உள்ளம் உறுதி பெற!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதருடைய பாசத்திற்குரிய தோழர்கள் மீதும், குடும்பத்தார்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூடியவனாக,

உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் தக்வாவை உபதேசம் செய்தவனாக,
அல்லாஹ்வுடைய பயத்தை முன்வைத்தும், அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பேணி வாழும்படியும், எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக, தக்வாவே அடிப்படை வெற்றிக்கு காரணம் என்று எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம் அனைவருடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்தருள்வானாக! நன்மைகளின் பக்கம் நம்மை நெருக்கமாக்கி வைப்பானாக! தீமையை நம்மிலிருந்து தூரமாக்கி, நம்மையும் தீமையிலிருந்து தூரம் ஆக்கி வைப்பானாக!

அல்லாஹ் பொருந்திக் கொள்ளகூடியவர்களில் என்னையும் உங்களையும் நம் குடும்பத்தார்களையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு எல்லா வகையிலும் அழகிய முன்மாதிரியை, அழகிய நல் உதாரணத்தை நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலும், மற்ற நபிமார்களுடைய வாழ்க்கையிலும் வைத்திருக்கின்றான்.

அவர்கள் சந்திக்காத, அவர்கள் எதிர்கொள்ளாத சவால்களை நாம் இப்போது எதிர்கொள்வதில்லை. நாம் இப்பொழுது என்னென்ன சவால்கள், இன்னல்கள், துன்பங்கள், கஷ்டங்கள் என்று பட்டியல் போடுகின்றோமோ இவற்றைவிட பெரிய சோதனைகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள்.

لَقَدْ أُخِفْتُ فِي اللَّهِ وَمَا يُخَافُ أَحَدٌ، وَلَقَدْ أُوذِيتُ فِي اللَّهِ وَمَا يُؤْذَى أَحَدٌ

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை தங்களது தோழர்களுக்கு ஆறுதல் சொன்னபோது இப்படி சொன்னார்கள்:

எனக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தலை போல யாருக்கும் கொடுக்கப்படவில்லை. அல்லாஹ்விற்காக நான் பயமுறுத்தப்பட்ட அளவிற்கு வேறு யாரும் பயமுறுத்தப்படவில்லை. அல்லாஹ்வின் விஷயத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக எனக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டதை போன்று வேறு யாருக்கும் தொந்தரவு கொடுக்கப்படவில்லை. (1)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2472, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இப்படி மற்ற நபிமார்களோடு அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், துன்பங்கள், துயரங்களோடு, ஒப்பிட்டு, தனக்கு ஏற்பட்ட சோதனைகள், துன்பங்கள், துயரங்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்களுடைய தோழர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களின் உள்ளங்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு இந்த மார்க்கத்தின் மீது பிடிப்பை ஏற்படுத்தினார்கள். உறுதியை ஏற்படுத்துகிறார்கள்.

இந்த உள்ளம் தடுமாறக் கூடிய உள்ளம். விரைவாக பலவீன படக்கூடிய உள்ளம். பயந்து விடக்கூடிய உள்ளம்.

ஆகவேதான், விசேஷமான துஆவை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்காக கேட்டார்கள். தங்களுடைய உம்மத்துக்காக கேட்டார்கள்.

يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது உறுதிப்படுத்தி வைப்பாயாக. நிலைப்படுத்தி வைப்பாயாக.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைய பாசத்திற்குரிய மனைவிமார்களில் ஒருவர் கேட்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! இந்த துஆவை நீங்கள் அதிகம் கேட்கிறீர்களே? என்று.

அப்பொழுது நபியவர்கள் சொன்னார்கள்: ஆம், இந்த உள்ளம் தடுமாறக் கூடியது. அடியார்களுடைய உள்ளங்கள் ரஹ்மான் உடைய இரண்டு விரல்களுக்கு இடையே இருக்கின்றன. அவன் எப்படி நாடுகிறானோ அப்படிப் புரட்டிகிறான். (2)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2140, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

துன்யாவில் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய குழப்பங்கள், அது குழப்பங்கள் அல்ல. ஒரு மனிதன், தீனில் குழப்பம் அடைவது தான் ஆபத்தானது.

எத்தனை பேர் தவ்ஹீது என்றும் சுன்னா என்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவர்கள், அந்த தவ்ஹீதை விட்டு விட்டு, அந்த தவ்ஹீதுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களாக, எதை பித்அத் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களோ, அவற்றை இப்போது சமுதாயம் பின்பற்றவேண்டிய அடிப்படை என்று மக்களுக்கு அழைப்பு கொடுக்கக் கூடிய நிலையில் மாறி இருப்பதை நாம் பார்க்கிறோம்.

தவ்ஹீத் என்று எதை சொன்னார்களோ, அது இப்போது தேவையில்லை. ஷிர்க் என்று எதை சொன்னார்களோ, அதுவெல்லாம் ஷிர்க் இல்லை. நேற்றுவரை ஹராமாக இருந்தது. இன்று அவர்களுக்கு ஹலாலாக மாறியிருக்கிறது. இப்படியாக ஒரு மனிதன் மார்க்கத்தில் குழப்பம் அடைவது.

இது தடுமாற்றத்தில் மிகப்பெரிய தடுமாற்றம். குழப்பத்தில் மிகப் பெரிய குழப்பம். அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இத்தகைய குழப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு, விசேஷமான ஒரு துஆவை கற்றுத் தருகிறான்.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا

யா அல்லாஹ்! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பிறகு, எங்களது உள்ளங்களில் கோணலை ஏற்படுத்தி விடாதே! (அல்குர்ஆன்:)

எவ்வளவு பரிதாபமான நிலை! ஒரு மனிதன் தெளிவான ஆதாரங்கள் அடிப்படையில், ஷிர்க் என்றும் ஹராம் என்றும் வழிகேடு என்றும் புரிந்திருந்து, இப்பொழுது அதே மனிதன் ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக, செல்வத்திற்காக, உலக விளம்பரத்திற்காக, மக்களுடைய புகழுக்காக, மக்களிடத்தில் தனக்கு மதிப்பு வேண்டும் என்பதற்காக, மக்கள் தன்னை ஒதுக்கி விடக் கூடாது என்பதற்காக, என்னை யாரும் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக,
எதையெல்லாம் இவன் ஹராம் என்று சொன்னானோ, அவற்றையெல்லாம் ஹலால் ஆக்கிக் கொள்கிறான் என்றால், எவற்றையெல்லாம் மார்க்க கட்டுப்பாடு என்று சொன்னானோ, அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விடுகிறான் என்றால், இது எவ்வளவு பெரிய வழிகேடு!

நிர்ப்பந்தம் என்பது எது? ஒரு மனிதன் தன்னை கொலை செய்ய வருகிறான். கழுத்தில் கத்தியை வைத்து விடுகிறான். இப்படிப்பட்ட ஒரு நிர்ப்பந்தமான நிலையில் தவிர, அதுவும் அந்த நிலையில் கூட, உள்ளத்தில் நீ குஃப்ரை நினைத்துவிடக்கூடாது. அதை நீ மனதளவில் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.

அதுபற்றி அல்லாஹ் சொல்கிறான்:

إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ

அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தினால் அவன் (இப்படி) நிராகரித்தால் அவன் மீது ஒரு குற்றமுமில்லை. (அல்குர்ஆன்:)

இன்று, அற்ப துன்யாவிற்காக மக்கள் தங்களுடைய மார்க்கத்தை விற்கக்கூடிய நிலையை பார்க்கிறோம்.

இதுகுறித்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

«بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا»

இருள் சூழ்ந்த கடுமையான இருள்களின் பகுதிகளைப் போல, குழப்பங்கள் வருவதற்கு முன்னால் நீங்கள் அமல்களை விரைந்து செய்யுங்கள்.

அந்த குழப்பங்கள் வந்தால் நிலைமை எப்படி மாறும் என்றால், காலையில் முஃமினாக இருப்பவன், மாலை வருவதற்குள் அவன் காஃபிராகி விடுவான். மாலையில் மூஃமினாக இருப்பவன், காலை விடிவதற்குள் அவன் காஃபிராக மாறிவிடுவான். அதாவது, உலக லாபத்துக்காக தன்னுடைய மார்க்கத்தை அவன் விலை பேசுவான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 118.

துன்யாவில் எவ்வளவு பெரிய லாபம் கிடைத்தாலும், மறுமையின் நுழைந்ததும் அந்த துன்யா என்பது அற்பமானது. அது ஒன்றுமில்லை.

ஒரு மனிதர் துன்யாவில் பிறந்து விட்டு, ஒரு ஆட்சியை, பொறுப்பை, அதிகாரத்தை, ஒரு புகழை சம்பாதிக்க நாடுகிறான் என்றால், நம்மில் யாராவது சொல்ல முடியுமா? அவனுக்கு அந்த புகழ், ஆட்சி, அதிகாரம், லாபம் நிரந்தரமானது என்று. அதுவும் இவனுக்கு நிரந்தரமானது அல்ல. இவனும் அதற்கு நிரந்தரமானவன் அல்ல.

அழியக்கூடிய, இல்லாமல் போகக்கூடிய, கைவிட்டுப் போகக் கூடிய இந்த அற்ப துன்யாவிற்காக நிரந்தரமான ஆகிரத்தை மனிதன் விற்கிறான் என்றால், அதைவிட ஒரு மட்டமான வியாபாரம் எதுவாக இருக்க முடியும்?

வியாபாரத்தில் உயர்ந்தது எது? என்பதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏

இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. (அல்குர்ஆன்:)

اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌

இவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். (அல்குர்ஆன்:)

இன்னும் ஒரு கூட்டத்தை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அவர்கள் இந்த துன்யாவை விற்றுவிட்டு, மறுமையை வாங்கியவர்கள். துன்யாவை தியாகம் செய்துவிட்டு, மறுமையை வாங்கியவர்கள். இவர்களுடைய வியாபாரம் தான் வெற்றி மிக்க வியாபாரம் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இத்தகைய பெரிய சோதனைகளை எல்லாம் கொடுத்திருக்கிறான்.

எதிரிகளினால் சோதனை, வறுமையினால் சோதனை, போர் மூலமாக சோதனை, இப்படி எல்லா வகையிலும் அவர்கள் பகைவர்களால் சூழப்பட்டு, ஆபத்துகளால் சூழப்பட்டு, எதிர்ப்பாளர்களால் சூழப்பட்டு இந்த தீனை பாதுகாத்தார்கள்.

இந்த தீவை பாதுகாக்கக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கினார்கள். இந்த தீனுக்காக ஒரு சமூகத்தை அமைத்துக் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வாழ்க்கையை நாம் உதாரணமாக வைத்துவிட்டால், இந்த நாடு என்ன? இதைவிட ஆபத்தான நாட்டில் கூட, இந்த தீனை பின்பற்றியவர்களாக நம்மால் வாழ முடியும்.

குறைஷிகள் எத்தகைய தொந்தரவுகளை கொடுத்தார்கள்! எத்தகைய ஆபத்துக்களோடு, பெரும் படைகளோடு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சூழ்ந்தார்கள்.

இங்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா குர்ஆனுடைய வசனங்களை இறக்கி இறக்கி, அவர்களது உள்ளத்தை அப்படியே உறுதியாக்கி வைத்திருந்தான்.

இந்த உள்ளம் உறுதி பெற வேண்டுமென்றால், இந்த உள்ளத்தில் தடுமாற்றம் ஏற்படாமல், இந்த உள்ளம் ஈமானில் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு மிக முக்கியமான ஒன்று, நாம் இந்தக் குர்ஆனோடு நம்முடைய தொடர்பை உறுதிப்படுத்த வேண்டும்.

சோதனைக் காலங்கள் எவ்வளவு அதிகமாகிறதோ, பிரச்சினைகள் எவ்வளவு அதிகமாகிறதோ, அந்த சமயத்தில் ஒரு அடியான் குர்ஆனின் பக்கம் திரும்பி, இந்த குர்ஆனை ஓதி, இதைப் புரிந்து, இதிலிருந்து எனக்கு என்ன வழிகாட்டுதல் இருக்கிறது? என்று அல்லாஹ்வுடைய வேதத்தை பற்றி பிடிப்பானேயானால், கண்டிப்பாக அல்லாஹு தஆலா அவனுக்கு வழி காட்டுவான். அவனை பாதுகாப்பான்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டுவிட்டார். (அல்குர்ஆன்:)

முஃபஸ்ஸிர்கள் சொல்லுகிறார்கள்: அல்லாஹ்வைப் பற்றி பிடிப்பது என்றால், அல்லாஹ்வுடைய வேதத்தைப் பற்றி பிடிப்பது. அல்லாஹ்வுடைய குர்ஆனைப் பற்றிப் பிடிப்பது. இந்த குர்ஆனை யார் பற்றிப்பிடித்து கொண்டார்களோ, அவர்கள்‏ நேரான பாதையில் வழி காட்டப்படுவார்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய, தோழர்களைப் பற்றி பார்க்கிறோம். போர் என்பது ஆபத்தான ஒன்று. இந்த காலத்து போருக்கும், அந்த கால போருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

இன்று மறைந்துகொண்டு, எங்கேயோ இருந்துகொண்டு தாக்குவார்கள். ஆபத்தான ஒன்றுதான். ஆனால், எதிரி எங்கேயோ இருப்பான்.

ஆனால், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் எதிரியை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அந்த நம்பிக்கையாளர்கள் உள்ளத்தில், எத்தகைய ஒரு மன நிலையை ஏற்படுத்தி இருக்கும்?

பசி பட்டினியில் வாடி, பலவீனத்தோடு போருக்கு வந்திருக்கிறார்கள். எதிரிகளிடம் இருக்கக்கூடிய, எந்தவிதமான ஆயுதங்களோ, தற்காப்பு சாதனங்களோ எதுவுமே இல்லை.

உடல் பலவீனம். அதுபோல அவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஆயுதங்கள் சாதாரணமானது. ஆனால் அந்த ஸஹாபாக்கள் இடமிருந்தத குர்ஆனும், அல்லாஹ்வுடைய திக்ரும், அல்லாஹ்வுடைய தக்வாவும் அவர்களுக்கு அந்த ஈமானிய வலிமையை கொடுத்தன.

அல்லாஹு தஆலா அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதான உறுதியை அதிகப்படுத்தினான். அந்த தக்வாவினால், அந்த ஈமானினால், தங்களை விட பல மடங்கு எண்ணிக்கையில் அதிகமான எதிரிகளை அவர்கள் துணிவோடு எதிர் கொண்டார்கள். அல்லாஹ் வெற்றி கொடுத்தான்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தோழர்களையும், போர் குறித்த வரலாறுகளையும் எடுத்து படியுங்கள். போர் நேரத்தில் அல்லாஹு தஆலா அவர்களுக்கு கட்டளையிட்டான்.

فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا

போரில் நீங்கள் உறுதியாக இருங்கள். அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுங்கள். (அல்குர்ஆன்:)

இரண்டாவதாக அவர்களுடைய தொழுகையை அவர்கள் பேணினார்கள். ஆகவேதான், நீங்கள் சூரா நிஸா உடைய அத்தியாயத்தில் பார்க்கலாம்.

وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ

வசனத்தின் கருத்து : நபியே! போர் நேரத்தில், நீங்கள் அவர்களுடன் இருக்கும்பொழுது, அவர்களுக்கு தொழுகையை இப்படி நிலை நிறுத்துங்கள். நீங்கள் தொழ வைக்கும் பொழுது, ஒரு கூட்டம் உங்களுடன் இருக்கட்டும். இன்னொரு கூட்டம் எதிரிகளுக்கு எதிராக, முஸ்லிம்களை பாதுகாத்துக் கொண்டு இருக்கட்டும். (அல்குர்ஆன்:)

பிறகு, நீங்கள் முதல் ரக்அத் முடித்தவுடன் உங்களோடு தொழுது கொண்டிருந்தவர்கள், ஒரு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு, அவர்கள் எதிரியை எதிர்க்க சென்றுவிடட்டும். எதிரிகளுக்கு முன்னால் இருந்தவர்கள். உங்களுடன் வந்து ஒரு ரக்அத் தொழட்டும். நபிக்கு இரண்டு ரக்அத். மூஃமின்களுக்கு ஒரு ரக்காயத். இப்படியாக போர் நேரத்தில் தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டானே அந்த தொழுகையை அவர்கள் பேணினார்கள்.

பிறகு, அவர்களுடைய இரவு நேரங்கள் குர்ஆன் ஓதுவதில் கழிந்தன. ஒரு ஊரில் ஸஹாபாக்கள் போருக்கு சென்றிருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய அந்த இரவு, அவர்களுடைய கூடாரங்கள் எல்லாம் வெளிச்சங்களால் நிரம்பி, குர்ஆன் ஓதக் கூடிய சப்தங்களால் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கும்.

இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுக்கு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்த பண்பு ஆகும்.

இத்தகைய ஒரு நிலையில்தான் அவர்களுடைய ஈமான் உயர்ந்திருந்தது. அவர்களுக்கு வானத்திலிருந்து அல்லாஹு தஆலா உடைய உதவி இறங்கிக்கொண்டிருந்தது.

நம்முடைய தொடர்பு இந்த குர்ஆனோடு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள். வெறும் அந்த குர்ஆனை ஓதுவதோடு நிறுத்திக் கொள்கிறவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். அந்த குர்ஆன் என்ன சொல்லுகிறது? என்ன பேசுகிறது? என்று அதை புரியாதவர்கள் தான் நம்மில் அதிகமானவர்கள் இருக்கிறார்கள்.

அல்லாஹு தஆலா இந்தக் குர்ஆனைப் பற்றி சொல்லும் பொழுது, அழகாக நமக்கு விவரிக்கிறான்:

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا

(நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் ‘‘ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் அவர்மீது இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகின்றனர். (இதை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ஆகும். (அல்குர்ஆன்:)

குர்ஆனை படிப்பது, குர்ஆனை ஓதுவது, அந்த குர்ஆனோடு பசுமையான தொடர்ந்து நிரந்தரமான தொடர்பை வைத்திருப்பது மூஃமின்களுக்கு, குறிப்பாக சோதனைக் காலங்களில், எதிரிகளின் ஆபத்துகள் நிறைந்த காலங்களில் அவர்களுடைய ஈமானை, அவர்களுடைய உள்ளத்தை, பலப்படுத்திக் கொள்வதற்கு உண்டான மிகப்பெரிய சாதனம் ஆகும்.

நாம் பெரிய படையால் பாதுகாத்து இருப்பதைவிட, பெரிய பலமான உயரமான கோட்டைக்குள் இருந்து கொண்டு, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைப்பதை விட, ஒரு மூஃமின் அல்லாஹ்வுடைய வேதத்தோடு நான் இருக்கும் பொழுது, அதை ஓதியவனாக, அதைப் படித்தவனாக, அதை புரிந்தவனாக, அதன் மீது நம்பிக்கை கொண்டவனாக, அதை உணர்ந்தவனாக நான் இருக்கும் பொழுது, எனக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இருக்கும் என்று, ஒருவன் நம்புவானேயானால் அவர் உண்மையான மூஃமின்.

அது உண்மையான உறுதியான ஈமான். ஆயுதங்கள் வேண்டாம் கோட்டைகள் வேண்டாம் என்று அல்லாஹ் சொல்லவில்லை.

அவற்றை விட எனக்கு பாதுகாப்பு அல்லாஹ்வுடைய குர்ஆனில், அல்லாஹ் உடைய வேதத்தை நம்புவதில், அதோடு எனக்கு இருக்கக்கூடிய தொடர்பில், அதன் மேல் இருக்கக் கூடிய எனது ஈமானிய தொடர்பில் இருக்கிறது.

இரண்டுக்கும் வித்தியாசம், ஆயுதங்கள் இருந்தால், அந்த நம்பிக்கை ஆயுதங்கள் மீது இருந்தால், அல்லாஹு தஆலா ஆயுதங்களோடு நம்மை சாட்டி விடுவான். கோட்டைகளின் மீது நம்பிக்கை இருந்தால், அந்தக் கோட்டைகளின் பக்கமே அல்லாஹ் சாட்டி விடுவான்.

ஒரு அடியானுக்கு குர்ஆனின் மீது நம்பிக்கை இருக்குமேயானால், அல்லாஹ் அவர்களை பொறுப்பேற்றுக் கொள்வான்.

அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ

‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான். (அல்குர்ஆன்:)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன்:)

இன்று, நம்முடைய பலவீனம் இதுதான். இந்த குர்ஆனோடு நாம் இருக்கக்கூடிய தொடர்பில் பலவீனமாக இருக்கிறோம், அதைப் புரிந்து கொள்வதில், அந்தக் கருத்தைச் சிந்தித்து, நம்முடைய ஈமானை பலப்படுத்தி கொள்வதில் நாம் பலவீனமாக இருக்கிறோம்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த அழகிய அறிவுரையை கவனியுங்கள்.

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌ وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏

உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உமக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையும் இருக்கின்றன. (அல்குர்ஆன்:)

இன்று, எத்தனை பேருக்கு குர்ஆனிலிருந்து நபிமார்களுடைய வரலாறுகளை படிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது? போலியான பொய்யான மனதையும், அறிவையும் கெடுக்கக் கூடிய, அற்பமான கதைகள், விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கக்கூடிய நம்மில் பலருக்கு, நபிமார்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டுமே, அதுவும் குர்ஆனிலிருந்து, சுன்னாவில் இருந்து படித்த புரிய வேண்டுமே, என்ற ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

இந்த வரலாறுகளை நாம் குர்ஆனில் ஏன் சொல்லுகிறோம் என்று அல்லாஹ் காரணம் கூறுகிறான்.

நபியே! உங்களுடைய உள்ளம் தடுமாறாமல் இருப்பதற்காக, உங்களுடைய உள்ளத்தை சிரப்படுத்துவதற்காக, உங்களுடைய உள்ளத்தை பலப்படுத்துவதற்காக, நிலைப்படுத்துவதற்காக, இந்த வரலாறுகளை ஓதி காண்பிக்கிறோம் என்று.

ஆகவே, நாமும் இந்த குர்ஆனோடு நம்முடைய தொடர்பை புதுப்பிப்போமாக! குர்ஆனுடைய மாதம் இறங்க இருக்கிறது. அதற்கு முன்பே, நாம் அதற்காக தயாராகி, குர்ஆனோடு நம்முடைய தொடர்பை புதுப்பித்து, அதிகப்படுத்தி, குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் ஓத ஆரம்பிப்பது. படிக்கத் தெரியாதவர்கள் அதைக் கற்றுக்கொள்வது.

பிறகு, அந்த குர்ஆனுடைய, பொருள்களை, கருத்துக்களை சிந்திக்க ஆரம்பிப்பது. அதன் மீது நம்பிக்கையை அதிகப்படுத்துவது. அதைப் படித்து படிப்பினைகள் பெற்று, நம்முடைய ஈமானை பலப்படுத்தி கொள்வோமாக!

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்குர்ஆனோடு அழகிய தொடர்பை ஏற்படுத்தி தருவானாக! நமது சந்ததிகளுக்கு அல்லாஹு தஆலா அல்குர்ஆனின் அழகிய தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து, குர்ஆனிய சமுதாயமாக வாழ்வதற்கும், இறப்பதற்கும் அல்லாஹ் உதவி செய்வானாக!