மரணைத்தை நினைவு கூறுவோம்
முன்னுரை
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
இவ்வுலகம் ஆடம்பரம், ஈர்ப்பு, பொருளாதாரத்தின் மோகம், என பல வகைகளில் ஈர்கப்பட்டாலும், நாம் வாழும் இந்த உலக வாழ்கை நமக்கு நிரந்தரமானது இல்லை. நாம் மறுமைக்காக, மறுமையில் கிடைக்கும் சொர்கதிற்காக இந்த உலகத்தில் வாழும் தருணத்தில் இந்த உலக மோகம் நம்மை ஒன்றும் செய்யாது.
மாறாக, நாம் ஒவ்வொருவருமே மரணிக்கக் கூடியவர்கள். யாருக்குமே இந்த உலகம் நிரந்தரம் இல்லை. வல்ல அல்லாஹ்வை தவிர! மரண சிந்தனை மறுமை சிந்தனை அவ்வப்போது நினைவு கூற வேண்டும். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை பற்றி கூறிய சில செய்திகளை இந்த உரையில் காண்போம்.
உஸ்மான் (ரலி) அவர்கள், மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவிற்கு அழுவார்கள். ”சொர்க்கம், நரகத்தைப் பற்றிக் கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே! ஏன்?” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது.
அதற்கு அவர்கள் கூறினார்கள். மண்ணறை தான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் ஒருவன் வென்றுவிட்டால் இதற்குப் பிறகு உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறாவிட்டால் இதற்குப் பிறகு உள்ள நிலை இதை விட கடுமையாக இருக்கும்.
நான் கண்ட காட்சிகளிலேயே! மண்ணறை தான் மிகக் கோரமாக இருந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (எனவே தான் நான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன்” என்று உஸ்மான் (ரலி) கூறினார்கள்)
அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்)
நூல்: திர்மிதி-2230
எனவே உடம்பில் உயிர் இருக்கும் போதே நன்மைகளைச் செய்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு நமக்காக யார் அழுதாலும், கவலைப்பட்டாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.
யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளது குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த போது நபி (ஸல்) கூறினார்கள். இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள், அவளோ! அடக்கக் குழி(கப்று)க்குள் வேதனை செய்யப்படுகிறாள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி-2229
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் கையைப் பிடித்துக் கொண்டு ”இந்த உலகத்தில் நீ ஒரு பயனியைப் போன்று வாழ். அல்லது வழிப்போக்கனைப் போல் வாழ். மண்ணறைக்குள் சென்று விட்டவர்களில் ஒருவனாக உன்னை நீ கருதிக்கொள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஃஜம் இப்னில் அஃராபி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி-2229
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு ”இந்த உலகத்தில் நீ ஒரு பயனியைப் போன்று வாழ். அல்லது வழிப்போக்கனைப் போல் வாழ். மண்ணறைக்குள் சென்று விட்டவர்களில் ஒருவனாக உன்னை நீ கருதிக்கொள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஃஜம் இப்னில் அஃராபி
ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால், இவ்வசனத்தில் (40:46) யுக முடிவு நாளில் இவர்களைக் கடும் தண்டனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இது தான் கப்ரின் வேதனை என்று நபி மொழிகள் கூறுகின்றன.
மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்த போது) ”மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்” என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப்படவில்லை.
பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள், அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! இரு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்”) என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இருவரும் உண்மையே சொன்னார்கள்.
(மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)களை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன” என்று சொன்னார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
மண்ணறைகள் இறையச்சத்தையும், மறுமை வாழ்வையும் நினைவூட்டக்கூடியவை என்பதால் மண்ணறைகளுக்குச் சென்று பார்த்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-1777
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதி-974
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது, அடக்கவிடத்தில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறி விட்டார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
மண்ணறை வாழ்கை நல்லதாக அமைந்துவிட்டால் மறுமை வாழ்க்கையும் நன்றாகவே அமைந்துவிடும். ஆனால் மண்ணறை வாழ்கை சோகத்திற்குரியதாகவும், சோதனைக்குரியதாகவும், வேதனைக்குரியதாகவும் அமைந்துவிட்டால் மறுமை வாழ்க்கை அதை விட வேதனைக்குரிய வாழ்க்கையாக அமைந்துவிடும். எனவே, சந்தோஷமான மண்ணறை வாழ்வைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவிற்கு அழுவார்கள். ”சொர்க்கம், நரகத்தைப் பற்றிக் கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே! ஏன்?” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்.
மண்ணறை தான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் ஒருவன் வென்றுவிட்டால் இதற்குப் பிறகு உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறாவிட்டால் இதற்குப் பிறகு உள்ள நிலை இதை விட கடுமையாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே! மண்ணறை தான் மிகக் கோரமாக இருந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (எனவே தான் நான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன்” என்று உஸ்மான் (ரலி) கூறினார்கள்).
அறிவிப்பவர்: ஹானிஃ (ரஹ்)
நூல்: திர்மிதி-2230
எனவே உடம்பில் உயிர் இருக்கும் போதே! நன்மைகளைச் செய்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு நமக்காக யார் அழுதாலும் கவலைப்பட்டாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.
”உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!
தமக்குத் தாமே! தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, ”நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். ”நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள். ”அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?” என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.
தமக்குத் தாமே! தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, ”நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை” என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். ”நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவீர்கள்.” (என்று கூறப்படும்) பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?
(அல்குர்ஆன்: 47:27) ➚, 28)
நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என்று வானவர்கள் குறித்து பின்வரும் வசனங்களிலும் காணலாம்.
”அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். ”அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்” என அவர்கள் கூறுவார்கள்.
அவனே! தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள்.
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, ”சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்? அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதை அவர்கள் பின்பற்றியதும், அவனது திருப்தியை வெறுத்ததுமே! இதற்குக் காரணம். எனவே அவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான்.
எனவே மரணம் சம்பவிப்பதற்கு முன்பே மறுமை வாழ்வுக்குத் தேவையான நற்காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இறந்த பிறகு இறைவனிடம் மன்றாட வேண்டி வரும். அப்போது எவ்வளவு மன்றாடினாலும் அதற்கு எந்தப் பயனும் இல்லை.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! ”இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே!” என்று அப்போது (மனிதன்) கூறுவான். அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
மலக்குகள் உயிரைக் கைப்பற்றுவதற்காக வருவதற்கு முன்பே, செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் கையேந்தினால் அந்தப் பிரார்த்தனைக்கு மதிப்பு இருக்காது. எனவே, ஒவ்வொருவரும் மரண வேளையை அடைவதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டும்.
அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே! அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ”நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே! மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்களை செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன்தராது. ”நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” எனக் கூறுவீராக!
ஃபிர்அவ்ன் என்ற கொடிய அரசன் மரணிக்கும் தறுவாயில் ஈமான் கொண்டு விட்டதாகக் கூறினான். மரணம் சம்பவிக்கும் போது, இவ்வாறு அவன் கூறுவதால் அல்லாஹ் இவனுடைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால், இவன் மண்ணறையிலும், மறுமையிலும் தண்டிக்கப்படுகிறான்.
இஸ்ராயீன் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது ”இஸ்ராயீன் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்” என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய் (என்று கூறினோம்.
குற்றம் புரிந்தவர்கள், மரணிப்பதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒப்பாரி வைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் ஆன (கீல்) நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.
அறிவிப்பவர்: அபூமாக் கஅப் பின் ஆஸிம் (ரலி)
நூல்: முஸ்லிம்-1700
மரணிக்கும் தருவாயில் இருக்கும் போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும், கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவுப்புச் செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்ணறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்கவிருப்பவர் அறிந்து கொள்வார்.
அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். ‘உங்கள் உயிர்களை நீங்களே! வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்!’ (எனக் கூறுவார்கள்).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ! அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று சொன்னார்கள்.
அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?” என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும், அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும், அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும்.
அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு, (மரண வேளை நெருங்கும் போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்” என்று (விளக்கம்) சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்-5208
தனக்குக் கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறிக் கொண்டிருப்பார். தனக்குக் கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணத்த உடனே தீயவர்களின் புலம்பலும், நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகிறது. இவ்விருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் ”என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்; என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும்; அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்,
”கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
கெட்டவன் மரணித்த உடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும் போது அவன் இழிவையும், அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை மறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டு செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் கோபத்துடனும், அதிருப்தியுடனும் நீ வெளியேறு! என்று கூறுவார்.
அப்போது தான் அவனது உடம்பிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தைப் பிடுங்குவதைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்தத் துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.
பூமியில் இறந்து அழுகிப் போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.
இறுதியாக அவன் இறுதி வானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவனுக்காக கதவை திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த இடத்திலே) இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது.
ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம் (7 : 40). கடைசி பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்ககையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அப்போது கூறுவான்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
ஓர் இறை மறுப்பாளர் உயிர் பிரியும் போது அந்த உயிரிலிருந்து துர்வாடை கிளம்பும். வானிலுள்ளோர் அதைச் சபிப்பார்கள். வானுலகவாசிகள், ”ஒரு தீய ஆன்மா பூமியிலிரிருந்து வந்திருக்கிறது” என்று கூறுவார்கள். அப்போது ”இதை இறுதித் தவணை வரை கொண்டு செல்லுங்கள்” என்று கூறப்படும். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியைத் தமது மூக்குவரை ‘இப்படி’ கொண்டுசென்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-5119
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவன் இறை மறுப்பாளனாக இருந்தால் வானவர்கள் அவனுடைய ஆன்மாவைத் துணியில் வைத்து வானத்தை நோக்கிக் கொண்டு செல்வார்கள். அப்போது (வானலோகத்தில் உள்ள) வானவர்கள் தங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு கெட்ட ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது என்று கூறுவார்கள்.
வானவர்கள் அந்த ஆன்மாவுடன் மேலே ஏறிச் செல்வார்கள். அப்போது (கெட்ட ஆன்மாவே) அல்லாஹ்வின் வேதனையையும், இழிவையும் நற்செய்தியாகப் பெற்றுக் கொள் என்று கூறப்படும். பிறகு இதை இறுதித் தஹ்ணை வரை கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல்: பைஹகீ (இஸ்பாது அதாபில் கப்ர்) 8
மேற்க்கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் நம்மில் உள்ளடக்கி நபி (ஸல்) அவர்கள் கூறியது போல நாம், கப்ருக்குழியில் இருப்பது போன்று நம்மை நாமே! சித்தரித்து நாம் உயிருடன் வாழும் போதே நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளல் வேண்டும்.
ஏனென்றால், எப்போது நமது உயிர் நம்மை விட்டு பிரிகின்றதோ! அப்போதே நமக்கான கால அவகாசமும் முடிவடைகிறது. ஆகையால், இவ்வுலகில் வாழும் போதே எவையெவை நன்மை, தீமை என பிரித்துணர்ந்து கப்ரின் வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.