அற்புதங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அற்புதங்கள் சம்பந்தமாக இஸ்லாம் கூறும் பல்வேறு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் இந்த உரையில் நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக அல்லாஹ் நமக்கு அற்புதங்கள் சம்பந்தமாக ஒரு விதியை சொல்லித் தருகின்றான்.

அல்லாஹ்வின் விருப்பப்படியே அற்புதம்

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் இழப்பை அடைவார்கள்.

(அல்குர்ஆன் 40.78)

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 13.38)

இந்த இரண்டு வசனங்களிலும் இறைவன் சொல்வது, எந்த நபியாக இருந்தாலும் தாமாக நினைத்தவுடன் எந்த அற்புதத்தையும் கொண்டு வர இயலாது. தாமாக அற்புதங்கள் செய்யும் ஆற்றலை யாருக்கும் நான் கொடுக்கவுமில்லை. என்னுடைய அனுமதி இருந்தால் மட்டுமே அற்புதங்களைக் கொண்டு வர முடியும்.

ஆக, நபிமார்கள் செய்து காட்டிய எல்லா அற்புதங்களையும் இறைவனின் அனுமதியுடனே தான் செய்தார்கள். அவர்களுக்கு சுயமாக அந்த சக்தி – ஆற்றல் கொடுக்கப்படவில்லை என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம்.

அது மட்டுமல்லாமல் அத்தனை நபிமார்களும் அற்புதங்களைச் செய்து காட்டும் போது, “இதை நானாகச் செய்யவில்லை. மாறாக அல்லாஹ்வுடைய விருப்பம் மற்றும் அனுமதியைக் கொண்டுதான் செய்கிறேன்’ என்று மக்களிடம் கூறியதாக இறைவன் பின்வரும் வசனங்களில் சொல்லிக்காட்டுகிறான்.

“நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று அவர்களின் தூதர்கள் கூறினார்கள்.

(அல்குர்ஆன்: 14:11)

மேற்கண்ட வசனங்களிலிருந்து, நபிமார்கள் அற்புதங்கள் செய்தது உண்மை. ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் கட்டளையை கொண்டே தவிர அவர்கள் தாமாக சுய விருப்பப்படி நினைத்த நேரத்தில் செய்யவில்லை. செய்யவும் முடியாது என்பது விளங்குகிறது.

இதை இன்னும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதென்றால், அற்புதங்கள் சம்பந்தமாக இதுவரை நாம் பார்த்த சம்பவங்களிலிருந்தே நபிமார்களுக்குத் தாமாக அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இல்லை இல்லை என்பதையும், அல்லாஹ்வின் மூலமாகத் தான் நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அதில் முதலாவதாக, மூஸா நபியவர்கள் தன்னுடைய சமுதாய மக்கள் கேட்டதற்கிணங்க 12 ஊற்றுகளை ஏற்படுத்தினார்கள் என்பதை நாம் முன்னர் பார்த்தோம்.

அந்தச் சம்பவத்தில் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த மக்கள் மூஸாவிடத்தில் தண்ணீர் கேட்ட போது தன்னுடைய கையில் இருக்கும் கம்பைக் கொண்டு அடித்து தானாக தண்ணீரை வரவழைக்கச் செய்தார்களா? அல்லது அந்த சமுதாயத்திற்காக இறைவனிடத்தில் தண்ணீர் கேட்டு அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்ட பின் தண்ணீரை வரவழைக்கச் செய்தார்களா? என்பதைத்தான்.

ஏனென்றால் 2:60-வது வசனத்தின் ஆரம்பத்திலேயே மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!” என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஆக, அல்லாஹ் தான் இந்த அற்புதத்தை மூஸா நபியின் மூலம் செய்து காட்டியதாகச் சொல்கிறான். மூஸா நபி அந்த அற்புதத்தைத் தானாகச் செய்ததாக அந்த வசனம் சொல்லவில்லை.

அதே போன்று, மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் முதன் முதலில் உரையாடுவதற்காகக் கைத்தடியுடன் செல்கிறார்கள். அப்போது அல்லாஹ் மூஸா நபியிடத்தில், உனது வலது கையில் என்ன இருக்கிறது என்று கேட்க, அதற்கு அவர்கள் “இது என்னுடைய கைத்தடி. இதன் மூலம் நான் நடப்பதற்கும், ஆடு மாடுகளுக்கு இலை தழைகளை பறித்து போடவும், இன்னும் பல வேளைகளுக்காகவும் இதனை நான் பயன்படுத்துவேன்’ என்று சொல்கிறார்கள்.

உடனே அல்லாஹ், “அந்த கைத்தடியை கீழே போடுவீராக!’ என்று சொன்னவுடன் அவர்கள் அந்த கைத்தடியைக் கீழே போடுகிறார்கள். அந்தக் கைத்தடி உடனே பாம்பாக மாறுகிறது. அது பாம்பாக மாறியதைப் பார்த்த மூஸா நபியவர்கள் பயந்து நடுங்கியவர்களாக அந்த இடத்தை விட்டு விரண்டு ஓடினார்கள் என்ற செய்தியை முன்னர் நாம் பார்த்தோம். (பார்க்க:(அல்குர்ஆன்: 27:10)

மூஸா நபிக்கு அற்புதங்கள் செய்யக்கூடிய ஆற்றல் இருக்குமென்றால் ஏன் தன்னுடைய கைத்தடியை கீழே போட்டு அது பாம்பாக மாறியபோது பயந்து ஓடினார்கள்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கையில் இருக்கும் தடியைக் கீழே போடு என்று மூஸா நபிக்கு அல்லாஹ் தான் கட்டளையிடுகிறான். அந்தக் கைத்தடியும் அல்லாஹ்விடத்தில் இருந்து வந்த கைத்தடியோ, மந்திரக்கோலோ கிடையாது. ஒரு மனிதன் பயன்படுத்துகின்ற சாதாரணக் கம்புதான் அது. அதை அல்லாஹ் கீழே போடச் சொல்கிறான். ஏன் அல்லாஹ் இத்தடியை கீழே போடச் சொல்கிறான்? என்பது மூஸா நபிக்குத் தெரியவில்லை. அவ்வாறு போட்டால் என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது.

ஆக இதிலிருந்து இந்த அற்புதத்தை அல்லாஹ் தான் நிகழ்த்தியிருக்கிறான் என்பது தெளிவாகிறது.

அதே போன்று, மூஸா நபிக்கு மேலும் ஒரு அற்புதத்தை வழங்கினான். இவர் தூதர் என்பதில் எதிரிகள் சந்தேகத்தைக் கிளப்பிய போது இறைவன் மூஸா நபிக்கு “உம்முடைய கையை சட்டைப் பைக்குள் விட்டு வெளியே எடுப்பீராக’ என்று கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறு செய்தார்கள். மற்ற நேரங்களில் சாதாரணமாக இருந்த அவர்களுடைய கை அந்த நேரத்தில் மட்டும் பிரகாசமாகப் பளிச்சிடும் ஒளியாக ஆனது. ஏன் இவ்வாறு செய்யச் சொல்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு சட்டைப் பைக்குள் இருந்து கையை எடுத்தால் என்னவாகும் என்பதும் தெரியவில்லை.

இந்த அற்புதத்தை அல்லாஹ், தான் நிகழ்த்திக் காட்டியதாக(அல்குர்ஆன்: 28:32, 7:108, 27:12)ஆகிய வசனங்களில் குறிப்பிடுகின்றான். இதையும் முன்னரே நாம் பார்த்தோம்.

அதுபோன்று, பிர்அவ்னுக்கும், மூஸா நபியவர்களுக்கும் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் பிர்அவ்ன் ஏற்பாடு செய்திருந்த சூனியக்காரர்கள் தங்களுடைய கயிறைப் போட்டு பாம்பாக மாற்றி மக்களின் கண்களை வயப்படுத்துகிறார்கள். அது ஒரு மேஜிக் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஆனால் அதற்குப் பிறகு அல்லாஹ் மூஸா நபியிடத்தில் இருக்கும் கைத்தடியைப் போடச் சொல்கிறான். அது நிஜப் பாம்பாக மாறி அந்த போலிப் பாம்புகளை விழுங்கி விடுகின்றது. இறைவனிடமிருந்து கட்டளை வராமல் அவர் அந்தக் கைத்தடியைப் போட்டிருந்தால் அது பாம்பாக மாறியிருக்காது. இறைவனுடைய கட்டளை வந்த பிறகு தான் அந்தக் கைத்தடியைப் போடுகிறார்கள். அது பாம்பாக மாறுகிறது. இது தன்னால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாக அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான்.

“மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று அவர்கள் கேட்டனர். “நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். “உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(அல்குர்ஆன்: 7:113)முதல் 117 வரை)

மேலும் இந்தச் சம்வம் குர்ஆனில் 20:66 முதல் 69 வரை இடம் பெற்றுள்ளது.

“மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்” என்று கூறினோம். “உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

இந்த வசனத்தில், மூஸா நபியவர்களுக்கு அற்புதம் செய்யும் ஆற்றலும், மறைவான ஞானமும் இருந்திருந்தால், பிறகு ஏன் அந்த சூனியக்காரர்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் போட்டு, பாம்பாக மாற்றிய போது பயப்பட வேண்டும்? இவர்கள் செய்வது மேஜிக் தான். ஆனால் நம்மிடம் இருப்பதோ மிகப்பெரிய அற்புதம். நம்முடைய கம்பைப் போட்டு நிஜ பாம்பாக ஆக்கிவிடலாம் என்று நினைத்து பயப்படாமல் இருந்திருக்கலாம் அல்லவா?

ஆனால் அவர்களுக்கே இந்தப் போட்டியில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் இருந்திருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகு தான் அந்த அற்புதத்தைச் செய்து காட்டினார்கள்.

அது போன்று, பிர்அவ்னும், அவனது கூட்டத்தாரும் மூஸாவையும் அவரை ஈமான் கொண்டவர்களையும் கொல்வதற்காக விரட்டிக் கொண்டு வருகிறார்கள். கடைசியில் கடற்கரையை அடைகின்றார்கள். தப்பிப்பதற்கு வழி எதுவும் இல்லை. ஒன்று பிர்அவ்னிடம் அகப்பட்டு கொல்லப்பட வேண்டிய நிலை ஏற்படும். அல்லது கடலில் விழுந்து இறக்க நேரிடும் என்பதை அறிந்த மூஸா நபியின் கூட்டத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள். அப்போது அல்லாஹ் அங்கும் அனைவரும் பார்க்கும் விதமாக ஒரு அற்புதத்தை மூஸா நபிக்கு நிகழ்த்திக் காட்டியதாக (அல்குர்ஆன்: 26:62),63) வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

“உமது கைத்தடியால் கடலில் அடிப் பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.

(அல்குர்ஆன் 26.62,63)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் கட்டளையில்லாமல் மூஸா நபி தானாக தன்னுடைய கைத்தடியை கொண்டு கடலை அடித்து தன்னையும் தன்னுடைய கூட்டத்தாரையும் காப்பாற்றிக் கொண்டார்களா? அல்லது அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகு அதைச் செய்தார்களா? இறைவனுடைய கட்டளை வந்த பிறகு தானே அதைச் செய்தார்கள்.

மூஸா நபியவர்களுக்கு அற்புதம் செய்யும் ஆற்றல் இருந்தால், அவருடைய கூட்டத்தார், நாம் மாட்டிக் கொண்டோம் என்று சொன்னவுடன், ஏன் மாட்டிக் கொண்டோம்? இதோ என்னிடத்தில் கைத்தடி இருக்கிறது. இதைக் கொண்டு இந்த கடலை அடித்து இதில் ஒரு பாதை ஏற்படுத்தி நாம் தப்பித்து விடுவோம் என்று சொல்லியிருக்கலாமே!

ஆனால் அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான் – உதவி செய்வான் என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்வின் கட்டளைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். அதற்குப் பிறகு அல்லாஹ்வின் கட்டளையும் வருகிறது என்பதை நாம் மேற்கண்ட வசனத்தில் பார்க்கிறோம்.

மூஸா நபியிடம் அந்தச் சமுதாய மக்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது உணவு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். அப்போது மூஸா நபியவர்கள் இறைவனிடத்தில் தான் கோரிக்கை வைக்கின்றார்கள். இறைவன் அவர்களுக்கு மன்னு ஸல்வா எனும் அற்புத உண்வை இறக்கி வைத்த சம்பவத்தை(அல்குர்ஆன்: 20:80, 2:57)ஆகிய வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

மேலும் மற்றொரு அற்புதத்தையும் இறைவன் தான் செய்து காட்டியதாகப் பின்வரும் வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.

“ஒரு காளை மாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறிய போது “எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?” என்று கேட்டனர். என்றார். “உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையது‘ என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்” என்று அவர்கள் கேட்டனர்.

“அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!” என்று அவர் கூறினார்.

“உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அதன் நிறம் என்ன‘ என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்” என்று அவர்கள் கேட்டனர். “அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்” என்றார்.

“உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையது‘ என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்” என்று அவர்கள் கூறினர். “அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது” என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார்.

“இப்போது தான் சரியாகச் சொன்னீர்” என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர். நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன். “அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!” என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்

(அல்குர்ஆன்: 2:67-73)

இந்த வசனங்களில் மூஸா நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதற்குப் பிறகு தான் அந்தக் கட்டளைக்கு ஏற்றவாறு அவர்கள் அந்த மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியை இறந்து போன அந்த மனிதன் மீது போடுகிறார்கள். இதுவும் ஓர் அற்புதம்தான்.

நாம் மூஸா நபிக்கு அற்புதம் நடந்ததை மட்டும் தான் பார்க்கின்றோமே தவிர, அந்த அற்புதம் எப்படி நடந்தது? யாரால் நடந்தது? அவர் நினைத்தவுடன் நடந்ததா? அவர் அல்லாஹ்விடம் கேட்காமல் தானே செய்து காட்டினாரா? அல்லது அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பிறகு செய்து காட்டினாரா? என்பதை நாம் சிந்திக்க மறந்து விடுகின்றோம்.

மூஸா நபியவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் சம்பந்தமாக வரக்கூடிய அத்தனை சம்பவங்களிலும் அல்லாஹ், அத்தனை அற்புதங்களையும் தானே செய்து காட்டியதாகச் சொல்கிறான். அல்லாஹ்வின் கட்டளை அல்லது அவனுடைய அனுமதி கொண்டே தவிர மூஸா நபியவர்கள் அற்புதத்தைச் செய்து காட்டவில்லை. எனவே மூஸா நபிக்கு அற்புதங்கள் செய்யக்கூடிய ஆற்றல் இல்லை. இறைவனுக்கு மாத்திரம் தான் அந்த ஆற்றல் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

அது போன்று ஈஸா நபியவர்கள் சம்பந்தமாக வரக்கூடிய இறைவன் செய்து காட்டிய அற்புதங்களை இதற்கு முன்பாக நாம் பார்த்தோம். குர்ஆனில் 19:20, 3:49, 5:110, 3:37, 21:91, 66:12, 3:45,46,47 ஆகிய இடங்களில் ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதங்களைப் பற்றி இறைவன் கூறுகிறான்.

அவற்றில், ஈஸா நபியவர்கள் களிமண்ணால் ஒரு பறவையைச் செய்து அதை நிஜப் பறவையாக மாற்றிய அற்புதமாக இருக்கட்டும், பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்கியதாக இருக்கட்டும், இறந்தோரை உயிர்ப்பித்த சம்பவமாக இருக்கட்டும், அவருடைய சமுதாய மக்கள் உண்பதையும், அவர்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்வதாக இருக்கட்டும், வானத்திலிருந்து உணவுத் தட்டை இறக்கிய அற்புதமாக இருக்கட்டும்! இவை அனைத்தையும் அவர்களாகவே செய்து காட்டவில்லை. மாறாக, இறைவனின் கட்டளையுடனும், அனுமதியுடனும் தான் செய்து காட்டினார்கள் என்பதை மேலே நாம் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

களிமண்ணில் ஒரு பறவையைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தது அல்லாஹ்வின் அனுமதியுடன் தான். பிறவிக் குருடரை நீக்கியதும், குஷ்ட நோயைக் குணப்படுத்தியதும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான். இப்படி அத்தனை அற்புதங்களையும் இறைவனின் நாட்டப்படி அனுமதியுடன் தான் செய்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

அதே மாதிரி, இப்ராஹீம் நபிக்கு, நான்கு பறவைகளை அறுத்து துண்டுதுண்டாக ஆக்கி அவற்றை தனித் தனியாக நான்கு மலையின் மீது வைத்து விட்டுப் பிறகு, “நீ அவற்றை அழைத்தால் அவை உன் அழைப்பை ஏற்று உயிர்பெற்று வரும்’ என்று இறைவன் கட்டளையிட்டதாக(அல்குர்ஆன்: 2:260)வது வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலும் இறைவன் கட்டளையிட்டு இந்த அற்புதம் நடந்ததாகக் குறிப்பிடுகிறானே தவிர அவராகவே அந்த அற்புதத்தைச் செய்யவில்லை. அந்த ஆற்றலை அல்லாஹ் அவருக்கு கொடுக்கவில்லை.

அது போன்று இப்ராஹீம் நபியவர்களை எதிரிகள் தூக்கி தீயில் போட்டவுடன் அந்தத் தீயை இறைவன் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் குளிர்ச்சியாக ஏற்படுத்தினான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

“நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம்.

(அல்குர்ஆன்: 21:68-70)

இந்த அற்புதத்தையும் அல்லாஹ், தானே நிகழ்த்தியதாக சொல்லிக் காட்டுகிறான்.

அதே போன்று சுலைமான் நபியவர்கள் காற்றைத் தன் கைவசத்தில் வைத்திருந்தார்கள். இதை வைத்துக் கொண்டு சிலர் சுலைமான் நபி அவர்களுக்கு மிகப் பெரிய ஆற்றல் இருப்பதாகக் கூறிக்கொண்டு வருகின்றனர். இது அவர்களது அறியாமையை குறிக்கிறது.

சுலைமான் நபிக்கு காற்றை, தான் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தாக அல்லாஹ், பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறான்.

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம்

(அல்குர்ஆன்: 34:12)

அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

(அல்குர்ஆன்: 38:36)

அதே போன்று சுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறான்.

ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்

அல்குர்ஆன் (21:82)

ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். “இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!” (என்று கூறினோம்.)

அல்குர்ஆன் (38:37)

அதே போன்று தாவூத் நபிக்கும் அல்லாஹ் மலைகளையும், பறவைகளையும் தான் வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறான்.

பறவைகளையும், மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை (இறைவனைத்) துதித்தன.

(அல்குர்ஆன்: 21:79)

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். ‘மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்‘ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 27.16)

பறவைகளுடைய மொழிகளும் எங்களுக்கு தெரியும் என்று சுலைமான் நபி மக்களிடத்தில் சொல்லவில்லை. மாறாக எங்களுக்குக் கற்றுத்தரப் பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

சுலைமான் நபி செய்த எந்த அற்புதத்திலும் அவர் சம்பந்தப்படவேயில்லை. மாறாக அல்லாஹ் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான். தாவூத் நபிக்கு வழங்கப்பட்ட அற்புதங்களிலும் அவர் சம்பந்தப்படவே இல்லை. இறைவன் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்ததினால் அவர்களுக்கு அனைத்தும் கட்டப்பட்டு நடந்தன. இல்லாவிட்டால் எதுவும் அவருக்கு கட்டுப்பட்டிருக்காது.

ஆக, அற்புதங்களைப் பற்றி பொதுவான விதியாக அல்லாஹ் தன்னுடைய நாட்டப்படி, விருப்பப்படி இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டான். இதுவரை நாம் பார்த்த சம்பவங்கள் இடம்பெற்ற அந்தந்த வசனங்களிலேயே அல்லாஹ் சொல்லிவிட்டான்.

எந்த வசனத்திலும் நபிமார்கள் தாங்களே அற்புதங்கள் செய்ததாக வரவில்லை. ஒன்று நபிமார்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டு அதைச் செய்து காட்டுவார்கள். அல்லது அல்லாஹ் கட்டளையிட்டு அதை நபிமார்கள் மூலமாகச் செய்து காட்டுவான். இந்த இரண்டு வகைகளில் ஒன்றாகத்தான் நபிமார்கள் மூலமாக (வழியாக) அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது.

எனவே இன்று வழிகேடர்கள் சிலர், அற்புதங்கள் என்ற பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுவதிலிருந்து நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் சமுகத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

அற்புதங்களைப் பொறுத்தவரை, நபிமார்கள் பல அற்புதங்களைச் செய்தது போல நபிமார்களாக இல்லாத நல்லவர்கள் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள். அப்படியானால் நபிமார்களால் மட்டும்தான் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் அற்புதங்கள் ஏற்படுமா? என்பது இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

நபிமார்களுக்கு மட்டுமில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் அற்புதம் நிகழலாம் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஒருவருக்கு அற்புதம் நிகழ்ந்தது என்றால் அவர் பெரிய மகானாக இருக்க வேண்டும். அவ்லியாவாக இருக்க வேண்டும். அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட அடியாராகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அது அடையாளம் கிடையாது.

எந்த ஒரு முஃமினாக இருந்தாலும் அவருக்கு அல்லாஹ் உதவி செய்ய நாடிவிட்டால் அற்புதமான முறையில் அந்த உதவியை கிடைக்கச் செய்வான். இந்த வகையான ஒரு அற்புதமும் மார்க்கத்தில் இருக்கிறது.

நபிமார்களுடைய அற்புதத்திற்கும், இந்த அற்புதத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், நபிமார்கள் ஒரு அற்புதத்தைச் செய்வதற்கு முன்னால் அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார்கள். அதன் பின்னர் நபிமார்கள் வழியாக அந்த அற்புதம் நிகழ்த்தப்படும். இதுபற்றிச் சென்ற இதழில் நாம் பார்த்தோம்.

அல்லாஹ், நபிமார்கள் வழியாக அவர்களுக்குத் தெரிய வைத்து இப்போது செய் என்று சொல்லி கட்டளையிட்டபின் அற்புதங்களைச் செய்வார்கள்.

இதல்லாமல் மற்றவர்களுக்கு நடக்கக்கூடிய அற்புதங்கள் என்னவென்றால், அவர்களுக்கு எந்த ஒரு செய்தியும் இறைவனிடமிருந்து வராது. இப்போது, இவ்வாறு நடக்கும் என்று நமக்கே தெரியாது. அல்லாஹ் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாடி விட்டால் நாம் அறியாத விதத்தில் நமக்கு அந்த உதவியைச் செய்வான். இதோ அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.

(அல்குர்ஆன் 65.3)

இந்த வசனத்தில், அல்லாஹ் மனிதன் அறியாத விதத்தில் அவர்களுக்கு உணவளிப்பான் என்று மட்டும்தான் வந்துள்ளது. இதையே உணவளிப்பது மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம். அவனே அறிந்து பார்க்காத அளவுக்கு எத்தனையோ விஷயங்களை அல்லாஹ் செய்வான்.

உதாரணமாக, ஒரு பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விடுகின்றார்கள். ஆனால் அதில் அதிசயமான முறையில் ஒருவன் மட்டும் மயிரிழையில் உயிர் பிழைத்திருப்பான். விமானம் நொறுங்கி விழுந்தது. ஆனால் அதில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்; கார் விபத்துக்குள்ளானது, ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. இதுபோன்ற ஏராளமான சம்வங்களை நாம் அன்றாடம் பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.

இந்த உயிர் பிழைத்த மனிதனுக்கு, நாம் மட்டும் சாகாமல் தப்பி விடுவோம் என்று தெரியுமா? அல்லது அல்லாஹ் இந்த விபத்தில் நீ மட்டும் உயிர் பிழைத்துக் கொள்வாய்? மற்ற அனைவரும் இறந்து விடுவார்கள் என்று வஹீ அறிவித்தானா? இல்லை. அவனுக்கே தெரியாத, அறியாத விதத்தில் நடக்கின்ற இந்த நிகழ்வும் ஒரு அற்புதம்தான். ஆனால் அந்த மனிதன் அதைச் செய்யவில்லை.

ஆனால், நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களை நபிமார்கள் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், தான் நபி என்பதற்கு ஆதாரமாக, அத்தாட்சியாகக் காட்ட வேண்டியிருப்பதாலும் அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லி அவர்கள் வழியாகவே அந்த அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான்.

ஆனால் மற்ற மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழுமா என்றால், பணக்காரன், பாமரன், ஏழை உட்பட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். ஒரு பணக்காரனுக்கு நடக்காத அதிசயம் ஏழைக்கு நடக்கும். அல்லாஹ் ஒருவனுக்கு சிறப்பு கவனம் எடுத்து உதவி செய்ய நினைத்து விட்டால் இது நடந்து விடும். ஆனால், நபிமார்களுக்கு நடந்தது போன்று அவர்கள் அறிகின்ற விதத்தில் நடக்காது. மற்ற மனிதர்களுக்கு அவர்கள் அறியாத வித்தில் நடக்கும். இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.

நபிமார்களுக்கு அல்லாஹ் தள்ளாத வயதில் குழந்தையைக் கொடுத்த சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு எப்படி குழந்தையைக் கொடுத்தான்? அந்த நபிமார்களிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி நற்செய்தி சொல்லிய பிறகு குழந்தையைக் கொடுத்தான். இவ்வாறு அல்லாஹ் திருமறையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு தள்ளாத வயதில் குழந்தை கொடுத்ததைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள்.

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். “இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்” என்று அவர் கூறினார். “அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக் குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும். அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்” என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்:),72,73)

இந்த சம்பவம் 51:29,30, 15:53-55, 14:39 ஆகிய வசனங்களிலும் இடம் பெற்றுள்ளது.

மேலும் ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கும் தள்ளாத வயதில் தான் குழந்தையைக் கொடுத்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.

.அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது “யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடுமிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்” என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். “என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இப்படித் தான் செய்வான்” என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன் 3.38,)

இந்தச் சம்பவம் மேலும் 21:89,90, 19:3-10 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ளது.

இதுபோன்று இப்போதும் கூட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இப்ராஹீம் நபி மற்றும் ஸக்கரியா நபிக்குக் கிடைத்த மாதிரி, தள்ளாத வயதுடையவர்களில் யாரோ ஒருவருக்குக் கிடைத்து விடும்.

நாம் செய்தித் தாள்களில் கூடப் படித்திருப்போம். 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்று. இது ஒரு அதிசயமான, ஆச்சரியமான விஷயம் தான். ஏனென்றால், அந்த வயதில் மாதவிடாய் நின்று விடும். எந்த மருத்துவரிடம் சென்று மாத்திரை மருந்துகள் எடுத்தாலும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத வயது. மருத்துவர்கள் கூட, நீங்கள் குழந்தை பெறும் தகுதியை இழந்து விட்டீர்கள். அல்லது, உங்கள் கணவன் ஆண்மைத் தன்மையை இழந்து விட்டார். இனிமேல் உங்களுக்குக் குழந்தையே பிறக்காது என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால் அதையும் தாண்டி இறைவன் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத பெண்ணுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கியிருக்கிறான். அந்தப் பெண், நமக்கு இந்த வயதில் குழந்தை பிறக்கும் என்று அறிந்திருப்பாளா? என்றால் அறிந்திருக்க மாட்டாள். அல்லது, அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி நற்செய்தி சொல்லியிருப்பானா என்றால் அதுவும் இல்லை. அவளே அறியாத விதத்தில், நம்பிக்கையற்று இருந்த நேரத்தில் தான் இந்த அற்புதம் நடந்திருக்கிறது. இவ்வாறு சில அற்புதங்களை வழங்குவான்.

அத்தகைய அற்புதங்களை இப்போதும் அல்லாஹ் நிகழ்த்துவான். அந்த அற்புதங்கள் அவரிடம் நிகழ்ந்தவுடன் அவரை அவ்லியா என்று சொல்வதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கு அடையாளம் என்று சொல்வதற்கோ, அவர் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார் என்று சொல்வதற்கோ எந்த ஆதாரமும் கிடையாது. பொருந்திக் கொள்ளப்பட்டவர்களுக்கும் அவன் அற்புதங்களைச் செய்வான். சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்களைச் செய்வான்.

நம் வாழ்க்கையிலும் கூட யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு அற்புதம் – அதிசயம் நிகழ்ந்திருக்கும். உதாரணமாகச் சொல்வதாயிருந்தால், ஒருவருக்கு மிகப் பெரிய நோய் ஒன்று ஏற்பட்டிருக்கும். அல்லது அவர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவரை ஸ்கேன் எடுத்து பார்த்து, பரிசோதித்து விட்டு, இவரை இனிமேல் காப்பாற்ற முடியாது. அவர் பிழைப்பது மிகவும் கஷ்டம். அல்லது அவர் பிழைக்கவே மாட்டார். எங்களால் காப்பாற்ற முடியாது. இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி கைவிரித்து விடுவார்கள். ஆனால், அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத விதத்தில் அவர் உயிர் பிழைத்தார்; அந்த நோயிலிருந்து குணமடைந்தார் செய்தியை நாம் கேள்விப்படுகிறோம்.

இவ்வாறு அவர் உயிர் பிழைத்ததால்- இந்த அதிசயம் நடந்ததால் அவரை அவ்லியா என்று முடிவு செய்ய முடியுமா? இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார், அதனால் தான் இவர் உயிர் பிழைத்தார் என்று சொல்ல முடியுமா? முடியாது. அல்லாஹ் அவருக்கு உதவ நாடிவிட்டதால் அவருக்கு உதவி செய்தான். இதனால் அவர் மகான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், இந்த அற்புதங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் நடக்கும் என்பதில்லை. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். இறைவனை நம்பாத, இறைவனை மறுக்கின்ற இறைமறுப்பாளர்களுக்கும் சில அற்புதங்களைச் செய்வான். மறுமையில் இவர்களுக்கு எந்தச் சிறப்பும் அந்தஸ்தும் கிடையாது. அவர்களுக்கு நரகம்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால் இவ்வுலகில் மட்டும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறப்பை – அந்தஸ்தை வழங்க நினைத்தால், அற்புதத்தைச் செய்து காட்ட நினைத்தால் அதை அல்லாஹ் அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டுவான்.

மேலும், அற்புதங்களிலேயே மிகப் பெரும் அற்புதத்தை செய்யக்கூடியவன் ஷைத்தானாகத் தான் இருக்கிறான். இவ்வுலகில் இப்லீஸ் செய்த அற்புதங்களுக்கு நிகராக வேறு யாரும் அற்புதங்கள் செய்திருக்கிறார்களா? நம்முடைய உள்ளத்திற்குள் நுழைந்து நம்மைத் திசை திருப்பி விடுகின்றான். நம்முடைய உள்ளத்தில் ஊடுருவுதல் போன்ற விஷயங்கள் அவனிடம் நடக்கின்றது. அற்புதங்கள் என்பது ஷைத்தானிடம் கூட நிகழ்வதனால், அவன் மகான் என்பதற்கு அடையாளமாகுமா? அவனை நல்லடியார் என்று சொல்ல முடியுமா? என்றால் முடியாது.

மேலும், நபிமார்கள் அல்லாமல் நல்லடியார்களுக்கும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்களை மாத்திரம் தான் நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, அவர்களை விடுத்து வேறு யாரையும் நாம் அல்லாஹ்வின் இறைநேசர் என்றோ நல்லடியார் என்றோ சொல்லக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாரை நல்லடியார்கள் என்று சொல்லியிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எப்பேற்பட்ட அற்புதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதிசயங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவர்களை மகான் என்றோ அவ்லியாக்கள் என்றோ இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என்றோ சொல்லக்கூடாது.