மரணமும் மறுமையும் -26
(பரிந்துரை மற்றும் பாலம்)
பரிந்துரை பயன் தருமா?
மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.
- அறவே பரிந்துரை கிடையாது.
- நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.
- நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு.
இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் தவறாகும்.
(அல்குர்ஆன்: 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43, 74:48) ➚
ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.
பரிந்துரை இல்லை என்ற கருத்தில் சில வசனங்களும், பரிந்துரை இருக்கிறது என்ற கருத்தில் சில வசனங்களும் உள்ளன. இருந்தாலும் முரண்பட்ட இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் பரிந்துரைக்குச் சில நிபந்தனைகள் உள்ளன என்று கூறும் வசனங்களும் உள்ளன. இவ்வசனங்கள் இந்த முரண்பாட்டை நீக்குகின்றன.
அவன் அனுமதியின்றி யார் பரிந்துரைக்க முடியும்?
அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை.
இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை இவ்வசனங்களில் இருந்து அறியலாம். பரிந்துரை அறவே இல்லை என்று இருந்தால் இப்படிக் கூற முடியாது.
அல்லாஹ் யாருக்கு அனுமதி அளிக்கிறானோ அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்றும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்றும் (அல்குர்ஆன்: 21:28, 19:87, 20:109, 34:23, 43:86, 53:26) ➚ ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
மறுமையில் பரிந்துரை அறவே இல்லை எனக் கூறுவது தவறு என்பதற்கு இவ்வசனங்களும் போதிய சான்றுகளாகும்.
பரிந்துரை உண்டு என்றாலும் நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.
“என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.
யாரிடமும் பரிந்துரையை வேண்டக்கூடாது
மறுமையில் பரிந்துரை செய்ய அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே “மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்” என்று இங்கே வாழும்போது கேட்கக்கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.
மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணைவைப்பவர்களாக ஆனார்கள் என்பதை கீழ்காணும் வசனத்தில் இருந்து அறியலாம்.
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.
அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும்போது ஒருவரை அழைத்து “இவருக்குப் பரிந்துரை செய்” என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.
(புகாரி: 99, 335, 448, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)
நபியின் பரிந்துரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.
அறி: அபூஹுரைரா (ரலி),
(முஸ்லிம்: 334)
மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, ‘இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள்’ என்று கேட்பார்கள். (ஒவ்வொருவராகத் தம்மால் இயலாதென்று மறுத்துக்கொண்டே வர) இறுதியில் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள்.) நபியவர்களை அல்லாஹ் (‘மகாமு மஹ்மூத்’ எனும்) உயர் அந்தஸ்திற்கு அனுப்பும் நாளில் இது நடக்கும்.
அறி: இப்னு உமர் (ரலி),
(புகாரி: 4718)
நினைத்தவரையெல்லாம் காப்பாற்ற முடியாது
நபியின் பரிந்துரை ஏற்கப்படும் என்றாலும், நபியவர்கள் நினைத்தவர்களை யெல்லாம் பரிந்துரைக்கவோ, காப்பாற்றவோ முடியாது. அதை கீழ்காணும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
‘உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்’ என்னும் (அல்குர்ஆன்: 26:214) ➚ இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது.
அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது.
அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது’ என்று கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி)
நபியின் பரிந்துரை ஏற்கப்படும்
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள்.
பிறகு ‘நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும்.
அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) ‘உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், ‘(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
எனவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள்.
நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு ‘ஆதம்(அலை) அவர்கள் (‘நான் செய்ததவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப்போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.
(நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது’ என்று கூறிவிட்டு ‘நீங்கள் வேறெவரிடமாவது சொல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று ‘நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான்.எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு நூஹ் (அலை) அவர்கள் ‘என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது.
அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.!’ (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூஸா(அலை) அவர்களிடம் சென்று ‘மூஸாவே நீங்கள் இறைத்தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவார்கள்.
அதற்கு மூஸா(அலை) அவர்கள் ‘இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை.
கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் சொல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, ‘ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு ஈசா(அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை – (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் – நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (எனவே,) நீங்கள் வேறெவரிடமாவது சொல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து ‘முஹம்மதே! நீங்கள் இறைத்தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களின் முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கம் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவர்.
அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும்.
அறி: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 4712)
அபூதாலிபுக்கு பரிந்துரை
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், ‘அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளை (தகித்துக்) கொதிக்கும்’ என்று சொல்ல கேட்டேன்.
அறி: அபூஸயீத் (ரலி),
(புகாரி: 3885)
சொர்க்கம் செல்ல பரிந்துரை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் ஆள் ஆவேன். நான் (இறைவனின் தூதர் என) ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்கு இறைத்தூதர்களில் வேறெவரும் ஏற்றுக் கொள்ளப் பட்டதில்லை. இறைத்தூதர்களில்(இப்படியும்) ஒருவர் இருந்தார்; அவருடைய சமுதாயத்தாரில் ஒரேயொரு மனிதர் தாம் அவரை ஏற்றுக்கொண்டார்.
அறி: அனஸ் பின் மாலிக் (ரலி),
(முஸ்லிம்: 332),
இணைகற்பிக்காதவர்களுக்கே பரிந்துரை
மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம் என்றார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 99)
சிலருக்கு எந்த விசாரணையும் இல்லாமல் சொர்க்கம் செல்ல நபி (ஸல்) பரிந்துரை செய்வார்கள்.
அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான்.
பிறகு ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி ‘இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்’ என்பேன்.
அதற்கு ‘முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்’ என்று கூறப்படும்.
என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரண்டு பக்கங்களுக்கிடையேயான தூரம் ‘மக்காவிற்கும் (யமனிலுள்ள) ‘ஹிகியர்’ எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ அல்லது ‘மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ தூரமாகும்’ என்று கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 4712)
குர்ஆனின் பரிந்துரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.
இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா” மற்றும் “ஆலு இம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்.
“அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இந்த அத்தியாயத்திற்கு முன் வீணர்கள் செயலிழந்து போவார்கள்.
இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸிராத் என்றால் என்ன?
நாளை மறுமை நாளில் நரகத்தின் மீது போடப்பட்டுள்ள ‘சிராத்” என்னும் பாலத்தை கடக்காமல் சுவனத்தில் எவரும் நுழைய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
“மேலும் அதனை (பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் போக முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
சிராத் என்னும் இப்பாலத்தை கடக்கும் இறை நம்பிக்கையாளர்கள் அவர்களின் நன்மையான அமல்களின் பெருமதியைப் பொறுத்து அவர்களின் கடக்கும் வேகமும் இருக்குமென்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அப்படி கடக்கும் வேகத்தை கண் சிமிட்டும் நேரம் மின்னல் வெட்டும் நேரம், காற்றைப் போன்று பறவை, பந்தைய குதிரை, மற்றும் ஒட்டக வேகம் என பல வரிசைப்படுத்துகிறார்கள்.
நல்லடியார்கள் கடக்கும் விதம்:
மறுமை நாளில் மக்கள் அனைவரும், “அல்லாஹ்வே காப்பாற்று!….அல்லாஹ்வே காப்பாற்று!! என்று பிரார்த்திப்பார்கள். அப்போது நரகத்தின் மேலே பாலம் கொண்டு வரப்பட்டு வைக்கப்படும். என்று கூறிக் கொண்டிருந்த போது, “அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன?” கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கால்கள் வழுக்கி விழக்கூடிய, சறுக்கக் கூடிய ஓர் இடமாகும். அதன்மீது இரும்புக் கொக்கிகளும், அகண்ட நீண்ட முற்களும் இருக்கும். அதில் நஜ்து பகுதியில் விளையும் ‘சஅதான்” எனப்படும் முட்செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.
இறை நம்பிக்கையாளர்கள், கண் சிமிட்டும் நேரத்திலும், மின்னலைப் போன்றும் காற்றைப்போன்றும், பறவையைப் போன்றும்…உயர் ரக குதிரைகள்… மற்றும் ஒட்டகங்கள் போன்றும் (விரைவாக) அப்பாலத்தை கடந்து விடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி),
(முஸ்லிம்: 302),(புகாரி: 7439)(ஹதீஸ் சுருக்கம்)
செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும்:
…(மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர்.
அறி: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 806)
முதலில் கடப்பது நபியவர்களே
…(மேலும் தொடர்ந்து) நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள் தத்தமது சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள்.
‘இறைவா காப்பாற்று! இறைவா காப்பாற்று!’ என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். (மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும்.
என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர்.
அறி:அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 806)
ஸிராத்தைக் கடக்கும் முஃமின்கள், நயவஞ்கர்களின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மறுமை நாளில் நாம் இப்படி இப்படி -அதாவது எல்லா மக்களுக்கும் மேல் (உயரமான குன்றின் மீது)- வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் தெய்வச் சிலைகளுடனும் அவர்கள் வழிபட்டுவந்தவையுடனும் அழைக்கப்படுவர்.
முதலில் முதல் சமுதாயம், அடுத்து அதற்கடுத்த சமுதாயம் (என வரிசை முறையுடன் அழைக்கப்படுவார்கள்). பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து “நீங்கள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், “நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிலளிப்பார்கள்.
உடனே, அவன், “நான்தான் உங்கள் இறைவன்” என்பான். மக்கள் “நாங்கள் உன்னை (நேரடியாகப்) பார்க்காதவரை (உறுதி கொள்ளமாட்டோம்)” என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அவர்களை அழைத்துக் கொண்டு நடப்பான். அவர்களும் அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள்.
அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின்தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும்.
அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைகளுக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு (அந்தப் பாலத்தைக் கடந்து) நம்பிக்கையாளர்கள் மட்டும் தப்பிச்செல்வார்கள்.
(அவர்களில்) தப்பிச்செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்துவரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).
சிலருக்கு கணக்கு தீர்க்கப்படும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
(புகாரி: 2440)
(இந்தச் செய்தியில் வரும் கன்தரத்-பாலம் என்பதற்கு பலரும் பல விளக்கங்களை கூறியுள்ளனர். சிலர் இது ஸிராத்தின் கடைசிப் பகுதி என்றும், குர்துபீ போன்ற சிலர் இது வேறு பாலம் என்றும் விளக்கம் கூறியுள்ளனர். எனினும் இரண்டும் ஒரே பாலம் தான் என்பதே சரியாக படுகிறது.)
அடுத்த உரையில்…
இவ்வாறு நரகம் என்று விதிக்கப்பட்டவர்கள் பாலத்திலிருந்து விழுந்து நரகத்திற்கும், சொர்க்கம் என்று விதிக்கப்பட்டவர்கள் பாலத்திலிருந்து தப்பித்து சொர்க்கத்திற்கும் செல்வர். இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் நரகத்தில் மக்கள் விழும் காட்சிகள், நுழையும் காட்சிகள், நரகத்தின் வேதனைகள் குறித்து வரிசையாக காண்போம்.