06) பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவது பித்அத்தா?

நூல்கள்: பித்அத் ஓர் வழிகேடு

இந்த கேள்வி மார்க்கம் பற்றிய அடிப்படை தெரியாததால் எழும் கேள்வியாகும். இதற்கான விடையறிய மார்க்கத்தின் அடிப்படையை அறிந்துக் கொள்ள வேண்டும்.

மார்க்கம் என்பது வஹியில் உள்ளவை மட்டுமே என்ற அடிப்படையை முன்னர் அறிந்தோம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

அதே சமயம் உலக பழக்க வழக்கங்களுக்கு மார்க்கம் ஒரு அனுமதியை நமக்கு தருகிறது. இதை பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது?என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

(முஸ்லிம்: 4358)

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(முஸ்லிம்: 4357)

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(முஸ்லிம்: 4356)

மார்க்கத்தின் கொள்கை, சட்டதிட்டங்கள், வணக்கம், ஹராம், நன்மை என்று எதுவாக இருந்தாலும் அது இறைவனின் புறத்திலிருந்தே நமக்கு சொல்லப்பட வேண்டும். அதை நபி(ஸல்) அவர்கள் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். விவசாயம் போன்ற உலக நடைமுறை சார்ந்த பழக்க வழக்கங்கள் என்றால் மார்க்கம் தடை செய்ததை தவிர்த்துவிட்டு பழக்க வழக்கத்திற்கு ஏற்ப செய்துக் கொள்ளலாம் என்று மேற்படி செய்தியிலிருந்து இந்த அடிப்படையை விளங்கிக் கொள்ள முடிகிறது.

உதாரணமாக, பாங்கு சொல்வது நன்மை; வணக்கம். இந்த பாங்கு நபி(ஸல்) அவர்களால் எப்படி வழிகாட்டப்பட்டதோ அப்படி தான் சொல்ல வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பாங்கிற்கு முன்னால் ஸலவாத் சொல்லப்படவில்லை. இன்று பல பகுதிகளில் பாங்கிற்கு முன்னால் ஸலவாத் சொல்லப்படுகிறது.

பாங்கு சொல்வதும் நன்மை தான். ஸலவாத் ஓதுவதும் நன்மை தான். ஆனால் இவ்விரண்டையும் எப்படி செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லித் தந்தார்களோ அப்படி செய்ய வேண்டும்.

பாங்கிற்கு முன்னால் ஸலவாத் சொல்வது நன்மை என்றால் அதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பாங்கிற்கு முன்னால் ஸலவாத் சொல்வதை நமக்கு எந்த இடத்திலும் வழிகாட்டவே இல்லை.

அதனால் இவ்வாறு பாங்கிற்கு முன்னால் ஸலவாத் சொல்வது பித்அத்தாகிவிடுகிறது.

இவ்வாறு மார்க்கத்தின் அகீதா(கொள்கை), சட்ட திட்டங்கள், வணக்கம், நன்மை போன்ற விஷயங்கள் அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் தான் செய்ய வேண்டும். (இந்த அடிப்படையை பித்அத்தை கண்டறிய எளிய வழி என்ற தலைப்பில் விளக்கியிருந்தோம்.)

இதுவல்லாத நடைமுறைச் சார்ந்த பழக்க வழக்கங்களை பொறுத்தவரை நபிகள் நாயகத்தின் பழக்க வழக்கத்தையே கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. அது மார்க்க அம்சமும் இல்லை.

உதாரணமாக நபிகள் நாயகம் ஒட்டகத்தில் பயணித்தார்கள். நாமும் ஒட்டகத்தில் தான் பயணிக்க வேண்டும். பைக், கார் என்று எந்த நவீன வாகனமும் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

ஏனெனில், இதுவெல்லாம் மார்க்கம் கிடையாது. நடைமுறை பழக்கங்கள்.

இவ்வாறான நடைமுறைச் சார்ந்த பழக்க வழக்கங்களில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தடையில்லையென்றால் அது நமக்கு அனுமதியே!

இதுபோலவே மார்க்கத்தில் சில விஷயங்களைச் செய்யுங்கள் என்று கட்டளை மட்டுமே இருக்கும். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது அந்தந்த காலத்தவரின் உலக அறிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

உதாரணமாக உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! என்பது கட்டளை. இதை மையமாக கொண்டு பிரச்சாரத்தை அனைவரையும் அறியச் செய்ய அன்றைய உலக அறிவை அடிப்படையாகக் கொண்டு நபியவர்கள் ஸபா மலைக்குன்றின் மீது ஏறி நின்று மக்களை அழைத்து எச்சரிக்கை செய்தார்கள். அது போன்று மக்கள் கூடும் சந்தைகளிலும், ஹஜ்ஜுக் காலங்களில் மக்கள் கூடும் போதும் பல்வேறு விதங்களில் செய்துள்ளார்கள்.

இன்றைக்கு நாம் பிட்நோட்டீஸ், டிவி, தெருமுனை, யுடியூப் மற்றும் சமூக வலைதங்களில் வீடியோக்கள், உள்ளரங்கு என்ற பல விதங்களில் செய்கிறோம்.

இவ்வாறு, அல்லாஹ் கட்டளையிட்டுள்ள ஒரு நோக்கத்தை அடைவதற்காக செய்யப்படும் முயற்சிகளில், இவ்வாறு செய்வது மட்டும் தான் வணக்கம் என்று கூறினாலோ, அல்லது இவ்வாறு செய்வதை மாற்றினால் பாவம் என்று கருதினாலோத் தான் அது பித்அத்தாக ஆகிவிடுமே தவிர இன்றைய கால வளர்ச்சியை பயன்படுத்தவே கூடாது என்பதில்லை.

இது போலவே, பாங்கின் நோக்கம் அந்த சப்தம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதுதான். அதற்காக நபியின் காலத்தில் உயரமான இடத்தில் ஏறி பாங்கு கூறினார்கள். உயரமான இடத்தில் ஏற வேண்டும் என்பது வணக்கம் அல்ல. அது அன்று இருந்த உலக அறிவு.

நாம் இன்றைக்கு பாங்கை மாற்றவில்லை. அல்லது புதிய ஒரு அழைப்பு முறையை உருவாக்கவில்லை. பாங்கு என்ற நபிகள் நாயகம் காட்டித் தந்த வணக்கத்தை அதே வரிகளில் எதையும் மாற்றாமல் சேர்க்காமல் இன்றைக்கு மக்களுக்கு கேட்கச் செய்ய என்ன நடைமுறை உலக அறிவு இருக்கிறதோ அத்தகைய மைக்கை பயன்படுத்திக் கொள்கிறோம். ஏனெனில் இது மார்க்கத்தில் தடையில்லை. இதில் மைக்கில் சொன்னால் தான் வணக்கம் என்று யாரும் சொல்லவில்லை. பாங்கு சொல்வது தான் வணக்கமே தவிர மைகில் சொன்னால் தான் வணக்கம் நிறைவேறும் என்று யாரும் சொல்வதில்லை.

அதே சமயம், ஒருவர் வந்து ரெக்கார்டிங் பாங்கை ஒலிபரப்புகிறேன் என்று சொன்னால் அதை கூடாது என்போம். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகை நேரம் வந்துவிட்டால் “உங்களில் ஒருவர்” பாங்கு சொல்லட்டும் என்று கூறியதால் நம்மில் ஒரு நபர் தான் பாங்கு சொல்ல வேண்டும் என்று கூறுவோம்.

எனவே, மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை செய்வதற்கு மார்க்கம் தடை செய்யாத அந்தந்த காலத்தின் உலக அறிவை பயன்படுத்திக் கொள்ள எந்த விதமான தடையும் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். ஏனெனில், அதன் மூலமாக மார்க்க காரியத்தை அதிகமாக அல்லது சிறப்பாக செய்கிறோம் அவ்வளவு தான். பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவது பித்அத் என்று கூறுவோரும் இந்த அடிப்படையை நன்கு விளங்கி வைத்துள்ளனர்.

இவ்வாறு தான், மார்க்கத்திற்கு எதிரான பித்அத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வது மார்க்க கடமை. அதை ஆயிரக்கணக்கான மக்களுக்கு எளிதில் சென்று சேரும் விதமாக மாநாடு என்ற பிரச்சார முறையை கையாளுகிறோம். இங்கு மாநாடு நடத்தினால் மட்டும்தான் நன்மை என்று யாரும் சொல்லவில்லை. அங்கு செய்யப்படும் பிரச்சாரத்திற்கும் அதை நாம் கற்றுக் கொள்வதற்கும் தான் நன்மை.

எனவே, பித்அத் ஒழிப்பு மாநாடே பித்அத் என்று சொல்வதெல்லாம் மார்க்கத்தை சற்றும் அறியாதவர்கள் செய்யக்கூடிய விமர்சனம் என்பதை சிந்திக்கும் மக்கள் புரிந்துக் கொள்வார்கள்.

இப்படி விமர்சனம் செய்பவர்கள் யார் என்றால்? மார்க்கம் அனுமதி கொடுத்த இப்படியான நடைமுறைச் சார்ந்த, பழக்க வழக்கம சார்ந்த விஷயங்கள் அல்லாமல் வணக்க வழிபாட்டையே புதிதாக உருவாக்குபவர்கள்.

மவ்லிது என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி வைத்துக் கொண்டு அதை படித்தால் பரக்கத் கிடைக்கும். நன்மை கிடைக்கும் என்று சொல்பவர்கள். இது நடைமுறைச் சார்ந்தது அல்ல. ஒரு வணக்கத்தை விதைக்கிறார்கள். இதற்கு எந்த சான்றையும் சமர்ப்பிக்காமல் இப்படியான அவர்களும் ஒப்புக் கொண்ட நடைமுறைச் சார்ந்த பழக்கங்கள் குறித்து மக்களை குழப்பும் விதமாக கேட்கின்றனர்.

இந்த நடைமுறைச் சார்ந்த பழக்கவழக்கங்கள் குறித்துதான் தற்பாது அறிந்தோம்.

இத்தகைய கேள்வி கேட்பவர்களால் வணக்கங்கள், நன்மைகள் என்ற பெயரில் இறைவனின் அதிகாரத்தில் தலையிடும் விதமாக அரங்கேற்றும் பித்அத்களில் சில உங்கள் பார்வைக்கு…

  • மவ்லிதுகள்
  • மீலாது
  • ஃபாத்திஹாக்கள்
  • கத்தம்
  • கந்தூரி
  • சந்தனக்கூடு
  • புர்தா
  • ஸலவாத்துன்னாரிய்யா
  • இஷ்ராக் தொழுகை
  • தஸ்பீஹ் தொழுகை
  • 786
  • ஈத் முபாரக்
  • கூட்டு துஆ
  • குர்ஆனை முத்தமிடல்
  • இறந்தவருக்கு யாஸீன்
  • தஸ்பீஹ் மணி
  • பராஅத் இரவு
  • மிஃராஜ் நோன்பு
  • தராவீஹ் 20 ரக்அத்கள்?
  • கருகமணி
  • குழந்தை காதில் பாங்கு சொல்லுதல்
  • ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கு
  • பாங்கிற்கு முன் ஸலவாத்
  • சுபுஹ் குனூத்
  • திருமணத்தில் அல்லிஃப் பைனகுமா ஓதுதல்

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். பித்அத்களில் நேரடியாக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மவ்லிது ஃபாத்திஹா போன்ற பித்அத்களும் இருக்கின்றன. இறையதிகாரத்தில் தலையிடும் வழிகேட்டிற்கும் அழைத்தும் செல்லும் ஏனைய பித்அத்களும் இருக்கின்றன. அனைத்தும் நரகிற்கே அழைத்துச் செல்லும்.

உடல் உழைப்பையும் பொருளாதாரத்தையும் விரையம் செய்து இந்த பித்அத்களில் ஈடுபட்டு அதன் விபரீதம் புரியாமல் காசை கொடுத்து நரகத்தை வாங்கும் செயலை மக்கள் அறியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை அதிலிருந்து மீட்டு மவ்லிதிற்கு பதில் குர்ஆன் ஓதுங்கள், இறந்தோருக்கு ஃபாத்திஹா ஓதுவதற்கு பதில் தர்மம் செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்களின் சுன்னத்களை அறிமுகப்படுத்துவோம்

இதுகுறித்து நாமும் அறிந்து அறியாத மக்களையும் அறியச் செய்து பித்அத்தை களைந்து சுன்னத்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமாக மாற அல்லாஹ் அனைவருக்கும் வழிகாட்டுவானாக!