04) பித்அத்தான செயல்களை கண்டறியும் முறைகள்

நூல்கள்: பித்அத் ஓர் வழிகேடு

இரண்டாம் வழி – முறையை மாற்றுதல்

மார்க்கம் என்று செய்யப்படும் ஒரு காரியத்திற்கு மார்க்கத்தில் அடிப்படை ஆதாரமே இல்லையென்றால் அதை வைத்தே அது பித்அத் என்று அறிந்துக் கொள்ளலாம் என்பதை மேலே கண்டோம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்ததற்கான காரணம், விதம், அளவு, காலம், இடம், வகை தெளிவுப்படுத்தப்பட்ட பிறகு இவற்றில் எந்த ஒன்றை நாம் மாற்றி அந்த காரணம் அல்லாத வேறு காரணத்திற்காகவோ அல்லது வேறு விதத்திலோ அல்லது வேறு அளவிலோ அல்லது இதுபோன்ற ஹதீஸில் தெளிவுப்படுத்ப்பட்ட முறைகளை மாற்றியோ செய்தால் அதுவும் பித்அத்தே!

இதை வைத்தும் பித்அத்தை கண்டறிந்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, தொழுகையை எந்த நேரத்தில் எந்த முறையில் எந்தளவு தொழ வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

ஃபஜர் தொழுகை இரண்டு ரக்அத்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க இரண்டு ரக்அத்கள் மிக குறைவாக இருக்கிறது. நான்கு ரக்அத்கள் தொழுதால் தவறா? தொழுவது நன்மைதானே என்று சொல்ல கூடாது.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் என்று சொன்னால் இரண்டு ரக்அத் தான் தொழ வேண்டும். அதை மாற்றினால் அது பித்அத்தாக ஆகிவிடும்.

கிரகணம் ஏற்பட்டால் தொழும் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அந்த தொழுகையை அந்த கிரகணம் என்ற காரணம் ஏற்பட்டால் மட்டுமே தொழ வேண்டும்.

அப்படியிருக்க கிரகணத்தை போலவே பூகம்பம் ஒரு இயற்கை மாற்றம். அதனால் அந்த நேரத்தில் கிரகணத் தொழுகை தொழுவது போல பூகம்பத் தொழுகை தொழுகிறேன் என்றால் அது பித்அத்.

ஏனெனில், கிரகணத் தொழுகையை கிரகணம் ஏற்பட்டால் தொழ வேண்டும் என்று ஒரு காரணத்தை சொல்லியிருக்கும் போது அந்த காரணத்தை மாற்றுவது யாருக்கும் அதிகாரம் இல்லை.

எனவே, எதை எதை எந்த நேரத்தில் எந்த முறையில் எந்த காரணத்திற்காக நபி(ஸல்) அவர்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்களோ அதை அதை அந்தந்த முறைகளில் தான் செய்ய வேண்டும். அதை மாற்றுவது பித்அத் ஆகிவிடும். அது நன்மை என்று பார்க்கப்படாது.

இதை பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

(புகாரி: 5063)

இந்த செய்தியில் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த காரியங்களின் முறைகளை மாற்றுபவர்களை சுன்னத்திற்கு மாற்றம் செய்பவர்கள் என்று நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இந்த செய்தியில் நபி(ஸல்) அவர்களின் மனைவியரின் வீட்டிற்கு வந்தோர் தாங்கள் செய்யப் போகும் காரியங்களாக மார்க்கத்தில் இல்லாத காரியத்தை குறிப்பிடவில்லை. தொழப்போகிறேன்; நோன்பு நோற்க போகிறேன் என்றே கூறினார்கள்.

தொழுகையும் நோன்பும் நன்மை தான் என்றாலும் இவர்கள் சொன்ன முறை நபி(ஸல்)  அவர்கள் காட்டித் தந்த முறையல்ல.

இரவு தொழுகை நபி(ஸல்) அவர்களால் வழிகாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை உறங்காமல் இரவு முழுவதும் செய்யும் முறையையோ அளவையோ அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டவில்லை.

நோன்பு நோற்பதை நபி(ஸல்)  அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஆனால் வருடம் முழுதும் செய்வதை வழிகாட்டவில்லை.

இப்படி நபி(ஸல்) அவர்களால் வழிகாட்டப்பட்ட நன்மையன காரியமாயினும் அதை எப்படி எந்தளவில் எப்போது செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டினார்களோ அப்படி தான் செய்ய வேண்டும். அதை மாற்றினால் அல்லது மீறினால் அங்கு அது நன்மை என்றோ சுன்னத் என்றோ பார்க்கப்படாது அதற்கு மாற்றமான பித்அத்தாகவே ஆகும்.

மேலும், இதை பின்வரும் செய்தியிலிருந்தும் அறிந்துக் கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) கல்லெறியும் காலை நேரத்தில் தனது வாகனத்தில் இருந்தக் கொண்டே “எனக்கு கற்களை பொறுக்கித் தருவீராக!” என்று கூறினார்கள். நான் அவர்களுக்காக சிறு கற்களை பொறுக்கினேன். அவைகள் சுண்டு எறியும் அளவில் இருந்தன. அவற்றை அவர்களது கையில் நான் வைத்த போது,  இவை போன்றதையே எறியுங்கள்! மார்க்கத்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

(நஸாயீ: 3007)

கல்லெறியுங்கள் என்று ஹஜ்ஜின் ஒரு கிரியையாக நபி(ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை கட்டளையிட்டுவிட்டு அதை எந்த முறையில் செய்ய வேண்டும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

சிறுகற்களாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு அதில் யாரும் வரம்பு மீறக் கூடாது என்று எச்சரித்துள்ளார்கள்.

சிறு கற்கள் என்றால் சிறுகற்கள் தான். ஷைத்தானை தானே கல்லெறிகிறோம் என்று பெரிய கற்களையோ அல்லது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஏனையோ முறையையோ அளவையோ காலத்தையோ மாற்றக்கூடாது. மாற்றினால் அது மார்க்கத்தில் வரம்பு மீறும் செயலாகும்.

இப்படி அதிகப்படுத்தப்படும் அல்லது முறை மாற்றப்படும் காரியங்கள் ஒரு போதும் நன்மையாகவா சுன்னத்தாகவா பார்க்கப்படாது. மாற்றப்பட்ட பித்அத்தாகவே ஆகும்.

எனவே, மார்க்கத்தில் அறவே அடிப்படையற்ற காரியங்கள் எப்படி பித்அத்தோ அது போலவே மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒரு காரியத்தை அல்லாஹ் மற்றும் அவனது தூதர்(ஸல்) அவர்களால் சொல்லப்படாத காரணத்திற்காகவும் அளவில் இடத்தில், விதத்தில், வகையில் என்று சொல்லப்படாத முறையிலும் செய்தால் அதுவும் பித்அத்தே!

மூன்றாம் வழி – நிர்ணயம் செய்தல்

மார்க்கத்தில் அடிப்படை ஆதாரமே இல்லாத ஒரு காரியத்தை செய்வதும் பித்அத் என்றும் மார்க்கத்தில் சொல்லப்பட்ட காரியத்தின் காரணம், காலம், அளவு போன்றவற்றை மாற்றினாலும் பித்அத் என்றும் மேலே கண்டோம்.

அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் அளவோ காலமோ நிர்ணயம் செய்யாத ஒரு வணக்கத்திற்கு குறிப்பிட்ட அளவை, காலத்தை, காரணத்தை நிர்ணயம் செய்வதும் பித்அத்தாகும்.

இந்த அடிப்படையை வைத்தும் பித்அத்தை கண்டறிந்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, ஒருவர் இரண்டிரண்டு ரக்அத்களாக எவ்வளவு வேண்டுமானாலும் தொழுதுக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி தந்துள்ளார்கள்.

அதை வைத்துக் கொண்டு 20 ரக்அத்கள் தொழ வேண்டும் என்றோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கயில் தொழ வேண்டும் என்றோ சொல்வது பித்அத்தாக ஆகிவிடும்.

ஏனெனில், அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ அளவையும் நேரத்தையும் நிர்ணயம் செய்யாத போது அதில் நிர்ணயம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.

இரண்டிரண்டாக தொழலாம் என்றால் ஏன் 20 ரக்அத்கள் தொழக் கூடாது என்ற சந்தேகம் இங்கு எழலாம்.

அதற்கு, நஃபில் – உபரியான வணக்கம் பற்றி முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் கடமை, சுன்னத் மற்றும் நஃபில் என்று வணக்க வழிபாடுகள் மூன்று விதமாக சொல்லப்பட்டுள்ளது.

உதாரணமாக, கடமையான தொழுகை என்றால் ஐவேளைத் தொழுகை. இதை எந்த நேரத்தில் எந்தளவு தொழ வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்களோ அவ்வாறு தான் செய்ய வேண்டும்.

கடமை என்பதை கட்டாயம் செய்ய வேண்டும். செய்தால் நன்மை. செய்யாமல் விட்டால் பெரும் பாவமாகும்.

சுன்னத்தான் தொழுகைகளையும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் முன் பின் சுன்னத்கள். இதையும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் அளவில் தான் செய்ய வேண்டும்.

இவற்றை செய்தால் நன்மை. செய்யாமல் விட்டால் பாவம் கிடையாது.

அடுத்து, நஃபிலான வணக்கங்களையும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நஃபில் என்பது ஒவ்வொரு தனி மனிதரும் மார்க்கம் சொல்லித் தந்திருக்கும் வணக்க வழிபாடுகளில் கடமை அல்லாதவற்றில், தான் விரும்பிய நேரத்தில் விரும்பிய அளவில் செய்வதாகும்.

இதை பின்வரும் செய்தியிலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்(தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்) என்றார்கள்.

 அவர் இதைத் தவிர வேறு(தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க, இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர என்றார்கள்.

 அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா(ரலி)

(புகாரி: 46)

இப்படி ஒருவர் மார்க்கத்தில் சொல்லப்பட்ட கடமை அல்லாத எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் அதில் தானாக விரும்பி அதிகப்படுத்திக் கொள்வதே நஃபிலாகும். இவ்வாறு செய்வது நன்மையே!

ஆனால், இப்படி குறிப்பிட்ட அளவில் அல்லது நேரத்தில் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது தனி நபர் விருப்பத்தைச் சார்ந்தது தானே தவிர பொது நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு பொது நிர்ணயம் செய்வது பித்அத்தாகிவிடும்.

உதாரணமாக, இரண்டிரண்டு ரக்அத்களாக எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழுதுக் கொள்ளலாம் என்பது நபி(ஸல்) அவர்கள் கொடுத்த அனுமதி.

இதை ஒருவர் தாமாக விரும்பி தினமும் லுஹர் தொழுகைக்கு பின்னால் சுன்னத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு நேரம் இருக்கிறது என்பதால் நஃபிலாக நான்கு ரக்அத்கள் தொழ விரும்புகிறார் எனில் அவர் தொழுதுக் கொள்ளலாம்.

ஆனால், தினமும் லுஹரின் சுன்னத் தொழுகையை நிறைவேற்றிய பின்னால் நான்கு ரக்அத்கள் தொழுவது நன்மை என்று அவர் மற்றவர்களுக்கு சொன்னாலோ அல்லது அவரை பார்த்து மற்றவர்கள் அதை நன்மை என்று நம்பி செய்வார்களாயின் அதுவும் பித்அத்தாகும்.

இதை போல உபரியான நோன்பு நோற்பது நன்மையே. உபரியான வணக்கங்கள் புரிந்து அதன் மூலம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுத் தரும்.

எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செய-லும் தயக்கம் காட்டுவ தில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

(புகாரி: 6502)

இதை வைத்துக் கொண்டு வாருங்கள் அனைவரும் இன்ன நாளில் நோன்பு நோற்று சிரியா மக்களுக்காக பிரார்த்திப்போம் என்று தீர்மானிக்க கூடாது.

ஏனெனில், ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய நேரத்தில் விரும்பிய அளவில் செய்வது தான் நஃபில். அப்போது தான் அது நன்மையாக இருக்கும். அதை பொது நிர்ணயம் செய்யும் போது பித்அத்தாக ஆகும்.

இதுவே பித்அத்களை நாம் கண்டறிவதற்கான எளிய வழிகள்.

பித்அத்களிலிருந்து விலக நமது ஈமானை ஆட்டம் காணச் செய்யும் ஒரு நேசத்தைப் பற்றியும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதுப் பற்றியும்  அடுத்த பகுதியில் அறிவோம்!