52) வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

52) வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்

வெள்ளிக்கிழமையன்று மரணித்தால் மரண வேதனை கிடையாது என்று சிலர் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில நபி மொழிகளும் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் பலவீனமானது.

யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூயஃலா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர்.

இதுபோன்ற கருத்தில் மற்றொரு ஹதீஹ் திர்மிதி 994 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமானது என்பதை இமாம் திர்மிதீ அவர்களே அந்த ஹதீஸுக்குக் கீழே தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

இதே கருத்தில் அஹ்மத் நூலில் இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. 6294 வது ஹதீஸை ஹிஷாம் பின் ஸஅது என்பவர் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். 6359 வது ஹதீஸை முஆவியா பின் ஸயீத் என்பவர் அறிவிக்கிறார். இவர் யார் என்று அறியப்படாதவர்.

எனவே இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமான தாக உள்ளதால் வெள்ளிக்கிழமை மாணித்தால் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்புவது தவறாகும். ஒரு மனிதர் எந்த நாளில் எந்த மாதத்தில் எந்த வயதில் எந்த இடத்தில் மரணிக்கிறார் என்பதற்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.