மரணமும் மறுமையும் -30

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

சொர்க்கம்-2

சொர்க்கவாசிகளின் பானம், உணவு, ஆடை, இருப்பிடம்

அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுடன் “மதாயின்” (இராக்) நகரில் இருந்தபோது, அவர்கள் பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் (மஜூசி மதத்தவரான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரத்தில் பானம் கொண்டுவந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்து விட்டு (அங்கிருந்தவர்களிடம்) பின்வருமாறு கூறினார்கள்:

நான் (ஏன் அவர்மீது வீசியெறிந்தேன் என்பதற்கான காரணத்தை) உங்களிடம் தெரிவிக்கிறேன். நான் அவரிடம் இ(ந்த வெள்ளிப் பாத்திரத்)தில் பருகத் தரவேண்டாம் எனக் கட்டளையிட்டிருந்தேன். (அவர் அதைக் கேட்காமல் அதிலேயே மீண்டும் பருகத்தந்தார்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரத்தில் பருக வேண்டாம்; அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும் மறுமை நாளில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியவை ஆகும்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 4195),(புகாரி: 5831, 5426, 5632)

முதல் உணவு:

சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.

(புகாரி: 3329)

காளைமாடு, மீன்:

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்’ என்று கூறினார்கள். 106

அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள் ‘சரி’ என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே ‘மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள்.

பிறகு ‘உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?’ என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு ‘பாலாம்’ மற்றும் ‘நூன்’ என்றார். மக்கள் ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். அந்த யூதர் ‘(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்’ என்று கூறினார்.

(புகாரி: 6520)

உணவின் வாசனை:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று, ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 5454)

சொர்க்கத்து மது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்து விடுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 5575)

ஹூருல் ஈன் எனும் துணைவியர்

சொர்க்கத்தில் உள்ள அந்த மாளிகையில் இது போன்ற இன்பங்களை மட்டும் தருவதோடு நின்றுவிடாமல் ஹூருல் ஈன்’ எனும் பெண்களையும் (துணைகளையும்) இறைவன் அளிக்கின்றான்.

மறுமையில் பரிசு வழங்கும்போது “அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்” என்ற கருத்தை 5:119 ; 9:100 ; 22:59 ; 58:22 ; 88:9 ; 98:8 ; ஆகிய வசனங்கள் கூறுகின்றன. அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

எனவே, ஹூருல் ஈன் எனும் துணைவியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்டு.  குர்ஆனில் எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று நாம் காட்டிய சான்றிலிருந்து, சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்து ஆண்பாலாகக் கூறப்பட்டாலும் அது பெண்பாலுக்கும் பொருந்தும் என்று முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً رَجُلٌ صَرَفَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ قِبَلَ الْجَنَّةِ وَمَثَّلَ لَهُ شَجَرَةً ذَاتَ ظِلٍّ فَقَالَ أَىْ رَبِّ قَدِّمْنِى إِلَى هَذِهِ الشَّجَرَةِ أَكُونُ فِى ظِلِّهَا ». وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ وَلَمْ يُذْكُرْ « فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِى مِنْكَ ». إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِيهِ « وَيُذَكِّرُهُ اللَّهُ سَلْ كَذَا وَكَذَا فَإِذَا انْقَطَعَتْ بِهِ الأَمَانِىُّ قَالَ اللَّهُ هُوَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ – قَالَ – ثُمَّ يَدْخُلُ بَيْتَهُ فَتَدْخُلُ عَلَيْهِ زَوْجَتَاهُ مِنَ الْحُورِ الْعِينِ فَتَقُولاَنِ الْحَمْدُ لِلَّهِ الَّذِى أَحْيَاكَ لَنَا وَأَحْيَانَا لَكَ – قَالَ – فَيَقُولُ مَا أُعْطِىَ أَحَدٌ مِثْلَ مَا أُعْطِيتُ

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் யாரெனில், அவரது முகத்தை அல்லாஹ் நரகத்திருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பிவிடுவான்;

மேலும், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், “என் இறைவா! இந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நிழலில் இருக்க வேண்டும்” என்பார்.

பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பில் உள்ளவாறே காணப்படுகிறது.

ஆனால், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்?” என்பதிருந்து இறுதிவரையுள்ள மற்ற தகவல்கள் இதில் இடம்பெறவில்லை. “இன்னின்னதை நீ கேட்கலாம்!” என்று அவருக்கு அல்லாஹ் நினைவூட்டுவான். (அவ்வாறே அவர் ஆசைப்பட்டுக் கேட்பார்.) இறுதியில் ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னும் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று இறைவன் கூறுவான்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

பிறகு அந்த மனிதர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது அவருடைய ஹூருல் ஈன்’ எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் எங்களுக்காக உங்களையும், உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்” என்று கூறுவார்கள். அப்போது அந்த மனிதர் “எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை” என்று (மகிழ்ந்து) கூறுவார்.

அறி: நுஃமான் பின் அபீஅய்யாஷ்
(முஸ்லிம்: 311)

மிகக் குறைந்த தரமுடைய சொர்க்கவாசிகளின் நிலை இந்த ஹதீஸில் விவரிக்கப்படுகின்றது. அவர்களுக்கு அந்த மாளிகையில் ஹூருல் ஈன்’ எனும் கண்ணழகியர்கள் வழங்கப்படுவார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒருவனுக்கு பெரும் மாளிகையிருந்து அதில் அவன் தனியே இருக்க நேர்ந்தால் அதை விட கொடுமை வேறொன்றும் இல்லை எனலாம். எனவே தான் வெறும் மாளிகையை மட்டும் தருவதோடு நிற்காமல் அதில் நாம் இன்பமுற தக்க துணைகளையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இறைவன் ஏற்படுத்தி தருகிறான். கண்ணழகியர்களுடன் மேலும் வழங்கப்படுகின்ற இன்பங்களை அறிகிற போது அது இன்பங்கள் நிறைந்த இன்ப மாளிகை என்பதை அறியலாம்.

தூய்மையான துணைவியர்

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ لَـهُمْ فِيْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيْلًا‏

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.

(அல்குர்ஆன்: 4:57)

كَاَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ‌ۚ‏

அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 55:58)

فِيْهِنَّ خَيْرٰتٌ حِسَانٌ‌ۚ‏

அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 55:70)

فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًاۙ‏
عُرُبًا اَتْرَابًاۙ‏

(அப்பெண்களை) நாமே அழகுறப் படைத்தோம். அவர்களைக் கன்னியராகவும் ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம்.

(அல்குர்ஆன்: 56:36),37)

وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى الأَرْضِ لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا وَلَمَلأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا وَلَنَصِيفُهَا ، يَعْنِي الْخِمَارَ – خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும்விட மேலானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அனஸ் (ரலி)
(புகாரி: 6568)

இவ்வுலகில் உள்ள ஆண்களோ அல்லது பெண்களோ புறச்சாதனங்கள் மூலம் தங்களை அழகுபடுத்தி கொண்டால் மட்டும்தான் பார்ப்பதற்கு அழகாக தோன்றுவார்கள். இல்லையேல் சாதாரணமாகதான் தோன்றுவார்கள்.

உலக அழகி என பட்டம் சூட்டப்படுபவர்களும் புற அலங்காரத்தின் மூலம்தான் அழகாக தோன்றுகிறார்கள். அது இயற்கை அழகல்ல. ஆனால் “ஹூருல் ஈன்கள்” எட்டிப்பார்த்தாலே இவ்வுலகம் முழுவதும் ஒளிரும் அளவிற்கு அழகானவர்கள்.

சொர்க்கவாசிகளின் ஆசை

ஷஹீத்களின் ஆசை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும் நிலையில் இறந்து போகின்ற எவரும் உலகமும் உலகத்திலுள்ள செல்வங்களும் கிடைப்பதாக இருந்தாலும் (மீண்டும்) உலகத்துக்குத் திரும்பிவர விரும்பமாட்டார். (இறைவழியில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியைத் தவிர. அவர் வீரமரணத்திற்குக் கிடைக்கும் மேன்மையைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்துக்கு மீண்டும் வந்து (இறைவழியில் போரிட்டு) கொல்லப்பட வேண்டும் என்றே ஆசைப்படுவார்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
(முஸ்லிம்: 3821)

குழந்தையை ஆசைப்படுதல்:

المُؤْمِنُ إِذَا اشْتَهَى الوَلَدَ فِي الجَنَّةِ كَانَ حَمْلُهُ وَوَضْعُهُ وَسِنُّهُ فِي سَاعَةٍ كَمَا يَشْتَهِي

சொர்க்கவாசி குழந்தையை ஆசைப்பட்டால் ஒரே நிமிடத்தில் அவரின் துணைவி கர்ப்பம் தரித்து பிரசவமும் ஏற்பட்டு அவர் விரும்புவது போன்று குழந்தைக்கு முழு வயது வந்துவிடும்.

(திர்மிதீ: 2563)

ஆசைப்பட்டது கிடைக்கும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் உங்களில் ஒருவரது குறைந்தபட்சத் தகுதி என்னவென்றால், “நீ (இன்னதை) ஆசைப்படு” என்று அவரிடம் (இறைவன்) சொல்வதாகும். அப்போது அவர் ஒவ்வொன்றாக ஆசைப்படுவார். (இறுதியில்) அவரிடம், “ஆசைப்பட்டு (முடித்து)விட்டாயா?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம், “நீ ஆசைப்பட்டதும் அத்துடன் அதைப் போன்றதும் உனக்குக் கிடைக்கும்” என்று இறைவன் கூறுவான்.

அறி: அபூஹுரைரா (ரலி),
(முஸ்லிம்: 301)

விவசாயம் செய்ய ஆசைப்படுதல்:

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பான்.

அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்’ என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும்.

அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது’ என்று கூறுவான்.

(நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்’ என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 2348)

இனி கோபமே இல்லை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அவர்கள் ‘எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது’ என்று பதிலளிப்பார்கள்.

அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?’ என்று கேட்பான். மக்கள் ‘எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!’ என்று பதிலளிப்பார்கள்.

அதற்கு அல்லாஹ், ‘இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?’ என்று கேட்பான். சொர்க்கவாசிகள் ‘எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ‘உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்’ என்று சொல்வான்.

அறி: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(புகாரி: 7518)

கடைசியாக நரகிலிருந்து சொர்க்கம் செல்பவர்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்த படி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும் விடும்.

இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, “உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்” என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும்.

உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்” என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், “மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா” என்று கூறுவான். அதற்கு அவர், “இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று கூறி, வாக்குறுதி அளிப்பார்.

அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.

பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், “என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று கூறுவார்.

அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவா” என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார்.

இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக்கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று கூறுவார்.

அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்” என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும்.

உடனே அவர், “என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!” என்பார். அதற்கு இறைவன், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?” என்று கேட்பான். அதற்கு அவர், “என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று கேட்பார்.

(இதை அறிவித்தபோது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு “நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது மக்கள் “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இவ்வாறுதான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அப்போது நபித் தோழர்கள், “ஏன் சிரித்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்.) மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்” என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

(முஸ்லிம்: 310)

பத்து மடங்கு என்று ஒரு அறிவிப்பு:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதை நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம், “நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள்” என்று கூறப்படும்.

அவர் சென்று சொர்க்கத்தில் நுழைவார். அங்கு மக்கள் தத்தமது இருப்பிடங்களைப் பிடித்துக் கொண்டிருப்பதை அவர் காண்பார். அவரிடம், “நீ கடந்து வந்த காலத்தை நினைவுகூருகிறாயா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “ஆம்” என்பார். “நீ (இன்ன இன்னதை) ஆசைப்படலாம்” என்று கூறப்படும். அவர் அவ்வாறே ஆசைப்படுவார்.

அவரிடம், “நீ ஆசைப்பட்டதும் உனக்குக் கிடைக்கும்; உலகத்தைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று கூறப்படும். உடனே அவர், “அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று கேட்பார்.

(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

(முஸ்லிம்: 309)

அஃராப்வாசிகள்

சொர்க்கம் என்பது நிரந்தமானது என்றாலும், சிலர் அஃராபின் மீது இருப்பார்கள். இவர்களைப் பற்றி திருக்குர்ஆன் தடுப்புச் சுவரில் இருப்போர் – அஃராப்வாசிகள் என்கிறது. இவர்களின் நன்மைகளும், தீமைகளும் சரிசமமாக இருக்கும்.

وَبَيْنَهُمَا حِجَابٌ‌ۚ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّاۢ بِسِيْمٰٮهُمْ‌ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْ‌ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ

அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பு (சுவர்) இருக்கும். அந்தத் தடுப்புச்சுவர் மேல் சில மனிதர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அவர்கள் அறிந்து கொள்வார்கள். சொர்க்கவாசிகளை அழைத்து “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்” என்பார்கள். அவர்கள் ஆசைப்பட்டாலும் அங்கே நுழையாமல் இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 7:46)

وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ

அவர்களின் பார்வைகள் நரகவாசிகளை நோக்கித் திருப்பப்படும்போது “எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைத்த கூட்டத்துடன் சேர்த்து விடாதே!” எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 7:47)

وَنَادٰٓى اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا يَّعْرِفُوْنَهُمْ بِسِيْمٰٮهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰى عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ‏

தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வார்கள். “உங்களுடைய ஆள் பலமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களைக் காப்பாற்றவில்லை;

(அல்குர்ஆன்: 7:48)

பிறகு சொர்க்கம் செல்வார்கள்:

தடுப்புச் சுவரில் இருக்கும் அஃராப்வாசிகளை சில காலத்திற்கு பிறகு அல்லாஹ் தனது அருளால் இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவான்.

اَهٰٓؤُلَۤاءِ الَّذِيْنَ اَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍ ‌ؕ اُدْخُلُوا الْجَـنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ‏

அல்லாஹ் அருள் புரிய மாட்டான் என (சொர்க்கவாசிகளான) இவர்களைப் பற்றியா சத்தியம் செய்தீர்கள்?” என்று கூறுவார்கள். (இதன்பின்) “சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்” (என தடுப்புச் சுவரிலிருப்போரை நோக்கிக் கூறப்படும்.)

(அல்குர்ஆன்: 7:49)

மரணத்திற்கு மரணம்

அஃராப் எனும் இந்தச் தடுப்புச் சுவரில் தான் ஆட்டு வடிவத்தில் மரணம் அறுக்கப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு “மரணம்” (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு பொது அறிவிப்பாளர் ஒருவர், “சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது” என்று அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

(முஸ்லிம்: 5478)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் கறுப்பு வெள்ளை ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். பிறகு அதைச் சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே நிறுத்தப்படும் (என அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

பிறகு “சொர்க்கவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கப்படும். அப்போது சொர்க்கவாசிகள் தலையைத் தூக்கிப் பார்ப்பார்கள். மேலும், “ஆம்; (தெரியும்) இதுதான் மரணம்” என்று பதிலளிப்பார்கள்.(அவர்கள் அனைவரும் அதை முன்பே பார்த்திருக்கிறார்கள்.)

பிறகு (நரகவாசிகளை நோக்கி), “நரகவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கப்படும். அவர்களும் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, “ஆம் (தெரியும்). இதுதான் மரணம்” என்று பதில் சொல்வார்கள். (அவர்கள் அனைவரும் அதை முன்பே பார்த்துள்ளனர்.)

உடனே (இறைவனின்) கட்டளைக்கேற்ப அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப் பட்டுவிடும். பிறகு “சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை”என்று கூறப்படும்.

இதை அறிவித்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபியே!) அவர்கள் எண்ணிப் பார்க்காமலும் நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கும் நிலையில் காரியம் முடிக்கப்பட்டு, துக்கம் ஏற்படும் அந்த நாளைப் பற்றி எச்சரிப்பீராக!” (அல்குர்ஆன்: 19:39) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டியவாறு தமது கரத்தால் இந்தப் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்.

அறி: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
(முஸ்லிம்: 5475)

சொர்க்கத்தின் நிரந்தர இன்பத்திற்கு உத்தரவாதம்

مَنْ يَدْخُلُ الْجَنَّةَ يَنْعَمُ لَا يَبْأَسُ، لَا تَبْلَى ثِيَابُهُ وَلَا يَفْنَى شَبَابُهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைபவர் இன்பத்திலேயே இருப்பார்; துன்பம் காணமாட்டார். அவரது ஆடை இற்றுப்போகாது. அவரது இளமை அழிந்துபோகாது.

(புகாரி: 5456)

يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا ” فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الأعراف: 43]

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், “(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்” என்று அறிவிப்புச் செய்வார்.

இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்” (அல்குர்ஆன்: 7:43) என்று கூறுகின்றான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 5457)

இந்த சொர்க்கத்திற்கு விரைவோம்

سَابِقُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَ الْاَرْضِۙ اُعِدَّتْ لِلَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏

உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும். அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.

(அல்குர்ஆன்: 57:21)

இறைவனை அஞ்சும் நேரம் வரவில்லையா?

اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقِّۙ وَلَا يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ‌ؕ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ‏

57:16. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? (அதற்கு) அவர்கள் – முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிமானோர் குற்றவாளிகள்.

(அல்குர்ஆன்: 57:16)

கட்டுப்படுவோம்:

இந்த மாபெரும் சொர்க்கத்திற்கு உரியவர்களாக நம்மை மாற்றுவதற்கு, சில குணங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். திருக்குர்ஆனில் அல்லாஹ் சொர்க்கவாசிகளின் பண்புகளை, சொர்க்கம் செல்ல தகுதியானவர்களை மிக அழகாக விளக்குகிறான். பல்வேறு குணங்களை குறிப்பிட்டு அவை யாவும் சொர்க்கம் செல்ல விரும்புவோரிடம் குடிகொண்டிருக்கும் என்பதாக அல்லாஹ் தெரிவிக்கிறான். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக மனதில் ஏற்றி, நாம் அப்படி இருக்கிறோமா? என்று சரிபார்த்து, இறைவனுக்கு முழுமையாக கட்டுப்படுவோம்.

الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللَّهِ وَلَا يَنْقُضُونَ الْمِيثَاقَ (20) وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ (21) وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ (22) جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ (23) سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ (24)

அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள். இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை இட்டவற்றை (உறவினரை) இணைத்துக் கொள்வார்கள்; தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; கடுமையான விசாரணைக்கும் அஞ்சுவார்கள். அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள்.

தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள்.

வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).

(அல்குர்ஆன்: 13:20-24)

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ (11)

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 23:1-11)

ஒருவரியில் சொல்வதானால்:

இந்த ஒரு மாதம் கேட்ட உரையின் சுருக்கத்தை ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், அல்லாஹ், ரஸுலுக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌‌ۚوَمَنْ يَّتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا اَلِيْمًا

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.

(அல்குர்ஆன்: 48:17)

 «كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الجَنَّةَ إِلَّا مَنْ أَبَى»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الجَنَّةَ ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 7280)

எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

-முடிந்தது.