கள் என கதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(நூல் : தஹ்தீப் இப்னு அஸாகீர்)
தாயிஃப் நகரில் சகீப் கிளையார் இஸ்லாத்தில் உறுதியுடன் நிலைத்திருந்தனர். அவர்கள் இஸ்லாத்தை விட்டு விரண்டோடவுமில்லை. மதம் மாறவுமில்லை.
(நூல் : பிதாயா வன்னிஹாயா)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்ததும் பனூ ஹனீபா கிளையினர், இன்னும் ஒரு பெருங்கூட்டம் முஸைலமாவிடமும் பனூ அஸத், தய்யி இன்னும் ஒரு பெருங்கூட்டம் அஸத் கிளையைச் சார்ந்த தலீஹா என்பவனுடனும் சேர்ந்து விட்டனர். தலீஹா என்பவனும் முஸைலமா போலவே தான் ஒரு நபியென வாதிட்டான். (இதைப் பற்றி பின்னர் விரிவாகக் காண்போம்)
விவகாரம் பெரிதாக, நிலைமை கடுமையானது. அபூபக்ர் (ரலி) உஸாமா தலைமையில் படையை அனுப்பி விட்டிருந்தார்கள். அதனால் மதீனாவில் படை வீரர்கள் குறைந்து விட்டனர். கிராமப்புற அரபிகள் மதீனாவைக் கண் வைத்து அதைத் திடுமென தாக்கத் திட்டமிட்டனர்.
இதை அறிந்த அபூபக்ர் (ரலி) மதீனாவின் எல்லைகளில் அலீ பின் அபீதாலிப், சுபைர் பின் அல்அவாம், தல்ஹா பின் உபைதுல்லாஹ், ஸஃத் பின் அபீவக்காஸ், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோரைக் கொண்ட தலைமையில் பல படைப் பிரிவுகளை நியமித்தார்கள். “தொழுவோம். ஆனால் ஜகாத் கொடுக்க மாட்டோம்”என்று கூறி பல தூதுக் குழுக்கள் மதீனாவிற்கு வந்தன. வந்தவர்களில் சிலர் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக “(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.” என்ற 9:103 வசனத்தை எடுத்துக் கொண்டனர். அதன்படி அபூபக்ர் (ரலி)யின் பிரார்த்தனை எங்களுக்கு அமைதியைத் தராது. அதனால் நாங்கள் ஏன் இவரிடம் ஜகாத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு போதும் நாங்கள் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று பறை சாற்றினர்.
(நூல் : பிதாயா வன்னிஹாயா)
இறைத்தூதர் இருக்கும் போது அவருக்கு இணங்கி கட்டுப் பட்டோம். (அவர்கள் இறந்த பிறகு) அல்லாஹ்வின் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்த அபூபக்ருக்கு என்ன வேண்டிக் கிடக்கின்றது? என்று ஜகாத் கொடுப்பதை எதிர்த்து கவிதை வரிகள் பாடினர். (நூல் : தாரீஹ் தப்ரீ)
உமர் (ரலி)யின் வேண்டுகோள்
ஜகாத் வழங்க மாட்டோம் என்று கூறும் இந்த புரட்சி சிந்தனையாளர்கள், புது சித்தாந்தக்காரர்களின் போக்கு இஸ்லாமிய ஆட்சியைப் புரட்டி விடுமோ என்றெண்ணி பயந்த நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி)யிடம், “கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவோம். இப்படி ஒரு விடாப்பிடி, வளையாமுடி தேவையில்லை. இறங்கிப் போவோம். இணக்கத்தைக் காண்போம். நாம் இறங்கிப் போவதின் விளைவாய் அவர்களிடத்தில் இனியதொரு மாற்றம் ஏற்படும். அவர்களின் இதயங்களில் ஈமான் சரியான இடம் பிடிக்கும். அதன் பின் அவர்கள் ஜகாத் வழங்குவர்” என்று முறையிட்டனர்.
இங்கு தான் அபூபக்ர் (ரலி) தான் யார் என்பதை வெளிப்படுத்துகின்றார்கள். இணக்கம்,இரக்கம், சமாதானம், சமரசம் என்பதெல்லாம் மனிதர்களிடத்தில் ஏற்பட வேண்டும். அவர்கள் தங்களுக்குரிய கவுரவங்களை விட்டுக் கொடுத்தேனும் அவற்றை அடையத் தான் வேண்டும். ஆனால் அவற்றிற்காக அல்லாஹ்வின் சட்டங்கள் பலியாக்கப் படக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கின்றார்கள். அதனால் இந்த விஷயத்தில் கடுகளவு கூட இறங்கவில்லை.
உமர் (ரலி), அபூஉபைதா (ரலி), அபூஹுதைபா (ரலி)யின் அடிமையான ஸாலிம் ஆகியோர் வந்து முறையிடுகின்றனர். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆட்சிப் பிரதிநிதியே! மக்களிடம் அன்பு காட்டுங்கள்! மென்மையாக நடங்கள்!” என்று கூறினர். அதற்கு அபூபக்ர் (ரலி) என்ன கூறினார்கள் என்பதை  காண்போம், இன்ஷா அல்லாஹ்!