மரணமும் மறுமையும் – 28 (நரகம் 2)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

முன்னரே செய்த உடன்படிக்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர்; அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர்.

அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உணவு வளத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்.

அறி: அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி)

(முஸ்லிம்: 5402)

ஆனால் இது இந்த துன்யாவில் மட்டும் தான். மறுமை என்பது தீர்ப்பு வழங்கப்படும் இடமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம் ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பார்.

அப்போது அல்லாஹ் ‘நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகந்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதைத்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக் கொள்ளவில்லையே!’ என்று கூறுவான்.

அறி: அனஸ் (ரலி)

நூல்: (புகாரி: 6557)

உலக இன்பத்தை மறக்கச் செய்யும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டு வரப்பட்டு, நரகத்தில் ஒருமுறை அழுத்தி எடுக்கப்படுவார்.

பிறகு அவரிடம், “ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருட்கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!” என்று பதிலளிப்பார்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: (முஸ்லிம்: 5407)

நரகவாசிகளின் வேதனைகளில் வித்தியாசம்

நரகில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பாவத்திற்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள்.

குறைந்த பட்ச தண்டணை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும். அதனால் அவரின் மூளை கொதிக்கும்.

அறி: நுஅமான் இப்னு பஷீர் (ரலி)

நூல்: (புகாரி: 6561), 6562

إِنَّ أَدْنَى أَهْلِ النَّارِ عَذَابًا يَنْتَعِلُ بِنَعْلَيْنِ مِنْ نَارٍ، يَغْلِي دِمَاغُهُ مِنْ حَرَارَةِ نَعْلَيْهِ

“ஒருவருக்கு நெருப்பாலான இரு காலணிகள் அணிவிக்கப்பட்டு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: (முஸ்லிம்: 361) (311)

நான், ‘இறைத்தூதர் அவர்களே! அபூதாலிப் (அப்து மனாஃப்) அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபாகரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பாவராகவும் தங்களுக்காக (தங்கள் எதிரிகளின் மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; அவர் இப்போது (கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்’ என்று கூறினார்கள்.

அறி: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி)
நூல்: (புகாரி: 6208)

சிறியது எனினும் வேதனை குறையாது:

لَا يُفَتَّرُعَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ

அவர்களை விட்டும் (தண்டனை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 43:75)

கடும் வேதனையுடையவர்கள்:

ஆயிஷா (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன்.

அதை அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்’ என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம்.

(புகாரி: 5954), 5950, 6109)

நரகம் செல்பவர்களில் அதிகமானோர்

பெண்கள்

‘எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள்.

உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்

அறி: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: (புகாரி: 29)

‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர்.

‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்’ என்று நபி(ஸல்) கூறினார்கள்

அறி: அபூஸயீதுல் குத்ரி (ரலி)

நூல்: (புகாரி: 304)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர்.

அறி: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: (புகாரி: 5196) ,

இம்ரான் (ரலி) அவர்கள், “சொர்க்கத்தில் வசிப்போரில் மிகவும் குறைவானவர்கள் பெண்களே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள்” என்றார்கள்.

அறி: முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

நூல்: (முஸ்லிம்: 5288)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்-(புகாரி: 1052) , 1462

பெருமையடிப்போர், அக்கிரமக்கார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், ‘பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்’ என்று சொன்னது. சொர்க்கம், ‘எனக்கு என்ன நேர்ந்தோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்’ என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்’ என்று கூறினான். நரகத்திடம் ‘நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்’ என்று கூறினான்.

அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘போதும்! போதும்!’ என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும்.

மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

அறி: அபூஹுரைரா (ரலி)

நூல்: (புகாரி: 4850)

நிரந்தர நரகவாசிகள் – நரகத்தில் சேர்க்கும் செயல்கள்

இந்த கட்டுரையை படித்துக் கொள்ளவும்.

https://www.bayanapp.indiabeeps.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/

நரகவாசிகளின் புலம்பல்கள்

“உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களான ஜின்களுடனும், மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!” என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும்போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள்.

முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் “எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழிகெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!” என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள்.

“ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று (அவன்) கூறுவான்.

(அல்குர்ஆன்: 7:38)

“எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டீர்களா?” என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் கேட்பார்கள். அவர்கள் ‘ஆம்’ என்பர். “அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது” என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார்.

(அல்குர்ஆன்: 7:44)

நரகவாசிகள் சொர்க்கவாசிகளை அழைத்து “எங்கள் மீது சிறிது தண்ணீரை அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை ஊற்றுங்கள்!” எனக் கேட்பார்கள். ”(தன்னை) மறுப்போருக்கு அவ்விரண்டையும் அல்லாஹ் தடை செய்து விட்டான்” என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 7:50)

“எங்கள் இறைவா! எங்கள் துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழி தவறிய கூட்டமாக இருந்தோம்” என்று கூறுவார்கள். “எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்” (என்றும் கூறுவார்கள்). “இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!” என்று அவன் கூறுவான்.

(அல்குர்ஆன்: 23:106)

“(நரகக் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்களுக்கு எதிராக (மரணத்தை)த் தீர்ப்பளிக்கட்டும்” எனக் கேட்பார்கள். “நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள்” என்று அவர் கூறுவார்.

(அல்குர்ஆன்: 43:77)

ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் “எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

அதற்கவர்கள் “ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்” எனக் கூறுவார்கள்.

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 67:8)

நரகிலிருந்து தவ்ஹீவாதிகள் வெளியேற்றப்படுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: …இறைநம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் மின்னல், காற்று, பறவை, உயர் ரகக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றைப் போன்று (விரைவாக அந்தப் பாலத்தைக்) கடந்துவிடுவார்கள். (அப்போது அவர்கள் மூன்று வகையினராக இருப்பார்கள்:) அவர்களில் பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்வோரும் உண்டு. கீறிக் காயப்படுத்தப்பட்டுத் தப்புவோரும் உண்டு. பின்புறத்திலிருந்து தள்ளப்பட்டு நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் இறைநம்பிக்கையாளர்கள் (அந்தப் பாலத்தைக் கடந்து) நரக நெருப்பிலிருந்து தப்பிவிடுவார்கள்.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களை விட வேறெவருமில்லை.

அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்: எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன் தான் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக!). அப்போது அவர்களிடம், “நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று கூறப்படும்.

மேலும், (நரகத்திலுள்ள அவர்களை இவர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக் கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். உடனே அவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டுவருவார்கள்.

அப்போது (நரகத்தில் இருந்த) அவர்களில் சிலருடைய கணைக்கால்களில் பாதிவரையும், (இன்னும் சிலருடைய) முழங்கால்கள்வரையும் நரக நெருப்பு தீண்டியிருக்கும். பிறகு, “எங்கள் இறைவா! நீ யாரை வெளியேற்றுமாறு கூறினாயோ அவர்களில் ஒருவர்கூட நரகத்தில் எஞ்சவில்லை (எல்லாரையும் நாங்கள் வெளியேற்றிவிட்டோம்)” என்று கூறுவார்கள்.

அப்போது இறைவன் “நீங்கள் திரும்பிச் சென்று எவரது உள்ளத்தில் ஒரு பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), “எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (எல்லாரையும் வெளியேற்றி விட்டோம்)” என்று கூறுவார்கள்.

பிறகு இறைவன், “நீங்கள் திரும்பிச்சென்று எவரது உள்ளத்தில் அரைப் பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள்” என்பான். அவர்களும் ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள்.

பின்னர் “எங்கள் இறைவா, நீ கட்டளையிட்ட ஒருவரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை” என்று கூறுவார்கள். பின்பும் இறைவன் “நீங்கள் திரும்பிச்சென்று எவரது உள்ளத்தில் அணுவளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்” என்பான். அவ்வாறே அவர்கள் (சென்று) அதிகமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), “எங்கள் இறைவா! நரகத்தில் எந்த நன்மையையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவார்கள்…

(முஸ்லிம்: 302)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) அல்லாஹ் சொர்க்கவாசிகளைச் சொர்க்கத்திற்கு அனுப்புவான். தான் நாடும் சிலரைத் தனது (தனிப் பெரும்) கருணையால் அவன் சொர்க்கத்திற்கு அனுப்புவான். நரகவாசிகளை நரகத்தில் நுழையவைப்பான்.

பிறகு (இறைநம்பிக்கையாளர்களிடம்), “பாருங்கள்; யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று கூறுவான். அப்போது கரிந்து கரிக்கட்டையாகிவிட்ட நிலையில் நரகவாசிகள் வெளியேற்றப் படுவார்கள். பின்னர் அவர்கள் “நஹ்ருல் ஹயாத்” (ஜீவ) நதியில் அல்லது “நஹ்ருல் ஹயா” (மழை) நதியில் போடப்படுவார்கள்.

உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடக் கூடியதாக(வும்) எவ்வாறு முளைக்கின்றது என்பதை நீங்கள் கண்டதில்லையா?

அறி: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: (முஸ்லிம்: 304)(புகாரி: 22)

அடுத்த உரையில்…

இவ்வாறு நரகில் குறிப்பிட்ட காலம் வேதனைகளை அனுபவித்து சொர்க்கம் செல்பவர்களும் மறுமையில் இருப்பர், நேரடியாக சொர்க்கம் செல்பவர்களும் இருப்பர். இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில், சொர்க்கம் செல்பவர்கள் யார்? சொர்க்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த செய்திகளை வரிசையாகக் காண்போம்.