உயிரூட்ட வரும் உன்னத ரமலான்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
(அல்குர்ஆன்: 2:185)
இது அல்லாஹ்வின் வசனம். ஆம்! ரமளானின் சிறப்பை உணர்த்துகின்ற வசனமாகும். உண்மையில் ரமளான் என்பது, திருக்குர்ஆன் இறங்கிய மாதத்திற்கு வல்ல ரஹ்மான் எடுக்கின்ற திருவிழாவாகும்.
விழா என்றதும் நமக்கு ஒருவிதமான ஒவ்வாமை வந்து விடும். அந்த ஒவ்வாமை வருவதில் ஆச்சரியம் இருக்க முடியாது. காரணம், விழா என்றதும் கோயில் திருவிழா, தர்ஹா கந்தூரி விழா போன்ற விழாக்கள் நம் மனக்கண் முன் படையெடுத்து வந்து விடும். அந்த விழாவின் பெயரால் அரங்கேறும் ஆட்டங்கள், கச்சேரிகள், கூத்து கும்மாளங்கள் நினைவுக்கு வந்து விடும். அதனால் அந்த அலர்ஜி நமக்கு வருவதில் ஆச்சரியம் இருக்க முடியாது.
நாம் பெருநாள் கொண்டாடுகிறோம். அன்றைய தினத்தில் தர்மங்கள் வழங்கி, வணக்கத்தில் ஈடுபட்டு, உறவினர்களைச் சந்தித்து நாம் நமது பெருநாளைக் கழிக்கிறோம். பிறமத சமுதாய மக்களுக்கும் பெருநாட்கள் வருகின்றன. அந்நாட்களில் அவர்கள் மது பானங்கள் அருந்தி, இசைக்கச்சேரிகள், வீண் கேளிக்கைக் கூத்துகள் நடத்தி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அந்தப் பெருநாட்களைக் கழிக்கின்றனர்.
பெருநாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களைப் பொறுத்து பெருநாட்கள் வித்தியாசப் படுகின்றன. அதுபோன்று தான் விழா என்பது அதை நடத்துபவர்களைப் பொறுத்து வித்தியாசப்படுகின்றது, வேறுபடுகின்றது. விழா என்பது மகிழ்ச்சியாக ஒரு நிகழ்வை விரும்பி நடத்துவதாகும்.
நான்காண்டு கல்லூரியில் படிப்பை முடித்தவர்களுக்குப் பட்டமளிப்பு நிகழ்ச்சியை நடத்துகிறோம். அதில் மார்க்கச் சொற்பொழிவு நடத்தப்படுகின்றது. பட்டம் பெறுகின்ற மாணவர்களின் குடும்பங்கள், ஊரில் உள்ள மக்கள் அதில் பங்கெடுக்கின்றனர். அந்த அடிப்படையில் அது ஒரு விழாவாகும்.
அல்லாஹ் பனூ இஸ்ராயீல்களை ஃபிர்அவ்ன் என்ற மாபெரும் கொடியவனிடமிருந்து காப்பாற்றினான். அந்நாளை அவர்கள் பெருநாளாகக் கொண்டாடினார்கள். அவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள்? இதைப் பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் விளக்குகின்றன.
நபி ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
(புகாரி: 2004, 2005, 3397)
இந்த ஹதீஸ், யூதர்கள், தங்களுக்கு அல்லாஹ் புரிந்த அருட்கொடைக்கு நன்றிக் கடனாக, நோன்பு நோற்று அந்தப் பெருநாளைக் கொண்டாடுவதை நாம் பார்க்க முடிகின்றது. அதை அங்கீகரித்த நபி (ஸல்) அவர்கள் தாங்களும் நோன்பு நோற்கின்றார்கள். பிந்தைய நாட்களில் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்பது, பத்து ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்கச் சொல்லி மக்களுக்குக் கட்டளையிடுகின்றார்கள்.
ரப்புல் ஆலமீன் நமக்குப் புனிதமிக்க குர்ஆனை, புனித ரமளானில் இறக்கியது மாபெரும் அருட்கொடையாகும். அதற்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக, நமக்கு ஒரு மாதம் நோன்பைக் கடமையாக்கி அதை நிறைவேற்றும்படி மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இதன் மூலம் குர்ஆனை நினைவுகூர்கின்ற அந்த விழாவை ஒரு மாத காலம் தொடரச் செய்கின்றான். அந்த ஒரு மாதகால விழாவை முன்னிட்டு அடியார்களுக்கு அல்லாஹ் பரிசு மழைகளைப் பொழிகின்றான். இதோ அந்தப் பரிசு மழைகள்:
1. ஒவ்வொரு வணக்கத்திற்கும் பத்து முதல் 700 மடங்குகள் வரை பரிசுகளைத் தருகின்ற நாயன், இந்த ரமளான் மாத நோன்புக்கு அளப்பரிய, அளவிடற்கரிய, அபரிமிதமான நன்மைகளை அளிக்கின்றான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(புகாரி: 1904)(முஸ்லிம்: 2119)
அவன் நாளை மறுமையில் அடியானை நேரில் சந்திக்கும் போது நோன்புக்குரிய பரிசுகளை நேரடியாக வழங்குகின்றான்.
2. ரமளான் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். (புகாரி: 1899)
3. ரமளான் மாதம் நோன்பு நோற்பவருக்குப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி: 38)
4. ரமளான் இரவில் நின்று தொழுபவருக்குப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி: 37)
5. ரமளான் மாதத்தில் செய்கின்ற உம்ராவுக்கு ஹஜ்ஜுக்குரிய கூலி கிடைக்கிறது. (புகாரி: 1782)
6. ஒன்றுக்குப் பத்து நன்மைகள் என்ற பரிசு மழைத் திட்டத்தின் கீழ், ரமளானைத் தொடர்ந்து யார் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்கின்றாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர் போலாகின்றார். (முஸ்லிம்: 2159)
7. எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் எனும் இரவில் வணங்கும் வணக்கத்தை ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கிய வணக்கத்திற்குரிய நன்மைகளை அள்ளிப் பொழிகின்றான். (பார்க்க: திருக்குர்ஆன் அத்தியாயம் 97)
இவை ரமளான் மாதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் அள்ளி வழங்கும் ரமளான் பரிசு மழையாகும்.
இத்தனையும் எதற்கு? நாம் நல்லமல்கள் செய்து, நல்லடியார்களாகி சுவனத்தில் நுழைய வேண்டும்; நரகத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தான். ஒரு பக்கம் அதற்குரிய பயிற்சி! இன்னொரு பக்கம் அதற்குரிய பரிசு!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(புகாரி: 1903)
பொய் மற்றும் பாவமான காரியங்களிலிருந்து விலகுவது போன்ற பண்புகளை உருவாக்குகின்ற ஒரு பயிற்சிக் கூடமாக, பாடசாலையாக ரமளான் மாதம் விளங்குகின்றது. ஒரு மாதப் பயிற்சி என்பது ஒரு மாணவர் நல்ல பண்புகளை, வணக்க வழிபாடுகளை ஒருவர் தன்னுள் வரவழைத்துக் கொள்வதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் உரிய போதுமான பாட நாட்களாகும். எனவே, ரமளான் எனும் பள்ளிக் கூடத்தில் அத்தகைய பாடத்தை, அதற்குரிய வாய்ப்பை நழுவ விடாமல் நம்மை நாம் தற்காத்துக் கொள்வோமாக!
அதிலும் குறிப்பாக லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு. இந்த இரவை அடைவதற்கு இப்போதே நாம் பெரிய முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இரவை நாம் இழந்து விட்டோம் என்றால் நம்மை விட நஷ்டவாளிகள் வேறு யாரும் இருக்கமுடியாது என்பதை இந்நேரத்தில் மனதில் பதிய வைத்துக் கொள்வோமாக!
பொதுவாக நம் அனைவரிடத்திலும் ஜமாஅத் தொழுகைகளைத் தவற விடும் அலட்சியப் போக்கு அதிகமாக வந்து விடுகின்றது. முன் பின் சுன்னத் தொழுகைகளில் கவனமின்மையும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
மிகப் பெரிய நன்மையைப் பெற்றுத் தருகின்ற தஹஜ்ஜத் தொழுகையைக் கடைப்பிடிக்காமல் கைகழுவி விடுகின்றோம். நோன்புக்காக நாம் ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதற்கு எழுந்திருப்பது ஏறத்தாழ உறுதியாக இருக்கின்றது. அந்த ஸஹர் நேரத்தில் தஹஜ்ஜத் தொழுவதற்காக நாம் ஏன் ஒரு சிறிய முயற்சியை எடுக்கக் கூடாது? ஒரு மாத காலம் இந்தப் பயிற்சியை எடுத்தோம் என்றால் இன்ஷாஅல்லாஹ் ரமளானுக்குப் பிறகும் அந்தப் பயிற்சி நம்மிடம் தொடர்ந்து கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, வருகின்ற ரமளானை நற்பண்புகளை, நல்லமல்களை வளர்க்கும் ஒரு பாடசாலையாக ஆக்கிக் கொள்வோமாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப் படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(திர்மிதீ: 3468)
ரமளான் மாதம் வந்தும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாத சாபத்திற்குரிய மக்களாகி விடாமல் நம்மை நாம் காத்துக் கொள்வோமாக!
மொத்தத்தில் இந்த ரமளான் மாதம் நம்மை உயிர்ப்பிக்க வருகின்றது. இதில் நம்மை உயிர்ப்பித்து, புதுப்பித்து புது இரத்தம் பாய்ச்சிக் கொள்வோமாக!