15)ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 13

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

யோனாவின் அற்புதம்

நான் உயிர்த்தெழுந்து வருவேன் என்று ஏசு முன்னறிவிப்புச் செய்ததாக பைபிள் பிரச்சாரகர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பைபிள் என்றழைக்கப்படும் இந்நூல்கள் ஏசுவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின், நூறாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டவை. ஏசுவின் வாழ்நாளில் எந்த நூலும் எழுதப்படவில்லை. இவ்வாறு எழுதுமாறு ஏசு யாருக்கும் உத்தரவிடவுமில்லை.

சிலுவை குறித்த முன்னறிவிப்புக்களைப் பற்றி, மாற்கு நூலின் விளக்கவுரையில் டேய்லர் என்பார், “முடிந்த காரியங்களுக்கு முன்னறிவிப்புக்களை பைபிள் எழுத்தாளர்கள் கட்டி விட்டிருக்கிறார்கள்” என்று அழகாகக் குறிப்பிடுகின்றார்.

யூதர்கள் மோசேக்கு கணக்கற்ற இடையூறுகளைக் கொடுத்தனர். இப்போது அவருக்கு அடுத்து வந்த ஏசு என்ற தூதருக்கு அவர்கள் இடையூறு கொடுக்கின்றனர். அவரிடம் அவர்கள் குதர்க்கமான, குருட்டுத்தனமான கேள்விகளைக் கேட்டு இடைஞ்சல் அளிக்கின்றனர். அந்தக் கேள்விகளில் ஒன்று இதோ:

அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, “போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்” என்றனர்.

மத்தேயு 12:38

இங்கு அவர்கள் அடையாளம் என்று கேட்பது ஏசு ஏதேனும் அற்புதம் செய்ய வேண்டும் என்பதைத் தான். அப்போது ஏசு அங்கலாய்த்துக் கொண்டே கூறுகிறார்:

அதற்கு அவர் கூறியது; இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

மத்தேயு 12:39, 40

யோனாவின் அற்புதம் அல்லது அடையாளம் என்பது என்ன? இதை பைபிளிலிருந்தே பார்ப்போம்.

அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

அவர், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன” என்றார்.

யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார். அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டார்; உடனே கட்டணத்தைக் கொடுத்து விட்டு, ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார்.

ஆனால் ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது.

கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

கப்பல் தலைவன் அவரிடம் வந்து, “என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்” என்றான்.

பிறகு கப்பலில் இருந்தவர்கள், “நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.

சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் அவரை நோக்கி, “இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது? உன் இனம் எது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்” என்று சொன்னார்.

மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார். எனவே, அவர்கள் மிகவும் அஞ்சி, “நீ ஏன் இப்படிச் செய்தாய்,” என்று கேட்டார்கள்.

கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், “கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கி விடும்; நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால் தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

ஆயினும், அவர்கள் கரை போய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்; ஆனால் அவர்களால் இயலவில்லை. ஏனெனில், கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகக் கொண்டேயிருந்தது.

அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, “ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிய விட வேண்டாம்; குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள் மீது பழி சுமத்தவேண்டாம். ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்” என்று சொல்லி மன்றாடினார்கள்.

பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கடல் கொந்தளிப்பும் தணிந்தது.

அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்; பொருத்தனைகளும் செய்து கொண்டார்கள்.

ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்த படியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.

யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்;

“ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்; என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்;

நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழந்து கொண்டது. நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என் மீது புரண்டு கடந்து சென்றன.

அப்பொழுது நான், “உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன் இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டேன்.

மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று; ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.

மலைகள் புதைந்துள்ள ஆழம் வரை நான் கீழுலகிற்கு இறங்கினேன். அங்கேயே என்னை என்றும் இருத்தி வைக்கும்படி, அதன் தாழ்ப்பாள்கள் அடைத்துக் கொண்டன. ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அந்தக் குழியிலிருந்து என்னை உயிரோடு மீட்டீர்.

என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது, ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன். உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது.

பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள்.

ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே” என்று வேண்டிக்கொண்டார்.

ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.

யோனா: அதிகாரம் 1, 2

இப்போது இந்தச் சம்பவத்தை ஆய்வு செய்வோம்.

யோனா கடலில் தூக்கியெறிப்படுகின்றார். அவர் இவ்வாறு தூக்கியெறியப்படும் போது உயிருடன் எறியப்பட்டாரா? அல்லது பிணமாக எறியப்பட்டாரா?
இதற்கு எல்லோரும் ஒருமித்துக் கூறும் பதில், “அவர் உயிருடன் எறியப்பட்டார்’ என்பது தான்.

கடலில் எறியப்பட்டவுடன் மீன் அவரை விழுங்கியது. அப்போது அவர் உயிருடன் விழுங்கப்பட்டாரா? அல்லது பிணமாகவா?
இதற்கும் எல்லோரும் ஒருமித்துக் கூறும் பதில்: உயிருடன் தான் விழுங்கப்பட்டார்.

மூன்றாம் நாள் அவரை மீன் தரையில் கக்கியது. அப்போதும் அவர் உயிருடன் தான் இருக்கிறார்.
இந்த மூன்று சமயத்திலும் யோனா உயிருடன் தான் இருந்தார் என்பதை யூதர்களும் ஒப்புக் கொள்கின்றனர். கிறித்தவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். முஸ்லிம்களும் ஒப்புக் கொள்கின்றனர். இதில் ஏசு தெரிவித்திருக்கும் அடையாளம், அற்புதம் மூன்று மதத்திலும் ஒத்து அமைந்துள்ளது.

யோனா என்ற புத்தகத்திலிருந்து இடம் பெறும் இம்மாபெரும் அற்புதத்தை மீண்டும் ஒருமுறை தொகுத்துப் பார்ப்போம்.

ஒருவரைக் கடலில் தூக்கிப் போட்டால் அவர் கண்டிப்பாக இறந்தாக வேண்டும். யோனா இங்கே சாகாததால் அது ஓர் அற்புதம்.
ஒரு மீன் வந்து மனிதனை விழுங்கி விட்டது என்றால் அவன் இறந்தாக வேண்டும். ஆனால் யோனா இறக்கவில்லை. அதனால் உண்மையில் இது இரு மடங்கு அற்புதம்.
மீன் வயிற்றுக்குள் சென்ற பின்னராவது மூச்சுத் திணறி இறந்தாக வேண்டும். மூன்று இரவுகள், மூன்று பகல்கள் ஆகியும் யோனா இறக்கவில்லை. எனவே இது அற்புதங்களில் சிறந்த அற்புதம்.
ஒருவரை நோக்கி ஒரு துப்பாக்கிக் குண்டு வேகமாகப் பாய்கின்றது. அம்மனிதனும் தரையில் விழுந்து சாகின்றான். இதற்குப் பெயர் அற்புதமா என்றால் இல்லை. ஆனால் குண்டடிபட்டவன் சரிந்து விழாமல், சாகாமல் நின்று கொண்டிருக்கிறான் என்றால் அது ஓர் அற்புதம் என்போம்.

இதே போன்று, யோனா இப்போது இறந்து விடுவார்; இப்போது இறந்து விடுவார் என்று எதிர்பார்க்கும் போதெல்லாம் அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அது அற்புதங்களில் சிறந்த அற்புதமாக அமைந்து விடுகின்றது.

இப்போது நாம் ஏசுவின் அற்புதத்திற்கு வருவோம்.

யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

மத்தேயு 12:40

இது, ஏசு தம்மைப் பற்றிக் கூறிய முன்னறிவிப்பு என்று பைபிள் கூறுகின்றது.

அதாவது யோனா மீன் வயிற்றில் இருந்தது போன்றே, தானும் நிலத்தின் உள்ளே மூன்று இரவும், மூன்று பகலும் இருப்பதாக ஏசு கூறுகின்றார்.

ஏசு நிலத்தின் உள்ளே இறந்து தான் இருந்தார்; பின்னர் தான் உயிர்ப்பித்து எழுந்தார் என்று கிறித்தவர்கள் கூறுவது உண்மையென்றால் ஏசு கூறியது பொய் என்றாகி விடும். ஏசு பொய் கூறினார் என்று சொல்லப் போகிறார்களா? என்ற கேள்வியை கிறித்தவ உலகத்திடமே விட்டு விடுவோம்.

ஏசு கூறுவது உண்மை என்றால், யோனாவைப் போன்று நிலத்தின் உள்ளே இருப்பேன் என்று கூறுவது உண்மை என்றால், ஏசு இறக்கவில்லை என்பது நிரூபணமாகி விடும்.

யோனா மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது போன்று ஏசுவும் நிலத்தின் உள்ளே உயிருடன் தான் இருந்தார் என்பது இப்போது பைபிளில் ஏசு, தம்மைப் பற்றிக் கூறிய முன்னறிவிப்பிலிருந்தே உறுதியாகின்றது.

ஓர் எளிய கணக்கு

கிறித்தவ நாடுகளில் புனித வெள்ளி அன்று விடுமுறை அளிக்கின்றார்கள். இந்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளிக்கிழமை என்று ஏன் அழைக்கப்படுகின்றது?

பாவங்களுக்காக ஏசு மரணித்த நாள் என்பதால்! இதற்காகத் தான் கிறித்தவ நாடுகள் விடுமுறை அளிக்கின்றன.

ஏசு சிலுவையில் 3 மணி நேரத்திற்கு மேலாகக் கிடக்கவில்லை. வெள்ளியன்று சூரியன் மறைவதற்குள்ளாக ஏசுவைக் கல்லறைக்குக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

ஏசு வெள்ளி இரவு (விடிந்தால் சனி) அன்று கல்லறையில் இருந்ததாகக் கருதப்படுகின்றது.
சனிக்கிழமை பகலும் அவர் கல்லறையில் இருந்தார் என்று கருதப்படுகின்றது.
சனிக்கிழமை இரவும் (விடிந்தால் ஞாயிறு) அவர் கல்லறையில் இருந்தார் என்று கருதப்படுகின்றது. இதில் கிறித்தவ அமைப்புகளில் எந்த ஓர் அமைப்பிற்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஞாயிற்றுக் கிழமை காலை மகதலா மேரி கல்லறைக்கு வந்த போது கல்லறை காலியாக இருந்தது.

இங்கு மேற்கண்ட மூன்று சம்பவத்திலும் “கருதப்படுகின்றது’ என்று நாம் குறிப்பிடுவதற்குக் காரணம், புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் எதிலுமே ஏசு எப்போது கல்லறையிலிருந்து வெளியேறினார் என்ற குறிப்பு இல்லை. 27 ஆசிரியர்கள் யாரும் அதை நேரடியாகக் காணவும் இல்லை.

ஒரே ஒருவர் தான், அதாவது அரிமத்திய ஊரைச் சேர்ந்த யோசேப் மட்டும் தான் இதுபற்றித் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பைபிளில் அவரது குரல் அமுக்கப்பட்டு விட்டது. அவருடன் கூடவே இருந்த நிக்தேதமையும் சேர்த்துக் கொள்ளலாம். காரணம், அவ்விருவரும் தான் ஏசு கல்லறையில் வைக்கப்படும் போது அருகில் இருந்தவர்கள். அவ்விருவரும் வெள்ளி மாலை (விடிந்தால் சனி) இருள் படர்ந்த பிறகு, காயம் பட்ட ஏசுவுக்கு ஒற்றடம் கொடுத்து வைத்தியம் செய்வதற்கு எடுத்துச் சென்றவர்கள். அவர்களது சாட்சியக் குரல்கள் பைபிளில் பதிவாகாமல் நிரந்தரமாக அமுக்கப்பட்டு விட்டது.

எளிய கூட்டல்

என்ன தான் கூட்டினாலும், எத்தனை முறை கூட்டினாலும் கிடைக்கப் போகின்ற விடை, ஒரு பகல், இரண்டு இரவுகள் தான். கணக்கு மன்னன் ஐன்ஸ்டீன் வந்தாலும் இந்த விடையை மாற்ற முடியாது.

ஏசு கிறிஸ்து அறிவித்த முன்னறிவிப்பில் கிறித்தவர்களின் பொய்யைப் பாருங்கள்.

ஏசு யோனாவைப் போன்றவர் அல்லர். யோனா மீன் வயிற்றில் உயிருடன் இருந்தார். ஆனால் ஏசுவோ கல்லறையில் இறந்தே கிடந்தார்.
மூன்று இரவுகள், மூன்று பகல்கள் நிலத்திற்குள் இருப்பேன் என்று ஏசு சொன்னார். ஆனால் கிறித்தவர்களோ, ஏசு கல்லறையில் ஒரு பகல், இரண்டு இரவுகள் இருந்தார் என்று சொல்கின்றார்கள்.
இதில் யார் பொய் சொல்கிறார்கள்? ஏசுவா? அல்லது கிறித்தவர்களா? பைபிளா? என்று அவர்களே பதில் சொல்லட்டும்.

மகதலா மேரி
எம்மாவுவைச் சேர்ந்த சீடர்கள்
வானவர்கள்
இரு கல்லறைத் தோழர்கள்
ஆகியோரின் ஆணித்தரமான சாட்சி ஆதாரங்களை நாம் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளோம். அவை அனைத்துமே ஏசு உயிருடன் தான் இருந்தார் என்பதைச் சந்தேகமில்லாமல் நிரூபிக்கின்றன. இருப்பினும் ஏசுவின் சீடர்கள் அவற்றை நம்ப மறுத்தனர். நவீன சீடர்களாவது இதை நம்புவார்களா? சாத்தியமில்லை. சந்தேகப் பேர்வழி தாமஸைப் போல் இவர்களும் நம்புவதற்குச் சாத்தியமில்லை.