03) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 1
ஆரம்பம் முதல் கடைசி வரை யூதர்கள் ஏசுவை அங்கீகரிக்கவே இல்லை. அவரை அவர்கள் மறுத்தே வந்தனர். அவரை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர். ஆனால் அவர் மீது யூதர்களால் மரண தண்டனை விதிக்க முடியாது. காரணம், ஆட்சியதிகாரம் அன்றைய ரோமானியப் பேரரசிடம் தான் இருந்தது. யூதர்களிடம் கோவில் நிர்வாகம் மட்டுமே இருந்தது.
அதே சமயம், தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ரோமானியப் பேரரசை வழிக்குக் கொண்டு வரும் செல்வாக்கை யூதர்கள் பெற்றிருந்தனர். அதன் அடிப்படையில் ஏசு சிலுவையில் அறையப்படுகின்றார். அவரைச் சிலுவையில் ஏற்றிக் கொல்வதற்கான காரணத்தை, அதாவது அதற்கான குற்றத்தை யூதர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியுடன் உள்ளே செல்வோம்.
யூதர்கள் ஏசுவை ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஏசுவும் இதைப் பொறுப்பதாக இல்லை. அதனால் அவர் தன்னுடன் இருக்கின்ற 12 சீடர்கள் சகிதமாக ஜெருஸலத்தை நோக்கிப் புறப்படுகின்றார்.
ஏசுவின் நம்பிக்கைக்குரிய சீடர் யோவான் ஒரு விருந்து படைக்கின்றார். அவ்விருந்தில் ஏசுவின் 12 சீடர்களும் கலந்து கொள்கின்றனர். இவ்விருந்து யோவானின் வீட்டு மாடியிலுள்ள அறையில் நடைபெறுகின்றது. ஏசு, யோவான் ஆகிய இருவரையும் சேர்த்து 14 பேர் உணவு மேஜையில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றார்கள். இதற்கு, “கடைசி இரவு விருந்து’ (Last Supper) என்று அழைக்கப்படுகின்றது. இந்த விருந்து சாப்பிட்ட தெம்பில் தான் ஏசு ஜெருஸலம் நோக்கிப் புறப்படுகின்றார். எதற்காக? யூதர்களின் கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றி கடவுளின் ராஜ்ஜியத்தை நிலை நாட்ட!
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின் மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.
ஜெக்கரிய்யா 9:9
இந்த முன்னறிவிப்பு நிறைவேறும் வகையில் ஏசுவின் வருகை அமைகின்றது.
“கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
மத்தேயு 21:5-9
வழியெங்கும் வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் காத்திருந்தன. கடவுளின் ராஜாங்கம் வெகு விரைவில் உதயமாகவிருந்தது.
இயேசு எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப் போகிறது என்று நினைத்தார்கள்.
லூக்கா 19:11
கடவுளின் ராஜாங்கத்தை எதிர்க்கும் துரோகிகளைத் தன் முன்னே கொண்டு வரச் சொல்லி கழுத்தை வெட்டுமாறு கர்த்தர் (?) ஏசு கட்டளையிடுகின்றார்.
மேலும் அவர், “நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள்” என்று சொன்னார்.
லூக்கா 19:27
குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப் பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
யோவான் 12:13
இவ்வாறு ஏசு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தார்.
இதைக் கண்ட பரிசேயர், “பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை. உலகமே அவன் பின்னே போய்விட்டது” என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.
யோவான் 12:19
இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.
யோவான் 12:31
சீடர்கள் வெளிப்படுத்திய உற்சாகத்தில் ஏசுவுக்கே தலைகால் புரியவில்லை. அவரே நேரடியாகக் களத்தில் வீர சாகசங்களை ஆற்றத் துவங்கி விடுகின்றார்.
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
யோவான் 2:15
இவ்வளவு வரவேற்புக்கள்! வாழ்த்து மழைகள்! அனைத்தும் வெற்றியைப் பெற்றுத் தந்தனவா என்றால் இல்லை. சீடர்கள் கூட்டமும், திரண்டு வந்த மக்கள் கூட்டமும் ஏசுவுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இல்லை. சீடர்களின் உணர்ச்சிப் பெருக்குகளைப் பார்த்து, அவர்களின் இலட்சணங்களைப் புரிந்திருந்த பரிசேயர்கள் சிலர், “அவர்களைத் தட்டி வையுங்கள்’ என்று ஏசுவிடம் சொல்லி வைத்தனர். ஆனால் ஏசு அவர்களைத் தட்டி வைக்கவில்லை. பரிசேயர்கள் எச்சரித்தது போன்று சீடர்களின் போக்கு அமைந்தது.
யூத மத குருமார்களுக்கு இப்போது தகுந்த காரணம் கிடைக்கின்றது.
“இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்று மத குரு காய்பா கூறினார்.
யோவான் 11:50
விளக்கம் தெரியாத ஒரு கூட்டம் ஏசுவைச் சுற்றி வளைத்து, மொய்த்துக் கொண்டிருப்பதால் இப்போது அவரைப் பகிரங்கமாகக் கைது செய்வது பொருத்தமாகாது என்று எண்ணி, யூதாஸைப் பிடிக்கின்றார்கள்.
ஏசு இப்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குகின்றார். யூதர்களை எதிர்கொள்ளக் களமிறங்கவும், கைகளில் ஆயுதம் ஏந்தவும் ஆயத்தமாகின்றார். அதற்கான ஆணைகளையும் பிறப்பிக்கின்றார்.
இயேசு சீடர்களிடம், “நான் உங்களைப் பணப் பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பிய போது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்டார். அவர்கள், “ஒரு குறையும் இருந்ததில்லை” என்றார்கள். அவர் அவர்களிடம், “ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்”
லூக்கா 22:35, 36
யூதர்களுக்கு எதிரான புனிதப் போருக்காக ஒரு போர் முழக்கத்தை, ஒரு போர்த் தளபதியாக மாறிப் போன ஏசு முழங்குகின்றார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொன்ன ஏசு தான் இந்தப் போர் முழக்கத்தைச் செய்கின்றார்.
பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது; ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 18:21, 22
எழுபது தடவை ஏழு முறை, அதாவது 490 முறை மன்னிக்க வேண்டும் என்று கூறிய ஏசு தான் இந்தப் போர்ப் பிரகடனத்தைச் செய்கின்றார்.
இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
மத்தேயு 10:16
இந்த வெள்ளாடுகளைத் தான் வேங்கைகளாக மாறச் சொல்கிறார் ஏசு! சமாதானப் புறாக்களை சண்டைக் கோழிகளாக்கிக் கொண்டிருக்கிறார். ஏன்? சூழ்நிலை மாறி விட்டது. அதனால் ஏசுவின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதனால் தான் இந்தப் புனிதப் போர் முழக்கம். சீடர்களும் வாளாவிருக்கவில்லை. ஆசானின் ஆணையை ஏற்று இரண்டு வாள்களை வாங்கி விட்டனர்.
இங்கே தான் ஏசுவின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். கிறித்தவ அழைப்பாளர்கள் ஏசுவின் ஒரேயொரு முகத்தை மட்டுமே காட்டுகின்றனர். அது தான் சமாதான முகம்; சாந்த முகம்; அமைதி முகம்; ஆன்மீக முகம்.
அவர்கள் ஏசுவின் மற்றொரு முகத்தை மறைத்தே விட்டனர். அது தான் சண்டை முகம்! சாகச முகம்! ஆர்ப்பரிக்கும் போர் முகம்! அரசியல் முகம்! இந்த முகத்தைக் கிறித்தவர்கள் திரை போட்டு மறைத்தே விட்டனர். அவ்வாறு மறைப்பதற்காக அவர்கள் இந்த வாளுக்கு ஆத்மீக வாள் என்று விளக்கம் தருகின்றனர்.
இதன்படி வாள் வாங்குவதற்குப் பண்ட மாற்றாகப் பயன்படுத்தப்பட்ட ஆடைகளும் ஆத்மீக ஆடைகள் என்று தான் கொள்ள வேண்டும். அப்படியானால் ஏசுவின் சீடர்கள் ஆடையில்லாமல் முழு அம்மணமாகத் தான் காட்சி தந்திருக்க வேண்டும். வாள் என்பதற்கு இப்படிப் பொருள் கொண்டால், ஏசுவின் சீடர்கள் நிர்வாணிகள் என்று பொருளாகி விடும்.
மக்களை எப்படி மூளைச் சலவை செய்கிறார்கள் என்று பாருங்கள். ஆன்மீக வாள் என்றால் யாரையும் பதம் பார்க்காமல் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அது சாதாரண கூர்வாள் தான் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் நிரூபித்துக் காட்டி விடுகின்றது.
இயேசு அவனிடம், “தோழா, எதற்காக வந்தாய்?” என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
மத்தேயு 26:51
ஏசு கைது செய்யப்படும் வேளையில் இந்த வாள் அரசுப் பணியாளரின் காதைக் கொய்து விட்டது. எனவே ஆன்மீக வாள் என்ற வாதம் ஒரே வீச்சில் அறுந்து போய் விடுகின்றது. ஏசு ஒரு ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் தர மாட்டார் என்ற ஒரு பக்கத்தை மட்டுமே கிறித்தவ அழைப்பார்கள் காட்டி வருகின்றனர். இங்கே ஏசுவின் இன்னொரு முகம் பட்டாங்கமாகத் தெரிகின்றது. அந்த இன்னொரு முகத்தை பைபிள் இன்னும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.
மத்தேயு 10:34, 35
மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 12:49-51
“நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள்” என்று சொன்னார்.
லூக்கா 19:27
ஏசு போருக்காக ஆயத்தமாகும் போது அவரது ராணுவத்திற்கு இரு வாட்கள் போதுமா? என்ற கேள்வி இங்கே எழலாம். அதற்குப் பதில், போதும் என்பது தான். காரணம், ஏசு எதிர்கொள்ளப் போவது ரோமானிய ராணுவத்தை அல்ல! கோவில் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு குட்டி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற மத குரு தலைமையிலான படையைத் தான்.
இது ரோமானியர்களை எதிர்த்து நிற்கும் யுத்தக் களம் அல்ல! அதற்குத் தான் மொத்தத் தளவாடங்களும் தேவை. யூதர்களை, யூதர்களே எதிர்த்து நிற்கும் இந்தக் களத்திற்கு இந்த இரட்டை வாட்கள் போதும். பாறையைப் போன்ற பேதுரு (பீட்டர்), யோவான் (ஜான்) போன்ற பக்த சீடர்கள் இருக்கும் போது ஏசுவிற்கு என்ன கவலை?
காவல் புரியும் சீடர்கள்?
ஏசு தன் பதினோரு சீடர்களையும் கெத்சமணி தோட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அவர்களில் எட்டு பேரை நுழைவாயிலில் நிறுத்துகின்றார்.
இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், “நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும் வரை இங்கே அமர்ந்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
மத்தேயு 26:36
பிரார்த்தனை செய்யச் செல்கின்றார் என்று யாரும் தவறுதலாகக் கருத வேண்டாம். காரணம், சாலமோன் கோயில் ஒரு கல்லெறி தூரத்திற்கு அருகில் தான் இருக்கின்றது. பின்னர் எதற்காக இந்த ஏற்பாடு? போர் வியூகத்திற்காகத் தான். நுழைவாயிலில் எண்வர் படையை நிறுத்தினார் என்றால் மூவர் படையை இன்னும் உள்ளே அழைத்துச் செல்கின்றார்.
பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
மத்தேயு 26:37, 38
இவர்களை உள்ளே அழைத்துச் செல்லக் காரணம், ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துவதற்காகத் தான். ஆம்! ஓர் இரண்டடுக்குப் பாதுகாப்பு வளையத்தை கெத்சமணி தோட்டத்தில் ஏசு ஏற்பாடு செய்கின்றார்.
இப்படி ஈரடுக்குப் பாதுகாப்பு வளையத்தை ஏசு ஏற்படுத்தி விட்டுத் தான் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்.
தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காகத் தான். பவுல் சொல்வது போன்று மனிதர்களை முதல் பாவத்திலிருந்து மீட்பதற்காக தன்னையே அர்ப்பணிப்பதற்காக அல்ல!
ஜெருஸலம் நோக்கி ஒரு படையெடுப்பு!
கர்த்தரின் ஆட்சியை எதிர்ப்பவர்களின் கழுத்தை வெட்டக் கட்டளை!
ஆயுதம் ஏந்த ஆயத்தம்!
ஈரடுக்குப் பாதுகாப்பு வளையம்!
இவை அத்தனையுமே, “ஏசு சாவதற்குத் தயாராக இல்லை, வாழ்வதற்கு, ராஜாவாக ஆள்வதற்குத் தயாராக இருந்தார்’ என்பதையே காட்டுகின்றன.
இதன்படி, ஏசு இறக்க முன்வந்தார் என்பது அப்பட்டமான பொய் என்று விளங்கிக் கொள்ளலாம்.