30) அவதூறு கூறுதல், வட்டி வாங்குதல், விபச்சாரம் புரிதல்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

30) அவதூறு கூறுதல், வட்டி வாங்குதல்,

விபச்சாரம் புரிதல்

அவதூறு கூறுதல், குர்ஆனைப் புறக்கணித்தல், விபச்சாரம் செய்தல், வட்டி வாங்குதல் போன்ற குற்றங்களுக்கும் மண்ணறையில் தண்டனை தரப்படுவதாக நபி (ஸல்) அவர்களுக்கு கனவின் மூலம் காட்டப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி ‘இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?” என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால் “அல்லாஹ் நாடியது நடக்கும்” என்று கூறுவார்கள்.

இவ்வாறே ஒருநாள். “உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?” என்று கேட்டதும் நாங்கள் “இல்லை” என்றோம். அவர்கள், “நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்று கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன.

அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த் தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகி விட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் ‘இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர்.

அப்படியே நடந்த போது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலைமாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும் போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே ‘இவர் யார்?’ என நான் கேட்டேன்.

அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர். எனவே நடந் தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும், அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்த பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.)

நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்து விட்டார்கள். அதில் ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார் கள். நான் ‘இவர்கள் யார்?’ எனக் கேட்டேன். அதற்கும் அவர் கள் ‘நடங்கள்’ எனக் கூறிடவே மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்பாக கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்று கொண்டிருந்தார்.

அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியெற முயலும் போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்கு தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார்.

அப்போது நான் ‘என்ன இது?’ எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ எனக் கூறிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். நான் இருவரிடமும் “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விபரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன்.

அதற்கு இருவரும் “ஆம், முதல் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப் பட்ட நிலையில் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனை கற்றுக் கொடுத்ததும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கி விட்டார்; பகலில் அதை செயல்படுத்தவில்லை.

எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த் தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்ற வர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி)

(புகாரி: 1386)

மேலுள்ள குற்றங்களை செய்தவர்களுக்கு மறுமை நாள் வரை தண்டனை தரப்படும் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. மறுமை நாளிற்கு முன்னால் உள்ள மண்ணறை வாழ்க்கையைப் பற்றித்தான் இச்சம்பவம் விவரிக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.